நம்பி கோயில் பாறைகள்

244

“ ஏண்டா “

“ என்ன “

“ இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும் “

“ இதுக்கே சலிச்சிக்கிற, இன்னும் போகணும் “

“ சும்மா கேட்டேன்டா “ மூச்சு வாங்கியது மேலே ஏற ஏற.

அது ஒரு பௌர்ணமி இரவு. இருட்டுவதற்குள் மேலே சென்று மண்டபம் சேரவேண்டும். ஆங்காங்கே குட்டி குட்டியாய் ஆட்கள் மேலே ஏறுவது கண்ணில் பட மீண்டும் நடக்கத் துவங்கினேன் நான்.

நம்பி கோவில் செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அடர்த்தியான காடும் ஒழுங்கு இல்லாத பாதையும் இடை இடையே கேட்கும் விலங்குகள் சத்தமும் சர சர என்று காய்ந்த இலைச் சருகுகள் அசைந்தால் பாம்பாக இருக்குமோ என்ற அச்சமும் பகலிலில் சின்ன சின்ன மர இடைவெளி வழியே மட்டும் தெரியும் சூரிய வெளிச்சமும் வார்த்தையில் விவரிக்க இயலாத ஒரு விதமான பூக்களின், மருந்தின், நீரின், வேரின், செடிகளின் வாசனை கலந்த காற்றும் இடை இடையே சல சலக்கும் ஓடையின், கொட்டும் அருவியின் சத்தமும் என அந்த காடு ஒரு பெண்ணின் மனது போல இன்னதென்று விவரிக்க இயலாத நிர்ணயம் செய்ய முடியாத ஒரு கூட்டுத் தொகையாக இருந்ததால் பயம் கலந்த ஈர்ப்பு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது.

கூடவே ஒவ்வொருவருக்கும் ஏற்படும் தனி நபர் அனுபவம் சொல்லும் கதைகள் வேறு அந்த வனாந்திரத்தை பற்றிய ஒரு பிரம்மையை ஏற்படுத்தி இருந்தது. “ நான் போன வாரம் நம்பி கோயில் போனப்போ ஒரு அடி உயரத்துல குட்டையா தாடி வச்ச ஒரு வயசானவரை பார்த்தேன் “ என்ற சிலரின் புது புது அனுபவ டீக்கடை சம்பாஷனைகள் வேறு அதன் மேல் ஈர்ப்பு தர இதோ நானும் சரவணனும் மேலேறி போய்க் கொண்டிருக்கிறோம்.

சில நேரம் ஆள் அரவம் இல்லாத கும்மிருட்டு “ திரும்பி செல்வோமா “ என்ற பயத்தை உண்டு பண்ணத்தான் செய்கிறது. பயத்தை வெளிக்காட்டாததின் பெயர் தான் தைரியம் என்று முகநூலில் இன்பாக்ஸில் தத்துவ போட்டோ உதிர்க்கும் ஞானிகளின் ஆசிகளை முன்னிறுத்தி நடக்கத் துவங்கினேன்.

“ டேய், சரவணா “

“ என்ன “ ஆள் தெரியவில்லை குரல் மட்டும் மேலே இருந்து கேட்டது.

“ எங்கடா இருக்க, சேர்ந்து போவோம்டா “

“ என்ன, பயப்படுறியா கொமாரு “

“ ரொம்ப அவசியம்டா இப்போ. எங்கடா இருக்க நில்லு “

அவனை சேர்ந்து அடைந்து இருவருமாக அரை மணி நேரம் நடந்த பின் “அந்தா தெரியுது பாரு கோயிலும் மண்டபமும் “ என்றான்.

கடலில் திசை தெரியாமல் பயணிப்பவனுக்கு கரை தெரிந்தது போல ஒரு சந்தோஷம் என்னுள். மீண்டும் வேகமாக நடக்கத் துவங்கினோம்.

