நெற்றிக் கண்-பாகம்-11

30

உலகத்தில் மற்றவர்களுடைய வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படுகிறவர்கள் அதிகமாக இல்லையானாலும் அவ்வப்போது விசாரிக்கிறவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

‘வெட்டு ஒன்று துண்டு இரண்டாக’ எதையும் பட்டுக் கத்தரித்தாற் போல எழுதத் தெரிந்த சுகுணன் அப்போது துளசியிடம் அப்படிப் பேசித் தவிர்க்க முடியாமல் தவித்தான். உணர்ச்சிகளை எதிர்கொள்ளும் போது எல்லா மனிதர்களும் பேதைகளாவதிலிருந்து தப்ப முடியாது போல் தோன்றியது. ஆசைப்படுவதற்கும் அருவருப்படைவதற்கும் சொந்த மனங்கள் மட்டும் இல்லாவிட்டால், யார் யாரோடு வாழவேண்டுமென்று மனிதர்கள் நிர்ணயிக்கிறார்களோ அப்படியே வாழ்ந்து விடலாம். தான் மனத்தில் நிர்ணயித்தபடி வாழமுடியாது போய் – ‘இன்னொருவர் நிர்ணயித்தபடி வாழ்கிறோம்’ என்ற நினைப்பே, வைத்தியர்கள் மருந்து கொடுத்துத் தீர்க்க முடியாத ஒரு நோய் தான். மனத்தின் அந்தரங்கமான புண்களை ஆற்ற முடியாத வரை மனிதன் கண்டுபிடித்திருக்கும் எல்லா மருந்துகளுக்கும் ஒரு தோல்வியும் உண்டு போலிருக்கிறது என்று எண்ணினான் சுகுணன். துளசியைச் சமாதானப்படுத்தி அவளுடைய வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்கு அன்று அந்தக் காலை வேளையில் மிகவும் சிரமப்பட்டான் அவன். துளசியின் பதற்றத்தையும், அவள் டில்லியிலிருந்து பறந்து ஓடி வந்திருக்கும் நிலையையும், அவளை வீட்டுக்கு அனுப்பிய பின் தனக்குள் நிதானமாகச் சிந்தித்த போது, காதல் தோல்விகளின் போது நிச்சயமாக அநுதாபத்திற்குரியவர்கள் பெண்களே என்று தோன்றியது அவனுக்கு. அப்படிச் சிந்தித்த போது துளசியின் மேல் அதுவரை ஏற்பட்டிராத எல்லை வரை அவனுள் பரிவு பெருகி வளர்ந்தது. ஒரு பெண்ணின் மேல் சத்தியமாகப் பொங்குகிற இந்தப் பரிவிற்குத்தான் காதல் என்று உலகில் பெயர் சொல்லுகிறார்கள் போலிருக்கிறது என்பதையும் சுகுணன் அப்போது உணர்ந்தான். துளசியின் தாபங்களையும், வேதனைகளையும் எண்ண எண்ண அவள் தன்னை மறக்கின்ற வரை – தன்னுடைய நினைவுகளே அவளுள் எழ முடியாதபடி தான் எங்காவது கண் காணாத தேசத்திற்கு ஓடிப்போய் இருந்துவிட வேண்டும் போல் அவனுக்குத் தோன்றியது. போய்ச் சேர்ந்த இடத்தில் மன நிறைவோடு வாழவும் முடியாமல், பின் தங்கிய நினைவுகளையும் காதல் சத்தியங்களையும் மறக்கவும் முடியாமல் அவள் படும் வேதனைகளைப் பார்த்த பின்பு அவளைக் குற்றவாளியாகவும் அவனால் எண்ண முடியவில்லை. தந்தையின் முன் கோபத்திற்குப் பயந்து திருமணத்திற்கு ஏற்பாடு நடக்கிற சமயத்தில் தன் மனத்திலிருப்பதைத் திறந்து காண்பிக்க முடியாத அபிப்பிராயக் கோழைத்தனத்திற்கு அவள் ஆளாகிவிட்டதாகவே நினைக்க முடிந்தது. சூழ்நிலைக்குப் பயந்து – பொது அபவாதம் வந்து விடுமோ என்று அஞ்சித் தீரர்களும், இலட்சியவாதிகளுமாகிய ஆண்களே, பல சமயங்களில் சமூக மேடை என்ற தளத்தில் நாகரிகமாக நின்று மனத்தை மூடிக் கொண்டு விடுகிற அளவு அபிப்பிராயக் கோழைத்தனமுள்ள நாட்டிலே, பேதைமை நிறைந்த பெண்ணொருத்தி நூலிழையளவில் தன் அந்தரங்கத்தை வெளிகாட்டிக் கொள்ள முடியாதவளாகி விட்டாள் என்பதை – அவன் உள்ளூர மன்னிக்கவும் இப்போது தயாராயிருந்தான். பல நாவல்களில் – பல சிறுகதைகளில் – பல விதமான கதாபாத்திரங்களின் மனச்சித்திரங்களை வரைந்து வரைந்து அநுபவப்பட்ட அவனுடைய சிந்தனை இந்தப் பிழையை ‘இது நேரக் கூடியது தான்’ – என்று அங்கீகரிக்கத் துணிந்தது. ஆனால் சிந்தனை அங்கீகரிப்பதை உணர்வு அங்கீகரிக்க மறுத்த சமயங்களில் துளசியின் மேல் அவன் கோபம் கொண்டு கொதிக்கவே நேர்ந்திருந்தது. சிந்தனையையும், உணர்வையும் இணைக்கிற அளவு விவேகானந்தராகவோ, காந்தியாகவோ அவன் ஆகியிருக்கவுமில்லை. மனிதனின் இயற்கைக் குணங்களாக இரத்தத்தோடு இழைகிற மான ஈனங்கள், கோபதாபங்கள் எல்லாம் உணர்வுகளில் இருக்கும் போது சிந்தனை மட்டும் தனித்துச் செயல்பட வழியில்லாதவனாகவே இருந்தான் அவன். துளசி சென்ற சிறிது நேரத்திற்குப் பின், காபி கொண்டு வந்த கிளாஸ்களை எடுக்க வந்த லாட்ஜ் பையன், “இன்னா சார்! அந்தம்மா கோவிச்சுக்கிட்டுப் போயிட்டாங்களா?” – என்று அர்த்தமும், சம்பந்தமும் இல்லாமல் ஒரு நிமிஷம் நின்று சிரித்துக் கொண்டே வினாவிய போது, “ஒண்ணுமில்லே! கிளாஸை எடுத்துக் கொண்டு போ…” என்று மட்டுமே சுகுணனால் பதில் கூற முடிந்தது. பெண்ணின் மேல் அல்லது பெண்மை என்ற வசீகர சக்தியின் மேல் தான் இந்த உலகத்துக்கு எத்தனை கருணை? எத்தனை பாசம்? எத்தனை மயக்கம்? என்று உலகை வியந்தும் அப்போது ஒரு சிந்தனை தோன்றியது அவனுள். விமான நிலையத்திலிருந்து நேரே டாக்ஸியில் தன் அறைக்கு அவள் வந்த பரபரப்பு, அழகின் சோகமாக எதிர் நின்று அழுவது போன்ற குரலில் மன்றாடியது, எல்லாமாகச் சேர்ந்து கண்ணப்பா லாட்ஜ் பையனைக் கூடப் பாதித்திருப்பதை உணர்ந்தான் அவன். சம்பந்தமில்லாமல் யாராவது கேட்கும் இப்படிக் கேள்விக் கூட, ஒரு நினைப்பைப் படைக்கிற சக்தி பெறுவது வியப்பாகத்தானிருந்தது. துளசி மனம் மாறும்படி கண் காணாமல் நீண்ட காலத்துக்கு வேறெங்காவது போய்விட வேண்டும் போல ஒரு விரக்தியும் அப்போது அவனுள்ளே எழுந்தது.

இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து வெளியாகிற தமிழ்த் தினசரி ஒன்றின் இலக்கியப் பகுதியான வாராந்திர வெளியீட்டைக் கவனித்துக் கொள்ள ஓர் ஆசிரியர் தேவை என்று முன்பு ஒருமுறை சம்பந்தப்பட்டவர்கள் தன்னை வந்து அழைத்தது இப்போது ஞாபகம் வந்தது அவனுக்கு. அதே போல மலேயாவிலுள்ள கோலாலம்பூரிலிருந்தும் ஓர் அழைப்பு இருந்தது. முன்பு இந்த அழைப்புக்களை ஏற்றுக் கொண்டு அங்கெல்லாம் போய் அமர்ந்து விடாமல் நினைப்பிலும் நேரிலும் ஒரு மயக்கமாக ஓர் இனிய சொப்பனமாக நின்று தடுத்த புன்னகை துளசியுடையதுதான். இப்போது ‘அங்கெல்லாம் கூடப் போகலாமே’ – என்று துணிகிற அளவுக்கு அவனுள் வேதனையூட்டக் கூடியதும் இன்று புன்னகையில்லாத துளசியுடைய முகம் தான். ‘அன்பு செய்கிற பெண் மனிதனின் வாழ்க்கையை எப்படி ஆட்டிப்படைக்கிறாள்’ – என்று நிதானமாக ஒரு விநாடி நினைத்த போது அவனுள் உணர்வு அந்த நினைவை ஏற்றது. அறிவு அந்த நினைவை விவாதித்தது. இந்தச் சிந்தனைகள் குழம்பும் மனநிலையோடு அவன் வெளியே புறப்பட்டான். பி.ஆர்.அன். சன்ஸ் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறித் தம்புச் செட்டித் தெருவிற்குப் போகுமுன் சென்ட்ரலில் இறங்கிக் கோயம்புத்தூருக்கு டிக்கட் வாங்கச் சென்ற போது டிக்கட் ‘கௌண்டர்’ க்யூவில் எதிர்பாராத விதமாக உறவினர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்துக் கொண்டபின்,

