தரிசனத்தின் வெயில் ரிலே-ரேஸ் பாகம்-14

55

அதுவொரு மே மாதத்தின் நீண்ட பகல். கண்ணீர் சுரப்பிகள்கூட வற்றிப் போய்விட்ட இக்கொடிய கோடையில் தண்ணீர்ச் சுரப்பிகளைப் பற்றி சொல்லவா வேண்டும்? இந்த வாழ்க்கை தான் எவ்வளவு விசித்திரங்களை வைத்திருக்கிறது? விசித்திரங்களை வைத்த வாழ்க்கை முன்னேற்பாடாக என்னென்ன விசித்திரங்களை வைத்திருக்கிறேன் என்று சொல்லியாவது விட்டிருக்கலாம். அது சரி அப்படிச் சொல்லிவிட்டிருந்தால் அது எப்படி விசித்திரமாகும்? வாழ்க்கை நமக்காக விட்டுவைத்திருக்கும் ஒரே ஆறுதல்….தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும், தனக்குள் அழுது தீர்க்கவும், செய்த தவறுகளுக்கு வருந்தவும் கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்கிற வாய்ப்பு மட்டுமே….இப்போது செல்விக்கும் அந்த வாய்ப்பு மட்டும்தான் கொஞ்சம் துணையாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது.

கனவுகளைத் தூக்கிச் சுமப்பதற்கும், நினைவுகளைத் தூர எறிவதற்குமான இடைவெளி நம் மனதிற்குள்ளாகத்தான் இருக்கவேண்டும்…..சென்ற ஆண்டும் இதே வறண்ட கோடைதான்….இதே வெள்ளை வெயில்தான்….அப்போது அந்த வெயிலிலும் ,  கோடையிலும் புருசனோடு கனவுகளைத் தூக்கிச் சுமந்தவள்…அதெல்லாம் வெறும் நினைவுகளாகி விட்ட இன்றைக்கு தூர எறியவும், தூக்கிச் சுமக்கவும் முடியாமல் வீட்டின் மேற்கு மூலையில் சுருண்டு படுத்து தவித்துக்கொண்டிருக்கிறாள்.

பதினைந்தாம் நாள் காரியம் முடிந்து விட்டிருக்கிறது இன்றோடு. இந்த பதினைந்து நாளும் பட்ட போராட்டங்களும், வலிகளும் சொல்லில் அடங்காதவை.
பெண் குழப்பத்தில் இருக்கும்போது வலிந்து திணிப்படும் ஆறுதலும் வன்முறையாகத்தான்படும். இப்போதைக்கு அவள் கொஞ்சம் அழட்டும் விட்டு விடுவோம்…..

புருசன் செத்துக் கிடந்தபோது கூட அவள் அழவில்லை. அதற்குப் பின்னான கலெக்டர் ஆபீஸ் முற்றுகை, போராட்டம் எல்லாவற்றின் போதும் அவளே …முன்னின்றாள்.

கொஞ்சம் கொஞ்சமாக உறவுகளும்….ஊர்காரர்களும் அவரவர் வேலைகளில் மூழ்கி விட்டிருந்தார்கள். ஊர் கொஞ்சம் இயல்பாகிவிட்டிருந்தது. இல்லையில்லை இயல்பாய் இருப்பதுப் போல நடிக்க ஆரம்பித்துவிட்டிருந்தது. இப்போதெல்லாம் பெரியவர் சுந்தரம் அதிகம் பேசுவதே இல்லை ….என்ன அதிகம்! சுத்தமாகப் பேசுவதே இல்லை.
திருவும் முன்போலில்லை முழுவதும் மாறி விட்டிருந்தான்….. விளையாட்டை… தனக்குப் பிடித்த மரம்செடிகொடிகளை எல்லாவற்றையும் மறந்துவிட்டிருந்தான்….
மறக்கவில்லை நினைக்காமல் விட்டிருந்தான்.

இந்த நாட்டின்….ஒரு மாநிலத்திலுள்ள ஒரு மாவட்டத்திற்குள் ஏதோவொரு மூலைக் கிராமத்தில் ஒரு குடியானவனின் குரலையோ, வஞ்சிக்கப்பட்ட ஒரு தலித்தின் குரலையோ கேட்பதற்க்கு எங்கேனும் அதிகாரவர்க்கம் ஆர்வமாகவா இருக்கப்போகிறது.??? இன்னும் ஓரிரு நாட்களில் சட்டசபைக்கான தேர்தல் அறிவிப்பு வந்து விடும் சூழலில் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான தருணம் இதுவே என உணர்ந்தே இருந்தார்கள் ஊர்காரர்கள்.

