தரிசனத்தின் வெயில் ரிலே-ரேஸ் பாகம் 12

87

செல்வியை ஏறெடுத்துப் பார்த்தார் செல்லப்பா. செல்வியின் கண்கள் வெங்கிட்டுவின் மீது நிலைத்திருந்தன.

மெல்ல கண்களைத் திருப்பி கூடி இருந்த மக்களைப் பார்த்தாள். மக்கள் மனதில் உள்ள குழப்பம் முகத்தில் நன்றாகவே தெரிந்தது. அவர்கள் விழிகள் மிரட்சியாய் எதையோ உற்று நோக்கிக்கொண்டு இருந்தன. சுற்றி இருந்த காவலர்களையும், அவர்கள் கைகளில் இருந்த ஆயுதங்களையும் கண்டு மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். உதடுகள் மட்டும் திறக்கவே இல்லை.

வசந்திதான் முதலில் செல்வியிடம் வந்து, ”இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படி பொணத்தை போட்டு வெச்சுகிட்டு இருக்கறது?. நஞ்சு பாஞ்ச உடம்பு நோக வேண்டாமென்று” கூறினாள்.

”அதான் அரசாங்கமே எதாவது செய்யும்னு சொல்றாங்களே. இப்படி போராடிகிட்டு இருந்தா நம்ம நிலத்தை எல்லாம் எடுத்துகிட்டா அப்புறம் நம்ம பொழப்பும் நாறிடும்னு சொல்ல”!

அவள் பேசுவது சரி என்பது போல கூட்டமும் முணுக்க ஆரம்பித்தது.

அந்த நேரம் கலெக்டரின் ஐ போன் சிக்ஸ் சிணுங்க எடுத்து பார்த்தவர் முகம் கலவரமானது, அழைப்பை ஏற்று பேசிக்கொண்டே வேகமாக அலுவலகத்திருக்குள் நுழைந்தவரை SP பின் தொடர்ந்தார்.

அழைப்பில் மாநிலத்தேர்தல் ஆணையர் என்பது கலெக்டரின் பேச்சில் இருந்து யூகிக்க முடிந்தது. ”தேர்தல் நேரத்தில் எந்த அசம்பாவிதமும் வேண்டாம். அப்புறம் L & O பிராப்ளம்னா தேர்தலை பாதிக்கும். முடிந்த வரை பேசி பாருங்கள் கூட்டத்தை களைக்கும் வழியை பாருங்கள்” என்றதும்,

கலெக்டரும் SPயும் என்ன செய்வது என்று தெரியாமல் தவிர்த்தனர்.

வெளியே கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுக் கொண்டு இருந்தனர். அதுவரை மௌனம் காத்த செல்வி கூட்டத்தினரிடம் பேச ஆரம்பித்தாள்.

கிராமத்தில் வளர்ந்தாலும், பன்னிரெண்டாம் வகுப்பே படித்து இருந்தாலும், அவளுக்கு உலக விசயங்களை அறிந்துக் கொள்வதில் ஆர்வம் அதிகம் இருந்தது. ஊரில் குழாய் பதிக்க போகிறார்கள் என்ற சேதி தெரிஞ்ச உடனே, செய்திகளை உற்று நோக்க ஆரம்பித்தாள். டிவிக்களில் வரும் அதை பற்றிய விவாத நிகழ்ச்சிகள் தொடர்ந்து பார்த்து வந்தாள். பத்திரிகை செய்திகள் மூலம் அதை பற்றிய விவரங்களை அறிந்துக் கொண்டாள்.

அக்கம் பக்கம் வீட்டு கல்லூரி பிள்ளைகளிடம் கேட்டு கணினியில் சமுக வலைதளங்களில் வரும் கெயில் சம்பந்தமான விசயங்களை அறிந்து வைத்து இருந்தாள். அதற்காக ஆங்கங்கே நடந்த போராட்டங்கள், அரசு எடுத்த நடவடிக்கைகள், நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணை, தீர்ப்பு என்று அனைத்தையும் தெரிந்து வைத்து இருந்தாள்.

