காற்றின் நிறம் சிவப்பு ரிலே-ரேஸ் பாகம்-20

51

திலீபன் மயக்கம் சிறிது தெளிந்த நிலையில், சட்டென எழ முடியாமல் கண்களை உலாவ விட்டான். சுஷ்மா தெரிந்தாள். மங்கலாகத் தெரியும் கண்களை கைகளால் தேய்த்து பின் பார்க்க வேண்டும். அது முடியாது தான் தெளிந்து கொண்டிருப்பது அவர்களுக்கு தெரியக்கூடாது என்று நினைத்த திலீபன் அசையாது கண்களை இறுக மூடி திறந்து பார்த்தான். இன்னும்  இரு முறை அப்படிச் செய்த பின் பார்வை தெளிவாகியது. கண்களை மூடி இருப்பது போலவே வைத்துக்கொண்டு அவர்கள் அறியா வண்ணம் பார்வையை சுழல விட்டான். சுஷ்மா தெளிவாக தெரிந்தாள். சற்று நேரத்தில் மயக்க நிலையில் இருந்து விடுபட வாய்ப்பிருப்பது போன்ற தோற்றத்துடன் ஏதோ முனகிக் கொண்டிருந்தாள்.

குகன் இவனது வலது பக்கம் சரிந்திருந்தான். கோபக்காரன் அதிகமாக எதிர்த்திருப்பான் போலிருக்கிறது. நெற்றியில் காயம் தெரிந்தது. போராட்டத்தின் சாயல் பிரதிபலித்தது. எங்கே தீனா? இடப்பக்கம் இருப்பானோ?

சின்ன அசைவு அதை உறுதி செய்தது. கட்டி போடப்பட்டிருந்த செல்வியின் முகம்  இறுகிப் போய் கிடந்தது. இயலாமையின் கோபமும் சேர சிலையாய் நின்றாள்.

நாம அந்த  பன்னாட்டு நிறுவனத்தில் பார்த்த அயல் நாட்டு பெண்களைப் போலவே இருக்கிறார்களே ஜட்ஜ் பக்கத்தில்  இருப்பவர்களும்.  ப்பா ….பரந்த தோள் நீண்ட கால் கவரும் உடை என்று, மெதுவாக ஜட்ஜை பார்க்க அவர் அந்த காவலர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

”என்ன திட்டம் போடறீங்க பரதேசி நாய்களா  ஊர் குடிய கெடுக்குறவனுக. அடுத்த ஊர  அழிக்க ஆலோசிக்கிறானுகளா” என மனதிற்குள் நினைத்துக் கொண்டே பார்வையை திருப்ப ஜட்ஜை ஒட்டி இடப்பக்கம் நிற்கின்ற அழகி யாரும் அறியாமல் புன்னகையை எங்கோ சிதற விட்டுக் கொண்டிருந்தாள். இது என்ன? கண்களில் குழப்பங்களை ஃபுல் ஸ்டோரேஜ் செய்து அவள் பார்வை சென்ற திசையை நோக்க இடப்பக்கம் கொஞ்சம் சிரமப்பட்டு திரும்ப வேண்டியதாயிருந்தது. அப்படி திரும்பியவன் கோபத்தின் உச்சிக்கு சென்று விட்டான். அங்கு அடி வாங்கி கிழிந்த உடை நைந்த உடல் என காட்சி கொடுத்த தீனா கண்களில் ஒளி வீச அந்த காரிகையை பார்த்து மிக வசீகரமாய்கு றுஞ்சிரிப்பொன்றை உதிர்த்து கண் அசைத்தான்.

திலீபனுக்கு வந்த கோபத்திற்கு எல்லா பிரச்சினைகளையும் தூக்கி எறிந்து விட்டு இவனை தூக்கி அடிச்சா என்ன? என்று பல்லைக் கடித்துக் கொண்டிருந்தான். தீனா இவனை கவனித்து விட்டு பார்த்து மெல்ல சிரிக்க முயற்சிக்க இவன் கண்களால் கோபத்தை உமிழ்ந்து விருட்டென்று திரும்பி கொண்டான்.

இவனுக்கு ஏன் புத்தி இப்படி போகுது ? ச்சே …. எந்த நேரத்திலுமா! இவனையெல்லாம் வச்சுக்கிட்டு… திலீபன் மனதுக்குள் திட்டிக்கொண்டிருந்தான்.

