பெரிய மனுஷி

185

“ஹலோ..மூர்த்தி..?”

“டே., கார்த்திகா வயசுக்கு வந்துட்டா டா..!”

“எப்ப கா..??”

“இன்னைக்கு மதியம். ஸ்கூலுக்கு போன பொண்ணு வயத்த புடிச்சுட்டு வந்துட்டா டா. எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல, வூட்டுல இருக்க கிளவி வேற என்னென்னமோ சொல்லுது” என்று அழுகாத குறையுடன் பேசினாள் சசிகலா.

தனது சீருடையில் இங்க்-பட்டதால் வந்த தகராறில் சக மாணவி வயிற்றில் அடித்ததும், சுருண்டு விழுந்தாள் கார்த்திகா. “இதெல்லாம் பெரியவங்க விஷயம். சீக்கிரம் அவ அம்மாகிட்ட விட்டுட்டு வாங்க” னு, தண்ணி தெளித்து எழுப்பிய ஆசிரியர் இரண்டு மாணவிகளை துனணக்கு அனுப்பி வைத்தார்.

கார்த்திகா ஒரு கணம் பயந்தே விட்டாள். தனக்கு என்ன நேர்ந்தது? என்று. இந்த நேரம் பாட்டி, ஆலமரம் போல வளர்ந்திருக்கும் புளியமரத்தின் காய்களை பொறுக்கி கொண்டிருப்பாள். அம்மா, சமையல் அறையில் அறைந்து கிடப்பாள். அப்பா, பாட்டியின் பேச்சைக் கேட்பது போல் தலை அசைத்து கொண்டுருப்பார்.

கார்த்திகா கொஞ்சம் தொலைநோக்கு பார்வையுடைவள் தான். அவளின் எண்ண அலைகளின் படியே வாசலில் பாட்டி நின்றாள். துணைக்கு வந்தவர்கள் சிறிதும் தயங்காமல், ”உங்க பேத்தி பெரிய மனுஷி ஆயிட்டா”ன்னு சொல்லிவிட்டு அவர்கள் வெட்கபட்டுவிட்டு ஓடினர்.

“பாத்தியா டா சுப்ரமணி, உன் பொஞ்சாதிய கூட்டிட்டு வரும்போதே சொன்னேன். இவ துரதுஷ்டம் புடிச்சவ, இவளால நமக்கு தர்திரியம் தான் வந்து ஆட போது, ஆத்தா-க்கு புள்ள பாரு அமாவாசை அன்னைக்கு உட்காந்துட்டா, உனக்கு எப்பதேன் நல்ல காலம் பொறக்குமோ?.. யே புள்ள…. புறத்தால வழியா போய் துவைக்குற கல்லுகிட்ட உக்காரு. ஓடு….. எதையும் தொடாம போடி..”

சசிகலா அனைத்தையும் கேட்டுக் கொண்டு அடுப்பங்கறை வாசலில் நின்று அதிர்ச்சியுடன் பார்த்துகொண்டே இருந்தாள். சுப்ரமணிக்கும் சசிகலாவிற்க்கும் திருமணமாகி 12 வருடங்களுக்கு மேல் இருக்கும். அவர்கள் செய்த சிறு பிழை யாதெனில் (அது இருவர் செய்த பிழையல்ல, சுப்ரமணி மட்டும் செய்தது), விடிந்தால் சுப்ரமணிக்கும் பார்வதிக்கும் கல்யாணம், ஆனால் பெயரிலே மரபுப்பிழை இருப்பதாலோ என்னவோ, இரவில் சசிகலாவை மணந்தான். அன்று செய்த வீர சாகசதிற்கு வருவாய் ஆக இன்னமும் திட்டு வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். திருமணம் ஆன புதியதில் கொஞ்சம் கோபப்படத்தான் செய்தாள் சசிகலா. ஆனால் இரவில் கணவன் எடுத்துரைத்து அவளது கோவத்தையும் கொன்றுவிடுவான்.