வெங்கிட்டு இந்த முடிவை எடுத்திராவிட்டால், தனது கிராமத்தை போல பாதிக்கப்பட்ட கிராமங்களை ஒன்று திரட்டி மாவட்ட அளவிலான பெரிய போராட்டமாக நடத்த திட்டமிட்டு இருந்தாள். ஆனால் வெங்கிட்டுவின் இந்த அவசர முடிவால் தனது குடும்பம் நாசமாகி விட்டதை எண்ணி வருந்தினாள்.

ஆனால் இந்த போராட்டத்தை முன்னெடுக்க இது தான் சந்தர்ப்பம் என்று முடிவெடுத்தாள். தன்னைப் போல இன்னொரு பெண் தாலி அறுக்க கூடாது என்றும், தனது குடும்பம் போல இன்னொரு குடும்பம் நாசமாகக்கூடாது என்றும், தனது திருவை போல இன்னொருக் குழந்தை ஆனதை ஆகி விடக்கூடாது என்றும் முடிவெடுத்து மக்களிடம் பேசத் துவங்கினாள்.

இந்த கெயில் குழாய் சம்பந்தப்பட்ட விவரங்கள் அனைத்தையும் மக்களிடம் தெள்ளத் தெளிவாக பேசத் துவங்கினாள். ஒரு புரட்சி போராளியைப் போல மனதில் உள்ள அனைத்தையும் சப்தமாக கொட்டித்தீர்த்தாள். ”இந்த குழாய் கேரளாவில் இருந்து கர்நாடகவிற்கு செல்கிறது. கேரளாவில் மக்கள் போராடியதால் இந்த குழாய்களை ஹைவேய்ஸ் ஓரமாகவும், ரயில்வே தண்டவாளம் பக்கத்துலயும் கொண்டு போறாங்க. கர்நாடகாவிலும் ஹைவேய்ஸ் ஓரமாவே கொண்டு போறாங்க. அங்க மக்கள் எதிர்ப்பால் பெங்களூர்ல இருந்து மங்களூர் வரையிலான திட்டங்களை ரத்து செஞ்சுட்டாங்க. ஆனா தமிழ்நாட்டுல மட்டும் அரசே தடை விதித்தும் கெயில் நிறுவனத்தார் கோர்ட்டுக்கு போரங்கன்னா நாம போராட மாட்டோம்ங்குற நம்பிக்கைதான்”.

”…………”

”இதோ இப்போ ஆபிசருங்க மிரட்ட ஆரம்பிச்சதும், அடங்கி என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கிறோமே, பயந்து பின் வாங்குறோமே இது தான் அவுங்க பலம். மண்ணுக்குள்ள தானே பொதைகிறாங்கனு அலட்சியமா இருக்க முடியாதே?, இந்த குழாய் பதிப்பதால் நிலத்தை நாம் உபயோகிக்க முடியாது. இந்த குழாய்க்கு எதுவும் ஆபத்து ஏற்பட்டால் சம்பந்தபட்ட நிலத்துக்காரர் தான் பொறுப்பு. வேறு யாரவது வேண்டாதவர்கள் இந்த குழாயை ஏதேனும் செஞ்சாக் கூட அரசாங்கம் நம்மல தான் கைது செய்யும்”.

“…………..”

”இந்த குழாயில கெமிக்கல் கொண்டு போறாங்க, அது வெடிச்சுதுனா மிகப் பெரிய ஆபத்து இருக்கு. நெலமெல்லாம் பாலாய் போயிடும். பக்கத்துல இருக்க கெணத்து தண்ணி கூட வீணாப் போயிடும். கொஞ்சம் பக்கத்துல இருக்கவங்க உசுருக்கே கூட ஆபத்து. ஏற்கனவே ஆந்திராவுல இந்த குழாய் வெடிச்சு இருபது பேருக்கு மேல செத்து போயிட்டாங்க. நிறையப் பேர் காயம் அடஞ்சுட்டாங்க. நிலமெல்லாம் வீணா போயிடுச்சுன்னு” உணர்ச்சி பொங்க அவள் பேச பேச மக்கள் தமக்கு வரப்போற ஆபத்தை உணர்ந்தார்கள்.

