நினைவில் மழையுள்ள மனிதன்-பாகம்-3

76

தேனி பேருந்து நிலையம் அப்போது பார்த்தது போலவே அவ்வளவு அழகாக ரம்மியமாக இருந்தது. போடிக்குச் செல்லும் பேருந்து வர இன்னும் நேரமிருந்தது. அதிகாலை நேரங்களில் பரபரப்பற்ற பேருந்து நிலையத்தில் லேசான குளிரினூடே தனிமையுடன் சேர்த்து தேநீரை மிடறு மிடறாய்ச் சுவைப்பது ஒரு சுகானுபாவம்.

பேருந்து வந்ததும் ஏறி அமர்ந்தேன். குளிர் காற்று முகத்தில் கோடுகள் போட்டது. மனம் எதைப் பற்றி யோசிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தது. கடற்கரைச் சந்திப்புகள், காபி ஷாப் உரசல்கள், சண்டைகள், வாக்குவாதங்கள், கண்ணீர் எல்லாம் கண் முன் வந்து போயின.

பெருக்கித் தள்ளத் தள்ள சேரும் தூசியினைப் போல் பிடிவாதமாக ஒதுக்கித் தள்ளத் தள்ள  மனதின் மூலைகளெங்கும் அவள் ஆக்கிரமித்தபடியே இருந்தாள். சிரிப்பாக இருந்தது. அந்த நினைவில் திளைத்திருக்கத் தான் இந்தத் தனிமைப் பயணம். இங்கே வந்து அதனுடன் போராடிக் கொண்டிருப்பது விசித்திரமாக இருந்தது.

கண்கள் மூடி எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் நினைவின் சுழலில் மூழ்கினேன். கண் திறக்கும் போது போடி வந்திருந்தது. பேருந்தில் இருந்து இறங்கும் போதே எதிர்ப்புறம் அந்த சிகப்பு நிறப் பேருந்து கிளம்பத் தயாராக நின்றிருந்தது. ஓடிச் சென்று ஏறிக் கொண்டேன். இருக்கைகள் நிரம்பியிருந்தன. கம்பியில் சாய்ந்து நின்று கொண்டேன். மலைப்பாதை என்பதால் பயணம் மிக நிதானமானதாக இருந்தது. வாழ்க்கையும் இதே மாதிரி நிதானத்துடன் தடுமாறாமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.

ஒரு மணி நேரம் கடந்த பின் பேருந்து நின்றது. “ கொராங்கணி கொரங்கணி” என்று நடத்துநர் குரல் கலைக்கவே பேருந்திலிருந்து இறங்கினேன். மலைக் காற்றின் வாசனையும் மனதுக்கு ரம்மியமான ஏதோ ஒரு பூவின் மணமும் நாசியை நெருடியது. காற்றின் குளிர் அற்புதமாக இருந்தது. நினைவிலிருந்து அவ்வளவு சீக்கிரம் அழிக்க முடியாத வழித்தடம். யோசனை ஓட ஓடவே மெலிதாய் ஒரு புன்னகை அரும்பியது. நடக்கத் துவங்கினேன். கிட்டத்தட்ட பன்னிரண்டு கிலோமீட்டர்கள் மேலே டாப் ஸ்டேஷனை அடைய. பாதை நீண்டது. அவ்வப்போது பழைய ஞாபகங்கள் வந்து மொத்தமாய் நனைத்தபடி இருந்தன. தூறல் கண்ணாமூச்சி காட்டி விளையாடிக் கொண்டிருந்தது.

அன்று வந்த போது மனம் இவ்வளவு அமைதியாய் இல்லை. எந்த நேரமும் துடிப்பிலும் எதிர்பார்ப்பிலும் பொங்கிக் கொண்டிருந்தது. அவளிடம் காதலைச் சொல்லி விட்டுப் பதிலை எதிர்பாராதது போல் வந்து விட்டாலும் அவள் எந்த நேரமும் அழைக்கலாம். எச்சரிக்கை செய்யலாம், காதலை ஏற்கலாம் , நிராகரிக்கலாம், அல்லது எதுவும் சொல்லாமல் கடக்கலாம் என்று எல்லாப் புறங்களும் சாத்தியங்கள் நிரம்பியிருந்த பொழுதுகள் அவை.

