நான் பொறுப்பு

112

இன்று ஏனோ விழிப்பு தட்டியப் பிறகும் எழத் தோன்றவில்லை. இன்னும் கொஞ்சம் உறங்கினால் என்ன? பேச்சுக் கேட்க நேரிடும். இன்னாருடைய பேச்சு என்றில்லாமல் வீட்டில் இருக்கும் எல்லோருடைய பேச்சையும் கேட்க நேரிடும். பேசட்டுமே… வருடக் கணக்காய் பழகிவிட்டது. இன்று மட்டும் கொஞ்சமே கொஞ்சம் சகித்துக் கொண்டால் இனி கேட்க தேவையிருக்காது.

வாழ்வின் விளிம்பில் நின்று உலகை எட்டிப் பார்க்கும் போது கிடைக்கும் தைரியம் அசாத்தியமானது. இனி எதிர்கொள்ள ஒன்றுமில்லை எனும் நிலையை அடையும் போது உள்ளுக்குள் பொறியாய் உருவாகி பரவிப் பெருகும் வெறியின் அளவு சற்றேக் கூடுதலானது.

அப்படியோர் மனநிலையில் தான் இருந்தாள் இந்திரா.

வெளியில் பால்காரன் அடித்துச் சென்ற ஹார்ன் சப்தம் கேட்கிறது. தினமும் இந்நேரம் வாசலில் கோலம் போட்டு முடித்திருப்பாள். மெத்தையில் புரண்டு படுத்து போர்வையை காதுவரை இழுத்துவிட்டுக் கொண்டாள். குளிருக்கு இதமாக இருந்தது.

திடீரென்று அந்த சந்தேகம். இதம் என்னும் சொல்லை உச்சரித்து எத்தனை நாட்களாயிற்று? நினைவில்லை. ஆறு அல்லது ஏழு வருடங்கள் இருக்கலாம். அப்போது இந்திரா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள்.

“ஏய் எழுந்திரிக்கலையா? அப்படி என்ன தூக்கம்?”

தடதடவென்று கதவு தட்டப்படும் ஓசையும் அதை விட நாராசமானதொரு பெண்ணின் குரலும் அவளுடைய தற்காலிக இதத்தை கெடுக்கவென்றே ஒலித்தன. எப்போதேனும் உடல்நிலை சரியில்லாமல் போகும் சமயம் இப்படி விடிந்தப் பிறகும் உறங்கியிருக்கிறாள். அதுவும் இரவு நேரம் கழித்து உறங்கியிருந்தால். அதுவும் முந்தைய தினம் வேலைப்பளு அதிகமாக இருந்திருந்தால். அதுவும் அவளுடைய கணவனிடம் உறங்கச் செல்லும் முன்னரே அனுமதி வாங்கியிருந்தால்.

இப்படி எத்தனையோ ‘அதுவும்’களை தாண்டி உறங்க முடிவெடுத்தாலும் உறக்கத்தில் ஆழ்ந்ததில்லை. விழிப்பின் முதல் நொடி தொட்டு கடைசி நொடி வரை செய்ய வேண்டிய வேலைகள் கீறல் விழுந்த ரெக்கார்டை போல் திரும்ப திரும்ப மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். எழுந்தப் பின் ஒருமுறை செய்யும் வேலையை உறக்கத்தின் பிடியில் மனதிற்குள் ஆயிரம் முறையேனும் செய்து முடித்திருப்பாள்.

மீண்டும் கதவு தட்டப்படும் ஒலி. இம்முறை பேச்சுக் குரலில்லை. மாமனாராக இருக்கும். அவருக்கு காபி குடிக்கும் நேரமாகிவிட்டதல்லவா. மாமியாரை போல் கத்தமாட்டார். கமுக்கமாய் இருந்து காரியம் சாதிக்கும் ரகம். இந்திரா இந்த வீட்டிற்கு வந்த அன்றிலிருந்து ஒரு நாள் கூட அவள் மாமியார் காபி கலக்கியதில்லை. அதென்னவோ அவளுடைய குல தொழிலாக பாவித்து அவள் தலையில் கட்டிவிட்டார்.