”……………”

“வெறும் நெலம் தானே வித்துட்டு காசு வாங்கிக்கலாம்னு நெனச்சா அப்புறம் ஊரே நாசமா போயிடும். இதை எதிர்க்கலேன்னா அப்புறம் நித்தமும் செத்து செத்து தான் பொழைக்கணும்.”

அவள் பேச்சை கேட்டு மக்கள் போரடியேத் தீர வேண்டும் என்று முடிவுக் கட்டி விட்டார்கள். இளைஞர்கள் அங்கு நடக்கும் நிகழ்சிகளை செல்போனில் படம் பிடிக்கவும், சமுக வலைத்தளங்கள் மூலமாக தமக்கு தெரிந்தவர்களுக்கு தகவல் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அந்த விஷயம் காட்டுத்தீ போல பரவ ஆரம்பித்தது.

இந்த செய்தி சற்று நேரத்தில் மாவட்டம் முழுக்கப் பரவி விட்டது. தேர்தல் நேரமென்பதால் எதிர்கட்சிகள் இதை அரசியலாக்கப் பார்த்தார்கள். ஆங்கங்கே இருந்து கூட்டமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி வர துவங்கினார்கள்.

அங்கே கலவரம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டது. பேருந்து நிலையம் அருகிலும், கடைவீதியிலும் கடைகள் தன்னிச்சையாக சாத்தப்பட்டது. செய்தி அறிந்த போலீசார் கலெக்டர் அலுவலகம் வரும் வழியை அடைத்தனர். யாரையும் உள்ளே விடவில்லை.

கூட்டத்தை சமாதானப்படுத்தும் நோக்கில் உள்ளே இருந்து வந்த கலெக்டரிடம் இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது. முகத்தில் சற்றுக் கோபம் அதிகரித்தது. முதலில் அங்கு இருப்பவர்களிடம் இருந்து செல்போன்களை பிடுங்கும் படி உத்தரவு பிறப்பித்தார். உள்ளே இருப்பவர்களிடம் இருந்து செல்போன்கள் பிடுங்கப்பட்டன. அந்த நேரத்தில் மீண்டும் கலெக்டரின் ஐ போன் சிணுங்கியது. அழைப்பில் லோக்கல் மந்திரியின் பெயர் காட்டியது.

எடுத்தவுடனே ”அங்க என்னயா பண்ணுறீங்க?. இப்படி கூட்டத்தை கூட்டி வெச்சுகிட்டு தேர்தல் நேரத்தில ஊரெல்லாம் ஒரே கலவரமா இருக்கு. தேர்தல் நேரத்துல எனக்கு கெட்டப்பேரு எடுத்து கொடுக்கனும்னே இருக்கீங்களா?”

கலெக்டர் என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தார்.

“எதிர்க்கட்சிகாரன் இதவச்சி என்னை கிழி கிழின்னு கிழிப்பான். இப்பவே இதுல அரசியல் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. அப்படி எதாவது நடந்தது…… அப்புறம் டெபாசிட் கூட வாங்க முடியாது. எதிர்க்கட்சி கூட கூட்டு வெச்சுகிட்டீங்களாான்னு” பேசிக் கொண்டே இருந்தார்.

