ரசனை எனும் ஒரு புள்ளியில்

96

அன்மையில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் இந்தியாவின் பொருளாதார முன்னெடுப்புகளை விமர்சிக்க உபயோகப்படுத்திய வர்ணனை பெரும் சர்ச்சைக்கு உள்ளானது

“குருடர்களின் தேசத்தில் ஒற்றைக் கண்ணுடையவன் ராஜாவாகவே கருதப்படுவான்” என்பது அந்த வர்ணனை.

இதனால் கண்பார்வையற்றவர்களின் உணர்வை தாங்கள் புன்படுத்திவிட்டீர்கள். ஆகவே நீங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எழுப்பிய கோசத்திற்கு பதில் அளிக்கும் வகையில் தனக்கே உரித்தான பாணியில் புன்னகை இழையோட NIBM கல்லூரி ஆண்டுவிழாவில் மாணவர்களுடனான உரையாடலில் இப்படி விளக்கம் அளித்தார்.

“நண்பர்களே தொழில்முறை வாழ்வில் அடியெடுத்து வைக்கும் உங்களுடன் நான் ஒரு இரகசியத்தைப் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். ஆனால் அதற்கு முன் நான் ஒரு விசயத்திற்கு விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

வளர்ந்துவரும் பெரிய நிலப்பரப்புடைய காமன்வெல்த் நாடுகளில் இந்தியாவின் இளம் தலைமுறை தொழில்முனைவோரின் முன்னெடுப்புகள் குறிப்பிடத்தக்கவை. உலக அரங்கில் அனுதினம் நம் வளர்ச்சி சீனாவுடன் ஒப்பிடப்படுகிறது. ஆனால் ஒரு சிலரின் கடின உழைப்பில் குளிர்காய்ந்து கொண்டு சீனாவை எளிதில் வீழ்த்திவிடுலாம் என்ற பகல் கனவுடன் நாம் பகட்டாக நடந்துக் கொள்ள முடியாது. தாமதமாக விழித்துக் கொண்டுள்ளோம். இதுவரை விரயம் செய்த காலத்தையும் ஈடுகட்ட சோம்பித் திரியாமல் இன்னும் கூடுதல் முனைப்புடன் நாம் 20 ஆண்டுகள் அதை ஒரு இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்.

இதைக் கோடிட்டுக் காட்ட நான் சொன்ன உவமையால் ஒரு குறிப்பிட்ட சாராரை நான் காயப்படுத்தியதை உணர்ந்து பெரிதும் வருந்துகிறேன். உண்மை தான் கண் பார்வையற்றவர்களின் தேசத்தில் ஒற்றைக் கண்ணுடையவன் எப்படி ராஜாவாவன். கண் பார்வையற்றவர்கள் தன் மற்ற புலன்களால் குறைகளை ஈடு செய்து விடுவார்கள். ஆனால் ஒற்றைக்கண் உடையவனுடைய தொடு உணர்வோ, கேட்கும் திறனோ, நுகரும் சக்தியோ அதே கூர்மையுடன் இருக்கும் என்பது நிச்சயம் இல்லை. ஆதலால் நண்பர்களே. காந்தியடிகள் செய்த அதே தவறை நானும் செய்திருக்கிறேன்.

’தனக்கு ஒரு கண் போனால் எதிரிக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும் என்று பகைமை பாராட்டும் வழக்கத்தை நாம் விட்டொழிக்காவிடில் உலகம் முழுவதும் குருடர்களாகத் தான் நாம் வலம் வர வேண்டும்’ என்று அகிம்சையின் மகத்துவத்தை உணர்த்த அவர் பயன்படுத்திய உவமை பெரிய சலசலப்பை அந்த காலத்தில் ஏற்படுத்தியது.

பொருளில் குத்தம் கண்டுபிடிக்க நாம் காட்டும் அதே ஆர்வத்தை நம் வளர்ச்சி மீது அக்கறை கொண்டவர்கள் எந்தநோக்கத்தோடு சொல்லியிருப்பார்கள் என்பதிலும் காட்டினால் நன்று.

உலை கொதிக்கையில் கங்கு அணையாதிருக்க நாம் என்ன செய்வோமோ அதே நோக்கத்துடன் தான் தலைவர்கள் தொய்வு ஏற்படும்பொழுது சில கற்பிதங்களைக் கையாள நேரிடும். அதனால் நோக்கமறிந்து எதிர் வினையாற்ற நாம் கற்றுக் கொள்ளவேண்டும். இத்துடன் என் உறையை நான் முடித்துக்கொள்கிறேன். அட நான் மறக்கவில்லை. நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவன். அந்த இரகசியம் என்ன என்று இப்பொதே போட்டுடைத்துவிடுகிறேன்.

‘வெற்றியின் பின்னால் ஓடினால், எல்லைக்கோட்டைத் தாண்டினால் பின் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று தப்புக்கணக்குப் போடாதீர்கள். பிடிக்காவிட்டாலும் பல்லைக் கடித்துக்கொண்டு போலியான இலக்குகளை நோக்கி நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் பின்னாளில் கசையடியாக மாறும். ஆகையால் நண்பர்களே எது செய்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள். அதையொட்டி உங்கள் தொழிலை வகுத்துக்கொள்ளுங்கள். வெற்றி உங்களைத் தேடிவரும். அவ்வளவுதான்’ “ என்றவர் முடிக்க, வெடித்தது கரவொளி.

எப்பேர்ப்பட்ட படிப்பாளி! எப்பேர்ப்பட்ட வார்த்தைகள்! ஆனால் அந்த பலத்த கைதட்டலை விட அவர் ஊதியெழுப்பிய கங்கு அணையாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்வு என்னைப் போல் பலருள் தொக்கி நிற்பதை நான் உணர்கிறேன்.