“என்னப்பா? எங்களுக்கெல்லாம் எப்போது சாப்பாடு போடப் போகிறாய்?” என்று உலகியல் வழக்கப்படி திருமணத்தைப் பற்றி விசாரித்தார் அவர். உலகத்தில் மற்றவர்களுடைய வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படுகிறவர்கள் அதிகமாக இல்லையானாலும் விசாரிக்கிறவர்கள் அதிகமாக இருக்கிறார்களென்று தோன்றியது. இந்த விசாரணை உலக வழக்கில் ஒரு பொது நாகரிக வழக்கம்.

“முதலில் தங்கைக்கு அல்லவா நடக்க வேண்டும்?” – என்று சுகுணன் கூறியதை அவர் ஏற்பது போல் தோன்றவில்லை.

“நீதான் மூத்தவன். உனக்குத் தானே முன்னால் ஆக வேண்டும்? உன் தங்கையை நீயும் உன் மனைவியுமாக மனையில் இருந்தல்லவா தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும்?” – என்று விவாதித்தார் விடாகண்டரான அந்த உறவினர். சந்தித்த இடத்தில் விசாரித்த சம்பிரதாய விசாரணையை அவர் சம்பிரதாயமாக முடித்துக் கொண்டு போகாமல் வளர்த்துவதாகச் சலிப்படைந்த சுகுணன் “கொஞ்சம் அவசரமாகப் போக வேண்டியிருக்கிறது. மறுபடி சந்திக்கும் போது நிறையப் பேசலாமே?” என்று புன்னகையும் கை கூப்புதலுமாக விடைபெறுகிற விதத்தில் தப்ப முயன்றான். அந்த உறவினர் அப்போதும் விடவில்லை. “எங்காவது வெளியூருக்குப் பயணமோ? பத்திரிகைக் காரியமா? சொந்தக் காரியமா?” என்று அப்போது அவன் டிக்கட் வாங்க வந்த பயணத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கிவிட்டார். ஒரு விநாடி அவருக்கு மறுமொழி கூறத் தயங்கிய சுகுணன் அடுத்த விநாடியே அந்தத் தேவையில்லாத போலித் தயக்கத்தைக் கலைத்தெறிந்தவனாக, “நான் இப்போது பத்திரிகையில் இல்லை” என்றான். இந்த உண்மையை அவரால் இரசிக்க முடியவில்லை.

“ஏன் அப்படி? அட பாவமே! நல்ல சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்தார்களே? நிறையப் பேரும் இருந்தது…”

“…..”

“இந்தக் காலத்திலே வேலையை விடப்படாது. அதுலேயும் நல்ல சம்பளம் கிடைக்கிற இடத்தை நிச்சயமா விடவே படாது.”

“…..”

“அப்ப நான் வரேன்…”

