நினைவில் மழையுள்ள மனிதன் பாகம்-4

89
A man stands inside the new Rain Room at the Barbican center in London. The 'Rain Room' is a 100-square-meter room of falling water which visitors are invited to walk into, with sensors detecting where the visitors are standing.

அலுவலகத்தின் பெரும்பான்மை விளக்குகள் அணைந்திருந்தன. இந்தியக் கடிகாரம் ஒன்பதையும் ப்ரென்ச்சுக் கடிகாரம் ஆறரையையும் காட்டிக் கொண்டிருந்தன. சிஸ்டத்தை ஷட் டவுன் பண்ணி விட்டு எழுந்தேன். ஆறேழு டேபிள்கள் தாண்டி ஒரே ஒரு விளக்கு மட்டும் எரிந்தபடி இருந்தது. யாராக இருக்கும் என்று ஒருவாறு தெரிந்தது. அவளாகத் தான் இருக்கும். அவளை எனக்குப் பிடிக்கும்.

ஆங்கிலத்தில் டஸ்கி கலர் என்பார்களே. கோதுமையின் நிறத்துக்கும் கொஞ்சம் அடர்த்தியான  நிறம். ஆனால் கண்கள் பேசும் அவளுக்கு. அவள் பேசும் போது கண் சிமிட்டுவதும் உதடு பிரியாமல் சிரிப்பதும் அவ்வப்போது செல்லமாக மூக்கை உறிஞ்சிக் கொள்வதும் ரொம்பப் பிடிக்கும். பேச்சினூடே யு நோ என்பதை அடிக்கடி உபயோகிப்பாள். அந்த வார்த்தைகளை அவள் சொல்லும் போது அவ்வளவு வசீகரமாயிருக்கும்.

அவளுடன் பேச வாய்த்த சந்தர்ப்பங்களில் முதலில் ஏகப்பட்ட சொதப்பல்கள் செய்திருக்கிறேன். பின் மெல்லத் திருத்திக் கொண்டேன். நினைத்த போதெல்லாம் பிடித்துக் கொண்டிருந்த சிகரெட்டுகளை காலை மாலை இரவு  தலா ஒன்றென கட்டுக்குள் கொண்டு வந்தேன். அவளுடன் பேசும் போது சிகரெட் வாடையை அவள் விரும்புவதில்லை. அதனாலேயே இந்த மாற்றம்.

ஆரம்பத் தயக்கங்கள், நம்பிக்கை தொடர்பான சந்தேகங்கள் கேள்விகள், பயங்கள் இவற்றையெல்லாம் கொஞ்சம் சிரமப்பட்டுத் தாண்டிய பின் ஒரு அருமையான மனதுக்கு நெருக்கமான , ஆனால் மரியாதைக்குரிய நண்பனின் ஸ்தானத்தை எனக்குக் கொடுத்தாள். அவ்வளவு எளிதில் யாரிடமும் பகிராத சில விஷயங்களை என்னை நம்பி பகிர்ந்திருக்கிறாள். அவள் பேசிய தோரணையிலும் அவளது பாவங்களில் இருந்தும் என்னுடன் இருக்கும் தருணங்களில் அவள் மிகவும் சவுகரியமாக உணர்வதை நானும் உணர்ந்தே இருந்தேன்.

நேரே அந்த மேஜையை நோக்கி நடந்தேன். நெருங்கிய போதே தெரிந்தாள். சிஸ்டத்தை அணைத்திருந்தாள். என்னவோ யோசனையாக குழப்ப முகத்துடன் வலக்கை கட்டை விரல் நகத்தை இடக்கை கட்டை விரல் நகத்தால் நோண்டியபடி அமர்ந்திருந்தாள். “ என்ன கிளம்பலியா?” என்று மிக மென்மையான குரலில் கேட்டதற்கே திடுக்கிட்டு லேசாகப் பதறித் திரும்பிப் பார்த்தாள்.

பார்த்தவுடன் சட்டென்று முகம் மலர்ந்தாள். “ ஓ நீங்களா… கிளம்பணும். ஆறு மணிக்கு வேலை பிசில கேப் புக் பண்ண மறந்துட்டேன். இப்போ ட்ராவல் டெஸ்க்ல கேட்டா கார் எதும் இல்லைங்கறாங்க…” என்றாள்.