மலை ஏறத் துவங்கியதும் மொபைலில் சிக்னல் சரியாகக் கிடைக்காமல் போன போது பதற்றம் ஆரம்பித்தது. இப்போது அதை நினைத்தால் சிரிப்பாக இருந்தது. சிரித்தால் மனம் கனக்குமா என்ன? கனத்தது. அன்று சிக்னல் கிடைக்குமா என்று பார்க்க எங்கெல்லாம் நின்றேனோ அங்கெல்லாம் நின்றேன்.

நின்று நின்று அமர்ந்து நடந்து நிதானமாகத் தூறலில் நனைந்தபடி டாப் ஸ்டேஷன் அடைந்த போது நான்கு மணி நேரங்கள் ஆகி விட்டிருந்தது. வார நாள் ஆனதால் கூட்டம் ஏதும் இல்லை. சென்ற முறை வந்த போது அது ஒரு வாரயிறுதியாய் இருந்ததால் மூணாறிலிருந்து ஏகப்பட்ட கூட்டம் வந்திருந்தது. அந்த சிறிய மலை உச்சி நிறைந்து வழிந்தது.

மெல்ல நடந்து சென்று அந்த வியூ பாய்ன்ட்டில் நின்றேன். வயிறு என்னவோ செய்தது. குளிரிலும் வியர்த்தது. மொபைலை எடுத்துப் பார்த்தேன். அணைந்திருந்தது. அல்லது அணைத்திருந்தேன். அன்றைய ஞாபகம் வந்தது. இந்த இடத்தில் தான் அந்த மறக்கவியலா நொடி நிகழ்ந்தது. கிடைக்காதா என்று ஏங்கித் தவித்த மொபைல் சிக்னல் இந்த வியூ பாயிண்டில் மொபைலில் தோன்றிய அடுத்த கணம் போன் ஒலித்தது. அவள் தான்.

அவளும் முயற்சித்துக் கொண்டு தான் இருந்திருக்கிறாள். கைகள் நடுங்க போனை எடுத்துக் காதில் வைத்தேன். பேசவில்லை. சிறிய மௌனத்துக்குப் பின் அவள் தான் பேசினாள். தன் காதலைப் பிரகடனப் படுத்தினாள். கூடவே அவள் வகுத்த விதிகளையும். மனம் காதலை மட்டுமே கொண்டாடியது விதிகளைக் காற்றில் பறக்க விட்டு விட்டு.

பெருமூச்சொன்றை உதிர்த்து நினைவுகளிலிருந்து மீண்டேன். திரும்பி மெல்ல அந்தப் பழக்கடையை நோக்கி நடந்தேன். மாலை ஆக ஆக காற்றில் குளிர் ஏறிக் கொண்டே இருந்தது. பழக்கடை அண்ணாச்சி கடையில் தான் இருந்தார். “வணக்கம்ணே.. என்னைய ஞாவகம் இருக்கா?” என்று அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன். நிமிர்ந்து பார்த்தவர், புருவம் சுருக்கினார். எத்தனையோ பேர்களுக்கு தங்க இடம் கொடுக்கிறார். என்னை ஞாபகம் வைத்திருப்பாரா தெரியவில்லை. என்று எண்ணி முடிக்கும் முன் புன்னகைத்தார்.

“அடடே..வாங்க தம்பி.. மெட்ராஸ்காரவுக தானே? ஆளு நெனப்பிருக்கு பேரு தா மறந்து போச்சு. அதுனாலென்ன.. சவுக்கியமா தம்பி” என்றார் வாஞ்சையாக.” நல்லாருக்கேண்ணே… நைட்டுக்கு மட்டும் தங்க கொஞ்சம் இடம் தரீங்களா” என்றேன்.

“அதுக்கென்ன தம்பி. போன வட்டம் தங்கின ரூம்புலயே தங்கிக்கிடுங்க. செத்த நேரம் அப்படி ஒக்காருங்க. இல்ல ஒலாத்துங்க. ந்தா கடைய அடச்சுப்புட்டு வந்துர்றன். பொஞ்சாதிக்கு ஒடம்பு சொகமில்ல. வீட்டுலயே கெடக்கா” என்றவர் “கடுங்காப்பி ஏதும் குடிக்கீயளா?” என்றார். “ ஒண்ணும் வேண்டாம் அண்ணாச்சி “ என்று மறுத்தேன்.