அவரே விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டார். ‘நீ ஒரு வேலையில்லாத வெட்டிப் பேர்வழி! உன்னோடு பேசிக் கொண்டு நிற்க எனக்கு நேரமில்லை’ என்று சொல்லாமற் சொல்வது போல அந்த உறவினர் கத்தரித்துக் கொண்டு புறப்பட்டு விட்டதாகத் தோன்றியது. வயிறு முட்டத் தின்கிறவனைப் பஞ்சப் பசியிலடிபட்ட பட்டினிக்காரன் பார்ப்பது போல் – மனிதனின் சம்பளம் முதலிய சௌகரியங்களையும், பதவி – பிரசித்தி – முதலிய சௌகரிய நிழல்களையும் மற்றவர்கள் கவனித்துக் கொண்டே இருப்பது போலவும் அவை அவனை விட்டு நீங்குகிற போது அல்லது அவன் அவற்றை நீக்கிக் கொண்டு ‘இப்போது நான் தனி’ என்று நிற்கிற போது அந்தக் கவனிப்பையும் வியப்பையும் மற்றவர்கள் விட்டு விடுவது போலவும் தோன்றியது. இப்படி அலட்சியம் செய்வது கூட ஒரு விதத்தில் நெற்றிக் கண்ணைத் திறந்து வெதுப்புவது போல் தான். பிரேம் போட்டுச் சட்ட மடித்து மாட்டிய படம்போல் மனிதனும் வாழ வேண்டுமென்றுதான் சராசரியாக மற்றவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் மனிதனுக்கோ சட்டத்தைக் கழற்றிக் கொண்டு வரவும், வேறு ‘பிரேம்’ வேண்டுமென்று மாறவும் வளரவும், இயல்பான ஆசை, தூண்டுதல்கள் எல்லாமிருக்கிறது. அந்த உறவினரை நினைத்து – அவர் பரபரப்பாக விசாரித்த ஆர்வத்தையும், அவர் நினைத்த ‘பிரேமில்’ அவன் மாட்டப்பட்டிருக்கவில்லை என்றறிந்ததும், அவர் புறக்கணித்து விட்டு ஓடிய வேகத்தையும் – நினைத்துத் தனக்குள் தானே சிரித்துக் கொண்டான் சுகுணன்.

சென்ட்ரல் நிலையத்திலிருந்து மறுபடி பஸ் ஏறி அவன் தம்புச் செட்டித் தெருவிற்குப் போன போது – அந்தத் தெருவின் இரு முனைகளிலும் அங்கங்கே சுவர் விளிம்புகளில் அரசு முளைத்த சில கட்டிடங்கள், கிடங்குகளின் ஓரம் ஈச்சம் பாயை மூங்கில் கழியில் நட்டு அதற்குள்ளேயே இரவில் முடங்குவதும், பகலில் துறைமுகத்தில் மூட்டை தூக்குவதுமாக வாழும் கூலிகளின் குடும்பங்களைப் பற்றிச் சிந்தனை வந்தது. ‘இவர்கள் வாழ்வைப் பார்த்து வியக்கவும் வியக்காமலிருக்கவும் யாருமே இருக்க மாட்டார்கள் போலிருக்கிறது’ என்று தோன்றியது. இவர்களைப் போன்றவர்களைப் பார்த்து அநுதாபப்படவும் பட்டினத்து வாழ்க்கை வேகத்தில் இடமில்லை. வியக்கவும் வழியில்லை. ஒன்று பட்டணத்தில் தேவைக்கு மீறிக் கொண்டாடுகிறார்கள்? அல்லது அளவுக்கு மீறி அலட்சியம் செய்கிறார்கள். கொண்டாடுவதற்கும் அலட்சியம் செய்வதற்கும் நடுவிலுள்ள அவசியமான பல அளவுகள் – மதிப்பீடுகள் இங்கு இல்லை என்றே நினைத்தான் அவன்.

‘நேஷனல் டைம்ஸ்’ காரியாலயத்தின் படிகளில் ஏறி அவன் மாடிக்குச் சென்ற போது மகாதேவன் ஏதோ தந்தி ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். சுகுணனைப் பார்த்ததும் முகமலர்ந்து வரவேற்ற அவர்,

“ஒரு காரியம் உங்களால் ஆக வேண்டும் சுகுணன்! தந்தி வேறு வந்துவிட்டது. இப்போது நாம் தயாரித்துக் கொண்டிருக்கிற ‘இண்டஸ்டிரியல் ஸப்ளிமெண்ட்’டிலேயே இந்தக் கட்டுரையும் வந்தாக வேண்டும். கூனூருக்கும் உதகமண்டலத்திற்கும் நடுவே கிராம போன் ஊசிகள் தயாரிக்கிற தொழிற்சாலை ஒன்றிருக்கிறது. அந்தத் தொழிற்சாலையைச் சுற்றிப் பார்த்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று கேட்டிருந்தேன். வரச்சொல்லித் தந்தி அடித்திருக்கிறார்கள். நீங்கள் ஏதோ கோயம்புத்தூர் போக வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே. போனால் இதையும் முடித்துக் கொண்டு வந்து விடலாமல்லவா?” என்று அவனைக் கேட்டார்.

