நினைவில் மழையுள்ள மனிதன்

108

பள்ளியின் கேட்டருகே நின்றிருந்தேன். நின்ற இடத்தில் நின்றபடியே பறந்து கொண்டிருந்தேன். லேசான மிக லேசான வெயில் படர்ந்திருந்தது. எந்நேரமும் மழை வருவதற்கான அறிகுறியாய் இங்கொன்றும் அங்கொன்றுமாய் சிறு துளித் தூறல்கள் விழுந்தபடி இருந்தன.

பறந்து கொண்டிருந்ததன் காரணம் அவள் தான். சிறு நகர்ப் பள்ளிகள் இது போன்ற விஷயங்களில் அற்புதமானவை. பள்ளிச் சீருடையில் அவளைப் பார்க்கவே என் மனம் எப்போதும் விரும்புகிறது. அந்த வெள்ளை நிறப் பாவாடையும் கருஞ்சாந்து நிற தாவணியும் வேறெந்தப் பெண்ணையும் விட அவளுக்கே பதிந்து பொருந்துகிறாற் போல் எனக்கு ஒரு எண்ணம்.

பாரதிராஜா ரிட்டையர் ஆகி விட்டிருந்தபடியால் அபத்தமாக வெள்ளுடைத் தேவதைகள் எல்லாம் பறக்கவில்லை. சுரேந்தர் அந்த வஸ்துவை வாயில் அடக்கிக் கொள்ளும் போதெல்லாம் தவறாமல் சொல்வானே. “கிர்ருனு இருக்குது மாப்ள” என்று அந்த கிர் இப்படித் தான் இருக்கும் என்று தோன்றியது.

ஆங்காங்கே விழுந்து கொண்டிருந்த தூறலினின்றும் தப்ப அவள் தாவணியைத் தலைக்கு மேல் போட்டிருந்தாள். அவ்வப்போது அந்த மறைப்பிலிருந்து தலையை வெளியே நீட்டி கண்களைக் குறுக்கி வானை நிமிர்ந்து பார்த்தபடி இருந்தாள். எனக்குள் மழை பெரிதாகப் பெய்யத் துவங்கியிருந்தது. சமயம் பார்த்து சூழ்நிலைக்குதக்க படி சினிமாப் பாடல்களை எடுத்துரைத்து காதல் உணர்வைத் தூண்டிச் சுரக்கச் செய்யும் என் மூளையின் பகுதி அப்போது பார்த்து வேலை செய்ய மாட்டேனென்று குப்புறப்படுத்துக் கொண்டு விட்டது. பின்னணி இசை கூட இல்லாமல் அவளைப் பார்க்கப் பார்க்க காதல் ம்யூட்டில் பொங்கிக் கொண்டிருந்தது.

அப்போது ஐஸ் வண்டிக்காரர் வரவும் சிறு குழந்தை போல் தவ்விக் குதித்தாள். இந்தக் காலத்தில் யாரேனும் இப்படி இருப்பார்களா என்ன? அதுவும் வளர்ந்த பெண்ணொருத்தி? அவரைக் கை காட்டி நிறுத்தினாள். அவள் உற்சாகத்தைப் பார்த்து, தயங்கி நின்ற தோழிகளும் மெல்ல முன்னேறினர்.

ஐஸ்பெட்டியைத் திறக்கச் சொல்லி உள்ளே ஒரு ஆராய்ச்சியே செய்து கடைசியாக அவள் தேர்ந்தெடுத்தது வெள்ளை நிற குச்சி ஐஸை. குதித்துக் கொண்டே உற்சாகத்துடன் அவள் அதை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். நான் கொஞ்சம் கொஞ்சமாய்க் கரைந்து கொண்டிருந்தேன். அல்லது அப்படி நினைத்துக் கொண்டிருந்தேன்.

மழைக்குப் பயந்து அவள் தலையில் போட்டிருந்த திரை எப்போதோ காற்றில் பறந்திருந்தது. கூந்தலின் சில இழைகள் காற்றில் பறந்தபடி இருந்தன. அதை தன் விரல்களால் ஒதுக்கி விட்டபடி ஐஸை சுவைப்பதில் மெய் மறந்திருந்தாள். அந்த மாதிரி முடி இருப்பவர்களை எங்கேயாவது பார்த்தால் அம்மா வழக்கமாக, ”பிக்காளி மாதிரி இருக்குது பாரு” என்பாள். எனக்கோ அவசரமாக கவிதை தேவைப்பட்டது. ஐஸ் முடிந்து குச்சியைக் கீழே போட்டுவிட்டு அவள் கிளம்பும் போது தரைக்கு வந்தவன் சட்டென்று சைக்கிளைக் கிளப்பினேன். அவள் சப்பிப் போட்ட ஐஸ் குச்சியை சேகரித்து வைக்கும் திட்டமெல்லாம் எதுவுமில்லாததால் அதன் மேலேயே சைக்கிளை விட்டேன்.