சற்று நேரத்தில் கடையை அடைத்து விட்டு வந்தவர், “ ராவுக்கு திங்க ஏதும் ஏற்பாடு செய்யவா? என்றார். மறுத்தேன். நடந்து கடைக்குப் பின் இருந்த சரிவில் இறங்கி அந்த வீட்டை அடைந்தோம். கதவை திறந்தார். சென்ற முறை போலவே விளக்கு எரியவில்லை. “ மெளுகுவத்தி வெச்சுருக்கேன். சமாளிச்சிகிடுவீகளா தம்பி?” என்றார். தலையை அசைத்தேன்.

அகன்றார். அந்த அறை அப்பட்டமாக மனதில் பதிந்திருந்தது. அன்றும் இதே போல் தான் மெழுகுவர்த்தி. அவள் காதலை ஒப்புக் கொண்ட விஷயத்தை நண்பர்களிடம் சொன்னதும் கொண்டாடித் தீர்த்தார்கள். தலைக்கு மேல் தூக்கித் தட்டாமாலை சுற்றினார்கள். கொண்டு வந்திருந்த சிகரெட் பாக்கெட்டுகளை எல்லாம் புகைத்துத் தீர்த்தார்கள். இரவு முழுவதும் அவரவர் காதல் கதைகளைப் பேசிப் பேசியே கரைத்தோம்.

தூக்கம் பிடிக்கவில்லை. மெல்லக் கம்பளியைப் போர்த்துக் கொண்டு வெளியே வந்தேன். இரவில் அந்த மலையுச்சியின் முகம் முற்றிலும் வேறானதாக இருந்தது. உறைய வைக்கும் குளிர். ஏதேதோ பெயரறியா பூச்சிகளின் சப்தங்கள். வினோதக் கூவல்கள். ஆளரவமற்ற தனிமை. சட்டென்று எங்கிருந்து தான் வந்ததோ தெரியவில்லை. மேலே மாட்டியிருந்த  முகமூடிகளை எல்லாம் கிழித்தெறிந்து விட்டு பாழும் தயக்கங்கள் எல்லாவற்றையும் வீசி விட்டு  முகத்தை மூடிக் கொண்டு ஓவென்று பெருங்குரலெடுத்து அழத் துவங்கினேன்.

அழுகையினூடே அவளுடன் பகிர்ந்த முத்தங்கள், பின்னிக் கிடந்த நொடிகள் , சண்டைகள், அவள் அப்பாவிடம் போட்ட பெரும் சண்டை, அதற்குப் பின்னான நிரந்தரப் பிரிவு, அவளின் சுடு வார்த்தைகள் என்று படம் போல் காட்சிகள் கண்ணீரின் பின் மங்கலாக ஓடியபடியே இருந்தன. வார்த்தைகள். வார்த்தைகள். அமிலம். அமிலம்.

“ராஸ்கல்.. என்ன தைரியம் இருந்தா என் அப்பா சட்டை மேல கை வெப்ப? உன்ன லவ் பண்ணத நெனச்சு வெக்கப்படறேண்டா. நான் தான் முதல்லயே சொன்னேன்ல? அவர் ஒத்துகிட்டா தான் கல்யாணம்னு? நீ இவ்ளோ மோசம்னு நல்லவேளை இப்பவே தெரிஞ்சது. இனிமே அப்பாவே சொன்னாலும் எனக்கு நீ வேண்டாம்.கெட் லாஸ்ட்.”

எவ்வளவு நேரம் அழுதேனென்று தெரியவில்லை. எப்போது உள்ளே வந்து படுத்தேனென்று தெரியவில்லை. விடிந்து மிக மென்மையாக சூரிய வெளிச்சம் முகத்தில் பட்ட போது விழித்தேன். மெழுகுவர்த்தி எரிந்து முடித்து விட்டிருந்தது. கண்கள் வறண்டிருந்தன. அருகில் எங்கோ விறகெரிக்கும் மணம் நாசியை நெருடியது.

