முருகன் சுந்தரபாண்டியன் கவிதைகள்

127

யாருமற்றவன்

நரம்புகளில் அறுந்து
சிவப்பாய் வழிய
சில மனகுறிப்புகள்
உயிர்பிடியில்
பாய்ந்துகொண்டே இருக்கிறது…

பிறக்கா அக்குறிப்புகளை
இசைத்தும் கலைத்தும்
எப்போதும்
ஓர்ப்பறவை என் வானம்
தாண்டிய படியே கடக்கிறது…

தனித்த இமைக்குள்
ஒரு அன்புடைய உலகின் சாயல்
எப்போதும் தூசியாகி சுழல கண்ணீர் உறுத்துகிறது…

சேர்த்தத் துரும்பினாலானக் கூடு
கூடாகவே இருத்தல் என்பது
எதற்குத்தான் பிடிக்கும்

ஒரு விதையுமற்றச் செடியின் வேர்
பூத்து குலுங்குவது தான்
தினமும் கனவாகி கலைகிறது..

ஒரு மரமுமற்ற மரத்தை
நிலம் தாங்குவது வலிக்க,
அது காடாக கண்கள் கணக்கிறது…

விழுதொன்றும் இல்லா கிளைக்கு
விழுந்தால் எழ கரம் ஏது
இவ்வுலகில்

பொழிந்தும் கரிக்கும் மழை
துளிர்க்கும் ஆசைத் தளிர்
கூடும் வயதுக்கு நிகராய்
எனக்கெனக் கூடும் சிலவை
இப்போதுமிருக்க
எனக்கென்றே எப்போதுமுண்டு
ஒரு முகமுமற்று
துயர் செழித்தப் பாழ் நிலம்

விடியலும் அடையலுமற்ற
உதிர்ந்த இலை உரமாவது
மெல்ல எனை நகர்த்துகிறது..
உயிர்க் கூடு விட்டும்
உயிரற்ற கூடு சேர்த்தும்….

****

ஆழியின் நிசி

பதம் தாண்டி நனைந்திருக்கும் நிசியில்
ஒரு ஆழியும் மேகமும்
ஆழம் நிறைந்தும் பேசிப் பகிர்கிறது

அன்பின் தளர்வினில் குழையும் அலை
கரையின் துளித்துளி தடங்கள் மீது
துள்ளித் தெறித்து ஓடி அலைகிறது

பரந்து விரிந்திருக்கிறது
இவ்வுலகை நனைத்துக் கொண்டாட
ஆழி நிசியின் நிறைந்த ஈர மணம்

தழுவலில் ததும்புகிற மணம்
ஒரு பைத்தியத்திலிருந்து
பிரிந்தவாறு மெல்ல விடிகிறது

வெண்மேகம் பார்க்க
சுவடுகளற்ற கடலின் பகல் அலை
பாவமாய் இருக்கிறது இப்போது…

– முருகன்.சுந்தரபாண்டியன்