தரிசனத்தின் வெயில் ரிலே-ரேஸ் பாகம்-10

62

ஓரிரு நிமிடங்கள் நகராமல் ஓரிடத்தில் இருக்க நேர்ந்தால் தோலை உருக்கி விடும் உக்கிரம் வெயிலிடம் இருந்தது. தொப்பை மனிதன் இவர்களை உள்ளே அனுமதிக்காமல், கலெக்டர் மீட்டிங்கில் இருப்பதாகவும் அவர் முடித்து விட்டு வரும் வரை காத்திருக்கும் படியும் சொல்லி விட்டு உள்ளே சென்றான். அத்துமீறி அலுவலகத்திற்குள் நுழையும் தைரியம் இவர்களுக்கில்லை. வெயிலின் கடும்  தாக்கத்தில் புலம்புவதையும் இவர்கள் நிறுத்தியிருந்தனர்.

“எம்மவன நடு ரோட்டுல தெவைக்க வச்சிட்டாலே. என்ன பெத்த ராசா உனக்கு இப்படி சாவு வேணுமாய்யா?” மங்கலாத்தாவின் குரல் மட்டும் புலம்பலாக வந்து கொண்டிருந்தது.

செல்வியின் கண்கள் வெங்கிட்டுவின் மீது நிலைத்திருந்தன. யாருடைய புலம்பலுக்கும் எதிர்வினை ஆற்றவில்லை. என்னால் முடிந்தது இவ்வளவு தான். இனி நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்பது போல மௌனமாகிவிட்டாள்.

“ஏத்தா சத்தம் போடறத நிப்பாட்டு. உம்மவன் உயிரோட இருந்து செய்ய வேண்டிய காரியம் இது. அவசரப்பட்டுட்டான்” செல்லப்பா அதட்டும் தொனியில் சொன்னார். அவளை நிறுத்த முடியாதென உணர்ந்த செல்லப்பா, திருவையும் மங்கலாத்தாவையும் வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி சுந்தரத்திடம் உத்தரவிட்டார். சுந்தரமும் ஒரு வார்த்தை பேசவில்லை. பிணமாகத் தான் அவரும் அமர்ந்திருந்தார். சூழ்நிலையைப் புரிந்து கொண்டு இருவரையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் சுந்தரம். வீடு சேரும் வரை மூவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அனல் கக்கும் வெயிலாலும் கூட இவர்களின் சிந்தனையைக் கலைக்க முடியவில்லை.

“யப்பா என் நெலம வேற ஒருத்தருக்கும் வரக்கூடாது அய்யா” வேண்டிக்கொண்டே போனாள் மங்கலாத்தா.

வண்டிகளில் நூற்றுக்கணக்கில் காவல் துறையினர் வந்து இறங்கினர். இதை எதிர்பாராத கிராமத்தவர்களின் எல்லாக் கண்களிலும் ஒரு பயம், இனம் புரியாதக் குழப்பம். காவல் துறையினரிடம் எந்த படபடப்பும் இல்லை. திருவிழாவிற்கு பந்தோபஸ்து கொடுக்க வந்தவர்கள் போல இருந்தது அவர்களின் முக பாவனை. இதை விட பெரிய கூட்டத்தை எல்லாம் பார்த்திருக்கிறோம் என்பது போன்ற ஏளனம் தெரிந்தது. ஆங்காங்கே மர நிழலில் குத்த வைத்திருந்தவர்கள் பீதியில் ஆட்டுக்கூட்டம் போல ஒன்று சேர்ந்தார்கள். இவர்கள் இருக்குமிடத்தை விட்டு அடுத்த அடி நகர முடியாத படி சுற்றி வளைக்கக் கட்டளையிடப்பட்டது. அதிகாரிகள் போன்ற தோற்றம் கொண்டவர்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்திற்குள்ளே சென்றனர்.

“நியாயம் வேண்டும் நியாயம் வேண்டும்” என யாரோ ஒருவர் குரல் கொடுக்க அடுத்த முறையில் அனைவரின் குரல்களும் ஒன்று சேர்ந்து கொண்டன.

