காற்றின் நிறம் சிவப்பு ரிலே-ரேஸ் தொடர்-18

52

“செல்வி போயிட்டியாமா!!?? எங்க நம்பிக்கையே நீதானம்மா …நீயும் போயிட்டா எங்களுக்கு வேற யாரும்மா இருக்கா!! …”

“பாத்தியா சுப்பு, நல்லது செய்யப் போனவளுக்கு வந்த நெலமைய”

“ஆமய்யா …என்ன உலகம் இது..ச்சே “ என்று அவர்களுக்குள் துக்கம் வெளிப்படத் தான் துவங்கியது. உடனே கத்தரியிட்டு முந்தினார் தலைமைக் காவலர் .

“இந்தாருங்க பெரியவரே ,இது செல்வியான்னு கேக்கத் தான் வரச் சொன்னோம் . பாத்துட்டீங்கள்ள கெளம்புங்க கெளம்புங்க ..கூட்டம், கூச்சல்னு வந்தா இன்ஸ்பெக்டர் ஐயாவுக்கு நான் பதில் சொல்ல முடியாது.. “

“ஏம்பா உசிருக்குன்னு மதிப்பு இல்லாமப் போச்சுல்ல இந்தக் காலத்துல ?!”

“பெரியவரே பணம் தான் இன்னிக்கு எல்லாம் …சும்மா விளாடுது , சுதந்திரம் வாங்குன காலத்துலேயே இருக்காதீங்க இன்னும்”

“தப்புத்தான்யா தப்புத்தான் ..இப்போ யோசிக்க வேண்டியதா இருக்கு எதுக்குடா சுதந்திரத்தை வாங்குனோம்னு, இந்தா பாத்தியா நெத்தில தழும்ப! இதெல்லாம் நாட்டுக்காக போராடுனதுய்யா …கடைசில நம்ம சோத்துக்கு நாமளே குழி தோண்டிப் புதைக்கிற அளவுக்கு கொண்டாந்து விட்டீங்களேய்யா ..நல்லாருங்க  “

“பெரியவரே உங்க நல்லதுக்குத் தான் சொல்லுறேன், இது பெரிய இடத்து விவகாரம் .. பேசாம இருக்கது நல்லது..”

“ரொம்ப நல்லதுய்யா ,,வா சுப்பு நாம போகலாம் “என்ற ரங்கய்யாவின்  நடையில் கொஞ்சம்  துடுக்கு தெரிந்தது. எண்பத்து ஐந்து  வயதென்றால் யாரும் நம்ப மாட்டார்கள், சுப்புவிற்கும் ஒன்று குறைவாகவோ கூடவோ இருக்கும் போல. இவர்கள் தான் ஊர் நல்லது கெட்டதிற்கு மதிப்புடன் நியமிக்கப்பட்ட பொறுப்பாளிகள், பொதுவாளிகள்.

அங்கே செல்வி இறந்து விட்டதாகவே  அந்த இரண்டு பெரியவர்களும் சொல்லிவிட்டு அந்த மருத்துவமணை வளாகத்தை விட்டு வெளியேறி தங்கள் கிராமத்திற்குச் செல்லத் தீர்மானித்தனர். அப்பொழுது அவர்களுக்குள்ளாக சில நளின சங்கேதங்கள் அரங்கேறிக் கொண்டு தங்களை எப்படியாவது வெளிக்காட்ட முற்பட்டன. இருவரும் பேருந்து ஏறும் வரை ஏதும் பேசிக்கொள்ளவில்லை. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை, அந்த தலைமைக் காவலர் கண் கொத்திப் பாம்பாய் இவர்களைப் பின்தொடர்வதை சுப்பு எப்படியோ பார்த்துவிட்டது தான் அது. இருவரும் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் நகரின் எல்லையைத் தாண்டும் வரை தூர்தர்சன் சானலில் எப்பொழுதாவது ஏழு வண்ணக் கலரில் இடையில் ஒரு கோளாறு ஏற்படுவதைப் போன்ற  மவுனத்தைக் கடைபிடித்தனர். நகரின் எல்லையைத் தாண்டியதும் மார்பிலிருந்து சில வல்லினங்களை வெளியேற்றத் தடையாய் இருந்த இடையினத்தின்  உற்பத்தியகத்தை  சற்று இருமி இருமி சரிபடுத்திக் கொண்டு ஆரம்பித்தார் சுப்பு.