சொல்லிக் கொள்ளும்படி சுப்ரமணிக்கு ஏதும் வேலை இல்லை. அறுவடை நாட்களில் கையில் கொஞ்சம் பணம் நிற்கும் மீதி நாட்கள் அறுவடை நாட்களுக்காக காத்திருப்பது தான் பிரதான வேலை. இன்று என்ன சமையல் என்று அம்மா தான் முடிவெடுப்பாள். மகன் காய்கறிகளை வாங்கி வருவான். இவள் குழம்பு வைப்பாள்.

“எலேய், உன்கிட்ட தான் பேசுறேன், இப்படி இடிச்ச புள்ளையாரு கணக்கா செவுத்த பாத்துகிட்டு கெடக்க..??”

“நான் என்னத்த செய்ய.? ஆகுற வேலைய ஆளுக்கு ஒண்ணா செய்வோம். முதல்ல பிள்ளைக்கு தண்ணி ஊத்துங்க”

“ஆ.. இதையும் நானே செய்றேன். போடா கூறுக்கெட்ட பயலே.. தாய் வூட்டு கடைசி மொறயையும் நாமே செஞ்சா இவ வூட்டுகாரனுக எதுக்கு இவள வளத்தாக..? மொதல்ல.. சீரெடுத்துட்டு மூணா நாள் வர சொல்லு அப்ப தான் உன் புள்ளைக்கு மொத தண்ணி ஊத்தவுடுவேன். கறாரா சொல்லிபுடு உன் பொஞ்சாதிட்ட”

துணித்துவைக்கும் கல் அருகே சூரியன் மறைய ஆயத்தமானது. மை படிந்த சீருடையை கழட்ட உத்தரவு வராததால், கன்னத்தில் கை வைத்தவாரே வீட்டிற்குள் கேட்கும் உரையாடலை கவனிக்க தொடங்கினாள் கார்த்திகா. நெடு நேர பேச்சுக்குப் பின், சமையலறை தேடி வந்தான் சுப்ரமணி.

”சசி, பிள்ளைக்கு மொற படி சடங்கு செய்யனுமாம். மொத தண்ணி இன்னைக்கே நம்ம ஊத்திடலாம் ஆனா அதுக்கு முன்னாடி உங்க வீட்டுல சொல்லிட்டு மூணாம் நாள் வாரதா ஒப்புகிட்டா இப்பவே தண்ணி ஊத்திக்க ஆத்தா சொல்லுது. அது கிட்ட பேசி ஜெயிக்க முடியாதுனு தான் தெரியும்ல. எங்கிட்டையும் காசு இல்லடி இல்லாட்டி இப்படி கை கட்டி நிக்க வேணாம் பாரு. உன் தம்பிக்கு போன போட்டு விசயத்த சொல்லி வர சொல்லுடி”

மேலும் கண்கலங்கி போனாள் சசிகலா. தான் வயது வந்த போது கூட இப்படியெல்லாம் ஒரு நெறிமுறைக்கு ஆளாகவில்லையே என தன் மகளை நினைத்து வருந்தினாள், மகளை காண கால் விரைந்தது.

“ந்தா.. அவகிட்ட புலங்க கூடாது, அவ அங்கனுக்குள்ளையே இருக்கட்டும். யாரும் காவாந்துகிட்டு போமாட்டாக. நீ ஆகுற வேலைய பாரு. தண்ணி ஊத்திட்டு உள்ள கூப்புட்டுகலாம்” என்றாள் கிளவி

திருமணமான பின் அப்பாவும் அம்மாவும் தலைமுழுகி விட்டனர்.

தம்பி தான் மொத்தமாக குடும்பபாரத்தை சுமக்கிறான். ஒரு பனியன் கம்பெனியில் ஏறத்தாழ பத்து வருடங்களாக கூலிக்குப் போய் வருகிறான். சின்னதொரு கரிசனத்தால் தம்பி மட்டும் அவ்வப்போது போன் பேசுவான். கடைசியாக தம்பியிடம் பேசி மூன்று மாதம் கடந்து இருந்தது. போன் செய்யலாம வேணாமா என்ற பலத்த யோசனைக்கு பின் பச்சை பட்டனை அழுத்தினாள்.

