தரிசனத்தின் வெயில்-பகுதி 8

123

செல்வி கிராமத்தில் இருந்தாலும் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்திருந்தாள். பிறருக்கு உதவும் குணம் கொண்டவள். மகளிர் சுய உதவிக்குழு தலைவியாகவும் செயல்ப்பட்டு வருகிறாள். முதியோர் பென்ஷன், விதவைகள் பென்ஷன், திருமண உதவித்தொகை என்று மக்களுக்கு அரசாங்கம் மூலம் கிடைக்கும், அத்தனை சலுகைகளுக்கு இவளிடமே கிராமத்து மக்கள் உதவி கேட்பார்கள். செல்வியும் முகம் கோணாது செய்துக் கொடுப்பாள். மக்களுக்கு செல்வி மேல் மதிப்பும் மரியாதையும் எப்போதும் உண்டு.

வெங்கடேசன் சொந்த மாமன் மகன் தான் செல்விக்கு. விரும்பியே பெரியவர்கள் ஆசிர்வாதத்தோடு திருமணமும் நடந்தது. வெங்கடேசன் கடின உழைப்பாளி அவனுக்கு தெரிந்தது எல்லாம் விவசாயம், குடும்பம் மட்டுமே. நிலத்தில் வரும் வருமானம் போதுமானதாக இருந்தது. தேவைகள் எதுவும் பெரியாதாக இல்லாத போது நிறைவோடு கூடிய அமைதியான, எளிமையான வாழ்வில் இடியாய் வந்திறங்கியது இந்த கெயில் நிறுவனத்தின் குழாய் புதைக்கும் திட்டம்.

விவசாயம் மட்டுமே வாழ்வாதாரமாக கொண்ட அவர்கள் கிராமத்தில் இத்திட்டம் பெரும் சூறாவளியை கொடுக்க மொத்த கிராமமும் ஆடித்தான் போனது. எங்கெங்கோ சென்று யார் யாரிடமோ மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லாமல் போனதால் மக்கள் சற்றுத் தளர்ந்து செய்வதறியாது தடுமாற, குழாய்கள் வந்து இறங்கின.

இனி என்ன செய்ய போகிறோம்? என்று இரவெல்லாம் புலம்பி கொண்டிருந்த வெங்கடேசனை ஏதேதோ சொல்லி சமாதானப்படுத்தி உறங்க வைத்தாள் செல்வி. விடியற்காலையில் எழுந்த செல்வி வழக்கம் போல வேலைகளை செய்துகொண்டே நேற்றிரவு வெங்கடேசன் பேசியாதை யோசித்துகொண்டிருந்த செல்வியை வசந்தி அக்கா தான் கூப்பிட்டாள்.

“அடி செல்வி…” என்ற கூக்குரல் அடி வயிற்றை பிசைய…
“அய்யோ… அய்யோ… உ புருசன் மருந்த குடிச்சிட்டான்டீ டவுன்னு ஆஸிப்பித்திரிக்கி கொண்டுபோறாங்கடீ …” என்று சொல்ல ஒரு நிமிடம் காலுக்கு கீழ் பூமி நழுவுவதை உணர்த்தாள் செல்வி. மயங்கி மண்ணில் சரிகிறாள். கண் விழித்த போது காதல் கணவனின் இறப்பு செய்தி வந்து சேர்க்கிறது.

” யம்மாடி செல்வி வெங்குட்டு போய்ட்டானே!… நம்ம எல்லாத்தையும் விட்டு போய்ட்டானா! இப்பதா சம்முகம் போன் பண்ணினா போற வழியிலையே உசுரு போயிருச்சாம். ஆசுப்பதிரிக்கி கொண்டு போனா, ஆரு கூறா போட்டுட்டுவாங்கனு வூட்டுக்கு கொண்டு வந்துகிட்டு இருக்காங்க தாயி…” என்று அழுது பக்கத்துக்கு வீட்டு கிருஷ்ணன் பெரியவர் சொல்ல… சுவற்றில் சாய்ந்து விட்டதை வெறித்து பார்த்துகொண்டு இருக்கிறாள் செல்வி. தாங்கமுடியாத துக்கம் சில நேரங்களில் பாறையாய் இருக்க செய்கிறது.