கோயிலை அடைந்த போது ஆச்சர்யமாக இருந்தது எனக்கு. இவ்வளவு பெரிய கோயில் இந்த காட்டுக்கு இடையில் எப்படி கட்டினார்கள். இந்த தூண்கள் எல்லாம் எப்படி இங்கு வரை கொண்டு வந்தார்கள். இங்குள்ள பாறைகளை குடைந்தே செய்திருந்தால் எவ்வளவு நாள் தங்கி இருந்திருப்பார்கள். இந்த கோவிலின் அவசியம் என்ன. ஏன் சில பாறைகளை பார்த்தால் மனிதர்கள் போல காட்சியளிக்கிறது. இருட்டுவதற்குள் கோயில் முழுக்க சுற்றி பார்த்துவிட முடியுமா. கோயிலையும் மண்டபத்தையும் அதன் அருகில் திமு திமுவென நீர் விழும் சத்தத்துடன் காட்சியளிக்கும் அருவியையும் சுற்றிலும் மரங்களே இல்லாது வானம் நேரடி காட்சியளித்ததால் வெளிச்சம் ஒரு தைரியத்தை தர, கோயிலை சுற்றிப் பார்க்க துவங்கினோம்.

ஏறக்குறைய நூறு பேர் வந்திருப்பார்கள் என நினைக்கிறேன் என்றான் சரவணன்.

பௌர்ணமி இரவு நம்பி கோயில் ஸ்பெஷல் என்பதால் தான் இன்று எப்படியாவது வந்தே தீருவது என வந்து சேர்ந்திருந்தோம். அவனவன் ஆன்மாவிற்கு தக்கபடி ஏதேனும் சம்பவிக்கும் என்று கேள்விபட்டதுண்டு.

வந்திருந்த பலரையும் கண்டால் தாடியுடன் சந்நியாசி கோலத்தில் தான் இருந்தார்கள். அவர்கள் கண்களில் ஏதோ தேடுதல் இருந்தது.

அதைவிட ஆச்சர்யம் அந்த கோயில் மண்டப பாறைகள். கருமையிலும் மிகக் கருமை நிறம். இப்படி ஒரு அடர் கருப்பு இதுவரை நான் கண்டதே இல்லை. இன்னொன்றும் சொல்ல மறந்துவிட்டேன் கோயிலின் நேர் எதிர் வாசலில் நந்தி அமரும் கோணத்தில் ஒரு யானை சிலை இருந்தது அதற்கு இரண்டு இறக்கை இருந்தது விரிந்த வண்ணம்.

இரும்பு கதவுகள் பூட்டி இருக்க கம்பிகளின் இடுக்கு வழியே பார்த்தோம். கோயில் உள்ளே ஒரு கரிய நிற பெண் சிலை. அதன் மேல் சில மஞ்சள் பூக்கள். பெயர் ஒன்றும் இல்லை. வனராணி என்று பெயராம் அதற்கு. எனக்கு சாண்டில்யனின் யவனராணி கதையின் பெயர் நினைவுக்கு வந்து போனது.

கால் வலிக்க கோயிலை சுற்றி விட்டு மண்டபத் தூணில் கட்டி இருந்த நைலான் கையிற்றை பிடித்தபடி நீர் கடந்து, கையிற்றை பிடித்துக் கொண்டே அருவியில் குளித்து, குளிர் தாளாமல் வெடவெடத்து மண்டபம் உள்ளே சென்று உடை மாற்றி பசி தாளாமல் கொண்டு வந்திருந்த பொட்டணம் பிரித்து புளியோதரை தின்று, “ பிரியாணி நெய் சோறு இருந்தா வளச்சி ஒரு கட்டு கட்டி இருக்கலாம் ம்ம் அசைவம் கொண்டு வரக்கூடாதுன்னு புது புது சட்டம் போடுறாங்களே மக்கள் “ என மனதிற்குள் முணுமுணுத்து, பின்னால் இருந்த படி வழியாக உயரமான மண்டபத்தின் மேலே ஏறி வந்து அமரும் போது இருட்டத் துவங்கி இருந்தது.

