நினைவில் மழையுள்ள மனிதன்-பாகம்-2

68

புது கல்லூரி நன்றாகவே இருந்தது. ஆனால் ஸ்கூலில் கூட இல்லாத விதிமுறைகள் எல்லாம் பின்பற்றத் தான் சங்கடமாக இருந்தது. பள்ளியில் அவிழ்த்து விட்ட கழுதையாக சுற்றிக் கொண்டிருந்து விட்டு இங்கே ஒரு கட்டுக்குள் இருப்பது நிரம்பவே சவாலாக இருந்தது. பெண்களிடம் பேசக் கூடாதாம். பேசுகிற அளவு பெண்கள் யாரும் இல்லை என்பது வேறு விஷயம். வெளியில் வேறு வெயில் கொளுத்துகிறது. காலையில் கல்லூரி வந்து சேர்வதற்குள் உள்ளாடை வரை நனைந்து விடுகிறது.

மதியம் உணவு முடிந்தவுடன் வரும் பீரியடுக்கு பதில் பேசாமல் தூங்கும் நேரம் என்று ஒன்று வைக்கலாம். அதிலும் இப்போது ஆங்கிலப் பாட வேளை வேறு. ஒருத்தனுக்கும் ஒன்றும் புரியாது. ஆனால் அன்னலட்சுமி மேடம் பேசுவதே அரைகுறை ஆங்கிலம் தான் என்பது மட்டும் தெரியும்.

வகுப்பின் வாசலருகே சலசலப்பு. பக்கத்து க்ளாஸ் பசங்கள் ஒவ்வொருவனாக உள்ளே வந்து கொண்டிருந்தனர். பக்கத்தில் அமர்ந்திருந்த கோபுவைப் பார்த்தேன். புரிந்தவனாகச் சொன்னான். “ இனிமே அன்னலட்சுமி தான் ரெண்டு க்ளாஸுக்கும் இங்கிலீஷ் எடுக்கப் போறாங்களாம். அவங்களுக்கு டயம் டேபிள் மாத்திட்டாங்க. இனிமே இங்கிலீஷ் பீரியடுன்னா இங்க வந்துருவாங்க… இதுல என்னான்னா” என்றவன் சட்டென்று பேசுவதை நிறுத்தி விட்டான்.

அவன் பார்வை நிலைகுத்திய இடத்தில் பார்த்தேன்.கோடைமழை வருவதற்கான அறிகுறியாய் பெரும் இடியொன்று இடித்தது. அவள் மிகச் சரியாக இடியிடித்த தருணத்தில் வகுப்புக்குள் வந்து கொண்டிருந்தாள். சாயம் போன சுடிதார் ஒன்றை அணிந்திருந்தாள். அதிலேயே அவ்வளவு பளபளப்பாக இருந்தாள். ரொம்பவும் ஒல்லியெல்லாம் இல்லை. சற்றே பூசினாற்போன்ற உருவம். சைட் அடிக்கும் மூடில் இருந்தால் குண்டு என்று சொல்லி வடிகட்டி விடக் கூடிய அளவிலிருந்தாள்.

இதெல்லாவற்றையும் விட என் பார்வையை இழுத்துக் கட்டிப் போட்டது அவள் போட்டிருந்த கண்ணாடி. அதென்னவோ கண்ணாடி போட்டிருப்பது அவளுக்கு அவ்வளவு அழகை அள்ளிக் கொடுத்தது.யார்ரா அது? என்றேன் கோபுவிடம். நான் அவளைத் தான் கேட்கிறேன் என்று அவனுக்குத் தெரியும். மொத்த வகுப்பும் அவளைத் தான் பார்த்தது. இந்தக் கரட்டடி காட்டுக் கல்லூரியில் இவ்வளவு அழகான பெண்ணெல்லாம் வந்து சேர்ந்தால் பசங்களெல்லாம் பாவம் என்னதான் செய்வார்கள்?

“மும்தாஜுடா” என்றான் கோபு. என் முகம் சாணியை மிதித்தது போலாகி விட்டது.” என்னாடா சொல்ற மும்தாஜா?” என்றேன் அவநம்பிக்கையாய். அப்புறம் தான் தெரிந்தது அவள் சினிமா நடிகை மும்தாஜின் முக சாயலில் இருப்பதால் அந்தப் பெயராம். பசங்கள் வைத்திருக்கிறார்கள். கோபு அவளின் உண்மையான பெயரை சொன்னான். மும்தாஜ் என்பதைப் போலவே அதுவும் மொக்கையான பேர் தான். ஆனால் அவளுடன் பொருத்திப் பார்த்தால் அந்தப் பெயர் கூட அவ்வளவு அழகாகத் தெரிந்தது. எப்படி இப்படி ஒரு பெண்ணைப் பற்றி கல்லூரியில் சேர்ந்து இந்த ஒரு வாரமாய் எனக்குத் தெரியாமல் போனது என்று ஆச்சரியமாக இருந்தது. அவளை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது என்று மனசுக்குள் இருந்து ஒரு குரல் சொன்ன அதே நொடி, கோடைமழையின் எனக்கான முதல் துளி ஜன்னல் வழியே என் கன்னத்தில் பட்டுத் தெறித்தது

