கல்வி அகதிகளா நாம்?

126
New-education-policy

ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் “புதிய கல்விக் கொள்கையை “ உருவாக்க சில விவாதத் தலைப்புகளை 2015 சனவரி மாதம் வெளியிட்டது.இந்த விவாதத் தலைப்புகளே கல்வியின் அடிப்படையை ஆட்டம் காணவைக்கப்போகக் கூடியதாக இருந்ததால், இதனை எதிர்த்து ஏராளமான எதிர்ப்புக் கடிதங்கள் தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப்பட்டது.இந்நிலையில் நாடு முழுவதும் 2.75 இலட்சம் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் வலைத்தளம் வாயிலாக 29000க்கும் மேற்பட்டோரிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டதாகவும், அதைத் தொகுத்து அறிக்கை தருவதற்கு ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்தது.

புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையைத் (DRAFT) தயாரிக்கவே முதலில் சுப்ரமணியம் குழு பணிக்கப்பட்டிருக்கிறது.(அரசு ஆணை எண்: F.No.748/215PN-II dt. 31.10.2015) ஆனால் சரியாக ஒரே மாதத்தில் அக்குழுவின் பணி எல்லைகளை மாற்றியமைத்து, ”புதிய கல்விக் கொள்கை உருவாக்கத்திற்கான குழு” எனப் பெயர் மாற்றம் செய்தது. (அரசு ஆணை எண்:F.No.748/2015-PN-II dt.24.11.16)அதற்கான காரணத்தை நாம் எளிதில் புரிந்துகொள்ள முடியும். T.S.R.சுப்ரமணியம் குழு அறிக்கை ஒருவேளை தனக்கு சாதகமாக அமையாவிட்டால் அந்த அறிக்கையை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது அல்லது உபயோகமற்றதாய் மாற்றுவது என்பதற்காக இப்படிக் குழுவின் ஆய்வு எல்லையை தந்திரமாக மாற்றி அமைத்துள்ளது.

மிகக் குறைந்த காலத்தில் இக்குழு அறிக்கையையும் அமைச்சகத்திடம் தந்தது.பெறப்பட்ட அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட அமைச்சகம் மறுத்துள்ளது.அதையும் மீறி அறிக்கை சிலருக்கு கிடைத்தது.அதை வாசிக்கும்போது கல்விக்கு நிகழவுள்ள ஆபத்து முழுமையாக உணரப்பட்டது.இந்நிலையில் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் “தேசியக் கல்விக் கொள்கை 2016 வரைவிற்கான சில உள்ளீடுகள் (some inputs for draft national policy 2016)” என்ற தலைப்பில் ஓர் ஆவணத்தை தனது வலைத் தளத்தில் 2016 சூன் 30 அன்று வெளியிட்டு ஜூலை 31க்குள் பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.அதன் பின்னர் ஏற்பட்ட தொடர்ச்சியான எதிர்ப்புகளுக்குப் பின்னர் செப்டம்பர் 15 வரை கருத்துக் கேட்பு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

217 பக்கங்களைக் கொண்ட அவ்வறிக்கை முழுமையாக இந்நாள் வரை வெளியிடப்படவில்லை.எனினும் 43 பக்க அளவில் “some inputs for draft national policy 2016” என்னும் பெயரில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.அதில் 5  இயல்கள் உள்ளன. இயல் 1 முன்னுரை (preamble), இயல் 2 கல்விப் பிரிவில் முதன்மையான அறைகூவல்கள் (Key Challenges in Education Sector), இயல் 3 முன்னோக்கு, செயலாக்கம்,  இலக்குகள், குறிக்கோள்கள் (Vision,  Mission, Goals and Objectives),  இயல் 4 கொள்கைக் கூட்டமைப்பு (Policy Framework), இயல் 5 செயற்படுத்தலும் நெறிப்படுத்தலும் (Implementation and monitoring).

புதிய கல்விக் கொள்கையும் சாதாரண மக்களும்

இவ்வளவு சவால்களைக் கடந்த புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை நமக்கு விடுத்துள்ள சவால்களைப் பற்றிக் காண்போம்.

