படைப்பில் ஒரு புதிய முயற்சி

140
இலக்கியத்தில் படைப்பாளி என்பவன் எப்படி அடையாளப் படுத்தபடுகிறான் என்பது தான் பெரும்பாலானவர்களின் கேள்வியாய் இருக்கிறது. இதுவரை செய்யப்பட்ட அல்லது செய்யப்படாத ஒன்றை புதுமையாய் செய்பவர்கள் செய்யும் முயற்சியே படைப்பாளிகளை அடையாளம் காட்டுகிறது.
முயற்சிகள் வெற்றிப்பெற்றால் மட்டுமே படைப்பாளியென ஒப்புக் கொள்ளும் சூழலில் தான் இன்று நாம் இருக்கிறோம். இன்றைய இலக்கிய சூழல் என்பதே வெளிச்சமில்லா மலை போன்றது தான். புதிய யுக்தியெனும் கைவிளக்கினை ஏந்தி முன்னேறினால் மட்டுமே சிகரம் என்னும் இலக்கை அடைவது சாத்தியம்.
தமிழ் இலக்கிய உலகில் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது? என்பவர்களுக்கு……. சர்வ நிச்சயமாக புதியதாக சொல்ல ஒன்றுமே இல்லை. அனைத்து விசயங்களும் தமிழ் இலக்கிய உலகம் ஏற்கனவே பார்த்து விட்டது. சொல்ல வரும் விசயங்களை புதிய பாணியில் சொல்வதில் தான் படைப்பாளிகளின் தனித்திறமை ஒளிந்திருக்கிறது. இப்படி இவர்கள் புதிய பாணியில் சொல்வதினால் தான் முகம் தெரியாமலே நமக்கு மிக நெருக்கமாகி விடுகிறார்கள்.
உதாரணமாக கவிதைகள் என அனைவரும் தான் கிறுக்கித் தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் மனதை ஆக்ரமிப்பது என்னவோ வித்தியாசமான முறையில் எழுதும் படைப்பாளிகளே..
தன் நிலத்தை உழுது முடித்தவன்
பிள்ளையில்லாத சரஸ்வதி அம்மா
கழனிக்கு ஏர் ஓட்ட செல்வான்
டவுனிலிருந்து வரும்போது
டீச்சரக்காவை
சைக்கிளில் ஏற்றிக் கொள்வான்
தூங்கிப்போன மேலத்தெரு குழந்தையை
கட்டிலில் உறங்க வைத்து
தரையில் படுத்து கிடப்பான்
பஞ்சாயத்துக் கிணறில்
” அட கொடுமா …”
புள்ளைத்தாச்சி ஒருத்திக்கு
நீர் இறைத்து தருவான்
ஜோசியர் தாத்தாவின்
கால் வீக்கத்துக்கு
மனைவியிடம் மொடக்கத்தான் கீரை
செய்ய வேண்டுவான்
ஊரே மழையில்
வெள்ளக்காடான போது
மாடோட்டி சென்ற
கருப்பனை தேடி மந்தைக்கு ஓடுவான் ..
உங்கள் இல்ல திருமணத்துக்கு
ஊரிலிருந்து வரும்
அந்தப் பட்டிக்காட்டானிடம்தான்
பிள்ளைகளை
அறிமுகமோ
ஆசீர்வாதம் வாங்கவோ
செய்ததில்லை நீங்கள் .
-ராம் வசந்த்
*****
உங்களுக்குத்தெரியுமா?
அப்போது சொந்தமாகவொரு மலையை
வைந்திருந்த பழங்குடி நான்
சொந்தமாகவொரு வனத்தை
வைத்திருந்த ஆதிக்குடி நான்
சொந்தமாகவொரு நதியை
வைத்திருந்த விவசாயி நான்
சொந்தமாகவொரு கடலை
வைத்திருந்த மீனவன் நான்
என் மலையில் விளைந்த கனிகளையும்
என் வனத்தில் எடுத்த தேனையும்
என் நதியால் விளைந்த தானியத்தையும்
என் கடலில் வளர்ந்த மீனையும்தான்
உங்களெல்லோர்க்கும்  உண்ணக்கொடுத்தபின் மீதியை
நானும் என்குடிகளுமாய் உண்டு கழித்தோம்..