ஏறக்குறைய வந்திருந்த அனைவருமே ‘அசெம்பளி’ ஆவது போல மண்டபத்தின் மேலே இருந்தனர். மண்டபத்தின் மேலே இருந்து பார்க்க இன்னும் வனம் நன்கு தெரிந்தது. சுற்றிலும் காடு காடு காடு. காடு மட்டுமே கண்ணில் பட்டது.

கொண்டு வந்திருந்த போர்வையை விரித்து இருவரும் அமர்ந்து கொண்டோம். கீழே கோயிலில் யாரோ நெய் விளக்கேற்றி வைக்க ஆங்காங்கே சின்ன சின்னதாய் மஞ்சள் வெளிச்சம் பரவத் துவங்கியது.

மண்டபத்தின் மேலே அமர்ந்து இருந்த யாரோ ஒருவர் “ ஆண்டா சீதேவி ……..ஆண்டா சீதேவி …………..ஆண்டா சீதேவி என சுயம் மறந்த நிலையில் ஒரே சுருதியில் சொல்லிக் கொண்டே இருந்தார். எங்கோ ஊளையிடம் சத்தம் இடை இடையே.

மொபைலில் நத்திங் பட் வின்ட் இட்டு வயர்லெஸ் ஹெட் போனை தலையில் மாட்டி போர்வையில் சாய்ந்து வானத்தின் பௌர்ணமி நிலவை ரசிக்கத்துவங்கி விட்டான் சரவணன்.

இங்கு தான் மண்டபத்தின் மேல் தான் தூங்க வேண்டுமாம். பூச்சி புழு அண்டாதாம். என்னை போல கட்டிலில் உருள்பவனுக்கு இதை கண்டாலே பயம் வருகிறது. தூக்க கலக்கத்தில் உருண்டு விழுந்தால் மண்டபத்தின் மேல் இருந்து ஏழடி கீழே இருக்கும் தரையின் ஏதேனும் பாறையில் விழுந்தால் எலும்பு முறிவு நிச்சயம் என்ற எண்ணம் ஓடியது. எப்படி இவர்கள் எல்லோரும் மேலே தைரியமாக படுத்திருக்கிறார்கள் உருளவே மாட்டார்களா. நமக்கு மட்டும் எவ்வளவு பிரச்சனை, தூங்குவதற்கு வசதியாக இருக்கும் என லுங்கி கட்டி படுத்திருந்தோம். துணி மேலே விலகும் என்பதால் கால் அருகில் லுங்கியின் இரு பகுதிகளையும் இணைத்து முடிச்சிட்டுக் கொண்டேன்.

தூரத்தில் பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் அருவி பால் போல கொட்டிக் கொண்டிருந்தது. குளிர் இல்லை அதுவரை சந்தோஷம்.

சதுரமாய் மண்டபம் நடுவே கோவில். அதன் வாசலில் யானை சிலை. உள்ளே சுற்றிலும் நிறைய கற்சிலைகள் மனித உருவில். அவை சிலைகளா இல்லை எதிலும் அரைகுறையாக சிக்கிக் கொண்ட மனித உருவங்களா என்ற சந்தேகம் உண்டாகக் கூடிய சிலைகள். வினோத கற்கள் பாறைகள் ஏதோ அறிமுகமான உருவில். இடை இடையே நீரை தாண்டி கேட்கும் ஊளையிடும் பிளிரும் சத்தம். பயமாகவும் இருந்தது சுகமாகவும் இருந்தது. பார்த்தபடியே இருந்தேன் எப்பொழுது உறங்கினேன் என ஞாபகமில்லை.