“ச..செ..செல்வி… இல்ல தானே அது?! அப்பறம் ஏன் ரங்கய்யா மாத்திச் சொன்ன? ”

“சுப்பு.. நம்ம ஊருக்காக ஒரு பிள்ள உசிரைப் பணயம் வச்சு ஓடிக்கிட்டு இருக்கு! இப்போ நாம இல்லன்னு சொன்னா தேடிக் கொன்னுடுவாங்கய்யா.. ஆனா இந்தப் பிள்ள யாருனு தெரியலையே !“

“ஆமா ரங்கா, நீ சொல்றதும் நெசந்தான்..  நான் செல்வி  இல்லைனு சொல்லிருப்பேன். நீ பேசாம இருந்திருந்தா.”

“தெரியும் சுப்பு. அதான் நான் முந்திக்கிட்டேன். இருந்தாலும் கொஞ்சம் பயந்துட்டேன்! எங்க நீ குட்ட ஒடைச்சுருவியோன்னு..

நல்ல வேளை எல்லைக் கருப்பன் செஞ்ச புண்ணியம் தான் “

“எனக்குத் தெரியும். நீ செய்ற ஒவ்வொன்னுக்கும் ஒரு காரணம் இருக்கும்னு.. ஆனால் செல்விப் பிள்ளைய தான் எங்கன்னு தெரியல ”

“சுப்பு… அந்தப் பிள்ள விவரமானது, எங்கிருந்தாலும் நல்லாருக்கும்ய்யா… நம்ம கருப்பன் கூடயிருப்பான் “ என்றவாறு பெருமூச்சுடன் ஜன்னலோரத்தில் அமர்ந்த ஐந்து வயது சிறுவர்களென கம்பியைப் பற்றிக் கொண்டு வேடிக்கையில் லயிக்கத் துவங்கினர்.

 காட்டில்…………

தீனாவும், சுஷ்மாவும், குகனும் சட்டென்று  பாதையை மாற்றி மீண்டும்  வந்த வழியில் சென்று சாலையை அடைவது தான் சிறந்த வழியென்று  தீர்மானித்தனர். அது தான் அவர்களுக்கு  சற்று தெரிந்த வழியும் கூட. கொஞ்சம் தூரம் தான் சென்றிருப்பார்கள், அருகில் ஒரு பாதை பிரிந்தது. அதை தீனா மட்டும் நோட்டமிட்டவனாய் “ஸ்ஸ்…. ஸ்ஸ் “ என்று சாரைப்பாம்பின் குரல்வளையை குத்தகைக்கு எடுத்தவனாய் கையை அசைத்து  சமிக்கை செய்தான். சுஷ்மாவும், குகனும் அருகில் வந்து பார்த்தார்கள். மூவருக்கும் பேரதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. அங்கிருக்கும் சிறு புதர்செடி ஒன்றில் செல்வியின் சேலையின் சிறு துண்டுப் பகுதி சிக்கிக் கிழிந்த நிலையில் ஒட்டிக்கொண்டிருந்தது. சுஷ்மாவும், குகனும் அச்சத்தின் உச்சத்தில் நின்று கொண்டிருக்க தீனா மெதுவாய் அதைக் கையிலெடுக்க முற்பட்டான். அப்பொழுது எதிர்பாராத விதமாக குகனின் அலைபேசி ஒலிக்கத் துவங்கியது. அவ்வளவு தான் அந்த ஒலிக்கும், சுற்றி இருக்கும் நிசப்தத்திற்கும் மூவரும் வெலவெலத்துப் போயினர். கஸ்டமர் கேர் என்று கஸ்டமரின் சூழ்நிலை புரியாத நேரத்தில் அந்த அழைப்பை படக்கென்று ஸ்வைப் செய்து அலைபேசியை  உள்ளே கிடத்தினான் குகன்.

