காற்றின் நிறம் சிவப்பு- ரிலே ரேஸ் பாகம்-15

71

சுஷ்மாவின் வருகைக்காக காத்திருந்தான் திலீபன். நிமிடங்கள் கொடுமையாக நகர்ந்தன. எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு எட்டவேயில்லை. தீனா பற்றிய சந்தேகம், சுஷ்மா அப்பாவின் ரகசியங்கள் என திலீபன் யோசித்துக் கொண்டே இருக்கும் போதே தீனாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

“திலீபன் எங்கிருக்கிறாய்? அவசரமாக முக்கியமான விசயம் பேச வேண்டும்?”

“நான் இங்கு, வேறொருத்தாருக்காக காத்திருக்கிறேன். என்ன விசயம் தீனா?. குரலில் ஏன் இவ்வளவு பதட்டம்.? ஒரு மணி நேரம் கழித்து வந்துவிடவா?”

“இல்லை மிக அவசரம். சுஷ்மாவிற்காக காத்திருக்கிறாயா?”

திலீபனால் பதில் சொல்ல முடியவில்லை. தீனாவே தொடர்ந்தான்.

“பிரச்சனை இல்லை திலீபா. சுஷ்மாவின் உதவியும் நமக்கு தேவை. நான் குணாவை அழைத்துக் கொண்டு வந்து விடுகிறேன். எங்கு இருக்கிறாய் எனச் சொல்?”

”சுஷ்மாவின் அலுவலகம் எதிரே….. இன்னும் பத்து நிமிடத்திற்குள் வந்து விடுவாள்.”

“ நான் குகனை அழைத்துக் கொண்டு பதினைந்து நிமிடத்தில் அங்கிருப்பேன்” என சொல்லிவிட்டு திலீபனின் பதிலை எதிர் பார்க்காமல் தொடர்பை துண்டித்தான் தீனா.

குகனுக்கு போன் செய்து அவசரமாக வருமாறு அழைத்து விட்டு வரும் வழியில் அழைத்துக் கொள்வதாக கூறினான்.

சுஷ்மா கோவத்தில் திலீபனிடம் கத்திக் கொண்டு இருந்தாள். ”எனக்கு எவரையும் பார்க்க விரும்பமில்லை. என்னை கேட்காமல் நீங்கள் எப்படி அனுமதி கொடுத்தீர்கள்?”

”தீனா முக்கியமான விசயம்னு சொன்னான் சுஷ்மா. நம்ம விசயம் கூட அவனுக்கு தெரிந்து இருக்கு”

“நம்ம விசயம்னா என்ன? என்றாள் கோவம் குறையாமல்

திலீபன் அவன் கண்களை பார்த்து, “உனக்கும் தெரியும்” என்றான்.

சுஷ்மா தலைக் கவிழ்ந்தாள். கோவம் சற்று குறைந்த மாதிரி இருந்தது.

“நான் 30நிமிடம் தான் பர்மிஷன் போட்டு வந்திருக்கேன். திரும்பவும் ஆபீஸ் போகனும்” என்றாள் தலை நிமிராமலே..

இதற்குள் தீனாவும், குகனும் வந்து விட….. தீனா பரபரத்தான்.

”கொஞ்சம் பதட்டப்படமால் கேளுங்கள். நாம் எதிர்க்கும் நிறுவனம் நமக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கி இருக்கிறது……

சட்டென சுஷ்மா இடைமறித்து, “தீனா அந்த நிறுவந்த்தின் கைகூலி. நம்மள ஏமாற்ற பார்க்கிறார்.” என கத்தினாள்.

வாய்ச்சண்டை உருவாகும் சூழல். திலீபன் முழித்தான். குகன் தலையிட்டு தீனாவை பேசவிடுங்கள். பேசி முடிக்கட்டும் என்றான். சுஷ்மா தலையை திருப்பி எங்கோ வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்தாள்.

தீனா மீண்டும் பேச ஆரம்பித்தான்.