வாசலில் கிடந்த நாயையும் நாலைந்து நாளாகவேக் காணவில்லை. மனுசனுங்களியே கண்டுக்கமுடியல. இதுல நாயைப் பத்தி யாரு நினைக்கப் போறா? கூட்டமா இருக்கறப்போ. அந்த ஜீவன் வெறும் நாயாத்தான் தெரிஞ்சிருக்கும். அதே தொணைக்கு யாருமில்லாம தனிச்சுக் கிடக்கும் போது நம்மவீட்டு உறவாவே மாறிப்போயிரும். அந்த வாயில்லா ஜீவன். கூட்டிக் கழிச்சுப் பார்த்தா. மனுசங்களோட அன்பும் சுயநலம் சார்ந்தது தான். திருவோட வயசு தான் இருக்கும் அந்த நாயிக்கும். இப்போதைக்கு அதைப் பத்தியெல்லாம் கவலைப்படுறதுக்கு யாரு இருக்கா….? இந்தக் கதையிலே மனுசன், மரஞ்செடி கொடிகளோட அதுவும் ஒரு கேரக்டர் அவ்ளோதான்.!
காலம் தானாகவே உருண்டோடிக் கொண்டிருக்கிறது. நெடுநேரம் அழுதுக் கொண்டிருந்தவள் எப்போது உறங்கிப்போனால் என்று தெரியவில்லை.!

“செல்வி……செல்வி……”…!

நடுச்சாமம் இருக்கும்….தூக்கத்தில் யாரோ அழைத்ததுபோல் உணர்ந்தவள் திடுக்கிட்டு எழுந்தாள்….

” செல்வியக்கா…..செல்வியக்கா….!”…

வாசலில்தான் யாரோ…!
எழுந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு கதவைத் திறக்க…
சுமதிதான்..நின்று கொண்டிருந்தாள்..!

“வா சுமதி……! என்றாள் செல்வி

” சரிக்கா நேரமாகிடுச்சி …இப்போ கிளம்புனாதான் சரியா இருக்கும்…”.!- சுமதி.

“கொஞ்சம் இருடி …இதோ வந்துர்றேன்” என்றபடி வீட்டிற்குள் சென்றாள் செல்வி. சுந்தரம் ஒரு ஓரமாய் கட்டிலில் சுருண்டு படுத்திருந்தார். திருவும் நன்றாக உறங்கிவிட்டிருந்தான். தூக்கத்தைக் கலைக்காமல் கொஞ்ச நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள். தூக்கியெடுத்து முத்தம் கொஞ்சினாள்.

பிறகு …சுவரில் இருந்த வெங்கிட்டின் படத்தருகே போய் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு….சாமிவிளக்கிற்கு எண்ணெய் ஊற்றிவிட்டாள்…..!

இப்போது வெளியில் சுமதியோடு இன்னொரு குரலும் கேட்டது…..!

ஒருவழியாக ஆசுவாசப்படுத்திக்கொண்டவள் தீர்மானமாய் எழுந்து வீட்டை விட்டு வெளியில் வந்தாள்….

அங்கே சுமதியோடு நடுத்தர வயதில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள்…செல்வி அவளை இதற்கு முன் பார்த்ததில்லை….

” அக்கா இவங்க பேரு……….”- சுமதி..

புதிதாக வந்திருந்தவள் செல்விக்கு வணக்கம் வைத்து. ஆறுதலாக தலையை வருடிக்கொடுத்தாள். செல்வியும் அதை ஆமோதித்தவளாய். பதிலுக்கு வணக்கம் வைத்தாள்.

பின்பு மூவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கையில் ஒரு டார்ச்சை மட்டும் வைத்துக்கொண்டு இருட்டில் வடக்கு பக்கமாக நடக்கத் தொடங்கினர். நடு சாமத்தைத் தாண்டி…மணி இரண்டு இருக்கும்…..அந்த பொட்டல் காட்டில் இவர்களைத் தவிர வேறு மனித நடமாட்டமே இல்லை. சித்திரை நிலவு மேற்கில் விழத்தொடங்கியிருந்தது. வழக்கம் போல் ஊர் உறங்கியே கிடந்தது. விடியலில் வரப்போகும் பிரளயத்தை உணராமலேயே…….!

-லை போயம்ஸ்

இந்தத் தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்