“இன்னைக்கு நான் காபி கலக்க மாட்டேன்”

புரண்டுப் படுத்தாள். தினேஷ். தன் ஐந்து வயது மகன். தன்னுடைய சொத்து. வேறெதுவும் கையிலுமில்லை பையிலுமில்லை. வங்கி கணக்கில் கூட இல்லையென்று இரண்டு நாட்களுக்கு முன்பு வங்கியிலிருந்து வந்த குறுந்தகவல் தெரிவித்திருந்தது. ஐம்பதாயிரத்திற்கு மேல். ஒருவேளை அறுபத்தைந்தோ? நினைவில்லை. காசு கணக்கை நினைவில் வைத்துக் கொள்ள முடியாதளவிற்கு கையில் பணம் இருந்ததால் அல்ல. இப்போதெல்லாம் அவளுடைய வங்கி கணக்குகளையும் அவள் கணவனே பார்த்துக் கொள்கிறான் என்பதால். வரவு செலவு கணக்கு எதுவும் அவள் கேட்டுக் கொள்வதில்லை. வரவு அவளுடைய சம்பளம் மட்டுமே. செலவு? தெரியாது.

தினேஷின் டே கேரில் “உங்க பையன் ரொம்ப ஸ்மார்ட்” என்றுக் கூறியபோது “அவனாவது அப்படியிருக்கட்டும்” என்று நினைத்ததை சொல்லாமல் விடுத்து புன்னகைத்ததை இப்போது எண்ணிப் பார்த்தாள்.

நடந்து முடிந்த, கடந்துப் போன எதையும் இப்படி அசைபோடும் சந்தர்ப்பம் அவளுக்கு வாய்த்ததில்லை. கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் வாய்த்திருக்க வாய்ப்பிருந்திருக்குமென்று இப்போது தோன்றியது.

மீண்டும் கதவு தட்டப்படும் ஒலி. “அண்ணி லேட் ஆகுது” என்ற ஓங்கி ஒலித்த குரல் “ச்ச… தினம் இதே ரோதனையாப் போச்சு” என்பதை முனுமுனுத்துச் சென்றது.

உறக்கம் ஒரு வரம். எண்ண அலைகளை அடக்கி, அகமும் புறமும் அமைதியுற்று, எந்த இடையூறும் இன்றி உடலுக்கு சுகம் தரும் வசதியானதொரு படுக்கையில் படுத்து உறங்கும் உறக்கம் ஒரு வரம். இன்றோடு தனக்கது நிரந்திரமாக கிடைத்துவிடும்.

படுக்கையிலிருந்து எழுந்தாள். குளியலறை பக்கம் எட்டிப் பார்க்கவும் நேரமின்றி வெளியே ஓடிவிடுவது வாடிக்கை. குளியலறைக்குள் சென்றாள். கண்ணாடி பார்த்துக் கொண்டே பிரஷை முன்னும் பின்னும் தேய்த்த்தாள். “ஒழுங்கா பல்லு தேய்… இல்லன்னா பல்லெல்லாம் சொத்தையாயிடும்” என்ற அம்மாவின் கத்தல் எங்கோ தூரத்தில் கேட்டது. அது ஒரு காலம். அம்மாவின் திட்டு கேட்காமல் எந்த வேலையும் செய்யத் தோன்றாமல் இருந்த காலம்.

அம்மாவுக்கு அழைத்து பேச வேண்டும். நிறைய அறிவுரை வழங்குவாள். “பொறுமையா இரு. பெரியவங்கள எதிர்த்து பேசாத. வயசானவங்கள நீ தான் பொறுப்பா கவனிச்சுக்கணும். கோவப்படாத”.

இந்திரா “ம்ம்” கொட்டுவாள். திருமணம் ஆனப் புதிதில் புகார் கூறியிருக்கிறாள். தன் பக்க நியாயங்களை எடுத்துரைத்து வாதம் செய்திருக்கிறாள். தான் படும் துயரங்களை பட்டியலிட்டிருக்கிறாள். அம்மாவின் பேச்சு எதற்கும் மாறாது. எப்போதும் அதே அறிவுரை தான். சில நாட்களுக்குப் பிறகு இந்திரா அமைதியாகிவிட்டாள். “ம்ம்” என்பதோடு சரி.