சிறிது நேரத்தில் வெங்கடேசன் உடலை கூடத்தில் கொண்டு வந்து கிடைத்துகிறார்கள். ஊரே ஓலமிட உறைந்தே இருக்கிறாள் செல்வி. மகனை இழந்த திரு அழ கூட திராணியின்றி அமர்திருக்க. வெங்கடேசன் தாய், ஒன்றை மகனின் மரண செய்தி கேட்டதும் மயங்கியவளுக்கு இன்னும் மயக்கம் தெளியாமல் ஒரு ஓரமாய் கிடக்க விசிறி விட்டுகொண்டிருந்தனர் உறவினர்கள்.

சிறிது நேரத்தில் வார்டு மெம்பர், கவுன்சிலர், MLA ன்னு ஒரு கூட்டமே வந்து வெங்கடேசன் மாலையை போட்டு விட்டு, திருவிடம் ஆறுதல் கூறிவிட்டு போகிறார்கள். போகும் போது இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்களை விட்டு செல்கிறார்கள். அதில் ஒரு போலீஸ்காரை அழைத்து MLA ரகசியமாக,
” பார்த்துயா எலக்சன் டைம் எதுவும் பிரச்னையாகிட போகுது…” சொல்ல
“அட நீங்க போங்க தலைவரே நாங்க பார்த்துக்குறோம். அதான் கம்ளைன்டே வரமா நைசா பேசி கொண்டு வந்துட்டோமே. அப்பறம் ஏ பயப்படுறீங்க…”
” என்னமோயா பாத்துக்கோ.. சிக்கிரம் சாவ எடுக்குறது நல்லது. எவனாச்சு நோண்டி விட்டானா பிரச்சினா. பார்த்துக்கோ”
” நாங்க பாத்துகுறோம் தலைவரே…”
“சரி சாவு எடுத்ததும் என்ன வந்து பாரு ” ன்னு சொல்லிட்டு கறைவேட்டிகள் கார் ஏற. பச்சை சிரிப்போடு பல்லை காட்டியது காவல்துறை.

சடங்குகள் தொடங்கின. சங்கு சத்தத்தோடு பச்சை மட்டையில் பாடை ஒரு புறம் பின்னிகொண்டிருக்க. ஒரு மூதாட்டி செல்விக்கு மஞ்சள் பூசி நெற்றி நிறைய குங்குமம் வைக்க கூடியிருந்த பெண்கள் எல்லாம் கூக்குரல் கொண்டு அழ. பூவை தலையில் வைக்கும் போத கிழவி ” அய்யோ எ ராசாத்தி உனக்கா இந்த நெல… கொழாய பொதைக்கிறேன் … கொழாய பொதைக்கிறேன்னு குடும்பத்தை பொதைக்கிறாங்கலெ… கேக்க நாதியத்து கெடக்கொமே. அட தெய்வமே! உனக்கு கண்ணில்லையா…” கத்த கூடி இருந்த கூட்டம் மொத்தமும் பெருங்குரல் கொண்டு அழ பெரியவர் திரு துக்கத்தை அடக்கமுடியாம கதறுகிறார்.

செல்வி மட்டும், இதுவரை வெங்கடேசன் முகத்தை கண்ணிமைக்காமல் கல்லாய் பார்த்துகொண்டிருந்தாள். வசந்தியக்கா செல்வியிடம் ” புள்ள, துக்கத்த அடக்காத புள்ள அழுது தீத்துரு தாயி. கிழவி ஒரு பக்கம், கிழவன் ஒருபக்கம் ஓடிஞ்சு கெடக்குங்துக. அந்த பச்சைபுள்ள முகத்த பாருடி செல்வி. நீ படிச்சபுள்ள நீயே இப்படி இருந்தா யாரால ஆறுதல் சொல்லமுடியும். துக்கத உள்ள வைக்காத கண்ணு அழுதுருடீ கண்ணு…” என்று செல்வி தாடையை புடிச்சி கிட்டு கெஞ்சுகிறாள்.