“ மாப்ள இர்றா நானும் வாரேன்” என்றபடி கையில் வைத்திருந்த மிக்சர் பாக்கெட்டின் மிச்சத்தை அவசரமாக அள்ளி வாயில் போட்டபடி கவரைத் தூக்கி வீசி விட்டு மூச்சு வாங்கத் தன் சைக்கிளை நகர்த்திக் கொண்டு என் வேகத்துக்கு ஈடு தர முடியாமல் ஓடி வந்தான் ஈஸ்வரன்.

நான்கு ரோடு வரை நடந்து போய் பஸ் ஏறுவாள். எப்போதும் அபர்ணாவுடனும் பரிதாவுடனும். அவள் நடக்கத் துவங்கியதும் பாதுகாப்பான தூரம் தள்ளிப் பின் தொடர்ந்தேன்.

லேசாக இடி இடித்தப் படியே இருந்தது. நாலு ரோடு சந்திப்பு வர வரவே பேருந்து வந்தது. அவள் ஓடிப் போய் ஏறிக் கொண்டாள். நானும் சைக்கிளை சற்று வேகமாக மிதிக்கத் துவங்கினேன்.

ஈஸ்வரனைக் காணவில்லை. அவன் உடம்புக்கு இவ்வளவு வேகமாகவெல்லாம் சைக்கிளை ஓட்ட முடியாது. எப்போதும் புஸ்புஸ் என்று மூச்சு விட்டபடியே வியர்வை வாடையுடனும், மிக்சர், பஜ்ஜி போன்ற ஏதேனும் வஸ்துவின் மணத்துடனும் தான் இருப்பான். பஸ் ஒவ்வொரு நிறுத்தத்தில் நிற்கும் போதும் நானும் நின்றேன். நெசவாளர் காலனி கடந்து ஜிஎச் கடந்து பாரதிபுரத்தில் நின்ற போது அவள் இறங்கினாள். அங்கிருந்து சிறிது தூரம் நடந்து தெரு திரும்பி மறைவாள்.

அன்றும் வழக்கம் போல் மறைந்தாள். வெற்றுத் தெருவையே பார்த்துக் கொண்டு நின்றேன். ஈஸ்வரன் வந்து சேரும் வரை. ரெண்டு பேரும் சைக்கிளை திருப்பிக் கொண்டு நடக்கத் துவங்கினோம். இது போன்ற சமயங்களில் ஏதும் பேசத் தோன்றுவதில்லை. அவனும் பேச மாட்டான். என்னை முற்றிலும் அறிந்தவன்.

வீடு வந்து சேர்ந்ததும் உடை மாற்றிக் கொண்டு கிரிக்கெட் விளையாடக் கிளம்பினேன். இப்போதெல்லாம் விளையாட்டில் கவனம் செல்வதே இல்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த செந்தில் என்னை ஒப்புக்கு சப்பாணியாக்கி விட்டான். கேப்டனாயிற்றே!!!! நானும் “ புருஷன் கச்சேரிக்குப் போன கதையாக கிரவுண்டுக்குப் போய் நின்று கொண்டு அவளையே நினைத்துக் கொண்டிருப்பேன்.

“மழை வராப்ல இருக்கேடா” என்ற அம்மாவின் குரலைக் காதில் வாங்காதது போல் கிளம்பி மேட்டுத் தெருவுக்குள் நுழைந்து ரயில்வே கிரவுண்டின் காம்பவுண்ட் சுவரை எகிறி அந்தப் பக்கம் இருந்த குப்பை மேட்டில் பொத்தென்று குதித்தேன். திரும்பிப் பார்த்த செந்தில் கண்டும் காணாதது போல் ஆட்டத்தை கவனிக்க ஆரம்பித்தான்.