சுகுணனும் அதற்கு இணங்கினான். அவருக்கு உழைக்கிறோம் – உதவுகிறோம் என்ற எண்ணத்தில் அறிவையும், இலட்சியத்தையும் இரு கண்களாகக் கொண்டு அயராமல் முயலும் ஒரு சுதந்திரப் பத்திரிகையாளனுக்குப் பாடுபட்டுத் துணை நிற்கும் பெருமிதத்தைப் பெற்றான் சுகுணன். அன்று மாலை வரை டைம்ஸ் காரியாலயத்திலே கழிந்தது. மறுநாள் மாலை ஊருக்குப் பயணம் இருந்ததனால் ‘டைம்ஸுக்கு’ அவன் போகவில்லை. அறையிலேயே இருந்தான். பகலில் கடைவீதிக்குப் போய்த் தங்கைக்குச் சில பொருள்கள் வாங்கிக் கொண்ட பின் மறுபடி அறைக்கு அவன் வந்த போது துளசியிடமிருந்து ஐந்தாறு முறை ஃபோன் வந்ததாக லாட்ஜ் பையன் சொன்னான். அப்படிப் பையன் சொல்லிக் கொண்டிருந்த போதே மறுபடி ஃபோன் அடித்தது. ‘பையன்’ ஃபோனை எடுத்து விட்டு, “உங்களுக்குத்தான்” – என்று சுகுணனிடம் நீட்டினான். ‘மாலையில் அவனைப் பார்க்க வரலாமா?’ என்று ஃபோனில் கேட்டாள் துளசி.

“ஊருக்குப் போவதாக நேற்றே சொல்லியிருந்தேனே?” என்றான் சுகுணன்.

“என்றைக்குத் திரும்பி வருகிறீர்கள்?”

“ஒரு வாரம் வரை ஆகலாம்.”

“அதற்குள் அப்பா என்னைப் பத்திரமாக டில்லிக்கு விமானம் ஏற்றித் திரும்ப அனுப்பிவிடுவார்…” என்று அவள் ஏக்கத்தோடு கூறிய குரலுக்கு அவன் ஒரு மறுமொழியும் சொல்லத் தெரியாமல் தயங்கினான். முன்பெல்லாம் அவன் வெளியூர் புறப்படுகிற நாளானால் காலையிலேயே அவன் அறைக்கு வந்து சூட்கேஸில் பிரயாணத்துக்கு வேண்டிய புத்தகங்கள் துணிமணிகள் எல்லாம் அடுக்கி வைத்துவிட்டுப் போவாள் அவள். அவனே சொந்தமாகப் பெட்டியில் துணிமணிகளை அள்ளி வாரிப் போட்டுக் கொண்டு புறப்பட்டது அவள் திருமணத்தன்று வெளியூருக்கு ஓடிய பயணம் தான். துளசி அடுக்கி எடுத்து வைத்தால் பெட்டியில் எல்லாம் வரிசையாக, நளினமாக – அழகாக அடுக்கப்பட்டிருக்கும். எதுவும் மறக்கப்பட்டிருக்காது. அவள் திருமணத்தன்று அவன் வெளியூருக்கு ஓடியபோது தானே தன் பெட்டியில் சாமான்களை வைக்கும் சமயத்தில், ‘இனி நான் தனி. என் பெட்டியில் பிரயாணச் சாமான்களை எடுத்து அடுக்கும் போது எந்த அழகான கைகளின் வளைகள் கலீர் கலீரென்று இதுவரை ஒலித்தனவோ அந்த அழகான கைகளின் வளைகள் இனி இங்கு ஒலிக்காது’ – என்று ஞாபகம் வந்தது. இப்படி அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்த இந்த ஞாபகத்தை அந்த விநாடியே பொய்யாக்குகிறவளைப் போல், “நான் வந்து பெட்டியில் புத்தகங்கள் எல்லாம் எடுத்து வைக்கட்டுமா?” – என்று அப்போதே துளசி அவனிடம் ஃபோனில் கேட்டாள். “வேண்டாம் நேரம் நிறைய இருக்கிறது. நானே பார்த்துக் கொள்கிறேன்” – என்று தான் இன்று இப்போது அவனால் அவளுக்குப் பதில் சொல்ல முடிந்தது. எதிர்ப்புறம் ஃபோனில் சில விநாடிகள் மௌனம் நிலவியது. பின்பும் அவள் குரல் கரகரத்தது:

“என்னைப் பிரித்து வித்தியாசமாக நினைக்க ஆரம்பித்து விட்டீர்கள்…”

“அப்படி நினைக்க வேண்டுமென்று உலக வழக்கு நிர்ணயம் செய்திருக்கிறது துளசி…!”