முன்னுரையிலேயே குருகுலக் கல்வியின் புகழ்பாடுவது.”இவ்வுலக வாழ்விலும் அதைக் கடந்த வாழ்விலும்….”என்றும், குருகுலக் கல்வியே சிறந்தது “ என்றும் மேற்கோள் இட்டு இந்தக் கொள்கையை அறிவிக்கிறது.

தொழில்நுட்ப வசதிகளுக்கு முன்னுரிமை கொடுப்பது & அதற்கான பணிகளைத் துரிதப்படுத்துவது.இது ஒரு ஆசிரியர்-பல பள்ளிகள் வழியிலான கற்றலுக்கு வாய்ப்பு வழங்குகிறது.இதன் மூலம், ஆசிரியர் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்பு ஏற்படுகிறது.

EMPLOYABILITY எனப்படும் வேலைவாய்ப்பிற்கான திறன்களை இடைநிலைக் கல்வியில் மாணவர்களுக்கு வழங்குவதற்கான ஆபத்துக்கள் இருக்கிறது

சமூகத்தில் எந்த தளத்தில் உள்ள குழந்தைகளுக்காக இந்தக் கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட உள்ளது?என்கிற தெளிவான சுட்டல் இல்லை.

கொஞ்சம் கல்வி அதிகம் நிர்வாகம்” என்பதை வலியுறுத்துவதாக அதன் சாராம்சம் இருக்கிறது.மூன்றாம் உலக நாடுகளில் மிகவும் பின்தங்கியுள்ள எத்தியோப்பியா, கென்யா உள்ளிட்ட நாடுகள் கூட, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7, 8% மேலாக கல்விக்கு செலவிடுகிறது எனவும், இந்தியாவில் 3.5%மட்டுமே செலவிடப்படுகிறது.மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு மட்டுமே உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வியில் முதலீடு செய்தால் அதற்கு வரிவிலக்கு அனுமதிப்பது, வெளிநாட்டு கல்வி நிலையங்களை அனுமதிப்பது, IITபோன்ற அறிவுசார் கல்வி நிறுவனங்களுக்கு நிதிப்பங்கீடைக் குறைத்து, பற்றாக்குறையை ஈடு செய்ய முன்னால் மாணவர்களை அந்நடவடிக்கைகளில் பங்கேற்க வைப்பது.

கோத்தாரிக் கமிஷன் பரிந்துரைத்த பொதுக் கல்வி முறையைப் பற்றி எந்த விபரமும் இடம்பெறவில்லை தேசிய ஒருங்கிணைப்பு & தேசிய ஒற்றுமை என்பதற்குப் பதிலாக கலாச்சார ஒருங்கிணைப்பு&கலாச்சார ஒற்றுமை என்பது முன்வைக்கப்படுகிறது

பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைப்பது சமஸ்கிருதத்தை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிற்றுவிக்க தாராளமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு வலியுறுத்தும் படித்தவர்கள் அனைவருக்கும் வேலை இல்லை.. காரணம் வேலைவாய்ப்புகள் அரசால் திட்டமிட்டு உருவாக்கப்படவில்லை. இந்த உண்மையினை மறைத்து திறன்கள் இல்லாமை தான் காரணம் எனக்கூறி திறன்களை வளர்க்கிறோம் என்ற பெயரில் எட்டாம் வகுப்பிற்கு மேல் சேவை சார் தொழிற்கல்விக்கு (service)பரிந்துரைக்கிறது. இதன்மூலம் கிராமப்புற மாணவர்கள் பெரும்பாலானோர் உயர்கல்விக்கு செல்லும் வாய்ப்பைத் தடுத்து அவர்களை கூலித் தொழிலாளர்களாக மாற்றும் அபாயம் உள்ளது.

மாணவர்களின் கல்வித்தரம் குறைவாக இருப்பதற்கு பாடத்திட்டம்,  தேர்வுமுறை, ஆசிரியர்,  கட்டமைப்பு,  நிர்வகித்தல்,  சமூகச்சூழல்,  வீட்டுச்சூழல் எனப் பல காரணங்கள் உள்ளன. ஆனால் கட்டாயத் தேர்ச்சி முறை தான் காரணம் என முன்வைக்கப்படுகிற அபாயம் உள்ளது.

கல்வித்தரம் குறைவிற்கு ஆசிரியர்களே முக்கியக் காரணம் எனக் கருதி தகுதி / திறன் அடிப்படையில் பணி உயர்வு வழங்குதல் பரிந்துரைக்கப்படும் அபாயம் உள்ளது.

