காற்றின் நிறம் சிவப்பு – ரிலே ரேஸ் பாகம்-21

263

வண்டி ப்ரஸ் க்ளப்பில் நின்றது. வாசலில் நின்ற இரு காவலர்கள் ஒருவரையொருவர் பார்த்தப்படி நின்றிருந்தனர். என்னென்ன கேள்விகள் கேக்கலாம் என்ற சலசலப்பு மீடியா நண்பர்களிடம் இருந்தது.

செல்வி முன் செல்ல திலீபன், தீனா, சுஷ்மா, குணா என வரிசைக்கட்டி நடந்தனர்.

‘வளர்பிறை’ நிருபர் கண்கள் கலங்க மெல்லிய சிரிப்பை உதிர்த்து வரவேற்றார்.

பிசு பிசுப்போடிய தலைமயிர், எண்ணெய் தோய்ந்த முகம் உடலில் அங்கங்கே சிராய்ப்பு, இரத்தக்கட்டு என செல்வி பாதி சிதைக்கப்பட்டவளாய் அமர்ந்தாள்.

உங்க நாலு பேரோட போராட்டமும், முனைப்பும் மாபெரும் நிறுவனத்தின் பணியை முடக்கும் என நம்புறீங்களானு? ஒரு நிருபர் முந்திரிக்கொட்டையாய் கேள்வியை வீச…

கண்ணாடி அணிந்திருந்த மூத்த பத்திரிக்கையாளர்…. அடச்சீ…நீயெல்லாம் மனுசனாய்யா நீங்க போராட வேணாம். போராடுறவங்கள காயப்படுத்தாம இருங்க. அவங்க நாலு பேரு மட்டும் சோறு திங்கல. நாம எல்லாருந்தான். உனக்கும், உன் பிள்ளைக்கும், உன் பேரனுக்குன்னு எதிர்வரும் சந்ததிக்கான போராட்டம் இது.

செதஞ்சி போயி வந்திருக்கவங்கள கேள்வியால செதைக்காம இந்த பேட்டி மூலமா நல்ல முடிவ எதிர்பாக்குற மாதிரி கேளுங்க.

சாரி…. சார்….

வணக்கம் எம்பேரு செல்வி என்ன ஊரு என்ன பிரச்சினைனு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்.

நிருபர்: உடம்பெல்லாம் காயமா இருக்கே என்னாச்சு…

தீனா: பரிசு…..நெலத்த காப்பாத்த,விவசாயிய காப்பாத்த நாங்க போராடுனதுக்கு கெடச்ச பரிசு

செல்வி: அந்த காட்டுக்குள்ள என்ன அடிக்கும் போது என் வயசான மாமனார் நினைவுக்கு வரல, பள்ளி செல்லும் என் திரு ஞாபகத்துக்கு வரல, இறந்துபோன என் கணவர் நினைவுக்கு வரல… எப்படியாவது தப்பிக்கனும் நான் நேரடியாய் பாதிக்கப்பட்டதை இந்த நாடு பாதிக்கப்படப்போவதை பத்திரிக்கைக்கு சொல்லனும்.இதனால கடுகளவு நியாயம் கெடைச்சாலும் சந்தோசம் தான்.

நிசப்தங்கள் சூழ்ந்த அவ்வறையில் கண்ணீர் துளியொன்று விழும் சப்தம்… சுஷ்மா கண்களை துடைத்துக் கொண்டாள்.

”ஏழு வயது சிறுவன் என் மகன் கொய்யா கன்று வைக்க ஆசைப்பட்டான். ‘கெயில்’ குழாய்களுக்கிடையில் நசுங்கிப்போனது கொய்யா கன்றும், அவன் பழம் தின்னும் ஆசையும்… ஒரு ஏழு வயது சிறுவனின் ஆசையைக்கூட நிறைவேற்றிக் கொள்ள அதுவும் அவன் தாய் நிலத்தில் உரிமையில்லையென்றால் வெள்ளக்காரங்க மேலுன்னு நெனைக்கிற பொது புத்தி வரத்தான் செய்யுது.”

நிருபர்: என்ன மேடம் ஆ…வூன்னா வெள்ளக்காரன் வெள்ளக்காரன்னுக்கிட்டு இன்னக்கி சூழல்ல நல்ல வருமானம் தர்ற இரயில்வே திட்டத்த நிறைவேத்த எவ்ளோ நிலத்த கையகப்படுத்தியிருப்பாங்க….