வாயை கொப்பளித்தவளுக்கு குளிக்க வேண்டும் போலிருந்தது. இரண்டு குவளை நீரூற்றி சோப்பிட்டு பின் மூன்று குவளை நீரூற்றி அரக்கப்பரக்க தினம் குளிக்கும் காக்கா குளியலாக இல்லாமல் நிதானமாக குளிக்க வேண்டும். மணி எப்படியும் ஏழரை இருக்கும். இதற்கு மேல் அடுக்களைக்குள் நுழைந்து சமைக்க மனமில்லை. ஷவரை திறந்துவிட்டாள்.

குக்கரின் விசில் சப்தம் கேட்டது. அதிசயம் தான். மாமியார் சமையல் வேலைகளை துவங்கியிருக்கிறாள். நாத்தனாரின் நச்சரிப்பாக இருக்கும். தன்னை அலங்கரித்துக் கொள்வது ஒன்று மட்டுமே தன்னுடைய வேலை என்று அடித்து சொல்பவள்.

இந்திரா தலையில் சுற்றியிருந்த துண்டை அவிழ்த்து தழைய பின்னி நெற்றியில் பொட்டிட்டாள். “கண்ணாடி முன்னாடி நின்னது போதும். சீக்கிரம்…” என்று மிரட்டும் மாமியாரின் குரல் இன்று கேட்கவில்லை.

“துணியெல்லாம் எப்போ துவைக்குறதா உத்தேசம்?”

வீட்டில் அவளையும் சேர்த்து ஆறு ஜீவன்கள். அனைவரின் ஆடைகளையும் அவள் ஒற்றை ஆளாய் துவைக்க வேண்டும். வாஷிங் மஷின் வாங்கலாம் என்றுக் கூறியதற்கு “அழுக்கு போகாது” என்று காரணம் கூறி நிறுத்திவிட்டார்கள்.

“இந்த காலத்துலயுமா இப்படியெல்லாம் இருக்காங்க? நீ எதுக்கு இந்திரா வாய மூடிட்டு இருக்க? போலிஸ் ஸ்டேஷன் போய் ஒரு கம்ப்ளயின்ட் எழுதி குடுத்துட்டு வாடி. அப்பறம் பாரு…”

அக்கறையுடன் அறிவுரை வழங்கும் தோழிக்கு “அப்பா இல்லாம தனி ஆளா என்னை வளர்த்து இப்போ உடம்பு சரியில்லாம இருக்குற என் அம்மா இத கேட்டா ஒடஞ்சு போயிடுவாங்க” என்றெல்லாம் விளக்கம் கூறாமல் “பார்க்கலாம்” என்று பதிலுரைப்பாள் இந்திரா.

நாற்காலியை இழுத்துப் போட்டு டைனிங் டேபிளில் அமர்ந்தாள். சுற்றியிருந்த அனைவருக்கும் தட்டு வைத்து பரிமாறப்பட்டது. தானே எழுந்து சென்று ஒரு தட்டை எடுத்து வந்து பரிமாறிக் கொண்டாள்.

“அண்ணா எனக்கு ரெண்டாயிரம் வேணும். என் பிரெண்ட்ஸ் ட்ரீட் கேட்டிருக்காங்க”

இந்திராவை பார்த்தபடியே அவள் நாத்தனார் கேட்டாள். இரண்டு நாட்களுக்கு முன்பு வாங்கிய ஐந்தாயிரத்துக்கு கணக்கு எதுவும் கேட்காமல் தலையாட்டினான் இந்திராவின் கணவன். தன்னுடைய கணக்கிலிருந்து தான் இந்த பணமெல்லாம் எடுக்கப்படுகிறதென்று புரியாமலில்லை. வாயில் திணித்த இட்லி உள்ளே செல்ல மறுத்து தொண்டையில் நின்று போராட்டம் செய்தது. தண்ணீர் குடித்து விழுங்கினாள்.

யாரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப மனமில்லை. கை பையுடன் வாசலை தாண்டி வீதியில் நடந்தாள்.

“மம்மீ…….”