“ என்னோட கேப் இருக்கு. நான் புக் பண்ணிருக்கேன். வாங்களேன். நான் ட்ராப் பண்ணிட்டு போறேன்” என்றேன். காத்திருந்தவள் போல் புன்னகைத்தவள் கண்களாலேயே நன்றி சொன்னாள். மெல்ல சேரில் கையை ஊன்றி எழுந்தவள் சுவாதீனமாக இடுப்பை வலது கையால் பிடித்துக் கொண்டாள். சேரில் இருந்து எழுந்ததற்கே மூச்சு வாங்கினாள். மெல்ல ஹேண்ட் பேகை எடுத்துக் கொண்டு என்னுடன் நடந்தாள்.

அவளுடன் நடப்பதற்காக மிக மிக மெதுவாக நடக்க வேண்டியிருந்தது. அவள் கூந்தலிலிருந்து வந்த மணம் அவ்வளவு ரம்மியமாக இருந்தது. லிப்டை அடைந்து அது திறக்கக் காத்திருந்த சமயம் அவளையே உற்றுப் பார்த்தபடி இருந்தேன். அவளுக்கு அது தெரிந்ததா தெரியவில்லை.

லிப்ட் வந்ததும் கீழே இறங்கி காரில் ஏறி அமர்ந்ததும் ஹேண்ட் பேகில் இருந்து தண்ணீர் எடுத்து சரித்துக் கொண்டாள். சில நிமிடங்கள் மூச்சு வாங்கினாள். மவுனத்தை உடைக்க வேண்டி, “ வீட்ல அம்மாவுக்கு போன் பண்ணி சொல்லிட்டீங்களா லேட்டாகும்னு?” என்றேன்.

என் கண் பார்த்துச் சிரித்தவள் “சொல்லிட்டேன். அம்மா மட்டும் தானே” என்று கேட்டு விட்டு பதிலுக்கு காத்திராமல் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள். அவளது தொனியில் சற்று தடுமாறிப் போனேன். சமீப காலங்களில் அவள் அலுவலகத்தில் பெரும்பாலான பேர்களின் காபி இடைவேளைகளின் பேசு பொருளாகிப் போயிருந்தாள். அவளுக்கும் கணவனுக்கும் இடையே அவளுக்கே தெரியாத புதுப் புது பிரச்னைகளை அந்தக் காபி இடைவேளைப் பேச்சுக்கள் உருவாக்கித் தலைவாரிப் பூச்சூட்டி வதந்தி என்று பெயரிட்டு அலுவலகம் முழுதும் உலவ விட்டபடி இருந்தன.

அது போன்ற பேச்சுக்களை நான் கேட்க நேர்ந்தால் அந்த இடத்தில் நிற்பதில்லை. சட்டென நகர்ந்து விடுவேன். கணவனின் குணம் தான் பிரச்னை என்றும் அதனால் தான் விவாகரத்து என்றும் மட்டும் தெரியும். என்ன பிரச்னை என்கிற கேள்வியை இது வரை நானும் கேட்டதில்லை அவளும் அவ்வளவு விவரமாகச் சொன்னதில்லை.. அதனாலேயே எங்கள் நட்பு மெல்ல, ஆனால் உறுதியாக பலப்பட்ட படி இருந்தது

வீட்டில் தன்னுடன் அம்மா மட்டும் இருப்பதாக சொல்லியிருக்கிறாள். அந்தத் தனிமையின் கழிவிரக்கம் அவ்வப்போது அவள் பேச்சில் வெளிப்படும். அடுத்த நொடியே அவளது அட்டகாசமான புன்னகையால் அதைப் பூசி மெழுகி மூடுவாள்,

“அம்மா மட்டும் தானே” அவள் கேள்வி போன்ற பேச்சின் வலி என்னை உறுத்தியது. மெல்லிய குரலில் “ சாரி” என்றேன். சட்டெனத் திரும்பி மீண்டும் கண் பார்த்து சிரித்தாள் ஒரு வார்த்தை பேசாமல். அந்த நொடியில் முன்னெப்போதையும் விட அவளை எனக்கு அபாரமாகப் பிடிக்கத் துவங்கியிருந்தது. என்னென்னவோ கற்பனைகள். சட்டெனக் கடிவாளம் போட்டு அடக்கி, “ எப்போ டேட் சொல்லிருக்காங்க? எப்ப இருந்து லீவ்ல போறீங்க?” என்றேன்.