தீனா இப்பொழுது அந்த கிழிசலைக்  கையில் எடுத்துப் பார்த்தான். அப்பொழுது அவன் கைகளில் பிசுபிசுப்பை உணர்ந்தவன் அதைத்  திருப்பிப் பார்த்தான். சில துளி இரத்தங்கள் அதில் தெறித்திருக்கின்றன என்பதை உணர்ந்து கொண்ட அவர்கள் ஓரளவு நடந்தவற்றை ஊகித்து அந்தப் பாதைக்குள் மெதுவாக செல்ல எத்தணித்தார்கள் .

சில அடி தூரம் தான் நடந்திருக்க வேண்டும்… சுஷ்மா இப்பொழுது குகனின் கையை இறுகப் பற்றிக்கொண்டாள். குகனுக்கோ  அவனது மற்றொரு கையும்  வெறுமன இருப்பதில் விருப்பம் இல்லை போல, தீனாவின் கையைப் பிடித்துக் கொண்டான். மூவரும் அச்சத்தில் உறைந்திருந்ததைக் காட்டிக் கொடுத்தது அவர்களின் உள்ளங்கைகளில் ஏற்பட்ட வியர்வை கசகசப்பு. இப்பொழுது தான்  சுஷ்மாவிற்கு தீனாவின் மேல் நம்பிக்கை வந்திருக்கிறது என்பதை உணர்த்துவதாய் இருந்தது. கொஞ்ச தூர நடைக்குப் பின் சுஷ்மாவின் அந்த வாய் திறப்பு.

“தீனா அங்க பாரு…செல்வி..” என்று சுஷ்மா  திடுக்கிட மூவரும் சடசடவென காய்ந்த சருகுகளை அமிழ்த்தி மிதித்து ஓட்டம் பிடித்தனர். இவர்கள் ஓடியதைக் கண்டு சில பறவைகளும் பதிலுக்கு அங்கலாய்த்துக்கொண்டன . தீனாவிற்குக் கொஞ்சம் நாடி பார்க்கத் தெரியும். கூடவே கொஞ்சம் வர்மகலையும், சித்த மருத்துவமும் . ஆனால் அதை அவன் வெளியில் காட்டிக்கொள்வது கிடையாது. ஏனென்றால் இந்த வயதிலேயே இப்படி இருப்பவர்களுக்கு பழம், அரைச்சாமியார் என்ற பட்டங்கள் இலவசமாய் வழங்கப்படும் என்பதால் தான். இங்கு தான் கேலி செய்ய யாருமில்லையே என்பதாலோ இல்லை செல்வியின் மீதுள்ள அக்கறையாலோ மெல்ல செல்வியின் நாடியைப் பிடித்துக் கண்களை மூடினான்.

“ஆயிசு கெட்டி இந்தக்காவுக்கு , நிச்சயம் பொழைச்சுப்பாங்க “.. என்றவனாக வந்த வழியில் சர சரவென்று ஓட்டம் பிடித்தான் .கைகளைக் கிண்ணமக்கி அங்கே தேங்கியிருந்த மழைநீரை எடுத்து வந்து செல்வியின் முகத்தில் தெளித்தான்.

“தீனா ..இந்த தண்ணீரை யூஸ் பண்ணக்கூடாது.. எத்தனை நாளோ கிடந்துச்சோ.. அதுல நெறையா பாக்ட்டீரியா, நோய் பரப்புற கிருமிங்க இருக்கும் அதைப் போயா?!”

“மினரல் வாட்டரா கெடைக்கும் இந்தக் காட்டுக்குள்ள?” என்று தானும் அங்கிருக்கிறேன் என்பதை மெய்ப்பிக்க ஒரு வார்த்தையை அவிழ்த்துவிட்டான் குகன்.

