முதல்வர் ஆகிறார் நமச்சிவாயம்

43

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

பெருவாரியான வெற்றிப் பெற்ற காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க. ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டது. இதனால் புதுவையில் 5 முனை போட்டி நிலவியது.

இதில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி 17 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 15 தொகுதியிலும், தி.மு.க. 2 தொகுதிகளையும் கைப்பற்றியது.

காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி அரசின் முதல்-அமைச்சராக நமச்சிவாயம் பதவி ஏற்பார் என தெரிகிறது. ஏனெனில் என்.ஆர்.காங்கிரசிடம் ஆட்சியை இழந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க வியூகங்கள் அமைத்தது.

இதன் முதல் கட்டமாக பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவை பெறும் வகையில் நமச்சிவாயத்தை கட்சியின் மாநில தலைவராக்கினர். அவரும் பம்பரமாக சுழன்று செயல்பட்டார்.

நமச்சிவாயம் மாநில தலைவராக பொறுப்பேற்ற போதே அவரே காங்கிரஸ் கட்சியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்ற தகவல் வெளியானது. காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும், துணைதலைவர் ராகுல் காந்தியும் முதல்-அமைச்சராக நமச்சிவாயத்தை அறிவிப்பார்கள் என்ற பேச்சும் எழுந்தது.

இதனால் நமச்சிவாயமே புதுவை மாநில காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி அரசின் முதல்-அமைச்சராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும் காங்கிரஸ் கட்சியை பொருத்தவரையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டியே சட்டமன்ற தலைவரை தேர்வு செய்யும் வழக்கம் உள்ளது.

அதில் ஏதேனும் மாற்று கருத்து முன்வைக்கப்பட்டால் மட்டுமே நமச்சிவாயம் முதல்-அமைச்சராவதில் மாற்றம் வரலாம். ஏற்கனவே முதல்-அமைச்சர் பதவி வகித்த வைத்திலிங்கம் மீண்டும் தனக்கு வாய்ப்பு வழங்கும்படி கோரலாம்.

புதுவை சட்டசபையில் தனி மெஜாரிட்டிபெற 16 எம்.எல்.ஏ.க்களின் பலம் தேவை. தற்போது காங்கிரஸ் வசம் 15 எம்.எல்.ஏ.க்கள் பலம் மட்டுமே உள்ளது.

இதனால் கூட்டணி கட்சியான தி.மு.க.வுடன் இணைந்தே ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது. தி.மு.க.வின் தெற்கு மாநில அமைப்பாளர் சிவாவும், காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த கீதா ஆனந்தனும் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்களில் சிவா 4-வது முறையாக சட்டசபைக்குள் நுழைகிறார். கீதா ஆனந்தன் சட்டசபைக்கு புதியவர். இதனால், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் சிவா அமைச்சராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

-அகம்