“போகட்டும்! எனக்கு கொடுத்து வைக்கவில்லை. முடிந்தால் இன்னும் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி ஒரு வாரம் இங்கு இருப்பேன். நீங்கள் திரும்பி வந்ததும் உங்களைப் பார்த்து நிறையப் பேச வேண்டும். உடனே டில்லிக்குத் திரும்ப எனக்கு மனமில்லை…”

“அதுவும் இனி அநாவசியம்…”

“உங்களுக்கு எல்லாமே அநாவசியம் தான். நான் கூடத் தானே?”

“…..”

“நான் உங்களுக்காக இன்னும் ஒரு வாரம் இங்கு பழி கிடந்தால் கூட நீங்கள் திரும்ப மாட்டீர்கள்… வேண்டுமென்றே போகிற இடத்தில் நாளாக்கினாலும் ஆக்குவீர்கள். இப்போதே சொல்லி விடுங்களேன். இங்கு நான் காத்திருக்கவா, வேண்டாமா?”

“உன் இஷ்டம் துளசி…” – என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான் சுகுணன்.

வைத்த சுவட்டோடு மறுபடி ஃபோன் மணி சீறிற்று. எடுத்தான். அவள் தான் மீண்டும் பேசினாள்.

“ஏன் இப்படிப் பேசப் பிடிக்காமல் ஃபோனை ‘டக்’கென்று வைத்து விட்டீர்கள்? அத்தனை வெறுப்பா என் மேல்?”

“நீயாக அப்படி நினைத்துக் கொண்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும் துளசி?”

– என்று அவன் ஆறுதலாக ஓரிரு வார்த்தைகள் விசாரித்த பின்பே அவள் திருப்தியோடு ஃபோனை வைத்தாள். எவள் பேதையாகி ஒருவனை விடாமல் ஓடி வந்து துரத்துகிறாளோ அவளுடைய அன்பு கூடச் சலிப்பது உண்டு போலிருக்கிறது. ஒரேயடியாக இனிப்பு உண்பது போல் வந்து மோதும் அன்பு வெள்ளம் மனிதனைப் பிரமிக்கச் செய்து விடுவதால் மோத வருகிற அந்தப் பிரமையோடு எதிர் பொங்கிக் கலக்கவும் முடியாது மலைத்துப் போகிறது. சுகுணனும் அப்போது அப்படி மலைத்த நிலையில் தான் இருந்தான். அந்த ஏமாற்றம் அவனையும் தவிக்க வைத்தது என்பது உண்மைதான். ஆனால் அந்தத் தவிப்பை ஆண்மையின் பெருமிதத்தோடு அடக்கியாண்டு பேச முடிந்தது அவனால். அவளால் அது முடியவில்லை.

மெல்லிய பலவீனமான சிறகுகளையுடைய பறவைகள் அதிக உயரம் பறக்க முடிவதில்லை. ஆனால், அவை அதிக உயரம் பறக்கிற பறவைகளை எல்லாம் விட அழகாகவும், மென்மையாகவும், இங்கிதமாகவும் தோன்றுகின்றன. குயிலைப் போல், கிளியைப் போல், சிட்டுக் குருவியைப் போல், மைனாவைப் போல், பெண்ணின் அன்பிற்கும் மெல்லிய சிறகுகள் தான் உண்டு போலிருக்கிறது.

அன்று மாலை இரயில் புறப்படும் போது அத்தனை மன வேதனைகளுக்குமிடையில் கூடப் பிரயாணக் குறுகுறுப்பு அவன் மனத்தில் இருந்தது. இரயில் புறப்படு முன் கடைசி நிமிஷத்தில் எப்படியோ மின்னல் போல் துளசியும் ஒரு விநாடி வந்து கண் கலங்கி நின்றாள்.

‘விடாமல் துரத்தும் இந்த மெல்லிய காதல் பறவையின் சிறகுகள் வலிக்குமே’ என்று அவனுள்ளம் இரத்தம் கசிந்து மனம் புண்ணாயிற்று. அவளை ஆளவும் அவனுக்கு உரிமையில்லை. கண்டிக்கவும் உரிமையில்லை! தான் டில்லி திரும்புவதற்குள் அவசியம் அவன் வந்து விட வேண்டும் என்று மன்றாடிக் கொண்டே, “நானே செய்தது. ரயிலில் சாப்பிட வசதியாயிருக்கும்” – என்று ஒரு டிபன் பொட்டலத்தையும் எடுத்து நீட்டினாள் துளசி. அவை மறுக்கும் துணிவின்றி அவன் வாங்கிக் கொண்டான்.

“மனிதர்கள் நாடும் சுகங்கள் இப்படி அல்பமானவைதான். ஆனால் இந்த அல்பமான சுகங்களைத் தானே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகக் காவிய குணங்களாகக் கொண்டாடியிருக்கிறார்கள்?”