அருகில் போய் அவன் தோளில் கை போட்டு “ என்ன மச்சி எத்தன ஓவர் ஆகியிருக்கு? எவ்ளோ ரன் போயிருக்கு? அடுத்த ஓவர் வேணா நான் போடவா? என்றேன். சரியாக அதே நொடியில் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்த மழை சடசடவெனப் பெருந்தூறலாய்ப் போட ஆரம்பித்தது. ஒரு கணம் மேலே நிமிர்ந்து பார்த்தவன் என்னை எரித்து விடுவது போல் பார்த்தான். பின் எல்லாருடனும் சேர்ந்து ஓடத் துவங்கினான் மழைக்கு ஒதுங்க.

நான் ஓடவில்லை. இப்போதெல்லாம் மழையில் நனைய ரொம்பப் பிடிக்கிறது. தமிழ் சினிமாவின் விதிப் புத்தகத்தின் நூற்று ஐம்பத்தேழாவது பக்கத்தின் படி, காதல் வந்தால் மழையில் நனைவது பிடித்தேயாக வேண்டும். எனக்கு வந்திருப்பது அது தான் என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே மழையில் நனைய துவங்கியிருந்தேன். லேசாக நனைந்தாலே அவள் நினைவுகள் பொத்துக் கொண்டு விடும். ஆனாலும் காதல் பாட்டெல்லாம் பாடுவது அவ்வளவு உசிதமாக இருக்காது என்பதால் மனசுக்குள் ஏதேனும் பாடிக் கொள்வேன்.

நனைந்து கொண்டே எவ்வளவு மெதுவாக நடக்க முடியுமோ அவ்வளவு மெதுவாக வீட்டுக்கு நடந்தேன். அப்போது தான் சட்டென்று அந்தக் கேள்வி மனசில் மின்னலடித்தது. நான் அவள் மேல் இவ்வளவு உயிராக இருக்கிறேனே.. அவளுக்கும் என்னைப் பிடித்திருக்கிறதா? கொஞ்சமாவது?

அதே தமிழ் சினிமாவின் வழிக்காட்டுதலின் படி அடுத்த நாள் அவள் பஸ் ஸ்டாப்புக்கு வந்து சேரும் முன்பே காத்திருந்தேன். ஈஸ்வரன் வரவில்லை. கிடாவெட்டென்று எங்கோ போய் விட்டான். அவள் அருகில் வந்தே விட்டாள். சட்டென்று வழியில் போன ஒரு சின்னப் பையனைக் கூப்பிட்டு அவன் யாரென்றே தெரியாமல் பேய் முழி முழிப்பதை சட்டை செய்யாமல் காலரைத் தூக்கி விட்டபடி நலம் விசாரித்தேன்.

சைக்கிளில் எட்டுப் போட்டேன். டீக்கடை மணி முறைத்ததைக் கண்டு கொள்ளவில்லை. இன்னும் சில பல சாகசங்கள் தொடர்ந்தது. என் பக்கம் திரும்பாதது போல் இருந்தாள். பேருந்தும் வந்து விட்டது. அப்போது தான் அந்த வரலாற்றுச் சம்பவம் நடந்தது. பேருந்தில் ஏறும் போது படிக்கட்டில் ஒரு நொடி, ஒரே ஒரு நொடி தாமதித்தவள் என்னைத் திரும்பிப் பார்த்து ஒன்றை உதிர்த்தாள். அது புன்னகையாகத் தான் இருக்க வேண்டும். தலை கை கால் இன்னபிற இடங்களிலும் ரோமங்கள் குத்திட்டு நின்று கொண்டன.

அன்று நான் எப்படிப் பள்ளி சென்றேன்? என்னத்தைப் படித்தேன்? என்ன சாப்பிட்டேன் எதுவும் நினைவில்லை. அவள் அவள் அவள் மட்டும் தான் நிறைந்து வழிந்து ஓடியபடி இருந்தாள் மனசில். அடுத்த நாள் ஈஸ்வரன் வந்து உலுக்கி எழுப்பும் வரை அனஸ்தீஷியா கொடுத்தது போல் மயக்க நிலையிலேயே இருந்தேன். எழுப்பியவன் வெறுமனே உலுக்கி எழுப்பியிருக்கலாம். கம்புக்கூட்டில் ஆசிட்டை தெளித்தது போல் ஒரு தகவலுடன் வந்து எழுப்பினான்.

“ச்ச.. சும்மாரு மாப்ள. எதையாச்சும் உளறாத. அப்படிலாம் சான்ஸே இல்ல”

“டேய் நான் கண்ணால பாத்தேன். உங்கிட்ட பொய் சொல்லுவனா?”

“இல்ல மாப்ள. என்னால நம்ப முடியாது.