வெளியே  கூச்சல் கேட்டது. அங்கு இருக்கும் கூச்சலை விட அதிகம். மந்திரியின் பேச்சு மேலும் ஆத்திரத்தை கொடுத்தது. இருந்தாலும் போனில் ”அதெல்லாம் நடக்காது, நாங்க இருக்கோம், நாங்க பார்த்துக்குறோம்னு” சொல்லிட்டு போனை வைத்தார்

செல்லப்பாவை நோக்கி கலெக்டர்” இன்னும் ஐந்து நிமிடம் தான் உங்களுக்கு டைம் ஒழுங்கா பொணத்தை கொண்டு போயி அடக்கம் பண்ற வழியை பாருங்கள், இல்லேன்னா நாங்களே பொணத்தை அடக்கம் பண்ணிடுவோம்”னு சொல்ல…..

இளைஞர்கள், ”முதலில் குழாய்களை பதிக்க மாட்டோம் என்று உறுதிக் கொடுங்கள். அதன் பிறகு தான் களைந்து செல்வோம். எங்களை மீறி நீங்களே அடக்கம் பண்ணிடுவீங்களா?, எங்க உசுரே போனாலும் நீங்க இந்த திட்டத்தை கைவிடுறோம்னு சொல்லாம இங்க இருந்து போக மாட்டோம்”னு ஆவேசமாக கூறினார்கள்.

இவர்களின் ஆவேசத்தைக் கண்டு சற்று இறங்கி வந்த கலெக்டர் மற்றும் SP. ”அரசாங்கம் இருக்கு உங்களுக்கு நல்லது செய்யும். இப்போ பேசாமல் களைந்து செல்லுங்கள்”னு சற்று அதிகாரத் தோனியில் பேச…..

மக்கள் நியாயம் கிடைக்கும்வரை களைந்து செல்ல மாட்டோம் என்று பிடிவாதமாக இருந்தனர். மீண்டும் ஆவேசமாக செல்லப்பாவை நோக்கி, ”ஒழுங்கா களைந்து செல்லுங்கள். இல்லேன எல்லோரையும் கைது செய்ய வேண்டி வரும்”னு சொல்ல மக்கள் ஆவேசமனார்கள். அதற்குள் பேருந்து நிலையத்தின் அருகில் எதிர்க்கட்சிகள் பஸ் மறியல் செய்வதாக SPக்கு தகவல் வர, அவர் கலெக்டரின் காதில் கிசுகிசுத்தார். ”இந்த பொணத்தை இப்படியே வைத்து இருந்தால் இதை வேற மாதிரி பிரச்சனை ஆக்கிடுவாங்க. L & O பிரப்ளம் ஆகி தேர்தல் தள்ளிவைக்க வேண்டி வரும். நம்ம தலைதான் உருளும்னு” சொல்ல,

கலெக்டரும் SP யும் மீண்டும் உள்ளே சென்று ஆலோசனை நடத்தினார்கள். இங்கு கூட்டம் குறைவாக இருப்பதாகவும், பிணத்தை அடக்கம் செய்து விட்டால், பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்றும் ஆலோசனை வழங்கினார். அதை ஆமோதித்த கலெக்டர் லத்தி சார்ஜ்கும் கூட்டம் கலையவில்லை என்றால் கண்ணீர் புகைக்கும் உத்தரவு பிறப்பித்தார். மேலும் இவர்கள் வெளியில் சென்று பிரச்சனை செய்யாமல் இருக்க இவர்களை கைது செய்யவும் உத்தரவு இட்டார்.

வெளியில் வந்த SP, கூட்டம் ஆவேசமாவதைக் கண்டு ”லத்தி சார்ஜ்” என்று கத்த, தயாராக இருந்த காவலர்கள் எல்லோரையும் சகட்டுமேனிக்கு அடிக்கத்துவங்கினர். வயதானவர்கள், பெண்கள் என்று யாரையும் விட வில்லை.