உள்ளே சென்றவர்களில் ஒருவர் மட்டும் வெளியே வந்து “ஒரு சத்தம் வரக்கூடாது. சுட்டுப் பொசுக்கிடுவேன்” விரல்களை ஆட்டியப்படி பேசினார். வெறும் பேச்சிற்கு சொல்வது போல் இல்லாமல் நிஜமாகவே செய்து விடுவாரோ என்று தோன்றியது. சல சலவென கூட்டத்தில் எழுந்த சப்தத்தை செல்லப்பா கையமர்த்தினார்.

காவல்துறை அதிகாரிகளிடம் கலெக்டர் ‘எல்லாம் சரிகட்டியாச்சு ஒன்னும் பிரசன்ன இல்லன்னு சொன்னீங்கலேயா. என்னையா இது?” கோபமாகக் கேட்டார்.

“சார் நாங்க பாத்துக்குறோம். இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல. நீங்க வெளில வர வேண்டாம். கோரிக்கை மனு அது இதுன்னு வேற மாதிரி போகும். என்ன பொணத்த தூக்கிட்டு வருவானுவோன்னு எதிர் பாக்கல. இதுக்குலாம் இடம் கொடுக்க ஆரம்பிச்சோம்னா அப்புறம் இதே பழக்கமாகி ஒவ்வொன்னுக்கும் போராட்டம் அப்டி இப்டின்னு வந்து நிப்பானுவோ” சர்வ சாதாரணமாகப் பேசினார்.

“நல்லா வக்கனையா பேசுங்க. காரியத்துல கோட்டை விட்டு இப்போ என் உயிர எடுக்க வந்துடீங்க”

“நாங்க பாத்துக்குறோம் சார்’

“பிரஸ்” என சொல்லி முடிக்கும் முன்பே அவர் தொடர்ந்தார்.

“அதெல்லாம் சரி பண்ணியாச்சு சார். இத பத்தி ரெண்டு வரி கூட வராது. இந்தப் பக்கமும் இப்போ வர விடாததுக்கு எல்லாம் செஞ்சாச்சு. நீங்க கவலைய விடுங்க”

“இன்னும் அர மணி நேரத்துல இந்த கூட்டம் கலஞ்சு போகணும்”

வெளியே வந்தவர் எல்லாரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தொண்டையை கணைத்துக் கொண்டார்.

“ஊர்ல தலைவர் கிலைவர்ன்னு இருப்பீங்களே. யாரையா அது?” பேச்சுத் தொனியில் அலட்சியம் அப்பட்டமாகத் தெரிந்தது.

தோளில் கிடந்த துண்டைக் காற்றில் உதறியபடி செல்லப்பா முன் வந்தார். அவருக்கு மட்டும் காவல் துறை வழி வழங்கி அதிகாரியின் முன் செல்ல அனுமதி தந்தது.

கூட்டத்தைப் பார்த்து எச்சரித்தார், “பேச்சு வார்த்தை முடியுற வர இவரத் தவிர வேற யாரும் ஒரு வார்த்த பேசக் கூடாது. மீறி சத்தம் வந்துச்சனா” கையை விரித்தார். திரும்பி செல்லப்பாவிடம் “என்னயா பிரச்சன?” என்றார்.

“கலெக்டர் அய்யாவ பாத்து பேசணும்”

“ஓ! தொர எங்கிட்டலாம் பேச மாட்டிங்களோ. சொல்லுயா”

வேண்டா விருப்பாக சொல்ல ஆரம்பித்தார். “கொழாய போடறேன்னு விவசாய நெலத்த ஆக்கிரமிக்றதால விவசாயம் அழியிறதோட விவசாயியும் செத்துட்டு இருக்கான். இது இப்படியே போச்சுன்னா எங்க கிராமமே இல்லாம போய்டும்ங்றதுல சந்தேகம் இல்ல. இதுக்கு எங்களுக்கு ஞாயம் வேணும். வெங்கிட்டு உயிரை விட்டுட்டான். நாங்களும் உள்ளுக்குள்ள செத்துட்டு தான் இருக்கோம். எதாவது வழி சொல்லுங்க”

இவர் பேசுவதை வைத்து இவர்களுக்கு என்ன தேவை என்பதில் இவர்களே தெளிவாக இல்லை என்று தோன்றியது. “இங்க பாருங்க. உங்க நெலம புரியுது. இது கவர்மெண்ட் வெவகாரம். ஏற்கனவே இப்படிலாம் வரப்போகுதுன்னு முன்னாடியே நோட்டிஸ் கொடுத்தாச்சே’

“நாங்க யாரும் சம்மதம்ன்னு சொல்லி எழுதிக் கொடுக்கலையே” எனக் கூட்டத்தில் ஒன்றிரண்டு குரல்கள் இடைமறித்தன.