மனம் நிர்மலமாக இருந்தது. ஆச்சர்யகரமான அமைதி மனசில் வந்து விட்டிருந்தது. கூரை இல்லாத குளியலறையில் நிதானமாகக் குளித்தேன். பறவைகளின் ஒலி கேட்டபடியே இருந்தது. அதில் மயிலின் சத்தத்தை அடையாளம் காண முடிந்தது. குயில்களுடையதையும் கூட. எதிர்பாராத ஏதோ ஒரு நொடியில் மனசு கொஞ்சம் உற்சாகமாகக் கூட இருந்தது..சிரித்துக் கொண்டேன்.

வெளியே வந்ததும் எதிர்ப்பட்ட அண்ணாச்சி “ என்ன தம்பி நல்லா தூங்கினீயளா? திங்கத் தான் எதுவும் வேணாம்னுட்டீக. பசிக்கலையோ?” என்றார். புன்னகைத்து, “பீடி இருக்காண்ணே?” என்றேன். எடுத்துக் கொடுத்தார். வாங்கி ஜெர்கின் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு கிளம்பறேண்ணே” என்றபடி சில நூறு ரூபாய்த் தாள்களை எடுத்து அவர் கையில் திணித்தேன்.

“நல்லது தம்பி. அடிக்கடி வாங்க. மூணாறு போறீயளா? தம்பி ஜீப்பெடுக்கறான். நிக்க சொல்லவா?” என்றார். அவர் மேல் ரொம்பப் பாசமாக இருந்தது. மெல்ல அருகில் சென்று அவர் தோளை அணைத்துக் கொண்டு, “ வேணாம்ணே… திரும்ப கொரங்கணி தான் போறேன். வந்த மாதிரியே நடந்து போறேன்” என்று சொல்லி விட்டுக் கிளம்பினேன்.

“பாத்துப் போய் வாங்க தம்பி. இன்னொரு வட்டம் வாங்க” என்ற அவரின் வாஞ்சைக் குரல் முதுகுக்குப் பின்னால் கரைந்து மறைந்தது. சரிவில் இறங்கிக் காட்டுப் பாதையை அடைந்து நடக்கத் துவங்கினேன். ஏதோ ஒரு பாடலின் ராகத்தை உதடு முணுமுணுத்தபடி இருந்தது. என்ன பாடல் என்று தெரியவில்லை. தெரியவும் விரும்பவில்லை. ஓரிடத்தில் நின்று மெல்லக் காலைத் தூக்கி கணுக்காலில் ஒட்டியிருந்த ஓரிரண்டு அட்டைப் பூச்சிகளை பிய்த்துப் போட்டேன். ரத்தத் துளிகளைத் துடைத்துக் கொண்டு மீண்டும் நடக்கத் துவங்கினேன்.

உதடு மட்டும் பாடலை முணுமுணுத்தபடியே இருந்தது. திடுதிப்பென்று எங்கிருந்து வந்ததென்றே தெரியாமல் படபடவெனப் பெருந்தூறல் பொழியத் துவங்கியது. நடையை நிறுத்தி மேலே நிமிர்ந்து பார்ப்பதற்குள் நின்று காணாமல் போனது.

“என் கிட்டயே கண்ணாமூச்சி விளையாட்டா?” சிரித்துக் கொண்டேன். கொஞ்ச தூரம் கூடப் போயிருக்கவில்லை. மீண்டும் சடசட. இந்த முறை சட்டென்று நிமிர்ந்து பார்த்தேன். அவசர அவசரமாய் மறைந்து போனது.இந்த விளையாட்டு எனக்கு ரொம்பப்  பிடித்திருந்தது. மெல்ல மேலே பட்டிருந்த சாரலின் ஈரத்தால் ஏற்பட்ட மென் குளிரை ரசித்தபடியே நடக்கத் துவங்கினேன். இந்த முறை மீண்டும் வந்து என்னை எட்டிப் பார்க்க சற்று நேரம் எடுத்துக் கொண்டது. அரை மணி.

மீண்டும் சட சட. இந்த முறை நான் நிமிர்ந்து பார்க்கவில்லை. நான் பார்க்கவில்லை என்று தெரிந்ததும் ஆனந்தமாக அடித்துப் பெய்யத் துவங்கியது பெருமழை.

ஹரீஷ் கணபதி