“இத போய் அழுகுற மாதிரி சொல்லுர, சந்தோஷமா சொல்லு கா..”

“இல்லடா, இந்த கிளவி புதுசு புதுசா பிரச்சனைய கொண்டு வருதுடா, உன் வீட்டு ஆளுங்க மூணாம் நாள் சீர் கொண்டு வர்றேனு ஒத்துக்கிட்டாதான் மொத தண்ணி ஊத்த விடுவேனு சொல்லுது டா, இப்ப என்னடா பன்றது..???”

“அக்கா, பாப்பா-க்கு மொத தண்ணி ஊத்தி தைரியம் சொல்லி உக்கார வெய், நா ஒரு வாரம் கழிச்சு சீரோட வாரேன். மூணா நாள்னா கஷ்டம்கா.. அப்பாட்டேயும் பேசனும்ல. ஒரு ஆளா சமாளிக்க முடியாது கா.. ”

“அய்யோ.. இல்லடா, இந்த கிளவி மூணாம் நாளே சடங்கு சுத்தனும்னு சொல்லுதுடா. எல்லாதுக்கும் சரி சொன்னா தான், பிள்ளைய வீட்டுல சேப்பேனு சொல்லுது டா”

“………..”

“சரிக்கா, நா ரெடி பண்ணிட்டு வாரேன்”

எதேனும் செய்தாக வேண்டும் என யோசித்த படியே கம்பெனியை விட்டு வெளியே வந்தான். நண்பர்களிடம் பணம் கேட்பது என்ற முடிவில் தைரியமாக தனது சைக்கிளை எடுத்தான். கண்கள் சாலையை பார்த்தாலும் மனதிற்குள் பாவடை சட்டை, சோப்பு, சீப்பு, கண்ணாடி என சீரை சிறப்பிக்க மொத்தமாக ஒரு 6000 ரூபாயாவது வேண்டும் என்று முடிவெடுத்தான்.

மனதில் தைரியம் வந்தவள் போல் போனை வைத்து விட்டு, “என் தம்பி நாள கழிச்சு வாரான், சீரோட..!” என்று புடவையால் கண்ணீரை துடைத்து விட்டு, மகளுக்கு தேவையானவற்றை செய்ய தொடங்கினாள்.

“என்னடா….. இந்த நேரத்துல வந்து கேக்குற, அதுவும் மாச கடைசில. நம்ம நாராயணங்கிட்ட கேட்டியா..?”

“எல்லார்கிட்டயும் கேட்டாச்சு ராசு, உன்னத்தா நம்பி வந்துருக்கேன். கொஞ்சம் புரட்டி குடுடா.. ”

“அப்படி இப்படினு ஒரு 3000 ரூவா ரெடி பண்ணலாம்டா… அத வெச்சு ஏதும் பண்ண முடிமா..?”

“கொறஞ்சது 6000 ஆயிரம் ரூவா வாச்சும் வேணும் டா. பாவாட சட்டை, சீர் பொருள் எல்லாம் வாங்கனும்”

“உன் சைக்கிள வச்சு ஏதாச்சு தேறுமானு பாப்பமா..?”

“சரி டா, சீக்கிரம் வா, கேட்டு பாப்போம்”

சுப்ரமணி தன் மகளை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டே இருந்தான். ஏனோ அவளின் அருகில் செல்லவில்லை, சசிகலாவிடம் மட்டும் சொல்லி விட்டு எங்கோ வேகமாக கிளம்பினான். மனுஷனுக்கு உறைத்துவிட்டது. இனியாவது நல்ல வாழ்வு வரும் என அவனை தடுக்காமல், தன் வேலையில் மும்முரம் காட்டினாள். இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டே வாய் பேசாமல் பேத்திக்கான அறையை தயார் செய்து கொண்டுருந்தாள் கிளவி.

“கடைசியா ஒரு ஆயிரத்தி ஐநூறு ரூவா தரலாம் அதுக்கு மேல முடியாதுப்பா..”