செல்லப்பாவிடம் தொடர்ந்து பேசினார், ‘உங்க நெலத்துக்கு தக்க சன்மானமும் அரசாங்கம் தரோம்ன்னு சொல்லியாச்சேயா. அரசாங்கம் உங்ககிட்ட அனுமதிலாம் கேட்டுட்டு இருக்காது’

“சார் உங்களால இந்தப் பிரச்சனயத் சரி பண்ண முடியாதுன்னு உங்களுக்கே தெரியும். நீங்க எத எதையோ பேசி ஒரு புண்ணியமும் இல்ல. கலெக்டர வரச் சொல்லுங்க”

எதையும் அதிகாரி காதில் வாங்காமல் தான் சொல்ல வந்ததிலேயே குறியாக இருந்தார். ‘பொணத்த தூக்கி வச்சிட்டு இப்படி பண்றது சரி இல்ல. முதல்ல ஆக வேண்டியது பாருங்க அப்புறம் பேசுவோம்”

“இந்த பேச்செல்லாம் வேணாங்க. நீங்க கலெக்டர வரச் சொல்லுங்க. உங்ககிட்ட பேசினா ஆகாது” செல்லப்பாவிடமிருந்து ஆவேசமாக வந்தது.

“உங்களுக்கு என்ன வேணும்ங்கறத முடிச்சி தர வேண்டியது என் பொறுப்பு. இப்போ கெளம்புங்க” குரல் சற்று உயர்ந்தது.

“இதுக்கு என்னங்க உத்தரவாதம். இத மாதிரிலாம் கேட்டு நெறைய பட்டாச்சு. நீங்க கலெக்டர வரச் சொல்லுங்க’

“அவர்லாம் இங்க இல்ல. முக்கியமான மீட்டிங்க்காக வெளில போயிருக்கார் போல. ரெண்டு நாள் ஆகும்”

“என்ன சார் கத விடறீங்க. உள்ள தான் மீடிங்க்ல இருக்கார்ன்னு ஒருத்தர் சொன்னார். நீங்க என்னடானா இங்கயே இல்லங்கறீங்க”

“யோவ் கண்ணக் காமிச்ச போதும். சிதறு தேங்க மாதிரி தெரிச்சி ஓடிருவீங்க. மரியாதையா கெளம்புங்க”

உயிரே போனாலும் இங்க இருந்து நகர்றதா இல்ல’’

கூட்டம் சல சலக்க ஆரம்பித்தது. பின்னால் நின்றுகொண்டிருந்த இளைஞர்களில் சிலர் கூட்டத்தின் முன் வரிசைக்கு வந்தார்கள். விட்டால் தடையைத் தகர்த்துவிட்டு அலுவலகத்திற்குள் நுழைந்துவிடலாம் என்பது போல திமிறிக்கொண்டு நின்றார்கள்.

அருகில் நின்ற வேறொரு அதிகாரியிடம் காதில் ஏதோ சொல்லவும் “சரி சரி” என வேகமாக தலையாட்டியபடி உள்ளே சென்றான். பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்தார் கலெக்டர். அவரை நோக்கி சனங்கள் முன்னேறின. அவரை நெருங்க விடாதபடி அணை போட்டு நின்று கொண்டார்கள் காவல் துறையினர்.

பழம் தின்று கொட்டை போட்டவர் என்பதைக் காட்டியது கலெக்டரின் தொப்பையும் வழுக்கையும். தன் முன்னால் நின்ற செல்லப்பாவிடம் “சொல்லுங்க” என்றார்.