செல்வி: மனப்பாடம் பண்ணி கேள்வி கேக்க மட்டுந்தான் கத்துருக்கீங்க. அதுக்கான பதில படிக்கல நீங்க… நாங்க வாழுறவுங்க. அப்போதைய சூழல்ல நெலங்கள் அதிகம். மக்கள் தொகை குறைவு. இன்னக்கி சூழல்ல, ஆக்கிரமிப்பு அதிகம். மக்கள் தொகை அதிகம். உணவுக்கான தேவையும் அதிகம்.அப்படியே அவங்க நெலத்த கையகபடுத்தியிருந்தாலும் வெவசாயம் பாதிக்கல…. விவசாயி சாகல… பின்விளைவு ஏதுமில்ல… இரயில் விபத்து நடந்தா… சம்பவ இடத்துக்கான சொந்தக்காரரு குற்றவாளி இல்ல….

கேட்ட நிருபரின் மூஞ்சியில் ஈயாடல….

நிருபர்: உங்க கணவர்……?

இடைமறித்த செல்வி கண்கள் கலங்க பேசத் தொடங்கினாள்.

”கொன்னுட்டோம். நாம எல்லாருந்தான் கொன்னுட்டோம். இப்படியான திட்டத்த முளையிலேயே கிள்ளாம இப்போ அவதிப்படுற எங்க கிராம மக்கள். நமக்கான சோத்ததான அந்த நிலத்துல தயாரிக்கிறாங்க இப்படியே ஒவ்வொரு ஊர் ஊரா கொழா பதிச்சி அழிச்சா நாம எதை திங்கிறதுனு யோசிக்காம அனுமதி தந்த ஆட்சியாளர்கள்… நடிகைக்கு நகம் வெட்டும்போது ஏற்பட்ட காயத்தை செய்தியாய் போடும் நீங்கள்… என் கணவர் செத்து எங்க ஊருக்கே ஊரடங்கு உத்தரவு வந்தும்… அடங்கியே இருந்த நீங்கன்னு எல்லாருந்தான் கொன்னோம்.”

கதறி அழுத செல்வி வாயில் எச்சியொழுக…

”ஊருல இவன் மட்டுந்தான் விவசாயியா?இவனுக்கு மட்டுந்தான் நெலம் புலமிருக்கா?அறிவாத்தான் இல்ல… ஒடல் தெடமாச்சும் இருந்திருந்தா சேந்து நின்னு போராடலாமுன்னு நெனச்சேன். செத்துட்டான்னு சேதி வந்ததும் என் அங்கம் பதறிடுச்சி…”

நிருபர்: இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு மூலமா அரசுக்கு என்ன கோரிக்கை வைக்கப் போறீங்க?

செல்வி: ”சோறு திங்கிற எல்லாருக்கும் சொரணை வேணும்ங்குறேன்.”

”’கெயில்’ ஒவ்வொரு இந்திய தனி மனிதனுக்குமான ஆயுள் ‘ஜெயில்’”.

”இன்னக்கி வாழுறதுக்கான ஆகாரத்துக்காக போரடுறோம்.”

”நாளைக்கு சாகப்போகும் மக்களுக்கு பெரிய சவப்பெட்டிதான் கெயில்.”

பேட்டி நேரலையில் ஓடிக்கொண்டிருக்க…

வெளியில் மக்கள் திரள……

ஸ்ரீரங்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஆளுங்கட்சியின் வாக்குறுதி: ‘கெயில்’ குழாய் பதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென முதல்வர் அறிவிக்கிறார்.

திருவாரூரில் எதிர்க்கட்சியின் வாக்குறுதி: அது மத்திய அரசு எடுக்க வேண்டிய முடிவு. நாங்கள் தான் மத்திய அரசோடு கூட்டணியில் இருக்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திட்டத்தை நிறுத்துவோம்.

பேட்டி முடிந்து….

தேர்தலும் முடிந்தது….

திரு இயல்பாக பள்ளி சென்றான்…
சுந்தரம் சாய்வு நாற்காலியில் சட்டமன்ற கூட்டத் தொடரை பார்த்தவாறு அமர்ந்திருந்தார்…
திலீபன் ‘வளர்பிறை’ இதழுக்கு ஆசிரியராக பொறுப்பேற்றிருந்தான்…
தீனா ‘கெயில் எதிர்ப்பு கூட்டமைப்பு’ ஒன்றை நிறுவி களத்தில் இருந்தான்…
குணா…செல்வியின் ஊரிலேயே தங்க திட்டமிட்டிருந்தான்…
சுஷ்மா மேலதிகாரியிடம் பர்மிசன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

திரு பள்ளி முடிந்து கையில் ஒரு மரக்கன்றோடு வந்தான்.

செல்வி தோட்டத்தை பார்த்தாள்…

இரவோடு இரவாக வந்திறங்கிய புதிய கெயில் குழாய்களை வக்கற்றவளாய் பார்த்து நின்றாள்.

“நீ காணும் விரும்பும் மாற்றமாக நீயே இரு”. -காந்தி

-வினையன்