துளசியின் ஆசைகளை ஒரு வேதாந்தியாக நின்று ‘அல்பமானவை’ என்று அவன் எடை போட முடியும். ஆனால் கவியாக நின்று அல்பமாக எடை போட முடியாது. கவி இரத்தினங்களையும் மணிகளையும் நிறுத்துச் சிறிய பொருளுக்கும் பெருமதிப்புக் கணிக்கிறவன். கவிகள் தான் உலகத்தின் முதல் தரமான அல்ப சந்தோஷிகள். அவர்களுடைய நிறுவையில் மனிதர்களின் ஆசாபாசங்களுக்கும் விலை மதிப்பு அதிகமாகத் தான் கணிக்கப்படுமே ஒழியக் குறைவாகக் கணிக்கப்படுவதில்லை. அந்தக் கவி நிறுவையில் துளசி ஓர் இரத்தினமாக அவன் மனத்தில் ஒளிர்ந்தாள். இரயிலில் ஒரு மலையாள தினப்பத்திரிகையின் தலைமை நிருபர் அவனோடு பயணம் செய்தார். சென்னையில் ஆண்டிற்கொருமுறை நிகழும் ‘தென் பிராந்திய ரிப்போர்ட்டர்ஸ் கில்டின்’ மகாநாட்டில் அவரை அடிக்கடி பார்த்திருக்கிறான் அவன். அதனால் இருவரும் பல துறைகளைப் பற்றி உரையாடிக் கொண்டே செல்ல முடிந்தது. திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் சென்னைக்கும் தென்பகுதிக் கேரளத்திற்கும் இணைப்பு ஏற்படுத்துகிறது. பல மொழிப் பிரதேசங்களை ஊடுருவி ஓடும் இரயிலுக்கு எப்போதுமே ஒரு பத்திரிகையின் நல்ல சிறப்பு மலர் போன்ற அழகு உண்டு. அந்த அழகு, அந்தப் புத்துணர்வு, அந்தப் பிரயாணத்தின் குறுகுறுப்பு எல்லாமே துளசியின் மனத்தில் உள்ள வேதனைகளை எண்ணி உருகுவதிலிருந்து தற்காலிகமாக அவனை விடுதலை செய்திருந்தன. ஜோலார்பேட்டை தாண்டியதும் மலையாள நண்பர் உறங்கத் தொடங்கி விடவே சுகுணனும் ‘பெர்த்’தில் படுக்கையை விரிக்கலானான். துளசியின் சிற்றுண்டிப் பொட்டணத்தை அரக்கோணம் கடந்ததுமே காலி செய்தாயிற்று. அது அப்போதிருந்த அவன் பசிக்கு மிகவும் குறைவாயிருந்ததாலும் கொடுத்தவளின் பிரியத்தினாலும் மன நிறைவினாலும் வயிறே நிறைந்துவிட்டது போல் பரிமளித்தது. வயிற்றை நிரப்பக் கூடியது சோறே ஆனாலும் யாரோ ஒருவர் நம் மேல் உயிரை வைத்து அன்பு செய்கிறார்கள் என்ற ஞாபகம் தான் மனத்தை நிரப்புகிறது. மனத்தை நிரப்ப இப்படி ஓர் அன்பு தென்படுகிற நேரத்தில் வயிற்றை நிரப்ப வேண்டிய பசி கூட ஞாபகத்தில் உறைப்பதில்லை. ‘நாம் இன்னார் மேல் உயிரை வைத்திருக்கிறோம் – நம் மேல் இன்னார் உயிரை வைத்திருக்கிறார்கள் – என்ற நம்பிக்கை தான் வாழ்க்கையை நடத்துகிறது’ – என்றெண்ணிய போது அந்த எண்ணத்தின் திருப்தியிலேயே துளசி தன்னுடன் வாழ்வது போல் உணர்ந்தான் சுகுணன். முன்பு பலமுறை அவளைக் கோபித்தது – ஆத்திரப்பட்டது எல்லாம் கூடத் தன்னுடைய மனப்பக்குவமின்மையினால் தான் செய்த தவறுகளோ என்று கூட அவன் அந்த வேளையில் நினைக்கலானான். ஒரு நினைப்பைப் பிரயாணத்தின் போது நினைத்தால் அதன் போக்கே தனி.