“என்ன சார் சொல்றது. பாத்தீங்கல்ல” வெங்கிட்டைக் காட்டினார் “இன்னொருத்தன் மாரடைப்புல கெடக்கான். இன்னும் எத்தன பேர காவு வாங்கப் போகுதோ”

“இங்க பாருங்க. இது கவர்மெண்ட் வெவகாரம். பொணத்த தூக்கி வச்சிட்டு இப்படி பண்றது சரி இல்ல. முதல்ல ஆக வேண்டியத பாருங்க அப்புறம் பேசுவோம்’ காவல்துறை அதிகாரி பேசிய அதே வார்த்தைகளை இவரும் அச்சு பிசகாமல் பேசினார்.

செல்லப்பாவிற்கு முகம் செத்துவிட்டது. “இவங்களுக்கு நம்மள பத்தி எந்தக் கவலையும் இருக்கப் போறதில்ல” மனதில் ஓடியது. பரிதாபமாக கலெக்டரைப் பார்த்தார். “எங்கள விட்ருங்கய்யா. எங்க நெலத்த எங்ககிட்டயே கொடுத்துடுங்க. இது இல்லாம நாங்க வாழறதுக்கு பேசாம மொத்தமா கொழுத்தி போட்ருங்க. இப்படி கொஞ்சம் கொஞ்சமா சாவுறதுக்கு ஒரே அடியா போய் சேர்ந்துட்றோம்” உடைந்த குரலில் சொன்னார்.

தொண்டையை செருமிக்கொண்டு நிதானமாகத் தொடர்ந்தார் கலெக்டர் ” இதுக்கு மேல எதுவும் இல்ல. நெலம கை மீறி போயாச்சு. உங்க நெலபுலம்லாம் எடுக்றதா அரசாங்கம் முடிவு பண்ணிடுச்சு. அரசாங்கம் இந்தத் திட்டத்த கொண்டு வரதே பொது மக்களுக்காகத் தான. உங்க ஒரு கிராமத்துக்காக ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் கிடைக்க வேண்டிய விஷயத்த கவர்மெண்ட் விட்டு கொடுத்து போகணும்ன்னு நெனைக்றது ஞாயமா சொல்லுங்க. இந்த மாதிரி நாட்டு நலத் திட்டத்த எதிர்த்து எந்த சட்டத்தாலயும் எதுவும் செய்ய முடியாது. அத முதல்ல புரிஞ்சிக்கோங்க. மறியல், போரட்டம்ன்னு அரசுக்கு எதிரா நீங்க பண்றது சரி கிடையாது. அப்புறம் வேற மாதிரி நடவடிக்கையும் எடுக்க வேண்டி வரும். கிடைக்கற கொஞ்ச நஞ்ச சலுகையும் இல்லாம போய்டும். கோர்ட் கேசுன்னு அலையனுமா? அதே மாதிரி அரசாங்கமும் உங்கள அப்படி அம்போன்னு விட்றாது. உங்களுக்காகத் தான் கவர்மெண்ட். உங்க எல்லா நெலத்தையும் கவர்மெண்ட் பறிச்சிக்க போறது இல்லையே. ப்ராஜெக்ட்க்குத் தேவையானதத் தான் எடுத்துக்கப் போகுது. அப்படி இல்லாம ஒரு வேள எல்லா நெலமும் போகுற நெலம வந்தா கூட அதுக்கு வேற ஊர்ல நெலம் இல்லனா பணம் இல்லனா நீங்க எதிர் பாக்ற வேற ஏதோன்னு மாற்று வழி எவ்வளவோ கவர்மெண்ட் வச்சிருக்கு. பிரச்சன பண்ணாம சலுகைகள வாங்குறத பத்திப் பேசுவோம்னா சொல்லுங்க. பேசுவோம். ஆக வேண்டியத நானே பண்ணித் தறேன்”

கூட்டத்தில் சிறு முணுமுணுப்பும் இல்லை. மயான அமைதி. செல்வியை ஏறெடுத்துப் பார்த்தார் செல்லப்பா. செல்வியின் கண்கள் வெங்கிட்டுவின் மீது நிலைத்திருந்தன.

த.ராஜன்

இந்தத் தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்