கல்வியில் தரமில்லாததற்கு ஆசிரியர்களின் வருகையின்மையையும் காரணம் கூறி ஆசிரியர்களுக்கு ரேகைப் பதிவிடும் முறையை (Bio-Metric Attendance)அமுல்படுத்தும் அபாயம் உள்ளது..

தாய்மொழிக் கல்வி பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆங்கிலவழிக்கல்விக்கு வித்திடும் அபாயம் உள்ளது..

மும்மொழிக்கொள்கை தான் மத்திய அரசின் கொள்கை என அறிவிக்கிறது. தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு வேட்டுவைக்கிறது. இந்தி, சமஸ்கிருத திணிப்பு அபாயம் உள்ளது..

சமூக அறிவியல்,  சூழல் அறிவியல் ஆகிய பாடங்கள் கைவிடப்பட்டு அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் அபாயம் உள்ளது..

அறிவியலும் கணிதமும் கூட அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கும் பிரச்சனைகளை அலசும் திறனை வளர்ப்பதற்குமான கல்வியாகப் பார்க்காமல் உற்பத்திக்கான கல்வியாக மட்டுமே அணுகும் அபாயம் உள்ளது..

ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வ சிக்‌ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ), ராஷ்ட்ரிய சிக்சா அபியான் (ஆர்.எம்.எஸ்.ஏ) ஆகிய திட்டங்களுக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல ஆயிரம் கோடி நிதி வெட்டப்பட்டுள்ளது. இச்சூழலில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு பற்றியே பேசப்படவில்லை..

கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டம் குறித்து எதுவுமே இல்லை..

உயர்கல்வியில்…

 உயர்கல்வியில் மாணவர்கள் திறன் / தரம் இல்லாமைக்கு நிறுவனங்களின் நிர்வாகத் திறனின்மையே காரணம் என்பதை விவாதப் பொருளாக முன்வைப்பதன் மூலம் உயர்கல்வியில் உள்ள பிரதானப் பிரச்சனைகளைப் பின்னுக்குத் தள்ளுகிறது..

ஒரு உயர்கல்வி நிறுவனம் எந்தப் பகுதியில் செயல்படுகிறது எந்த சமூக மாணவர்களுக்குக் கல்வி தருகிறது என்பதைக் கணக்கிடாமல் உயர்கல்வி நிறுவனங்களை கால இடைவெளியில் தேசிய தர மதிப்பிடுதல்,  அளவிடுதல் செய்து அதனடிப்படையிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்கிறது. தரம் பெற்ற கல்லூரிகள் அவர்களாகவே கட்டணம் நிர்ணயித்து வசூலித்துக் கொள்ளலாம் எனப் பரிந்துரைக்கிறது. இதனால் கிராமப்புறக் கல்லூரிகளும் கிராமப்புற மாணவர்களும் பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது..

உரிய கட்டமைப்புகள் இல்லாமலேயே உயர்கல்வியில் தரத்தை அதிகரிக்கிறோம் என்ற பெயரில் CBCS முறையை கட்டாயப்படுத்துகிற அபாயம் உள்ளது..

ஒரே பாடத்திட்டம்,  ஒரே வகையான நிர்வாக முறை,  தேசிய நுழைவுத் தேர்வுகள் மூலமாக மையப்படுத்தப்பட்ட உயர்கல்வி அமைப்பை உருவாக்கும் அபாயம் உள்ளது..

மாணவர்கள் அனைவருக்கும் உதவித்தொகை என்ற கொள்கை கைவிடப்படும் என உறுதியாகக் கூறுகிறது. அதற்குப் பதிலாக தகுதி அடிப்படையில் உதவித்தொகை என்ற பரிந்துரையினை முன்வைப்பதன் மூலம் ஏழை,  எளிய மாணவர்களின் கல்வியை மறுதளிக்கும் பேராபாயம் உள்ளது..

உயர்கல்வி நிறுவனங்கள் முழுக்க முழுக்க தொழிற்கல்வி தரும் சமுதாயக் கல்லூரிகளாக மாற்றப்படும் அபாயம் உள்ளது..