தினேஷின் குரல். கேட் அருகே நின்று கையசைத்து புன்னகைத்தான். பதிலுக்கு கையசைத்தவளின் கண்கள் கலங்கத் துவங்க திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

ஒரு பெண் பேச தகாத வார்த்த்தகளையெல்லாம் சொல்லி மாமியார் திட்டினாள். எதற்காகவோ யாரிடமோ கூறுவது போல் உதாரணங்கள் கூறி அவளை வசை பாடினார் மாமனார். நாளொரு காரணம் கூறி காசு கேட்டும் இருக்கும் வேலையெல்லாம் இந்திராவின் தலையில் கட்டியும் முணுமுணுத்துச் சென்றாள் நாத்தனார்.

எத்தனையோ முறை தனி குடுத்தனம் போய் விடலாமென்று கணவனிடம் கெஞ்சியிருக்கிறாள். “அட்ஜஸ்ட் பண்ணிட்டு போ” என்பதை தவிர வேறு எந்த பதிலும் கூறாத கணவன். கூட்டுக் குடும்பமாக இருந்தாலும் தனக்காக வாதிடலாம். அதற்கெல்லாம் முயற்சிக்காதவன்.

தினேஷின் விஷயத்தில் யாரும் தலையிடாதவரை நிம்மதி என்று அவள் நினைத்திருக்க அதற்கும் நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

“இப்போ எதுக்கு இந்த காஸ்ட்லி ஸ்கூல்? பீஸ் ஜாஸ்தியா வாங்குறான். வீட்டு பக்கத்துலயே இருக்க ஸ்கூல்ல சேர்த்தா என்ன?”

மாமனார் பேச்சை துவங்கியபோதே மனம் பதைக்கத் துவங்கியது. அவர் சொன்ன பள்ளியில் படித்துதான் அடுத்த வீட்டு சதீஷ் பத்தாவதில் தோற்றுப் போனான். அது பெரிதல்ல. மாணவர்களை அடித்தும் மிரட்டியும் துன்புறுத்தியதில் மனநிலை சரியில்லாத நிலைக்கு சென்றுவிட்டான். விட்டத்தை வெறித்தபடி மூலையில் அமர்ந்திருக்கும் மகனை பார்க்க சகிக்காமல் பள்ளியின் மீது வழக்கு தொடர்வது குறித்து அவன் தாய் இந்திராவிடம் பேசியிருக்கிறாள். அப்படிப்பட்ட பள்ளியில் தன் மகனா?

கணவனிடம் பேசி பார்த்தாள். எடுத்து கூறினாள். கெஞ்சி மன்றாடினாள். “அப்பா சொன்னா சரியாதான் இருக்கும்” என்னும் முட்டாளிடம் என்ன பேசுவது?

மகனுடன் எங்கேனும் ஓடி விடலாமா என்று யோசித்தாள். அவ்வளவு துணிவில்லை. தனியாக வாழ முடியாதென்று நம்பினாள். சண்டையிடலாம் என்றால் இத்தனை வருடங்களில் ஒரு விஷயத்திற்கு கூட அதெல்லாம் கை கொடுத்ததில்லை. மனைவியாக, மருமகளாக தோற்றிருந்தாலும் தாயாக ஜெயித்துக் காட்ட வேண்டும் என்று நினைத்ததெல்லாம் நடக்காதென்று ஆனப் பிறகு உயிருடன் இருந்து என்ன பயன் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது.

சாவதற்கு துணிவிருக்கிறதா? தெரியாது. சோதித்து பார்த்துவிடுவதென்று சாலையின் ஓரம் நடந்துக் கொண்டிருந்தவள் மெல்ல தள்ளி நடக்க ஆரம்பித்தாள். முதலில் சென்ற இரண்டு இரு சக்கர வாகனக்காரர்கள் கை நீட்டி ஏதோ கத்தி சென்றார்கள். கை பையை இறுகப் பற்றி மீண்டும் ஓரத்திற்கு வர எத்தனித்தாள்.

கண்களில் கருவளையம் கட்டி விட்டத்தை வெறித்தபடி மூலையில் அமர்ந்திருக்கும் தினேஷின் தோற்றத்தை கற்பனை செய்துப் பார்த்தாள். கண்கள் இரண்டையும் இறுக மூடி வேக வேகமாக சாலையின் நடுப் பகுதி நோக்கி முன்னேறினாள். கிரீச்சிடும் வாகனங்களின் ஒலி காதை பிளந்தது.

 -ப்ரதியுஷா ப்ரஜோத்