இளைஞர்கள் குறிப்பிட்டு அதிகமாக தாக்கப்பட்டார்கள். செல்விக்கு மண்டை உடைந்தது. வசந்திக்கு கால் உடைந்தது. மிதி விழுந்தது. செல்லப்பா கீழே விழுந்ததில் மார்பில் ஷூ காலால் மிதி வாங்கினர். தவாயில் இருந்து ரத்தம் சொட்டியது. கீதாவின் பதினாலு வயது மகனுக்கு லத்தியால் கண்ணில் காயம் ஏற்பட்டது. தினேஷ் எனும் இளைஞன் பலமாக தாக்கப்பட்டதில் மூர்ச்சையானான். அதுவரை அமைதியாக ஓரமாக நின்று இருந்த ரமணி உட்பட வெளியூர் சொந்தங்களும் தம் மக்கள் அடி வாங்குவதை கண்டு ஓடோடி வந்தார்கள். அதில் ரமணிக்கு வலது மணிக்கட்டில் சரியான அடிபட்டது, சற்று நேரத்திற்கு எல்லாம் வலி தாங்காமல் கூட்டம் அடங்கி போனது.

அந்த இடமே போர் முடிந்த களம் போல காட்சியளித்தது. போலீஸ் வேன்கள் வந்து செல்லப்பா, செல்வி இன்னும் இரண்டு வயதான ஆண்கள், மற்றும் ஊரில் இருந்து வந்து இருந்த ரமணி தவிர்த்து அனைவரையும் ஏற்றி சென்றது. அங்கே இருப்பவர்களிடம், “ஒழுங்கா எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால், பொணத்தை அடக்கம் பண்ணுனதும் எல்லோரையும் விடுவித்துடுவோம். இல்லேனா எல்லோரையும் ஆறு மாசம் உள்ள தள்ளிடுவோம். என்ன சொல்றீங்க? என்றார்.

செல்லப்பாவும் மற்ற பெரியவர்களும் செல்வியை சமாதனப்படுத்தி அடக்கம் செய்ய ஒத்துக் கொள்ள வைத்தார்கள். போலீசார் அணிவகுக்க மாட்டுவண்டியை ஒரு காவலரே ஓட்டிச் சென்றார். கொல்லி வைக்க திருவை அழைத்து வரவேண்டும் என்ற கோரிக்கையை, கலெக்டர் பெரிய மனது வைத்து ஏற்றுக்கொண்டதாக காட்டினார்.

மறுநாள் காலையில் பெண்களும் வயதானவர்களும் மட்டும் விடுவிக்கப்பட்டனர். இளைஞர்களின் ரேகைகள் மற்றும் முழு விவரங்கள் திரட்டப்பட்டு, ”இனி இந்த ஊரில் கெயில் குழாய் சம்பந்தமாக எதாவது போராட்டம், கலவரம் நடத்த முற்பட்டால் அது யார் செய்தாலும் சரி உங்கள் மேல தான் ஆக்சன் எடுப்போம். உங்கள் எதிர்காலமே பாதிக்கப்படும்” என்று மிரட்டி…. இனி இது போன்ற குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என்று எழுதிய தாள்களில் கையெழுத்து வாங்கி அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

அவர்களை இன்று விடுவிக்கப்போவது தெரிந்து ஊரில் இருந்து செல்லப்பாவும், அவர்களின் பெற்றவர்களும் வந்து இருந்தார்கள். பசியால் அவர்கள் முகம் வாடியிருந்ததை கண்டு செல்லப்பா தான் டீ சாப்பிட்டு போகலாம் என்று டீக்கடைக்கு கூட்டிச்சென்று டீயும், பன்னும் வாங்கித்தந்தார். அவர்கள் டீ பன்னை தின்ற வேகத்தை கண்டு கடையில் இருந்த எல்லோரின் கண்களிலும் நீர் கோர்த்தது. பிள்ளைகள் இல்லாத செல்லாப்பா உடைந்து அழுதே விட்டார். தலைவராய் இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லையே? என்ற விரக்தி அவரின் கண்ணீரில் தெரிந்தது,

அங்கு டீக்குடிக்க வந்த காவலர்கள் வில்லன்களாக பார்க்கப்பட்டார்கள். பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? அரசும் அதிகாரிகளும் ஏவும் திசைக்கு பாயும் அம்புகள். இருந்தும் இந்த சுழலில் இங்கு இருப்பது தவறாகப்பட்டது, கையில் இருந்த டீயை வேகமாக குடித்தார்கள்.