“சுஷ்மா நீ சொல்றது சரி தான் இருந்தாலும் இவங்க உயிர் நமக்கு முக்கியம் அதுக்கு இது தப்பில்ல. டூ யூ க்னோ? நம்ம கை விரல் நகத்துல ஐரோப்பா கண்டத்தில இருக்க மக்கள் தொகை அளவுக்கு நுண்ணுயிர் இருக்க வாய்ப்பிருக்காம் “…. என்று சொல்லியவாறே தீனா  செல்வியை “செல்விக்கா …செல்விக்கா “ என  மெதுவாகத் தட்டி  எழுப்பினான்.

அதையெல்லாம் பெரிதுபடுத்தியத்தாலோ என்னவோ சுஷ்மா தனது நகங்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். இதையெல்லாம் வேடிக்கை பார்த்தவனாக  குகன் சற்று யோசித்துவிட்டு, ஆசியா அளவிற்கு நுண்ணுயிர்  கால் நகங்களில் இருக்கலாமோ என்பதைப் போல செருப்பைக் கழற்றி விட்டு  கால் நகங்களை பார்த்துக் கொண்டிருந்தான். இந்தச் சிந்தனை யாவற்றையும் தவிடு பொடியாக்கி விட்டது செல்வியின் கண்விழிப்பு.

“என்னை விடுங்க ….நான் உயிரோட இருக்கணும் “ என்று செல்வி சற்றே மயங்கிய தொனியில் பிதற்றினாள் . சுஷ்மாவும் தீனாவுடன் சேர்ந்து உரிமை கொண்டாடத் துவங்கினாள் .

“அக்கா நீங்க நல்லாத்தான் இருக்கீங்க.. பயப்டாதீங்க “என்று அவளை ஆசுவாசப்படுத்தி சீராக்கினாள். ஆனால் என்ன செல்வியின் உடலில் சில சிராய்ப்புக் காயங்கள் இருந்ததை தான் அவளால் பார்க்க முடியவில்லை. கண்களுக்குத் திரை போடுவதற்காக சில கண்ணீர் துளிகள் தேங்கி கீழ் விழாமல் கண்களை அடைத்துக் கொண்டு நின்றது. செல்வி மௌனம் கலைத்தாள்.

“யாரையும் நம்ப முடியல தம்பி.. உன்னோட கூட வந்த பொண்ணு அவங்க ஆளுப்பா “

“தெரியும்க்கா…. நாங்களே அதிர்ச்சியாயிட்டோம்.. கையும் ஓடல காலும் ஓடல. எங்களையும் ஒரு கார்காரன் கடத்திட்டு வந்து இங்கிட்டு விட்டான். இந்த வழில வர போயி தான் உங்களைப் பாத்தோம். அவங்க கிட்ட இருந்து எபபடிக்கா தப்பிச்சீங்க?!!”

“ஒரு கட்டத்துல என்னால அடி வாங்க முடியல… மம்பட்டி கணை மாதிரி ஒரு கட்ட கெடச்சதுப்பா, அத வச்சு அவங்களை அடிச்சு அங்கனையே கட்டிப் போட்டுட்டேன்பா”

இடைமறித்தவளாய் சுஷ்மா தன் கண்களைத் துடைத்தபடியே ,”அக்கா கவலைப்படாதீங்க எல்லாம் சீக்கிரம் சரியாகப் போகுது. உங்க நெலமெல்லாம் உங்கட்ட வரப்போகுது” என்றவாறு செல்வியின் கண்களையும் துடைத்துவிட்டாள்.

நால்வரும் வெளியில் சென்று காட்டின் எல்லைப் பகுதியை அடைந்து செல்லும் வாகனங்களில் ஏதாவது உதவுமென ஆளுக்கொரு கைபோட்டு லிப்ட் கேட்கும் வேளைகளில் இறங்கியிருந்த நேரம் அது. தீனாவின் அலைபேசி வெகு நேரத்திற்குப் பிறகு இப்பொழுது தான் தானிருப்பதை நினைவுப்படுத்தியாக ஏதோவொரு பீப் ஒலியை அவிழ்த்து விட்டிருக்கிறது. அது சார்ஜ் குறைப்பிற்கான முன்னெச்சிரிகை மணி என்பதை உணர்ந்து கொண்ட தீனா அதை எடுத்து பாட்டரி சேவர் மோடில் போட எடுத்தவனுக்கு அதிர்ச்சி. திலீபனிடம் இருந்து இருபத்தைந்து மிஸ்ஸிடு கால், சைலன்ட் மோடில் இருந்ததால் தவற விட்ட அழைப்புகள்.