தூக்கத்தில் நல்ல கனவு. கனவில் மண்டபத்தில் இருந்து இறங்கி கோயில் உள்ளே சுற்றுகிறேன். சில சிலைகளை ஆசையாய் தொட அவை உயிர் பெற்று பாறையை கிழித்துக் கொண்டு மனித வடிவில் வெளி வருகின்றன. பத்து பதினோறாவது ஆள் வெளி வரும் போது தட தடவென சத்தத்துடன் நான்கைந்து ஆட்கள் கையில் வாளுடன் வருகிறார்கள் என்னை வெட்ட.

இங்கும் அங்குமாக ஓடி தப்பிக்கிறேன் அவர்களிடமிருந்து. சில நேரம் வானில் தாவி பறக்கிறேன். அவர்களால் என்னை வெட்ட இயலவில்லை. திடீர் என “ ஆதிரா…….. நிறுத்து “ என ஒரு குரல். குரல் கேட்ட நொடியில் அந்த நால்வரும் கண்ணில் இருந்து மறைகின்றனர்.

நான் அங்கும் இங்கும் ஓடிய களைப்பில் மூச்சு வாங்கி மெதுவாக நடந்து மீண்டும் மண்டபம் மேல் ஏறி வந்து அமர்கிறேன். தண்ணீர் குடிக்க வேண்டும் போல இருந்தது. சற்று தள்ளி போர்வையில் படுத்திருந்த அவள் என் அருகில் வந்து குவளையில் நீர் தருகிறாள். இதுவரை ஒரு பெண்ணையும் நாம் இங்கே பார்க்கவில்லையே,. இவள் யார் எப்படி இங்கு வந்தாள் யோசிக்கிறேன். ஆனால் அவள் பார்வை என்னை மயக்குகிறது. நிலா வெளிச்சத்தில் அவள் தோலில் நிறம் மினுமினுக்கிறது. வெள்ளை நிறம் என்பதையே பல வகை நிறங்களில் வர்ணிக்கலாம். சிகப்பு வெள்ளை மஞ்சள் வெள்ளை மாநிற வெள்ளை வெளிர் வெள்ளை தங்க நிற வெள்ளை என. இவள் அதை எல்லாம் மீறிய வெள்ளை நிறம். கூடவே அரக்கு நிற சேலை அணிந்திருக்க இன்னும் அழகாக பளிச்சிடுகிறாள். மேலாடை பாவாடை என்றெல்லாம் இல்லை,. வெறும் சேலையை சுற்றி இருக்கிறாள்.

அவளை அருகில் இழுக்கிறேன். என்னை ஒட்டி அமர்ந்துகொண்டாள். மாசு மருவில்லாத மெல்லிய புத்தம் புது தேகம். ஒரு இளம் மான் குட்டியை போல என் கைக்கு அடக்கமாக உள்ளே சுகந்தமாய் சிக்கி இருந்தாள். நான் அவள் பின்புறத்தை அழுத்துகிறேன் முடிந்த மட்டும். எலும்பே இல்லாத ஒரு மிருதுவான உருவோ என தோன்றுகிறது எனக்கு. அவளின் லேசான வியர்வை வாடை இழுக்கிறது என்னை. மூர்க்கமாய் அவளுடன் பிணையத் துவங்குகிறேன்.

யாரோ என் முதுகுக்கு கீழே இருக்கும் துணியை உருவுவது போல உணர அடடா உருண்டு விழுந்து விடுவோமே என பயத்தில் அரைகுறை தூக்க கலக்கத்தில் விழிக்கிறேன்.

லேசான வெளிச்சத்தில் வானம் விடிந்து கொண்டிருக்கிறது. படுத்துகிடந்த என் எதிரே அவள், அவளின் அரக்கு நிற சேலையை என் முதுகில் இருந்து அசைத்து உருவிக் கொண்டிருந்தாள். சட்டென நான் எழ சேலை முந்தானையை இழுத்து எடுத்தவள் லேசாய் சிரித்துவிட்டு போய் குளி என்ற வண்ணம் போய்க் கொண்டிருந்தாள்.