அப்போது ஸ்பீக்கரில் ஒலித்துக்கொண்டு இருந்த “என்னங்க சார் உங்க சட்டம்” “என்னங்க சார் உங்க திட்டம்” பாடலுக்கு குறிப்பறிந்து சப்தம் கூட்டினார் டீக்கடைக்காரர். காவலர்கள் அங்கிருந்து கிளம்பியதும், டீக்கடைக்காரர் உட்பட பொதுமக்கள் அவர்களிடம் விபரங்களை கேட்டுத் தெரிந்துக் கொண்டனர்.

”வெவசயத்தை அழிச்சுபுட்டு அப்புறம் என்னத்த திங்கப் போறானுங்கலாம் இந்த ஆபிசர் பசங்க?” என்றார் ஒருவர்.

”அவனுங்களுக்கு என்ன காசு இருக்கு எதுனா வெளிநாட்டுக்கு தப்பி போயிடுவானுங்க நாம ஏழைபாலைங்கதான் இங்க இருந்து போராடனும்.”

“நீங்க விடாதீங்க போராடுங்க உங்களுக்காக நாங்கல்லாம் இருக்கோம். இனியும் யாரோ வெவசாயி பிரச்சனைன்னு வெடிக்க பார்த்துட்டு இருக்க நாங்க ஒன்னும் சொங்க பசங்க இல்ல. இந்த அரசியல்வாதி பசங்கள நம்பாம நாமளா போராடுனா போதும் அரசாங்கம் மிரண்டிடும்னு” அவர் சொல்ல சொல்ல ஊர்க்காரர்களுக்கு சின்ன ஆறுதல் கிடைத்தது!

டீக்கடைக்காரர் காசு வாங்க மறுத்துவிட்டார். இவர்களுக்காக ஆதரவாய் இருப்பதாய் கூறினார். செல்லப்பாவிற்கும் ஊர்காரர்களுக்கும் ஆச்சரியம்! விவசாயிகளை இந்த அளவுக்கு நேசிக்கிறார்களே!! என்று.

எல்லோரும் மினி பஸ்சில் ஊருக்கு திரும்பினர். பஸ்சில் அமர்ந்து இருந்தவர்கள் எழுந்து இடம் கொடுத்தனர். இவர்களிடம் நலம் விசாரித்தனர். இவர்களுக்கு பெருமையாக இருந்தது. போலீஸ் ஸ்டேசன் சென்றது கேவலம் என்று நினைத்து வருந்தியவர்களுக்கு இவர்களது அன்பும் மரியாதையும் ஒரு வித மகிழ்ச்சியை கொடுத்தது!

பஸ்சில் இருந்து இறங்கி ஊருக்குள் நுழையும் போதே எங்கும் காவலர்கள் நின்றுக் கொண்டு இருப்பதை கண்டார்கள். எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் சாவடி விருச்சென்று இருந்தது. ஊர் பெருசுகள் அமர்ந்து இருக்கும் அரசமர திண்ணை அனாதையாய் இருந்தது.

ஊரில் ஒரு வாரத்திற்கு 144 உத்தரவு அமலில் இருந்தது. பிறகு வெங்குட்டுவின் காரியம் முடிந்ததும், தேர்தல் முடியும் வரை இரண்டு காவலர்களை மட்டும் தினமும் இங்கு இருந்து காவல் காக்கும்படியும் ஏதேனும் அசம்பாவிதம் என்றால் உடனடி தகவல் தெரிவிக்கும்படியும் கலெக்டரின் உத்தரவு.

அன்று மாலை செல்லப்பாவின் வீட்டில் ஊரே ஒன்றுக் கூடியது. செல்வி தான் முதலில் பேச எழுந்தாள்.

செந்தில்குமார் நாகராஜன்.

இந்தத் தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்