“என்ன சேட்டு. தெரிஞ்ச மூஞ்சுக்கே இப்படி சொல்லுர..பாத்து கொடு”

“அவ்ளோ தான்பா போகும். இதென்ன தங்கமா? எடைக்கு எட காசு கொடுக்கறத்துக்கு..” செய்வது அறியாது நின்றான் மூர்த்தி. விற்பதற்கு என்று சைக்கிளை தவிர எதும் இல்லை என்று நினைக்கையில்..

“இந்த செல்போன் எவ்ளோவுக்கு போகும்”

“……”
சைக்கிளையும் செல்போனையும் விற்று மொத்தமாக 5500 ரூவாவை கையில் ஏந்தி கொண்டு சோப்பு, சீப்பு, ஸ்வீட், துணி என பட்டியலிட்டு கொண்டே நடந்தான். நாளை நேரமே சென்று அனைத்தையும் வாங்கி கொண்டு நாளை மறுநாள் தன் அக்காவின் தன்மானத்தை காப்பாற்ற வேண்டும் என தீர்மானம் செய்து கொண்டான்.

“ஒன்னுக்கு மூணுவாட்டி குளியாட்டு, போட்ட துணிய அங்கேயே போட்டுறு, குளிச்சுட்டு வந்தாள்னா அலமாரி ரூம் மூலைல உக்கார வை. அவள எங்கேயும் வெளிய விட்றாத. உலக்க தடிய தொணைக்கு வை. போ, சீக்கிரம் போய் குளியாட்டு, பொழுது வேற சாஞ்சு போச்சு” கிளவி பக்குவமாய் எல்லாவற்றையும் எடுத்து சொல்லிக் குடுத்தாள்.

எல்லாதுக்கும் உம் கொட்டி விட்டு, மஞ்சள், வெந்நீர் என தயார் செய்து வைத்தவைகளை எடுத்து கொண்டு தன் மகளிடம் ஒடி சென்றாள்.

“கார்த்தி.. அம்மா வந்துட்டடா, பாவம் பிள்ளைய இவ்ளோ நேரம் தனியா வுட்டுட்டேன். என்ன ஏதுனு கூட கேக்க முடியல, இந்தா முதல்ல தண்ணிய குடிமா”

“ராத்திரிக்கு என்னம்மா சாப்பிட செஞ்ச..?”

“இட்லி தான்மா.. நீ பெரிய மனுஷி ஆயிட்ட கண்ணு, இன்னும் கொஞ்ச நாளைக்கு பத்தியமா தான் சாப்பிடனும். ரொம்ப பத்திரமா இருக்கனும். அம்மா பேச்ச தான் கேட்கனும். சரியா ”

கொஞ்சம் நேரம் பேசிவிட்டு, குளியலறைக்கு கூட்டி சென்று துணிகளை கழற்றும் முன் சில கேள்விகள் கேட்கிறாள் சசிகலா. எதற்கும் சரியான பதில் சொல்லவில்லை கார்த்திகா.

“ஆமா எப்ப ஆச்சு, க்ளாஸ்-லயா..?”

”என்னது மா..?”

“அட, வயித்து வலி எப்ப வந்துச்சு..?”

“ஆ, சுந்தரி இருக்கால, என் மேல இங்க் ஊத்திட்டாமா. அந்த சண்டைல தான் வயித்துல அடிச்சுட்டா. அதான் கீழ வுழுந்துட்டேன் ”

“அய்யோ… அதுக்கு அப்புறம் தான் ஆச்சா..??”

“அதுக்கு அப்புறம் டீச்சர் வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க..”

“உன்ன தனியா கூப்பிட்டு பாத்தாங்களா..?”

“இல்லமா. எதாவது பெரிய விஷயமா ஆயிட போது வீட்டுல வுட்டுட்டு வாங்க னு சொல்லிட்டாங்க”

“அய்யோ, அப்ப இன்னும் நீ ஆகலை யா..?”

“என்னது மா..??”

தலை தலையாய் அடித்தபடியே குளியலைறை விட்டு ஓடிவந்து, அவசரமாக அலைப்பேசியை எடுத்து தன் தம்பிக்கு அழைக்கிறாள். அலைப்பேசியோ “நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் தற்சமயம் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை” என்று சொன்னது.

பிரவின் செல்வம்