அவர்களோ இன்னும் ஆலோசனையில் இப்போது ஆளுக்கொரு நாற்காலியில். அந்தப் பெண்கள் மட்டும் நின்று கொண்டு ஒருத்தி மேசையிலும், இன்னொருத்தி இடப்பக்க சுவரிலும் ஒயிலாக சாய்ந்து நின்றுக் கொண்டு அப்போதும் சுவரில் சாய்ந்திருந்த அவளது பார்வை தீனாவின் பக்கம் அடச்சே…. வெறுத்துப் போய் திரும்பி கொண்டான் திலீபன்.

தந்தை நினைவில் வந்து போனார். நாம் ஆரம்பித்து இந்த நிலையில் இருக்கிறதே மனக்குரலோனை கொன்றிருக்க வேண்டாமோ. மாமாவிடம் ஒரு முறை கலந்தாலோசித்து இருக்கலாம். ஏதேதோ எண்ணக் கலவையில் ஆட்பட்டு கவலையில் துவண்டான். பின்னால் கீழ் முதுகுபுறம் ஏதோ உறுத்தியது நகர்ந்து சரிந்தான்.  திரும்பவும் உறுத்தியது இந்த முறை அழுத்தமாக. எரிச்சலுடன் முயற்சி செய்து திரும்ப தீனா காலால் அங்கிருந்த குப்பை குச்சி ஒன்றை எடுத்து இவன் பின்புறம் நெருடிக் கொண்டிருந்தான். எதையோ சொல்ல முயற்சிப்பது தெரிந்தது. ஆனால் இந்த நேரத்தில் இங்கு என்ன  சொல்லப் போறான்?.

ஒரு புருவத்தை மட்டும்  உயர்த்தி கேள்விக்குறியை முகத்தில் தேக்க
தீனா அசையாது கண்களை மட்டும்  அசைத்து அந்த பெண்ணை பார்க்கச் சொல்ல
திலீபன் அந்த பெண்ணை பார்க்க அவள் தனது வலது கையின் மெலிந்து நீண்ட அழகிய விரல்களை தன் உடலில் மறைத்து இவர்கள் மட்டும் அறியும் வண்ணம் கட்டை விரல் உயர்த்தி கண் அசைக்கிறாள்.

ஓ…. புரிந்து வியந்து மகிழ்ந்து திலீபன் உற்சாகமாக… அப்பெண் அமைதியாக இருக்க கண்களால் எச்சரிக்கிறாள்.  தீனாவை தப்பா நினைச்சிட்டமே என்று வருந்தினான். இப்ப விட்டா தீனாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விடுவான். மனதிற்குள் கொடுத்துக் கொண்டான். ஆனால் தீனாவோ எதுவுமே தெரியாத பிள்ளை போல் முகத்தை வைத்துக் கொண்டான்.

திட்டம் என்ன  எப்படி நடத்துவது குழப்பமாக தீனாவை பார்க்க, அவன் செல்வி, சுஷ்மா,  குகன் என்று பார்வையை நகர்த்தினான்.  இதை அழகான விரல்களைக் கொண்ட அந்த தேவதையும் கவனித்தது.  தீனா நகர்த்திய விழிகளை அவளின் மேல் நங்கூரமிட்டான். ஆரம்பம் அவளிடமிருந்துதான்… புரிந்தது. எதற்கும் தயாராக இருக்கிறேன் என்று சமிக்ஞை செய்தான் தீனாவிடம்.  சுஷ்மா, செல்வியை கூட தயார் பண்ணிடலாம்… குகனை நினச்சாதான் பயமா இருக்கு.

அதற்குள் ஏதோ தீர்மானத்திற்கு வந்தவனாக தீனா தயாரானான். அந்த பெண் அவனை நோக்கி தன் கால்களால் சுவரோரமாக இருந்த, கூரிய ஜம்பர் போன்ற அழுத்தமிக்க  இரும்பு பொருளொன்றை தள்ளி விட்டாள்.  தீனா அதை கையில் பிடித்து நிதானித்து எழுந்தான். அந்த அழகி அவன் பிடிப்பதற்கு தோதாக நின்றாள்.