மனிதனின் தீர்க்கமான கூரான நினைவுகள் திட்டங்கள் எல்லாம் அவனுடைய ஏதாவதொரு பிரயாணத்தின் போதுதான் உருவாகின்றன போலும். பிரயாணத்தின் போது வருகிற சிந்தனைகள் வைகறையின் பனி புலராத மலராத மலர்களைப் போல் புதுமையாகவும் பொலிவாகவும் அமைகின்றன. அப்படிப்பட்ட பல பொலிவான நினைவுகளுடன் உறவாடி உறவாடி உறங்கவே வெகு நேரமாயிற்று சுகுணனுக்கு. உடனே சிறிது நேரத்தில் விடிந்தது போல் கோவையும் வந்துவிட்டது. இரயில் தூக்கத்தில் இரவும் வேகமாக ஓடிவிடுகிறது. பனி மூடிய கோவை – அந்த மஸ்லீன் துணி போர்த்தாற் போன்ற நளினக் கோலத்தைக் ‘கொச்சி எக்ஸ்பிரஸ்’ வருகிற நேரத்திற்காகவே புனைந்து கொண்டு காத்திருந்தாற் போலத் தோன்றியது.

‘வைகறையைத் தெய்வங்கள் படைக்கின்றன. நடுப்பகலை அரக்கர்கள் ஆள்கிறார்கள். இரவை மன்மதன் கைப்பற்றுகிறான். மறுபடியும் காலையில் தேவர்களின் தெய்வசக்தி அதை மீட்டுகிறது’ என்று ‘பாலைவனத்துப் பூக்கள்’ நாவலை எழுதிய போது ஓரிடத்தில் தான் குறிப்பிட்டிருந்ததை ‘கொச்சி எக்ஸ்பிரஸ்’ – கோவை நிலையத்தில் புகுந்து நின்ற அந்த பூங்காலையில் எண்ணினான் சுகுணன். கீழே மங்கலாகத் தெரியும் நகரை விட மேடான கோவை இரயில் நிலையத்தில் இறங்கியதும் அந்த நேரமும் நகரமும் மேற்கு நாட்டு நகரங்களுக்கு இணையாகத் தோற்றமளித்தன. அந்த மண்ணோடு எங்கோ ஒரு மூலையில் மறைந்து இளமை நினைவுகள் அவனுள் எழுந்தன. அங்கே வளர்ந்தது, வாழ்ந்தது, படித்தது, ஆசைப்பட்டு ஆசைப்பட்டு, ஆசைப்பட்ட பத்திரிகைத் தொழிலுக்கே தேர்ந்தெடுக்கப்பட்டுப் பத்திரிகைத் தொழிலுக்காக இதே போல் ஒரு நாள் சென்னைக்கு இரயிலேறியது எல்லாம் நினைவு வந்தன. இதே போலக் கொச்சியிலிருந்து சென்னைக்குப் போகும் எக்ஸ்பிரஸ் கோவை நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு மாலையில் அவன் இரயிலேறியதும் இத்தனை ஆண்டுகள் சென்னை வாசியாயிருந்து வாழ்க்கையின் உச்சபட்சமான சூதுவாதுகளையும், நன்மை தீமைகளையும் தெரிந்து கொண்டு இன்று திரும்புவதுமே ஞாபகத்தில் அலையாடின.

கொங்கு நாட்டின் வெள்ளை மனம், ‘அப்ப வாரேனுங்க…’ என்பது போல் இழுத்து இழுத்துப் பேசும் கொங்கு நாட்டின் அன்பான உரையாடல் எல்லாம் அவனுள் மறைந்திருந்தன; மறந்திருந்தன. இன்றோ மறுபடி நினைவு வருகின்றன. வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்க சென்னையை விடச் சிறந்த இடமில்லை. வாழ்க்கையை அனுபவிக்கவோ சென்னையில் இடமில்லை. ‘டிரெயினிங் ஸ்கூல்’ படிப்புப் போல் தான் சென்னை வாசம். ‘டிரெயினிங்’ கிடைக்கிற இடத்திலேயே அதன் பலனை எதிர்பார்ப்பது சாத்தியமில்லை என்று தோன்றியது. சுகுணன் கோவை நிலையத்தில் இறங்கி நின்று நெட்டுயிர்த்தான். கீழே அகன்ற வீதிகளில் கோவையின் தேசீய வாகனங்களாகிய ‘ஆட்டோ’ ரிக்ஷாக்கள் விரைந்து கொண்டிருந்தன. தொலைவில் பஞ்சாலைப் புகைப் போக்கிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிந்தன. சிறிதும் பெரிதுமாகப் புதிய முறையில் நவீனக் கட்டிட எழுச்சிகள் காலத்தையும் நகரின் தோற்றத்தையும் புதுமையாக்கிக் கொண்டு கண்ணுக்கு முன்னால் மங்கலாகத் தோன்றின.

-தீபம் நா.பார்த்தசாரதி