பிம்பளிக்கி பாலிடிக்ஸ்

75

பாபருக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்ல பார்ட்டி
கொள்கை : ஆப் கி பார்; எந்த ப்ளைட்டுல பறக்குறார் அண்ணாந்து பார். 

நாட்டையே நிமிர்த்துவோம் என முழங்கி நாடுநாடாய்ப் பறந்து கொண்டிருக்கும் பிரதமர் சார்ந்துள்ள கட்சி. சர்ச்சைகள் சட்டையைப் பிடித்துத் தொங்கியபடியே இருக்கும். அந்நிய நாட்டு உறவுகளை பலப்படுத்துவதே ஐந்தாண்டுத் திட்டம். தமிழகத்தில் வெகுவேகமாக வளர்ந்து கொண்டிருப்பதாக அவர்களே சொல்லிக்கொள்வார்கள்.
மாட்டுக்கறி,மதக்கலவரம் என ஆல்டைம் லைம்லைட்டிலேயே இருப்பது சிறப்பு.

போங்கிரஸ் ( ரிட்டையர்டு நடிகைகள் முன்னேற்றக் கழகம் )

கொள்கை : இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தருதல்.

நாட்டிலேயே ஏன் உலகிலேயே அதிக வேட்டியவிழ்ப்புகள் நடைபெறும் இடம் குத்தியமூர்த்தி பவன்.(ஆபாசம் துளியும் இல்லை ) தினமும் முந்நூறு நானூறு பேர் வந்துசெல்லும் மடம் சாரி இடம்.
ரிட்டையர்டு நடிகைகளுக்கு முன்னுரிமை தந்து காரிய(?) கமிட்டியில் பதவி வழங்கப்படும். மீதமுள்ள மூத்த உறுப்பினர்களுக்கு மதியம் மீந்துபோன பொங்கல் இலவசமாகத் தரப்படும்.
கட்சியின் இளைய தலைவர் கோகுல் மட்டும் சுற்றுப்பயணம் என்கிற பெயரில் ஏழைக் குடிசைகளுக்குள் புகுந்து கூழை ஆட்டயப்போட்டு குடிப்பார். சின்னப்புள்ளைகளின் ரொட்டியை புடுங்கித் தின்பதால் பப்பு என்ற செல்லப்பெயரும் உண்டு.

அடிமைகள் முன்னேற்ற கழகம்
கொள்கை : பணிவு குனிவு.

முதுகுக் கூனல் உள்ளவர்களுக்கு உடனடி அமைச்சர் பதவி.தேர்தலில் சீட்டு கிடைக்க அறிமுகத்திற்கு முன்பு தங்கத்தாரகையில் தொடங்கி புரட்சித்தலைவி என முடியும் பதிமூன்று பக்கக் கட்டுரை வாசிக்கத் தெரிந்திருக்கவேண்டும். கோயஸ் தோட்டத்தில் கிளம்பும்போது கண்ணைமூடி மண்ணைப்பார்த்து கும்பிடத்தொடங்கி வடநாடு போகும்வரை நிமிராதிருக்க வேண்டும். அப்படியே கண்ணசந்து தூங்கவிடவும் கூடாது.முழிப்பதற்குள் கேபினட்டில் பெயர் நீக்கப்பட்டுவிடும்.
அறிஞர் பிரேசில் கும்பத் நடத்திய சர்வேயின்படி குடிப்பவர்கள் இ்ல்லாத ஒரே கட்சி இதுதான் என்ற பெருமையையும் சமீபத்தில் பெற்றுள்ளது.

திருடர்கள் (ஒழிப்பு) முன்னேற்றக் கழகம்
கொள்கை : கடமை கண்ணியம் கட்டுப்பாடு (சிரிக்கப்படாது).

நாடகக்கம்பெனியில் வேலைபார்த்தவர்களுக்கு முன்னுரிமை.பங்காளிச் சண்டைகள் தலைவருக்கு அலர்ஜி. குறைந்தபட்சம் ஜேப்படி, பிக்பாக்கெட்டாவது செய்திருக்கவில்லையெனில் நரிவாலயத்துக்குள் அனுமதியே இல்லை. நாற்பதும் நமதே திட்டம் புஸ்ஸாகிப் போனதால் நமக்கு நாமே என ஊரைச்சுற்றி செல்பீ எடுப்பது தற்போதைய ட்ரெண்ட்டிங்.
அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும் என்ற பழமொழி இங்கே ….ம்ஹூம். ஒன்னுமில்லீங்க.

நாளைய தமிழகம் கேப்டன் கட்சி
கொள்கை : தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க.