“சரி நேர்ல நீயே பாத்தா நம்புவியா”… நான் பதில் சொல்லவில்லை. ஆனால் நம்புவேன் என்று தெரியும் அவனுக்கு. நான் சொல்லச் சொல்லக் கேட்காமல் என்னை அவன் சைக்கிளிலேயே அமர்த்திக் கொண்டு பாரதிபுரம் பஸ் ஸ்டாப்புக்கு இழுத்துப் போனான். பஸ் ஸ்டாப்பின் கொட்டகையில் சைக்கிளை சாய்த்து நிறுத்தி வைத்து விட்டு அவள் சென்று மறையும் தெருவின் திருப்பம் நோக்கி இழுத்துச் சென்றான். அங்கே அந்தக் காட்சி….அந்தக் காட்சியை நான் பார்த்திருக்கக் கூடாது. இல்லை. இப்போதாவது பார்த்தது நல்லதாகப் போயிற்று. இல்லையில்லை. என்ன இருந்தாலும் அவள்….. என்ன இழவுடா இது…

சுரேந்தர் நின்றிருந்தான். வாய்க்குள் கிறுகிறு சமாசாரங்கள் எதையும் அதக்காமல் அரைக்காமல் டிப்டாப்பாக ட்ரெஸ் பண்ணிக் கொண்டு நின்றிருந்தான். அவனை அப்படி பார்ப்பது அபூர்வம். சந்துத் திருப்பத்தைப் பார்த்தேன். திருப்பம் கடந்து அவள் வந்து கொண்டிருந்தாள். மிக சுவாதீனமாகநிமிர்ந்தவள் இவனைப் பார்த்தாள். மோகனப் புன்னகையொன்றை உதிர்த்தாள். எச்சரிக்கையுணர்வுடன் சுற்றும் முற்றும் பார்த்தாள். பின் மெல்லத் தலையைக் குனிந்து கொண்டே அவனைக் கடந்தாள். அப்போது சட்டென்று குறுக்கே கையை நீட்டினான். இரு கைகளும் உரசின,

ஒரே நொடி தான். கை மாறிய வஸ்து தெளிவாகத் தெரிந்தது. ஒரு காகிதம். வேறென்ன. லவ் லெட்டராகத் தான் இருக்கும். கூடவே ஒரு ஐந்து ரூபாய் டைரி மில்க். காலரைத் தூக்கி விட்டுக் கொண்டே அவள் போகும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். கிராதகன் காலரைத் தூக்கி விடும் போது என்னை விட அழகாக வேறு இருந்தான்.

அதற்கு மேல் அங்கு நிற்கப் பிடிக்கவில்லை ஒரு நொடி கூட. எழவெடுத்த மூளைக்கு இப்போதும் ஒரு காதல் தோல்வி சினிமாப் பாட்டுக் கூட ஞாபகம் வரவில்லை. மாறாக ஸ்கூல் கிரிக்கெட் போட்டியில் நடந்த தகராறில் சுரேந்தர் என் காதோடு சேர்த்து கன்னத்தில் சப்பென்று அறைந்து தான் ஞாபகம் வந்தது. காட்சிகள் எல்லாம் ம்யூட்டிலேயே ஓடின.

என் சோகத்தில் பங்கு கொள்வதைப் போல் ஈஸ்வரன் தலைவர்கள் இறுதி ஊர்வலத்தில் வருவது போல் அமைதியாக கம்பீரமாக வந்தான். இதை ஏன் என்னிடம் இப்போது காட்டினான் என்றும், நல்லவேளை இப்போதாவது காட்டி என் வாழ்க்கையையே காப்பாற்றினான் என்றும் கோபமும் வாஞ்சையும் அவன் மேல் ஒரே சமயத்தில் வந்தது.

ஐஸ் வண்டிக்காரர் வேண்டுமென்றே பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த எங்களிடம் வந்து அந்த ஆரனை அமுக்கிக் கொண்டிருந்தது என் துக்கத்தை மேலும் அதிகரிப்பதாக இருந்தது. வழக்கமாக ஏதேனும் பாடல் ஒலித்தபடி இருக்கும் அந்த டீக்கடை டேப்ரிக்கார்டர் கூட ரொம்ப அமைதியாக இருந்தது. லேசான இடிச் சத்தம் கேட்டது. மெல்ல மேலே நிமிர்ந்து பார்த்தேன்.

இரண்டாவது நொடி சோவெனப் பெருமழை பெய்யத் துவங்கியது.

ஹரீஷ் கணபதி