உங்களுக்குத்தெரியுமா?
அப்போதெல்லாம் எனக்கும்
மலையை மலையாகவும்
வனத்தை வனமாகவும்
நதியை நதியாகவும்
கடலை கடலாகவுமட்டுமே  தெரிந்திருந்தது…..
எப்போதிலிருந்து உங்களுக்கு மட்டும்
மலை கற்குவியலாகவும்
வனம் காகிதக்கட்டுகளாகவும்
நதி மணற்படுகையாகவும்
கடல் கழிவுநீர்த்தொட்டியாகவும்
தெரியத்தொடங்கியதோ அன்றுதான்
நீங்கள் ஏ டி எம் வாசலில் நின்ற
எனக்குப் பிச்சையிடத்தொடங்கினீர்கள்…!
-லை போயம்ஸ்
*****
கருவேல முள் கிழித்து
கால் வெடிப்பு நோகாமல்
விறகொடித்து
வீடு வருவாள் அம்மா.
கூழோ கஞ்சியோ குடித்துவிட்டு
நாற்றடிக்கவோ,
வெட்டிய மரத்தின்
வேர் பறிக்கவோ சென்று
காப்புக் காய்த்த கைகளோடு
ஆண்டிமடக் காரசேவோ
அபிராமி மிக்சரோ வாங்கி
வீடு வருவார் அப்பா.
ஆட்டுக்குத் தழை
மாட்டுக்குத் தண்ணீர்
சேவலுக்குக் கம்பு
நாய்க்குச் சோறு
கணவருக்கு நீராகாரம்
மகனுக்கு சுடுச்சோறெனத் தந்து
வியர்வை துடைத்து அமர்ந்து
ஊற வைத்த புளியங்கொட்டை தின்று
பசி தீர்த்திருப்பாள் அம்மா.
பல பர்லாங்கு சைக்கிள் மிதித்து
பழைய இரும்புச் சாமானுக்கு
வெங்காயம் விற்று….
நாளுங்கிழமையதில்
கறிச்சோறு ஆக்கித்தந்து
கதறி அழுதிருப்பார் அப்பா.
அப்பா இறந்த மூன்றாம் நாள்
வருவாரெனக் காத்திருந்து
உண்ணாமல் உறங்கியிருக்கிறாள்
அம்மா….
இதுநாள் வரை
அப்பா வரவேயில்லை
அம்மாவும்தான்.
-வினையன்
*****
வியர்வை  அப்பிய
உடலுடன்  நின்றிருந்தான்  ஒருத்தன்
வெயிலை கழற்றிவைக்க
இப்போதைக்கு
ஒரே ஒரு மரம்  தேவையாக இருக்கிறது
அவன் காலுக்கு  கீழ்
அழகிய Paver Block கற்கள் பரத்திருந்தன
அதற்கு கீழ் நிலம்
நிலத்திற்குள் ஒரு  விதை
விதைக்குள் மரம்
-செய்தாலி
*****
வண்டாக மாறி வந்து
ஏமாற்றத்தோடு திரும்புகிறார் கடவுள்
நெகிழிப்பூ மாலைகளில்
வாடாமலிருந்தது உங்கள் பக்தி.
-யாழிசை மணிவண்ணன்
*****
வாசிக்கும் போது மிக எளிமையாகவும், புரியும்படியாகவும் இருக்கும் இந்த படைப்புகள் மனதில் எதோ ஒன்றை விதைத்து செல்கிறது. இவர்களைப் போல நிறைய படைப்பாளிகள் தற்போதைய இலக்கிய சூழலில் வளர்ந்து வருகின்றனர். மண் சார்ந்த அல்லது எளிதில் மனதை தொடக்கூடிய இத்தகைய படைப்புகளில் சொல்கிற விதமும், தேர்ந்தெடுத்த வார்த்தைகளும் புதிய முயற்சிகள்.
இலக்கியம் என்பதே புனைவு தான். புனைவுகள் அனைத்தும் இயங்குவது புதிய முயற்சிகளால் தான்.
ராஜி