குமாரசாமிப்பேட்டை சுப்ரமணியசாமி கோவில் திருவிழா எப்பவுமே ரொம்ப விசேஷம்.மழைக்காலமானாலும் ஊருக்குள் இன்னும் மழை வரவில்லையே என்று ஒரே கவலை எல்லாருக்கும் . இந்த திருவிழா அமைந்தாலாவது மழை வராதா என்று எல்லாரும் வானத்தைப் பார்த்துக் கொண்டே காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தனர்.

கூட்டம் கூடும் இடங்கள் எனக்கு எப்போதுமே அவ்வளவு சிலாக்கியமில்லையாதலால் திருவிழாவிற்குப் போவதேயில்லை. இந்தத் தடவை பசங்கள் பெரு முயற்சி செய்து, வகுப்பின் பெண்களுடன் ஒரு மாதிரி பேச்சுவார்த்தை நடத்தியதில் விஜி, கவிதா, குமுதா என்று குமாரசாமிப்பேட்டை ஏரியா பெண்கள் சில பேர் வீட்டுக்கு அழைத்திருந்தார்கள்.

“ இன்னிக்கெல்லாம் செம வேட்ட மாப்ள. யார இடிச்சாலும் ஒண்ணும் கண்டுக்கிட மாட்டாங்க “ என்று சொன்னதோடல்லாமல் சொன்னதை செய்தும் காட்டியபடியே வந்து கொண்டிருந்தான் கோபு. ஒவ்வொரு பெண் வீட்டுக்கும் சென்று சம்பிரதாயமாக இனிப்பும் தயக்கப் பேச்சுக்களும் பேசி முடித்தபடி வலம் வந்து கொண்டிருந்தோம். கடைசியாகக் குமுதா வீடு.

மின்னல் பெரிதாக வெட்டியது சட்டென்று. தொடர்ந்து இடி இடித்தது. காற்றில் லேசாகக் குளிர் சூழ்ந்தது. குமுதா வீட்டுக்குள் சைக்கிளை நிறுத்தி விட்டு நுழையும் போது சட்டென்று எதிரில் வந்தவளைப் பார்த்து ஆடிப் போனேன். அவள் தான். இவ்வளவு அருகில் அவளை எதிர்பாராமல் பார்த்ததில் ஒரு வேகம். சட்டென்று அவளை கண்ணுக்கு நேராகப் பார்த்து புன்னகைத்தேன். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக பதில் புன்னகை புரிந்து என்னைக் கடந்தவள் சட்டென்று திரும்ப ஓடி வந்து அருகில் நின்று கொண்டாள்.

சொர்க்கம் என்றால் அந்த நொடி தான் என்று கற்பூரம் அணைக்காத குறையாக சத்தியம் செய்யத் தயாராக இருந்தேன். அவள் சூடியிருந்த ஜாதிமல்லியின் வாசனை கண் மூடிக் கிறங்கச் செய்தது. சடசடவெனப் பெருஞ்சத்தம் திடீரென்று. அப்போது தான் வெளியே போனவள் திரும்ப உள்ளே வந்த காரணம் புரிந்தது. வெளியே மழை அடித்துப் பெய்யத் துவங்கியிருந்தது.

வெளியே வந்த குமுதா “ எல்லாரும் வந்துட்டீங்களா… வாங்க வாங்க. ஏய்.. நீ மட்டும் இப்போ வெளிய போய் என்ன பண்ண போற? பேய் மழை பெய்யுது. உள்ள வாடி” என்று சொல்லி அவளைக் கையைப் பிடித்திழுத்தாள். லேசாகத் தடுமாறி ஒரு நொடி என் மேல் சாய்ந்தாள். மூச்சே நின்று விட்டது. பதறி விலகி “சாரி.. சாரி” என்று என் கண் பார்க்காமலே சொல்லி விட்டு உள்ளே போய் விட்டாள்.

அதற்குப் பின் குமுதா வீட்டிலிருந்த நேரம் முழுதும் அவளைத் தவிர வேறெதும் கண்ணுக்குத் தெரியவில்லை. அவ்வப்போது அவள் மூக்கின் மேல் நழுவும் கண்ணாடியைத் தூக்கி விட்டுக் கொள்ளும் பாவம் அலாதியானதாயிருந்தது.