நெக்ஸ்ட் மந்த் பதினஞ்சாம் தேதி சொல்லிருக்காங்க. அடுத்த வாரத்துலேர்ந்து லீவ்ல போறேன். அம்மா இன்னிக்கு மட்டும் அக்கா வீட்டுக்கு போயிருக்காங்க. நாளைக்கு வந்துடுவாங்க. அங்க ஏதோ எமர்ஜென்ஸி” என்றாள் கேட்காமலேயே. “ ஓ “ என்பதைத் தவிர வேறு பதில் தோன்றவில்லை.

அவள் வீடு வந்திருந்தது. காரில் இருந்து நான் இறங்கிக் கொண்டு அவள் இறங்க வழி செய்தேன். வயிறு இடித்து விடாமல் இறங்க மிகுந்த சிரமப்பட்டாள். சட்டென்று இறங்கும் போது குனிந்த என் தோளைப் பிடித்துக் கொண்டாள்.

இட்ஸ் ஓகே நான் போய்க்கறேன் என்றவளிடம் மென்மையாக மறுத்து விட்டு டிரைவரிடம் காத்திருக்க சொல்லி விட்டு அவளுடன் நடந்தேன்.வ்லிப்ட் ஏறி வீட்டை அடைந்தவள் பூட்டைத் திறந்தபடியே உள்ள வாங்களேன். என்றாள். “இருக்கட்டும் பரவால்ல” என்றவன் “ டின்னருக்கு?” என்றேன். “ இருக்கு” என்று புன்னகைத்தாள். மனசு விட்டு விட்டுத் துடித்தது.

மனசுக்கு இவ்வளவு நெருக்கமான பெண்ணிடம் எப்படி மொபைல் எண்ணை வாங்காமல் போனேன் என்பது சிந்தையில் அப்போது தான் உறைத்தது. அவளும் அது வரையிலும் கேட்டதில்லை. எப்படியோ மிஸ் ஆகி விட்டிருக்கிறது.  “உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க” என்றேன். ஒரே ஒரு நொடி தாமதித்துக் கண் பார்த்தவள்  நம்பரைச் சொன்னாள். “மிஸ்ட் கால் கொடுத்திருக்கேன். நம்பர் சேவ் பண்ணி வச்சுக்கோங்க. ஏதும் எமர்ஜென்ஸின்னா உடனே கூப்பிடுங்க” என்றேன்.

“ஷ்யூர்” என்று சிரித்தாள். சட்டென்று தோன்றிய அக்கணத்தின் உந்துதலில் மெல்ல அவள் தலையை வருடி “ யூ டேக் கேர் “ என்று சொல்லி விட்டுத் திரும்பி நடந்தேன்.வெளியில் வந்து காரை நோக்கி நடக்கையில் அவள் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாள் என்று நினைக்கத் தோன்றவில்லை. மனசு நிர்மலமாக இருந்தது.

மழை லேசாகத் தூறத் துவங்கியிருந்தது. திரும்பி மூன்றாம் மாடியைப் பார்த்தேன். பால்கனியில் நின்றிருந்தாள். புன்னகைத்துக் கையசைத்தாள். மேலே நிமிர்ந்து பார்த்தேன். தூறல் விழத் துவங்கியிருந்தது. அவளைப் பார்த்தபடியே காரில் ஏறினேன். கார் கிளம்பித் தெரு திரும்பி மெயின் ரோட்டை அடைந்த அடுத்த நிமிடம் அவளிடமிருந்து குறுஞ்செய்தி.

தேங்க்ஸ் என்ற ஒற்றைச் சொல்லும் இரண்டு ஆச்சரியக் குறிகளும் ஒரு சிரிக்கும் முகமும் இட்டு அனுப்பியிருந்தாள். எனக்கும் புன்னகை அரும்பியது உதட்டோரம்.

தூறலாகத் துவங்கிய மழை காரின் ஜன்னலுக்கு வெளியே பெரிதாகப் பெய்யத் துவங்கியிருந்தது.

ஹரிஸ் கணபதி