உயர்கல்வியில் பெண்களின் பங்கேற்பு குறைவு என்பதை வெறுமனே ஒரு சட்ட ஒழுங்குப் பிரச்சனையாகக் கருதி அதற்கான காரணங்களைக் கேட்பதன் மூலம் உண்மையான அரசியல்,  பொருளாதார,  சமூகக் காரணிகளை மறைக்கின்ற அபாயம் உள்ளது..

உயர்கல்விக்கான நிதி குறித்து எந்தவிதமான குறிப்பும் இல்லாதது,  பிர்லா அம்பானி அறிக்கை பரிந்துரைத்த உயர்கல்வியை தனியார்மயமாக்குதல் கொள்கைக்கு ஒப்புதல் கொடுப்பது போல இருப்பதால் அரசு உயர்கல்வியில் இருந்து விலகும் அபாயம் உள்ளது..

யு.ஜி.சி.,  மருத்துவக் கவுன்சில்,  தொழில்நுட்பக் கவுன்சில்,  NCVT ஆகிய அனைத்து அமைப்புகளையும் கலைத்துவிட்டு தேசிய கல்விக்கமிஷன் என்ற ஒற்றை அமைப்பை உருவாக்கும் அபாயம் உள்ளது..

உயர்கல்வியில் இறக்கும் தருவாயில் உள்ள பல மொழிகளை காக்கும் முயற்சிகளை விடுத்து சமஸ்கிருதத்தை திணிக்கும் அபாயம் உள்ளது..

பொதுவாக…

தாழ்த்தப்பட்டோர்,  மலைவாழ் மக்கள்,  பிற்படுத்தப்பட்டோர்,  சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான கல்வியை சமூக நீதியின் ஓர் அங்கமாகப் பார்க்காமல் விடுபட்டோர் பட்டியலாக முன்வைக்கிறது..

ஆசிரியர்கள் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிற்றுவிக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக நவீனத் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் ஆசிரியர் இல்லாமலேயே ஆன் லைன் படிப்புகள்,  திறந்தவெளிப் பலகலைக் கழகப் படிப்புகள் ஆகியவற்றிற்கு வழிவகுத்து முறைசாராக் கல்வியை ஊக்குவிக்கிறது..

கார்ப்பரேட் கம்பெனிகளின் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து அரசுப் பள்ளிகளை, உயர்கல்வியைப் பலப்படுத்தாமல் அரசு – தனியார் கூட்டு (PPP) என்ற பெயரிலும் தொழிற்சாலைகளுடன் இணைப்பு என்ற பெயரிலும் தனியாருக்கு தாரை வார்க்கும் அபாயம் அதிகமுள்ளது..

இந்தியக் கல்வி முழுவதுமே அந்நிய முதலீட்டிற்கும்,  அந்நியப் பல்கலைக் கழகங்கள் / நிறுவனங்கள் நுழைவதற்கான பேராபயங்கள் உள்ளன..

இந்தியக் கலாச்சாரம் என்ற பெயரில் உயர்கல்வியில் இந்தியவியல் (Indology) என்ற துறை துவங்குவதற்கான ஆலோசனைகளைக் கேட்டிருப்பது மறைமுகமாக வேதங்கள்,  உபநிடதங்கள்,  பிராமணங்கள்,  மனுஸ்மிருதி போன்ற இந்துத்வா கோட்பாடுகளை பயிற்றுவிப்பதற்கான துறையாக உருவாக்குவதற்கான அபாயம் இருக்கிறது. தாழ்த்தப்பட்டோர்,  மலைவாழ் மக்கள்,  சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர்,  உழைப்பாளிகள் ஆகியோரின் பன்முகக் கலாச்சாரங்களை அழிக்கும் வகையில் உயர் வகுப்பினரின் கலாச்சாரம் சார்ந்த இந்துத்வா ஒற்றைக் கலாச்சாரத்தை அமுல்படுத்தும் அபாயம் உள்ளது..

மொத்தத்தில் கல்வி பற்றிய பார்வை,  வரலாறு,  ஆய்வு,  புள்ளி விபரங்கள் எதையுமே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மத்திய அரசின் தற்போதைய கொளகைகளுக்கு ஏற்பத் தயாரிக்க்கப்படும் கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் கோரும் பேரபாயம் உள்ளது..