வெளியே வரும் போது மழை விட்டிருந்தது. காற்றில் மழையின் வாசனை இரண்டறக் கலந்திருந்தது. சினிமாப் பாட்டு எதுவும் தேவையாயிருக்கவில்லை அப்போது. காதல் சம்மணமிட்டு அதிகாரமாக என்னுள்ளே அமர்ந்திருந்தது இரையைக் கட்டிப் போட்டு விட்டுக் கொக்கரிக்கும் சிங்கம் போல்.

அவள் என்னைப் பார்க்கிறாள் என்பது இப்போதெல்லாம் மொத்த வகுப்புக்கும் தெரிந்து போன விஷயமாய் மாறி விட்டிருக்கிறது. காதல் தான் என்று உள்ளுக்குள் பட்சிகளும் புறாக்களும் கூவின. ஆனால் அதை அவளிடம் எப்படிச் சொல்வது என்பது தான் புரியவில்லை. அவளுக்கும் என்னைப் பிடித்திருக்கிறது என்பதை, எனக்கு மட்டுமேயான அவளின் பிரத்யேகப் புன்னகைகள் அறிவித்தபடியே இருந்தன

மழைக் காலத்தில் பேருந்து கல்லூரி வரை வராது. மெயின்ரோட்டிலேயே நின்று விடும். இரண்டு கிலோமீட்டர்கள் நடந்து தான் செல்ல வேண்டும். மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது. அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் எல்லாரும் நனைந்தபடியும் வகுப்பில் எல்லாருக்கும் இளைத்தவனான அம்புலியை கிண்டல் பண்ணியபடியும் நடந்து கொண்டிருந்தோம்.

சற்றுத் தள்ளி எங்களோடு இணையாக பெண்களும் சின்ன நமுட்டு சிரிப்புடனும் ரசனையுடனும் எங்கள் கூத்துக்களைப் பார்த்தும் பார்க்காதது போல் நடந்து வந்து கொண்டிருந்தனர். அவளும் இருந்தாள். நான் கூட்டத்தில் கலக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் என்னை அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தாள் என்பது என் நெஞ்சு நிமிர்ந்திருப்பதிலேயே எல்லாருக்கும் தெரிந்திருக்கும் போல. யாரும் தொந்தரவு செய்யவில்லை.

பேருந்து நிறுத்தம் வந்து விட்டது. சரியாக அவள் பேருந்தும் வந்தது. அதில் ஏறாமல் பின் தங்கினாள். என்னைப் பார்த்தாள். மெல்லக் கண்ணசைத்தேன். புரிந்தவளாகப் புன்னகைத்து ஓடிப் போய் கிளம்பவிருந்த பேருந்தில் ஏறினாள். நானும் என் பேருந்துக்குக் காத்திராமல் சட்டென்று நண்பர்களிடமிருந்து விலகி  அந்தப் பேருந்தில் ஓடிப் போய் ஏறிக் கொண்டேன்.

கூட்டம் அவ்வளவாயில்லை. அவள் இருக்கையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொள்ள, இருந்த கொஞ்ச நஞ்ச தைரியத்தை திரட்டிக் கொண்டு அவள் அருகில் போய் கம்பியில் சாய்ந்து நின்று கொண்டேன். மெல்ல நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தவள் கையை நீட்டினாள். முதுகில் மாட்டியிருந்த பையைக் கழற்றித் தந்தேன்.

ஈரம் என்று பார்க்காமல் சட்டென்று நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள் பையை. கிறங்கினேன். பேருந்து பிரேக் பிடிக்கும் போதெல்லாம் கூரையின் ஓட்டை வழியே என் மேல் விழுந்து தெறித்த மழையை கண்டு கொள்ளவேயில்லை நான். என் வாழ்வின் ஆகச் சிறந்த பேருந்துப் பயணமாக அந்தப் பயணம் தான் இருக்கப் போகிறது என்று திண்ணமாகத் தெரிந்தது.

அவள் நிறுத்தம் வந்ததும் பையை என்னிடம் நீட்டினாள். இவ்வளவு சீக்கிரம் ஏன் இந்த நிறுத்தம் வந்து தொலைத்தது? அவள் பார்வையை என்னால் எதிர்கொள்ளவே முடியவில்லை. தலையை தாழ்த்தினேன். சட்டென மழையில் கரைந்தது போக மிச்சமிருந்த தன் வாசனையை என் மேல் வீசி விட்டுக் கடந்து சென்று இறங்கிக் கொண்டாள். பின்னாலேயே நானும் இறங்கினேன். பின் தொடரவில்லை. பார்வையிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டே நின்றேன். மழை விட்டிருந்தது. எங்கிருந்தோ மழையில் கரைந்த மகிழமல்லியின் மணம் காற்றில் பரவிக் கொண்டிருந்தது.