“இயற்கை உணவு என்ற பெயரில் ரசாயணம் கலந்த பொருட்களை விதைப்பதற்கு அந்நிறுவனம் விவசாய நிலங்களை குத்தகைக்கு கையகப்படுத்தியுள்ளது. இது முழுக்க முழுக்க மாஸ்டர் ப்ளான். குத்தகைக்கு எடுக்கப்படும் நிலங்களை தோண்டி தான் கெயில் நிறுவனம் குழாய்களை பதிக்கப் போகிறது. இதில் இரட்டை லாபம் நாம் எதிர்க்கும் நிறுவனத்துக்கு…. 1.விவசாய நிலங்களில் ரசாயாண விதைகளை பயிரிட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மறைமுக அனுமதி கொடுத்து காசு பார்க்கும். இரண்டு, கெயில் நிறுவனத்திடமிருந்து விவசாயிகளின் எதிர்ப்பை காப்பத்தறேன்னு விவசாயிக்கு கொடுத்தத விட ஐந்து மடங்கு காசு பார்க்கும். குத்தகை காலம் முடிஞ்சதும் இந்த நிறுவனம் நிலத்தை விவசாயிக்கு கொடுக்கும் போது என்ன நடந்து இருக்கும்னு யோசிச்சி பாருங்க”

“இதுல உனக்கு எவ்ளோ பங்கு?” என்றாள் சுஷ்மா குத்தலாக…

”என்னை சந்தேகப்படுவதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். நான் இன்னும் சொல்லி முடிக்கல.”

மீண்டும் அமைதியானாள் சுஷ்மா.

நாம எதிர்கிற நிறுவனம் குத்தகைக்கு எடுத்த விவசாய நிலங்கள், அதை எந்த வெளினாட்டு நிறுவனத்திற்கு கொடுத்து ரசாயண விதை ஆய்வுக்கு உட்படுத்தப்போகுது, எவ்ளோ காசு வாங்குது என்ற டீடெயில் எல்லாம் சுஷ்மா அப்பாவுக்கு தெரியும். அதுக்கான போதுமான ஆதாரங்கள் அவர் வைத்திருக்கிறார். இன்னொரு விசயம் இப்போ குத்தகைக்கு எடுத்த கிராமத்துக்கு பக்கத்து கிராமம்ல குழாய் பதிப்பு சம்பந்தமா விவசாயிகள் மனமொடைந்து தற்கொலை பண்ணிக்கிறாங்க”

“என்ன சொல்லுறீங்க இது உண்மையா?” என்றான் திலீபன்.

”உண்மை தான். இப்போ அந்த கிராமத்துல 144 தடை உத்தரவு இருக்கு. எனக்கு தெரிஞ்சவங்க மூலமா அந்த கிராமம் மக்கள்கிட்ட பேசி இருக்கேன். இறந்து போன விவசாயி மனைவி கொஞ்சம் தைரியமானவங்க. பிரஸ்ல நிக்க வச்சிட்டா மீதி வேலை தானா நடக்கும்”

”அவங்கள எப்படி கூட்டிட்டு வரது?’ என்றான் குகன்

”நாம போனா பிரச்சனை ஆகும். எனக்கு தெரிஞ்ச நண்பி மூலமா ஏற்பாடு செஞ்சி இருக்கேன். என் மேல சந்தேகப்படுற சுஷ்மாவும் வரட்டும். கூட்டிட்டு வரது பெண்கள். அவங்களுக்கும் இவங்க உதவியா இருப்பாங்க” என்றான் தீனா

‘இதில் எதோ சதி இருக்கிறது” என சந்தேகத்தாள் சுஷ்மா.

“சும்மா சும்மா சந்தேகப்படாதீங்க. அந்த நிறுவனம் என்னை கூப்பிட்டு வளைச்சி போட பார்த்து உண்மை. நான் மசியல. இப்பவும் உங்களுக்கு சந்தேகமா, என்னொட அந்த கிராமத்துக்கு நீங்களும் வாங்க. போவோம். உங்க பாதுகாப்புக்கு குகனும் கூட வரட்டும். திலீபன் இங்க பிரஸ்-மீட் ரெடி பண்ணட்டும்.”

