இங்குதான் எல்லாமே – ரிலே ரேஸ் பாகம் 11

54

சுஷ்மாவின் அப்பா சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்த திலீபனும் குகனும் தீனாவின் குரல் கேட்டு கொஞ்சம் சுதாரித்து கொண்டனர்.

  தீலீபன் மெல்லிய குரலில் “குகன் தீனாவிடம் ஏதோ தவறு இருப்பது போல் இருக்கு. அவனிடம் ஏதும் காட்டிக் கொள்ளாதே. தனியாக பேசிக்கொள்ளலாம் இது பற்றி” என்றான்.

  அதற்குள் அவர்களை நெருங்கி விட்ட தீனா ” இப்ப போனது சுஷ்மாவும் , அவங்க அப்பாவும் தானே.. அவர்கள் தான் நம்மள இங்க வரவச்சதா. என்ன சொன்னார்கள்”என்று கேள்விகளை அடுக்கி கொண்டே போனான்.

  திலீபன் அவசரமாக ” இல்ல இல்ல அவங்க எப்பவும் வாக்கிங் வர நேரமிது. அதான் பேசிட்டு போனாங்க. எனக்கென்னமோ அந்த ஆள் வருவானென்று தோனவில்லை. நாம டைம் வேஸ்ட் பண்ணாம கெளம்பலாம். ஆபிசில் நிறைய வேலை இருக்கு ” என்றான்

  ” இல்லை. அந்த நெம்பருக்கு கால் பண்ணிப் பாக்கலாம் ” என்றான் தீனா

  “அது PCO நெம்பர் தீனா. வா போகலாம் நேரமாச்சு ” என்ற குகன் வண்டியை நோக்கி நடக்க தொடங்கினான்.

வண்டியில் போகும் போது மூவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. திலீபனுக்கு குழப்பமாகவே இருந்தது. எதிர் வீட்டில் குடியிருந்த போதும் தன்னிடம் நேரடியாக வீட்டில் வந்து வீட்டில் பேசுவதற்கு என்ன தயக்கம் சுஷ்மாவின் அப்பாவிற்கு. போனில் கூட விவரங்கள் பேச மாட்டேன் என்கிறார் என்றால் தன் மொபைலுக்கு வரும் கால்கள் கண்காணிக்கப்படுகிறதா ?
இப்படி நூறு கேள்விகள் மனதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.

  தீனாவை கொஞ்ச நாட்களாகத் தான் தெரியும். இது போன்ற பன்னாட்டு நிறுவனங்களை எதிர்ப்பது தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட வாட்சப் குரூப்பில் அறிமுகம் ஆனவன் தான் தீனா. நிறுவனம் பற்றிய தகவல்களை மற்றவர்களை விட அவன் முனைப்புடன் தொகுத்து தந்தான். அடுத்து எங்கள் நடவடிக்கைகள் என்ன? போராட்டங்களை எவ்வாறு நடத்த ஆரம்பிப்பது போன்ற எல்லாவற்றிலும் அவன் காட்டிய ஆர்வம் மற்றவர்களை விட அவனை இன்னும் நான் நெருங்கி பழக செய்தது. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருப்பதாக சொல்லி இருந்தான். அதை தாண்டி அவனிடம் சொந்த விபரங்கள் கேட்க மறந்தவனாக அல்லது நேரமில்லாதவனகவே ஓடிக்கொண்டிருந்தான் திலீபன்.

  திலீபனை வீட்டில் விட்டுவிட்டு கிளம்பினர் குகனும் தீனாவும்.

  சுஷ்மாவின் வீட்டை பார்த்த போது அவர்கள் இன்னும் வரவில்லை என்று தெரிந்தது.

  வீட்டுக்குள் நுழைந்த போது அம்மா ஏதோ பரபரப்பாக தன்னை எதிர்பார்த்து காத்திருப்பது போல் தெரிந்தது.