“சுஷ்மா.. குகன்… இங்க வாங்க திலீபன் கிட்ட இருந்து வந்த கால் இது. என்னன்னு தெரியலை. நான் எடுக்கலைன்னா உங்களுக்கு போட்ருக்கனும்ல. ஏன் என்னாச்சு உங்க போனுக்கு ?”

“தீனா … அது வந்து குகன் போன் காட்டுல குடுத்த பயத்துல என் போனை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டேன்“ என்றவளை பார்த்த குகன் சட்டென்று தனது ஞாபகம் வந்தவனாய்  மொபைலை இப்பொழுது  ஆன் செய்தான். அப்பொழுது வந்த மியுசிக் கூட  மிக அழகாகத்தான் இருந்தது. ஆனால் அதை தீனாவால் இரசிக்க முடியவில்லை.

“என்ன நீங்க இப்படி இருக்கீங்க. பயம் தேவையானதுக்குத் தான் இருக்கணும். நமக்காக அங்க ஒருத்தன் பாடுபடுறாங்கிறதை மறக்காம இருந்தா சரி “ என்ற தீனா குகன் போனை வாங்கி திலீபனுக்கு டயல் செய்தான்.

சுஷ்மா.. செல்வி.. குகன்.. மூவரும் தீனாவின் வாயையே பார்த்துக்கொண்டிருந்ததை பார்த்த தீனா போனை லவுட் ஸ்பீக்கரில் போடத் தீர்மானித்தான். ஒரு வழியாக திலீபன் அதை நான்காவது ரிங்கிலேயே எடுத்துவிட்டான்.

“ஹலோ…”

“டேய்… ஃபூல்.. குகன் ஏன்டா போன் யாரும் எடுக்கலை..”

“சாரி திலீப் நான் தீனா…. இங்க என்னென்னவோ நடந்துருச்சு. வந்து விளக்கமா சொல்றேன்.. நீ எங்கருக்க?”

“தீனா நானும் ரொம்ப  கஷ்டப்பட்டு தான்  தப்பிச்சு வந்தேன்… நம்மள விடமாட்டாங்க போல”

“திலீப் உனக்கென்ன ஆச்சு“ என்று சுஷ்மா குறுக்கிட்டாள்.

“நான் நல்லாருக்கேன். வந்ததும் எல்லாம் சொல்றேன். இப்ப நீங்க கெளம்பி வர்ற வழியைப் பாருங்க. உண்மை ஜெயிக்கணும். அடக்குமுறையை ஒழிக்கணும். அந்த கிராமத்துல இனி வருசத்துக்கு ரெண்டு  நெல்லு விளையணும் ..“ என்று உணர்ச்சிப் பெருக்கெடுத்தவனாக ஆவேசமாக பேசினான்.

“சரி திலீப் நாங்க நாலு பேரும் எங்க வரணும்?”

“தீனா.. நம்ம வக்கீலுக்கு நெருங்குன நண்பர் தான் நீதிபதி சுந்தரம் ஐயா. அவரைப் பத்தி ஊருக்கே தெரியும்… அவரே முன் வந்து நமக்கு உதவி செய்றேன்னு சொன்னாரு. நான் அவரோட அரசு பங்களால தான் இருக்கேன். புதிய வழியும் கிடைச்சுருக்கு. நீங்களும் இங்க வர்றது தான் நல்லது ”

“இப்போ தான் திலீப் மனசுல தெம்பு கெடைச்சுருக்கு …..” என்ற தீனாவின் வார்த்தையுடன் சேர்ந்த உரையாடல் நால்வருக்கும் புதியதோர் மகிழ்ச்சியை அளித்திருக்க, எதிர்த்து வரும் வாகனங்களுக்கு மீண்டும் கையசைக்க ஆரம்பித்தனர்.

-செல்வக்குமார் சங்கரநாரயணன்