சுஷ்மா அமைதியானாள். “பிரஸ்-மீட்ல என்ன பேச போறோம். எப்படி அந்த நிறுவனத்தை எதிர்க்க போறோம்?”

“அதைப்பத்தி திலீபன் இன்னும் இருக்கிற குழுவினரோடு பேசி முடிவு பண்னட்டும். உங்க அப்பாவையும் ஆலோசனை சொல்ல சொல்லுங்க” என்றான் குகன்.

“என்னிக்கு போறோம் அந்த கிராமத்துக்கு?” என்றாள் சுஷ்மா.

“இன்னிக்கு ராத்திரி போறோம். நாளைக்கு விடியற முன்னாடி தற்கொலை செய்துகிட்ட விவசாயியோட மனைவி, அவங்க ஊர்க்காரங்க இரண்டு பேர் 144 தடை உத்தரவு மீறி நம்மோட வெளிய வராங்க. அவங்கள மீடியா முன்னாடி கொண்டு வந்து நிப்பாட்டுறது தான் நம்ம வேலை. திலீபன் வளர்பிறை பத்திரிகையிலும் மத்த பத்திரிகையிலும் பேசட்டும்.” என்றான் தீனா.

“எனக்கு நேரமாகிவிட்டது. நான் ஆபீஸ் கிளம்புறேன். அப்பாகிட்ட பேசிடுங்க. நான் சாயந்திரம் அப்பாகிட்ட சொல்லிட்டு வந்திடுறேன். சாரி மிஸ்டர் தீனா” என்றாள் சுஷ்மா.

கூட்டத்தை கலைத்தார்கள். திலீபன் வீடு நோக்கி விரைந்தான். பின்னங்கழுத்தில் யாரோ சொறிவது போல இருந்தது. திரும்பி பார்த்தான். மனக்குரலானவன் உட்கார்ந்து இருந்தான்.

“என்ன?” என்றான் வெறுப்பாக

உனக்கென செய்தி அனுப்பி காத்திருக்கையில்

உள்ளதும் குழைக்க

உள்மனதையும் குழப்ப

நாடிவந்த நட்பே பிரதானம்

நினைத்தாயோ”….!!!! என பாடினான் மனக்குரலானவன்.

போதும். டென்சன் பண்ணாத. மூடிட்டு கிளம்பு என்றான்.

”இன்னும் இரண்டே வரி என்றான் மனக்குரலானவன்.

 நான் எழுதின கவிதை தான் அடுத்த வரியும் எனக்கு தெரியும். நீ ஒன்னும் சொல்ல வேணாம். என்னை விட்டு போ” என்றான் திலீபன்.

சுஷ்மாவின் அப்பாவிடம் நடந்தவற்றை சொல்ல, எந்த எதிர்ப்பும் இல்லாமல் எல்லா தகவல்களையும் கொடுக்க ஒப்புக் கொண்டார்.  சுஷ்மாவையும் கிராமத்தித்திற்கு அனுப்ப சம்மதித்தார்.

இரவு கிளம்பிய சுஷ்மாவும், குகனும் தீனாவும் அந்த கிராமத்திற்கு செல்லும் போது. நடு சாமத்தைத் தாண்டி…மணி இரண்டு இருக்கும்…..அந்த பொட்டல் காட்டில் இவர்களைத் தவிர வேறு மனித நடமாட்டமே இல்லை. சித்திரை நிலவு மேற்கில் விழத் தொடங்கியிருந்தது. கிராமத்திற்கு வெளியே காத்திருந்தனர்.

சிறிது நேரத்தில் டார்ச்-லைட் வெளிச்சத்தில் தீனாவின் பெண் நண்பி ஒருவருடன் இரண்டு பெண்கள் வந்து சேர்த்தனர்.

“இவர் தான் செல்வி. இறந்தவரோட மனைவி என அறிமுகப்படுத்தினாள் தீனாவின் நண்பி.”

“எல்லாம் போக போக பேசிக் கொள்ளலாம் என அவசரப்படுத்தினான் குகன். அவர்கள் ஏறிய வண்டி விடியலை நோக்கி நகரத் தொடங்கியது.

ரட்ஷன்

இந்தத் தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்