பக்கத்தில் இருந்த பெண் “செல்வி ரெண்டாவது தெரு கீதா புருசனுக்கு கூட நேத்து பையிப்பு வந்து ஏறக்கியாத பார்த்துட்டு போய் படுத்தவருக்கு மாரடப்புன்னு டவுனு ஆசுப்பதிரிக்கு கொண்டு போயிருக்காக புள்ள. நம்ம ஊருக்கே ஏதோ கேடுகாலம்ன்னு நினைக்கிறேன். இன்னும் எத்தன பேரு தாலியறுக்க கொண்டாந்தாங்கலோ இந்த கொலாயன்னு தெரியால புள்ள” என்று சொல்லிகொண்டே அழ.

வசந்தி “இதுகெல்லாம் விமோசனமே இல்லம போச்சே கடவுளே!!..” சொல்லி செல்வியை கட்டிக்கொண்டு அழ. இதுவரை வாயே திறக்காத செல்வி முதல் முறையாக ” ஏக்கா! எல்லா ஊரு ஒன்னுபட்டு நின்னா இதுக்கு ஒரு விமோசனம் பிறக்கும் அக்கா ” தீர்க்கமாகவும் தெளிவாகவும் பேசிய செல்விய பார்த்த, வசந்தி உட்பட கூடியிருந்த பெண்கள் எல்லோரும் கண்களுக்கும் எல்லைகாளியாக காட்சியாளிதாள் செல்வி. ஒரு நிமிடம் பிரமித்து நின்ற கூடத்தின் சார்பில் வசந்தி ” சரி புள்ள நீ என்ன செஞ்சாலும் உன் கூட இருப்போம். இனி இந்தூர்ல ஒருத்தி தாலியும் அறுக்ககூடாது என்ன செய்யணும் சொல்லுபுள்ள″ என்று கேட்க ஒட்டுமொத்த பெண்களும் அதையே ஆமோதிக்கிறார்கள்.

இறுதிசடங்குகளும் அடுத்தடுத்து நடந்து கொண்டிருக்கிறது. மாட்டு வண்டி பூக்களால் ஜோடிக்கப்படுகிறது. இறுதி வ்யாத்திரைக்கு வெங்கடேசன் உடல் குளிப்பாட்டப்படுகிறது. குழந்தை திரு கொள்ளி வைக்க ஈரத்துணியோடு நிற்கிறான். காவல்துறையினரும் எல்லாம் நல்லபடியாய் போய்கொண்டிருக்கும் நிம்மதியோடு ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். சம்பிரதாயங்கள் முடிய வெங்கடேசன் உடல் பாடை கட்டி அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் ஏற்றப்பட செல்வி சற்றென்று கொள்ளிசட்டி பிடித்திருக்கும் மகனை தூக்கிக்கொண்டு மாட்டுவண்டி ஏறி கிளம்புகிறாள். ஏதோ விபரீதமாய் உணரும் காவல்துறையினர் அருகில் ஓடிவர ஊர் மக்களுக்கு வசந்தி மூலம் ஏற்கனவே ரகசிய தகவல் சொல்லப்பட்டிருந்ததால் காவல் துறையினரை சிறைபிடிக்கின்றனர் ஊர் மக்கள். அவர்களிடம் இருந்த வாக்கிடாக்கி, செல்போன் அனைத்தும் பறிக்கப்படுகிறது.

டவுனில் இருக்கும் கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர் மக்களோடு செல்வி கணவரின் உடலை கொண்டு செல்கிறாள். திடீர் என்று மாட்டு வண்டியில் சவ ஊர்வலம் ஒன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்திருப்பதால் இயல்பாக ஒரு பதட்டம் தொற்றிக்கொண்டு, பரபரப்பான சூழல் உருவாக பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் ஒரு விவசாயி தற்கொலை வெளிச்சத்திற்கு வருகிறது.

-உமையாள் சிவா

இந்தத் தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்