சுதந்தர இந்தியாவில் மன்னராட்சி போய் மக்களாட்சி மலர்ந்து வருடங்கள் 70 வயதைத் தொட்டு விட்டன. நம்மை ஆண்ட பிரபுக்கள் அவர்கள் கைப்பற்றிய நம் விலை மதிப்பில்லா உடைமைகளை திரும்பத் தரவில்லை என்றால் கூட உரிமங்கள் என்ற சூட்சமக்கயிற்றை இன்றும் தன் வசமே வைத்துள்ளார்கள். நம் உரிமைகளை நம்மிடமே கொடுத்துவிட்டார்கள். ஆனால் நாம் புறங்கையை நக்கும் சிற்றின்பத்திற்காக பன்னாட்டு நிறுவங்களுக்குப் பந்தி விரிக்கிறோம்.

உலகின் முதல் நாகரிகம் தோன்றிய நாடு, உலகிலேயே போரில் ஏவுகணைகளைப் பயன்படுத்திய முதல் நாடு என்று சதா பழம்பெருமை பேசியே காலத்தைக் கடத்தி வருகிறோம். இந்தியாவைப் பொறுத்தமட்டில் நாம் கற்காலத்திற்குச் செல்லவேண்டுமானால் அதற்குக் கால எந்திரம் ஒன்று தேவையில்லை. 10 நாட்களுக்கு மின்தடை அமல்படுத்தினாலே போது.

இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வரும் நம் சந்ததியினர் அகழ்வாராய்ச்சி செய்து பார்த்தால் அவர்கள் கையில்அகப்படும் கலை, இலக்கிய, கட்டிட மற்றும் இதர பண்பாட்டுச் சான்றுகள் மன்னராட்சிக்குப் பிறகு இங்குச் சீனர்களும், அமெரிக்கர்களும், ஆங்கிலேயரும்தான் ஆண்டார்கள் போலும் என்ற பிரமையை உண்டாக்கினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அன்றாடம் நாம் பயன்படுத்தும் பற்பசை முதல் பட்டப் படிப்பு வரை நம்மிடம் எதற்கும் உரிமம் இல்லை. நம் நாட்டின் வரைபடத்தைப் பயன்படுத்தவும், கப்பல், விமானப் போக்குவரத்துப் பாதைகளைப் பயன்படுத்தவுமே நாம் அந்த உரிமத்தின் உரிமைதாரர்களான அயல்நாட்டவருக்குக் கப்பம் கட்டவேண்டும் என்றால் நம் வல்லரசுக் கனவுகள் ரகுராம்ராஜன் கூறியதுபோல் நாம் அந்த நிலையை எட்டிய பின் காலம் என்ற சவுக்கால் நம் முதுகிலேயே கசையடி விழும் என்ற நிதர்சனத்தை நாம் எப்போது உணர்ந்துகொள்ளப் போகிறோம். இணையமும், கட்டற்ற மென்பொருள்களும் பல கட்டுப்பாடுகளைத் தளர்த்தி நமக்கான தளத்தை உலக அரங்கில் கட்டமைத்தன என்பது உண்மை தான். ஆனால், நமக்கான தளவாடங்களை நாமே வடிவமைத்துக் கொள்ளாவிடில் சிறு வட்டத்தை விட்டு பெரிய வட்டத்தைச் சுற்றி வரும் செக்குமாடுகளைப் போல் ஆவோமே தவிர எந்த ஒரு பெரிய முன்னேற்றமும் இருக்காது.

எவனோ ஒருவனைப் பணக்காரனாக்குவதற்காக பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறோம் என்ற லஜ்ஜையே இல்லாமல் உலகம் கேளிக்கையில் திளைத்திருந்த சமயத்தில் நீங்கள் வலி நிவாரணி என்ற பெயரில் போதைப் பொருள்களுக்கு அடிமையாக்கி எங்கள் மக்களைச் சீரழிக்கிறீர்கள் என்று அமெரிக்க கம்பெனிகளை எதிர்த்து வலுத்த குரல் எழுப்பியது முதலில் சீனா தான். விளைவு முதல் ‘ஓப்பிய யுத்தம்’. அன்று தொடங்கி இன்று வரை சீனா சத்தமில்லாமல் பல புரட்சிகளைச் செய்து அதில் ஓரளவு தன்னிறைவும் அடைந்துள்ளனர்.

ஆகவே கணினி முதல் சமூக வலைத்தளங்கள் வரை, கைப்பேசி, உயிர் காக்கும் மருந்து முதல் உடை, வாகனம் என்று தொட்டு அனைத்திலும் நம் முத்திரையை நாம் பதிக்க வேண்டும். நாம் நமக்கான ரசனைகளை வார்த்தெடுக்க வேண்டும். நம் சின்னம் நமக்குப் பெரிது என்ற மனோபாவம் வேரூன்ற வேண்டும். அவ்வாறு உலகையே தன் சொடுக்குக்கு ஆடவைக்கும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் முக்கியமான கண்டுபிடிப்புகள் பற்றி ஒவ்வொரு இதழிலும் ”ரசனை என்னும் ஒரு புள்ளி”யில் தொடரில் பார்க்கப் போகிறொம். அவ்வகையில் முதல் கட்டுரை

”மழுபடியும்” – உலகின் முதல் செல்பி எந்திரமான சவரக்கத்தி பற்றியது. இந்தக் கட்டுரையைப் படித்த பிறகு இனி யாரையும் ‘இவ்வளவு நேரம் என்ன செரச்சிட்டு இருந்தியா’ என்று இகழ வாயெடுக்கும் முன் அந்தத் துறையின் வரலாறு உங்களைத் திகைப்பில் ஆழ்த்தும்.

கார்த்திக் Pk.

இந்தத் தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்