கல்லூரி முடியப் போகிறது. நான் கிட்டத்தட்ட மனசளவில் குழந்தைக்கெல்லாம் பெயர் வைத்து விட்டிருந்தேன். ஆர்வக் கோளாறு. காதலைக் கூட சொல்லாமல் இவ்வளவும். இன்று எப்படியும் சொல்லி விட வேண்டும் என்று எல்லா நாட்களையும் போல நினைத்துக் கொண்டேன். இரண்டு நாட்களாக கண்ணிலேயே படவில்லை அவள். தோழிகளிடம் விசாரிக்க வேண்டும் என்றெண்ணிக் கொண்டே நடக்கையில் குமுதா எதிரில் வந்து நின்றாள்.

சிறிது மௌனத்திற்குப் பிறகு பேச வாயெடுக்கையில் அவளே ஆரம்பித்தாள்.” உனக்கே தெரியும். அவளுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்னு. ஆனா….” என்று நிறுத்தினாள்.”ஆனா?” என்றேன்.“இது நடக்காது. அவளுக்கு அவங்க அந்தியூர்லயே ஒரு மாமா இருக்காரு. எப்படியும் அவர் தான். வீட்ல கண்டிப்பா சொல்லித்தான் அனுப்பிருக்காங்க சித்தி வீட்டுக்கு படிக்கவே. அதனால… இது… நீ…… என்று திணறியவள் இனிமே அவள பாக்காத.. இத  முன்னாடியே சொல்லிருக்கணும்… சாரி” என்றாள்.

மெல்ல என் முகம் இறுகியது. அவளை முறைத்தபடி சொன்னேன். “ இத அவள வந்து சொல்ல சொல்லு”…பரிதாபமாக என்னைப் பார்த்தவள் “ அவ அழுகைய என்னாலேயே பாக்க முடில. அதனால தான் என்னை உங்கிட்ட பேச சொன்னா. நீ உண்மையாவே அவள லவ் பண்ணிருந்தா அவளுக்கு நீ பண்ற நல்ல விஷயம் அவளை மறக்கறது தான்” என்று கூறித் திரும்பியவள், மீண்டும் பார்த்தாள். “ இதையும் அவ தான் சொல்லச் சொன்னா” என்று கூறி விட்டு என் பதிலுக்குக் காத்திராமல் சரேலென மறைந்து போனாள்.

காலடியில் பூமி நழுவியது போல் இருந்தது என்பது மிகப் பழைய உவமையாய் இருந்தாலும் அப்போது அப்படித் தான் இருந்தது. அவள் சொன்னது உண்மை தானென்பதை அதற்குப் பின் வந்த நாட்களிலும் கல்லூரி முடியும் வரையிலும் மிக சாமர்த்தியமாய் என் கண்ணில் படாமல் தவிர்த்ததில் நிரூபித்தாள். கல்லூரியும் முடிந்து விட்டது. எதிலும் பற்றில்லாமல் வாழ்க்கை ஓடத் துவங்கியிருந்த நாட்களில் கழிவிரக்கத்தில் உழன்று கொண்டிருந்த ஒரு முன் மாலைப் பொழுதில் குமுதாவை கடைத்தெருவில் எதிர்கொள்ள வேண்டி வந்தது.

வழக்கமான நல விசாரிப்புகள் முடிந்த பின் பேச்சோடு பேச்சாக அந்தியூர் சென்று வந்ததைச் சொன்னாள். அவள் கல்யாணம் முடிந்து விட்டதாம்..சொல்லும் போது தலை கவிழ்ந்திருந்தாள். என்ன சொல்வதென்று தெரியாமல் சங்கடமாகப் புன்னகை ஒன்றை செய்து வைத்தேன். அந்த முகபாவம் அவளைக் குழப்பியிருக்க வேண்டும். பின் சில நிமிடங்கள் ஏதேதோ பேசி விட்டு அகன்றாள். “ மும்தாஜ்” வாய் விட்டு ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன். சிரிப்பாக இருந்தது. கொஞ்சம் அழுகையாகவும் இருந்தது. வானம் இருட்டிக் கொண்டு வந்தது. மழை வரப் போவது நிச்சயமாய்த் தெரிந்தது.

கையோடு கொண்டு போயிருந்த குடையை விரித்துப் பிடித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தேன். பின் மெல்ல நடக்கத் துவங்கினேன்.

ஹரீஷ் கணபதி