முருகன் சுந்தரபாண்டியன் கவிதைகள்

84

வண்ண மீன்கள் நிரம்பி என்
கண்களில் நீந்தியிருக்கையில்
கண்ணசைவற்று தீர்ந்திருந்தேன்

துள்ளி விழுந்து தெறிக்கும் நீரில் 
சிலிர்க்கும் பூக்களை பார்த்திருக்கிறேன்
அப்போது ஆழ விரிந்திருந்தது
என் கண்கள்

றெக்கைகளடித்து நீர் மேல்
தாழும்,எழும்,விழும் பறவைகள்
நதியை கொஞ்சம் அள்ளிச் சென்று
செழித்த வயல்களில் விசிறும் சப்தத்தை
நீங்களறியாமல் கேட்டிருக்கிறேன்

செவ்வானம்
மிதந்து நனைந்து சிவந்திருக்கையில்
நிழலருந்தும் நதியை
முகம் காணும் வானை
என்னசைவற்றும் உயிர்த்திருந்த
கைகளில் ஏந்தியிருக்கிறேன்

கறுத்த ஈரவில்
அது நட்சத்திரங்களோடு
உறங்கி ததும்புகையில்
அவ்விடத்துக் காற்றோடு கலந்திருக்கும்
உயிரினது ஈரம் சுவாசித்திருக்கிறேன்

இரவுக்கும் பகலுக்கும்
தலைக்காட்டுவதோடு போகாமல்
தாகம் தீர்க்க இணைப்பை தருகையில்
மகிழ்ச்சியில் புரண்டிருக்கிறேன்

மூழ்கி தரை தொட்டு மண்ணெடுத்து
ஆடி மகிழ்ந்த என்னிலத்து நதியின்
உடல் கிழிக்கப்பட்டு அழிந்த
கனா ஒன்று வந்தால் மட்டும் 
கண்ணீரோடு எழுந்துவிடுவேன்….

******************************************

நம் குடைக்கென வரும் மழை
உன்னோடு நனையத்தான்
மெய் சிலிர்த்தாடி வருகிறது

குடைக்குள் இயலாத மழை
சுற்றிலும் வழிந்தபடி உன் கைகளுக்கு
நீர்த்துண்களாகப் பார்க்கிறது

கால் கரண்டைகளில் தெறித்து
சிலிர்க்கச்செய்யும் மழை
தீவிர காதல் பைத்தியம் தான்

நனைக்க மெனக்கிட்டும்
நிறைவுறாது ஊறும் ஆசைக் கனவோடு
நகர்ந்து போகிறது தடம் பதித்து

நாம் சிறு புழுவென மெல்லக் கடக்க
சாலையெங்கும் பெருகியோடும்
மழை தோற்றக் காதல்

துயரற்ற உன்
வெளி நீளாதக் கரம் பற்றிய நான்
நீதான் என் மழையென்றிருக்கையில்
பொய்யென இறைந்தோடுகிறது..

ம்ம்ம் .. ப்போடாஎனும் உன் பார்வை
பார்த்து தான் பெய்கிறது இம்மழையும்

முருகன்.சுந்தரபாண்டியன்.