“திலீபா, நந்தினி மாப்பிள்ளை போன் பண்ணினார். அவருடைய ட்ரைனிங் முடிந்து விட்டதாம். கல்யாண விசயங்களை ஆரம்பிப்பது பத்தி உங்கிட்ட பேசணும்னு சொன்னார். சாயந்திரம் கொஞ்சம் சீக்கிரம் வந்துருப்பா “

  நந்தினி தான் ஒருவரை விரும்புவதாக சொன்னவுடன் அவரை வர சொல்லி பேசிப் பார்த்தாச்சு. அவர் பெயர் விஷ்ணு. தற்போது ஐ ஏ எஸ் தேர்ச்சி பெற்று இன்னும் மூன்று மாதங்கள் ட்ரைனிங் முடிந்து பதவி ஏற்க இருப்பதாகவும் சொன்னார். தன் வீட்டில் எல்லாருக்கும் இந்த திருமணத்தில் முழு சம்மதம் என்றார்.

  அவரின் படிப்பு, கிடைக்க போகும் பதவிகள் தவிர்த்து விஷ்ணுவை பிடித்து போனது அம்மாவுக்கும் திலீபனுக்கும். அவரிடம் பேசிக்கொண்டிருந்ததில் தன் அப்பாவை போலவே முற்போக்கு சிந்தனைகள் கொண்டவன் என்பதை புரிந்து கொண்டான் திலீபன்.

  “ஆமாம்மா, இந்த போராட்டங்கள், வேலை என்று பிசியாக இருந்து நந்தினி கல்யாண விசயத்தையே கொஞ்சம் மறந்து விட்டேன். விஷ்ணு வரட்டும் பேசிக்கலாம்” என்று ஆபீசுக்கு தயாரானான்.

  வண்டியை எடுத்து வெளியே வந்த போது சுஷ்மா ” திலீபன் என் வண்டி ரிப்பேர் ஆகிடுச்சு. போற வழியில் என்னை ட்ராப் பண்ண முடிமா” என்றாள்.

  ” ஓ sure வாங்க போலாம்.”

  வண்டியில் போகும் போது திலீபன் “சுஷ்மா காலைல உங்க அப்பா சொன்னது ஒன்னும் புரியல. என்ன ஆச்சு? என்ன சொல்ல வந்தார்?

  “நேத்து நாம எதிர்க்க போகும் அந்த நிறுவனத்தின் பக்கம் அப்பா போயிருக்கார். உங்க பிரெண்ட் தீனா அங்கிருந்து வெளிவருவதை பார்த்திருக்கார். அந்த தீனா அவர்களின் அந்நிறுவனத்தின் கைக்கூலியாக இருப்பானோன்னு அப்பா சந்தேகப்படுறார். மேலும் உங்க போன் கூட அவர்களால் ட்ரேஸ் பண்ணப்படலாம்னு நினைக்கிறார்.”

  ” இது என்ன சுஷ்மா. நாம் இன்னும் அந்த நிறுவனத்தை எதிர்த்து போராட்டமே ஆரம்பிக்கல. அதற்குள் நம்மை இந்த அளவு கண்காணிக்கிறார்களா ? நாம் இன்னும் கவனமாக எடுத்து வைக்கணும் நம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை”

  “ம்ம் இந்த தீனாவை ..

  ” தீனாவை அவ்வளவு சீக்கிரம் என்னால் துரோகியாக நினைத்து பார்க்க முடியல. அவனை பற்றி நான் விசாரிக்கிறேன். என்றாலும் அவனிடம் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்கிறேன் ” என்றான் திலீபன்.

  சுஷ்மாவை ஆபீஸில் இறக்கி விட்டு விட்டு கிளம்பினான் திலீபன்.

  தீனா பற்றிய குழப்பத்திலேயே ஆபீஸ் செல்ல மனமில்லாமல் குகனுக்கு போன் பண்ணினான்.

  ” குகன் கிளம்பி வா.தீனா வேலை செய்யும் இடம் வரை போகலாம்”

  ” ஏன் ஏதும் பிரச்சனையா? சுஷ்மா அப்பா அவனை பற்றி என்ன சொன்னார்?

