ராம் வசந்த் கவிதைகள்

147

இதையும் கல்வெட்டில் எழுதவும் 

எங்களிடம் ஒரு கல் இருந்தது .
இரண்டாம் நூற்றாண்டில்
அக்கல் கொண்டே கல்லணை கட்டினோம்
முன்னம் அக்கல்லின் மீது
வள்ளுவன் அமர்ந்திருந்தான்
மாசாத்துவானும் மாநாய்கனும்
அந்தக் கல்லின் பெருமைகளை
இறுமாப்புடன்
தம் மக்களுக்கு சொல்லி இருந்தனர்
இக்கல்லில்தான்
கூடல் மாநகரப் பொன்வீதியில்
கொல்லர்கள் ஆபரணங்களை
பட்டை தீட்டினர்
மலைக்கோட்டையை பல்லவர்களும்
பின் வந்தவர்களும் எழுப்பினர்
மொகலாயர்கள் ஆங்கிலேயர்களும்
கல்லின் வல்லமை அறிந்திருந்தனர்.

அது கயத்தாறில் நடுகல் ஆனது
ஒட்டப்பிடாரத்தில் கப்பல்
கட்டி வைக்க உதவியது
எட்டயபுரத்தில் பல வேடிக்கை மனிதரை
துரத்தியது
ஈரோட்டில் சுயமரியாதை இயற்றியது.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
பெட்டகத்தில் பத்திரமாய்
வைத்திருந்த அந்த அபூர்வ கல்லைத்தான்
சமீபத்தில் …
இரு நூற்றி ஐம்பது ரூபாய்க்கு விற்றோம்.

வார்த்தையின்றி வளர்ந்தோம்

ஊர் சென்று திரும்புகையில்
வழியனுப்பி வைக்க
மனிதர்கள்
இப்போதும் வரத்தான் செய்கிறார்கள்.
அப்பா அனுபவங்களை பேசியபடி வருவார்
அம்மாவும் சித்தியும் வந்தால்
பதினெட்டு பட்டி செய்திகள்
வாசிக்கப் படும்
அரசியல் அலசுவார் மாமா
சினிமா இலக்கியமெனப் போகும்
சித்தப்பாவோடு
இடையில் அவ்வப்போது ஒருவன் வருவான்
திருவாய் மலர்ந்திருக்க மாட்டான்
பேருந்து புறப்படும் தருணத்தில்
ஏதோ சொல்லவந்தவன்
சரி கிளம்பு என்பான்
கூட்ரோடில் பேருந்து வளைய
சன்னல் வழி அவன் தெரிவான்
நிலையத்தில் நின்றபடி
உங்களை பார்த்துக் கொண்டிருக்கும் அவனை…
நீங்கள் ” அண்ணா” …வென
எப்போதேனும் அழைப்பதுண்டு.

  • ராம் வசந்த்