கைநடுக்கம் கண்டிப்பாக இருத்தல் கூடாது. பாண்டிச்சேரிக்காரர்களுக்கு சிறப்பு அனுமதி. மீம்ஸ் க்ரியேட்டர்கள் ஆகவே ஆகாது.
கட்சியில் அனைவரும் ஜென் துறவிகளாகவே இருப்பதால் நாக்கைத் துருத்துதல் மகாபாவம்.
யாரும் எகிறிக்குதித்து ஓடாமல் கட்சியைச்சுற்றி காம்பவுண்டு சுவர் விரைவில் கட்டப்படும். உறுப்பினர்களுக்கு ஹெல்மட் வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

மாம்பழ மக்கள் கட்சி
கொள்கை : மாற்றம் முன்னேற்றம் கட்டப்பஞ்சாயத்து.

கோயில் திருவிழாவில் ஆடுவெட்டும் பூசாரிகளுக்கு முன்னுரிமை. அட்லீஸ்ட் விறகு வெட்டவாவது தெரிந்திருக்கவேண்டும். புகை அலர்ஜி.
சாக்குப்போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் கூட்டணிவிட்டுக் கூட்டணி தாவும் காட்சிகளுக்குத் தாக்குப்பிடிக்கலாம். இல்லையெனில் போன தேர்தல் கூட்டணிக்கட்சிப் பேரைச் சொல்லி கல்லெறி வாங்க நேரிடும்.

மைக்கோ டிமுக

கொள்கை : நட நட நடந்துகொண்டேயிரு.

ஆணிக்கால் உள்ளவர்கள் அனுமதியில்லை.சாலை சுத்திகரிப்புப் பணிக்காக நாடு முழுவதும் நடக்கநேரிடும்.பயணப்படியையும் கொலஸ்டிரால் அளவையும் கட்டுக்குள் வைக்கவே இந்த சிறப்புத்திட்டம். இந்தக் கட்சியைப் பொறுத்தவரை தேர்தலே அலர்ஜிதான்.

நாம் டுமீலர் கட்சி
கொள்கை : நரம்பு புடைக்கும் வீரம்; காத்துல பறக்கும் மானம்.

தம்பிகளாக இருந்தால் போதுமானது. புரொபைல் பிக்சராக புரட்சியாளர் ஒருவரின் படம் வைத்திருப்பது கூடுதல் தகுதி. பேஸ் வால்யூம் ஹைய்யாக இருக்கவேண்டும். மைக் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவரவே இந்த யுத்தி. போனுக்கும் தலைவருக்கும் கொஞ்சம் தகராறு.

உறுப்பினர்கள் ஹலோவுக்குப் பதிலாக ங்கோ… சொல்லிப் பேசத்தொடங்க வேண்டும் என்பது புதிதாகச் சேர்க்கப்பட்ட விதி.
மிக முக்கியமானது அணிவதற்கு வாரத்திற்கு ஏழு கருப்புச்சட்டைகள் வைத்திருக்கவேண்டும்.

சல்யூட் ராம்ராஜ் மக்கள் கட்சி
கொள்கை : எட்டி உதைத்தாலும் போகமாட்டோம்.

அட.. ஒரே ஒரு கருது குடுறா ..
அதுசரி ஓங்கருது..நீ தரமாட்ட..
எனும் வெடிவேலு காமெடி இங்கே அரங்கேறும்.
உறுப்பினர்கள் என்னதான் அசிங்கப்பட்டாலும் சகித்துக்கொள்ளும் தன்மை வேண்டும்.
ராம்ராஜ் பனியன் சட்டை அணிந்தவர்கள் கட்சிக்கு வரலாம். என்றும் தொண்டனாகவே நீடிக்கலாம்.ஏனெனில் தலைவருக்கு மட்டுமே சீட்டு கிடைக்கும்.

ஹார்வர்டு க்ளாக்
கொள்கை : தேர்தலுக்கு மட்டும் தலைகாட்டுவோம்.

சீட்டுக்கம்பெனி நடத்திய அனுபவமிருந்தால் கட்சியில் பெரிய பதவிக்கு வரலாம். கருப்புக்கண்ணாடியும் தொப்பியும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ். ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நினைவு திரும்பும் அபூர்வவகை கோமா கட்சியைத் தாக்கியதாக உளவுத்துறை தகவல்.

பொம்மயூனிஸ்ட்
கொள்கை : போராட்டம் ஆர்ப்பாட்டம் சாலைமறியல் மனிதச்சங்கிலி.

ஏற்கெனவே இருப்பவர்களுக்கே மத்தியானச் சாப்பாட்டுக்கு காசில்லாமல் இருப்பதால் புதிதாக உறுப்பினர் சேர்க்கை தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.

விக்னேஷ் சி.செல்வராஜ்