நினைவுகளில் நுழைபவள்

102

தினமும்
சுள்ளி விற்று
வயிறு கழுவுகிறாள்
ஊரில் பழைய
அப்பத்தாக் கிழவி.
இளம் வயதில்
அவ்வளவு அழகென்று
அனைவரும் கூறுவார்கள்.
ஒரு நாள் ஈருடை ;
ஜிமிக்கி வைத்த புதுத்தோடு ;
நடந்து வர அதிரும் கொலுசு சத்தம் ;
கடக்கையில் பின்னிழுக்கும் கொடி மல்லி வாசம் என
அந்த காலத்தில் அவள்
இளைஞர்களுக்கு ஒரு தேவதையாகவே
தரிசனம் தந்துள்ளாள்.
அப்படி இருந்த அவள்
புருஷன் விட்டோடிய பிறகு ,
மீந்த கடன் கட்டி
கால்வயிறு கஞ்சி குடித்து
கட்டுவதெல்லாம்
நைந்து இழையோடிய
அரப்பு வண்ண சேலையும் ,
இரவிக்கை இல்லா மாராப்பும் .
இப்போது
அவள் இறந்து
ஆறு மாதமாகிவிட்டது  !
இன்றும் நிலழாடுகிறது !
என் கண்களில்
சுள்ளிக்காட்டை
மெல்லக்கடக்கும்போது
“எங்க ராசா போற” ? என்ற குரலில்
அரப்பு வண்ண சேலையும் ,
சுள்ளி தூக்கும் சும்மாடும் !

-பிறைநிலா