அவளைப் பிடித்து ஒரு காவலன் மேல் தள்ளி விட்டு அனைவரும் சுதாரிப்பதற்குள் ஜட்ஜின் கழுத்தில் அந்த கூரிய ஆயுதம் வைத்து அழுத்தப்பட்டது தீனாவினால்.

திலீபன் கத்தினான், “எல்லாரும் உங்ககிட்ட இருக்கிற லத்தி, துப்பாக்கி எல்லாத்தையும் டேபிள் டிராயரில் போடுங்க.  போட்டுட்டு பூட்டி சாவிய குடுங்க.  கெட்ட  எண்ணம் பிடிச்ச ஜட்ஜை  குத்தறது என்ன, கொலை செய்யவும் தயங்க மாட்டோம் ம்ம் …”

நல்லது செய்யும் எண்ணமும் நண்பர்களின் துணையும் தொடர்ந்த  இடையூறுகளும் சேர்ந்து வலிமை கொடுத்திருந்தது திலீபனுக்கு.

கடகடவென  எல்லாம் நடக்க, அவர்களை ஒரு பக்கமாக நிறுத்தி விட்டு  சுஷ்மா, செல்வியை உலுக்கி குகனை எழுப்பி விடச்செய்தான். மேசையில் இருந்த  அவர்களின் ஜீப் சாவியை தூக்கி கொண்டான். தீனா உதவிய பெண்ணையும்  ஜட்ஜையும்  அப்படியே இழுத்து போய் வண்டியில் உட்கார வைத்தான். பின்னர் நீ இறங்கு என்று அந்த பெண்ணை  இறக்கி விட்டான். அவள் அதிர்ச்சி ஆனவள் போல் அப்படியே நிற்க
செல்வி,  சுஷ்மா,  குகன், ஜட்ஜ் அனைவரும் வண்டியில் ஏறி அமர்ந்து விட்டனர், இல்லை அமர வைக்கப்பட்டனர். திலீபன் ஸ்டியரிங் பிடித்தான் தீனா கடைசியில் வண்டியில் ஏறிக்கொண்டு அப்படியே நிற்கும் அப்பெண்ணை பார்த்துக் கொண்டேயிருந்தான். வண்டி வேகமெடுத்தது. இன்னும் ஐந்து கிலோமீட்டர் தானே என்னும் ஆவலுடன்.

நிலைத்தடுமாறி விழுந்த காவலரும் மற்ற காவலர்களும்  அந்த இரண்டு பெண்களும் சகஜமாகி பதட்டமாக…. தலைமை போல் இருந்த காவலர் யாருக்கோ அவசரமாக அலைபேசினார்.

அந்த பெண் இன்னொரு பெண்ணிடம் காதில் ஏதோ கிசுகிசுக்கிறாள். காதில் செய்தி வாங்கிய பெண் அந்த தலைமையிடம், ”வேறொரு கமிட்மெண்ட் இருக்கு. நாங்க போகிறோம் என கூறி வெளியே வந்து, இவர்களை கடக்க இருந்த ஒரு வாகனத்தை நிறுத்தி ஏறி உள்ளே உட்கார்ந்த நொடி, அந்த பெண் மெசேஜ் அனுப்புகிறாள் சார்ஜ்  இல்லாமல் நின்று விட்டிருந்த தீனாவின் மொபைலுக்கு.

வண்டியில் ஜட்ஜிடம் நியாயம் கேட்டுக் கொண்டிருந்தான் திலீபன்.  சுஷ்மா செல்வியிடம் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

செல்வி தீர்க்கமாக ”எங்க நிலத்தை மலடாக்காம விட மாட்டேன்” என்று கூறிக் கொண்டிருந்தாள்.

“செல்விக்கா உங்க உறுதி எங்களுக்கு இன்னும் துணிச்சலும், சந்தோஷமும் கொடுக்குது. தேங்க்யூக்கா” என்றாள் சுஷ்மா.

இப்போது ஒரே வழி மீடியா தான். ஜட்ஜ் ஒண்ணும் புரிஞ்சிக்கிற மாறி தெரியல. போற வழியில் ஜட்ஜை  குப்பைத்தொட்டியில் போட்டுட்டு போய் மீடியாக்கள்கிட்ட பேசுவோம் என்றான் குகன். அனைவரும் புன்னகைக்க திலீபன், நண்பன் ஒருவனிடம் தங்க  இடம் கேட்க போவதாகக் கூறினான். மீடியா சந்திப்பு வரை நாம் தங்குவதற்கு பாதுகாப்பான  ஒரு இடம் வேண்டும். அது தான் யோசனையாக இருக்கிறது.