  “நேர்ல வா பேசிக்கலாம் “

  கொஞ்ச நேரத்தில் அங்கு வந்த குகன் ” எனக்கும் குழப்பமாக இருக்கு. இது போன்ற குள்ளநரிகளை உடன் வைத்துக் கொண்டு நாம் எந்த ஒரு நல்ல செயலிலும் இறங்க முடியாது தீனா. உடனே அவனை விலக்கி விட வேண்டும்” என்றான்.

  ” அப்படி உடனே எதையும் பண்ண முடியாது குகன். எனக்கு தீனாவை நேரடியாக விசாரித்தால் தேவலைன்னே படுது. போலாம் வா என்று கிளம்பினார்கள்.

  தீனாவின் ஆபீசை அடைந்து வாட்ச்மேனிடம் தகவல் சொல்லி காத்திருந்தார்கள்.

  “தீனா உள்ளே இல்லைஎன்றால் நிச்சயமாக அவனிடம் தப்பு இருக்கிறது திலீபா” என்றான் குகன்.

  “பொறு. இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும் எல்லாம்”

சொல்லிகொண்டிருக்கும் போதே அங்கே பதட்டத்துடன் வந்தான் தீனா.

  ” என்ன ஆச்சு இப்ப தான அங்கிருந்து வந்தேன். நம்மை வர சொன்னது யார் என்று தெரிந்து விட்டதா?” தீனா

  “அது இருக்கட்டும் தீனா. உன்னிடம் சிறிது பேசிவிட்டு போக வந்தோம். நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உன்னிடம் இருந்து உண்மையான பதிலை எதிர்பார்க்கிறோம் “

  “என்ன திலீபா பீடிகை போட்டு பேசுகிறாய். எனக்கு ஒன்னும் புரியல. என்னவென்று சொல்”

நீ நேத்து நாம் எதிர்க்கப் போகும் அந்த நிறுவனத்தில் இருந்து வந்ததாக எனக்கு தகவல் வந்தது. ஏன் தீனா அங்கே உனக்கு என்ன வேலை? நீ அவர்களிடம் விலை போகிறாயா?

“என்ன உளறுகிறாய் திலீபா?”

“கேள்வி கேட்டது புரியவில்லையா?”

“புரிகிறது. என் மேல் சந்தேகம் வரக் காரணம் என்ன? இயக்கத்தில் உங்களுக்கு அதிக தகவல்களை கொடுத்தது நான் தான் என்பதை மறந்துவிடாதே. நீங்களே தடம் மாறினாலும் நான் மாறமாட்டேன்.”

அவனின் தீவிரமான பேச்சில் உள்ள உண்மையை உணர்ந்தவர்களாய், “அப்போது என்ன தான் நடந்தது? நீ அங்கே போக காரணம் என்ன? உன் மேல் சந்தேகம் வருகிற மாதிரி ஏன் நடந்துக் கொள்கிறாய்”

நேற்று அந்நிறுவனத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது நிஜம் தான். அவர்களுக்கு என்னை பற்றிய முழு விபரமும் தெரிந்திருக்கிறது. என்னை, என் குடும்பத்தின் நிலையை அவர்களுக்கு சாதகமாக்கி என்னிடம் விலை பேசினார்கள். உன் நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை அவர்களுக்கு அவ்வப்போது நான் தெரிவிக்க வேணுமாம். நான் அப்படி விலை போகிறவன் இல்லை. உங்களுக்கு எதிரான எங்கள் நடவடிக்கைகள் தொடரும். முடிந்தால் நீங்கள் உங்கள் தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். இயற்கை உணவு என்ற பெயரில் ரசாயனம் கலந்த பொருட்களை விற்பதை நிறுத்துங்கள் என எச்சரித்தே வந்தேன் திலீபா “

தீனாவின் பதிலைக் கேட்ட திலீபனும்,குகனும் பேச்சற்றவர்களாய் நின்றிருந்தனர்.

-நிர்மலா கணேஷ்

இந்தத் தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்