யார் இவள். கனவா நனவா என்ன நடந்தது. லேசான அசைய முயற்சித்த போது தான் கண்டேன். அணிந்திருந்த லுங்கி ஈரமாக இருந்தது. “ச்சை பார்த்தா கேலி பண்ணுவானே “ என்றெண்ணி வேக வேகமாக கொண்டு வந்திருந்த பையை திறந்து துண்டை எடுத்துக் கொண்டு குளிக்க அருவி நோக்கிச் சென்றேன்.

போகும் வழியில் ஒரு பதினோரு பேர் இடை மறித்து அங்கே போய் குளி அங்கே போய் குளி என வழி மறிக்க “ இல்ல அருவியில குளிக்கணும் “ என்றேன். “ அருவியில தண்ணி இப்போ ஜாஸ்தியா வரும் அங்கே போய் குளி “ என ஆட்கள் போகும் பாதையை காட்ட அவர்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டவனாய் அந்த ஓடு நீரை நோக்கி மனமின்றி நடக்கத் துவங்கினேன்.

துண்டை கல்லில் ஓரமாக வைத்து விட்டு நீரில் இறங்கிய மறு நிமிடம் சர சரவென என் உடல் கொஞ்சம் கொஞ்சமாக உருகி கரைந்து ஒரு உருளை வடிவ கல்லாக மாறி இருந்தேன்.

கன நேரத்தில் வாழ்வில் இத்தகைய மாற்றம் நிகழ்ந்தால் என்ன ஆவது. எழ எத்தனிக்கிறேன் இயலவில்லை. நான் முயற்சிப்பதை கண்ட அருகில் இருந்த என்னைப் போன்ற வடிவில் இருந்த ஒரு கல் பேசத்துவங்கியது. “ நீ கொடுத்துவச்சவன் பொறு “ என்றது. அது கூறிய சற்று நிமிடத்தில் யாரோ ஒரு கை என்னை எடுத்துக் கொண்டு நடக்க துவங்கியது. கல்லாக அந்த கையில் அமர்ந்திருந்தேன் ஆனாலும் அனைத்தையும் பார்க்க உணர முடிந்தது. ஆட்கள் கோயில் விட்டு இறங்கும் பாதையில் கல்லோடு கல்லாக என்னை வைத்துவிட்டு தள்ளி நின்று கொண்டது அந்த கூட்டம், பத்து பதினோரு பேர் இருந்தனர் அவர்களில்.

நீண்ட நேரம் காத்திருந்தேன் மண்டபத்தின் மேலே இருந்து ஒவ்வொருவராக இறங்கி நடக்கத்துவங்கினர். சரவணன் என்னைத் தேடி அலைவதை காண முடிந்தது. யாரோ ஒருவர் கால் என்மேல் பட சட சடவென மீண்டும் என் உடல் பெரிய மனித உருவமாக மாறத் துவங்கியது.

தள்ளி நின்று காத்திருந்த பதினோரு பேரும் சிரித்தவண்ணம் கூட்டத்துடன் கலந்து இறங்க துவங்க நான் சுய நினைவு வந்தவனாக சற்று நேரம் ஒன்றுமே விளங்காத நிலையில் எது நிஜம் எது பொய் என்ன ஆனது எனக்கு என புரியாமல் அங்கேயே நின்றிருந்தேன்.

“ ராத்திரி ஆனாதான்  ஆட்டமே. பாரு ஒண்ணுமே நடக்காத மாதிரி கோயில் இருக்கிறதை, ம்ம் ….அடுத்த பௌர்ணமிக்கும் வரணும் “ என பேசியபடி இறங்கிக் கொண்டிருந்தது அந்த மக்கள் கூட்டம்.

– கனவுப் பிரியன்