‘இதுக்கு என்ன யோசனை? எங்க வீட்டுக்கு வாங்க அப்பாவும் துணையா இருப்பார்’ என்றாள் சுஷ்மா. அனைவருக்கும் அதுவே சரியான யோசனையாக பட சரி என்று தலையசைத்தனர்.

“ஜட்ஜ் சார், உங்களை எங்க விடனும் சொல்லுங்க? என்றான் குகன்.

”இப்படியே நிறுத்துங்க இறங்கிக்கறேன்” என்று  அமைதியாக கூறினார் ஜட்ஜ்.

”இங்கேயா!? வேண்டாம்…. வேண்டாம் வீடு எங்கனு சொல்லுங்க”

”அடுத்த தெருதாம்பா”

”சரி வீட்டுக்கிட்டயே விட்டுடறோம்.”

”டேய்… தீனா அதோ இருக்க டாக்ஸி ஸ்டாண்டில் ஒரு வண்டி பிடித்து எங்க பின்னாடி வா” என்றான் குகன்.

சரி என தீனா இறங்கி கொண்டான். டாக்ஸி பின் தொடர ஜீப்பையும் ஜட்ஜையும் அவர் வீட்டில் விட்டு விட்டு அனைவரும் இறங்க…… ஜட்ஜ் அனைவரையும் பார்த்து ”ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்கப்பா” என்று உள்ளேச் சென்று விட்டு வந்தார். கையில் சிறிய பேக். வாங்க போகலாம் என்றவரை ஒருவரையொருவர் குழப்பமாய் பார்த்துக் கொள்ள. .

”என்னப்பா பாக்கறீங்க. என்னை விட எவ்வளவோ சின்ன வயசு. உங்களுக்கெல்லாம் இவ்வளவு சமூக பொறுப்போட இருக்கீங்க. ரிஸ்க் எடுக்கறீங்க. என்னை நினச்சா எனக்கே கேவலமா இருக்கு . போனது போகட்டும் இப்ப உங்களுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் நான் செய்யறேன் நீதி வெல்லட்டும். அதுக்கு தேவையான பேப்பர்ஸ்…. ஸ்டாம்ப் எல்லாம் இந்த பேக்ல இருக்கு.”

வேறொரு டாக்ஸியில் வந்த தீனா, ”சார்…. எங்க பிரச்சினை 90% சால்வ்ட் என்று கூவி கட்டிப்பிடித்துக் கொண்டான். திலீபன் சிரித்துக் கொண்டே அவர் பையை வாங்கிக் கொண்டான். மகிழ்ச்சியாக அனைவரும் டாக்ஸியில் ஏறிக் கொண்டனர்.

டாக்ஸி நேராக பிரஸ் கிளப் நோக்கி ஓட்டச் சொன்னார்.  சிலருடன் அலைபேசினார். ”மீடியாக்கள் மொத்தமும் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடும். பிரதமர் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகிறார். அவர் கவனத்தை ஈர்க்க, மீடியா முழுவதும் இந்த செய்தியை கொண்டு செல்வது என் பொறுப்பு. இந்த வழக்கு சம்பந்தமாக முக்கியமான முந்தைய தீர்ப்புகள், எந்த சட்டப்பிரிவை முன்வைத்து பேச வேண்டுமென நான் உங்களுக்கு சொல்லி தருகிறேன். அப்புறம் கோர்ட் தானா வந்து இந்த கேஸ் எடுக்கும்.” என்றார் ஜட்ஜ். போராட்டம் வெற்றி பெறும் தருவாயை உணர்ந்து நெகிழ்ச்சியில் கண்கலங்கினாள் செல்வி.

மகிழ்வுடன் ஒருவரையருவர் பார்க்க, திலீபன் கண்களில் செல்வியின் கை பிடித்திருந்த இந்த மாத வளர்பிறை இதழ் காற்றில் படபடப்பது, இவர்கள் மகிழ்வில் அதுவும் கலந்து கொண்டது போல் தெரிகிறது.

வண்டி ஆரவார பேச்சுக்களுடன் குதூகலமாக  கிளம்பியது.

அகராதி