காற்றின் நிறம் சிவப்பு- ரிலே ரேஸ் தொடர் பாகம் – 16

57

திகாலை…. அந்த வாகனம் வேகமாக முன்னேறியது. நெடுஞ்சாலையை அடையும் வரை யாரும் பேசிக் கொள்ளவே இல்லை.  நெடுஞ்சாலையை தொட்டு கொஞ்சம் தூரத்தில் டோல்கேட் ஒன்று வந்தது. டோல்கேட்டை தாண்டியதும் குகன் உள்ளே இருக்கும் விளக்கை போட சொன்னான். பளீச்சென எரிந்த விளக்கு வெளிச்சத்தில் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் வேகமாக பார்த்துக் கொண்டனர்.

பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றான் தீனா. சற்று நேரத்திற்கு எல்லாம் எல்லாரும் தங்களை மற்றவருக்கு அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். எல்லார் பார்வையும் செல்வி மீதே இருந்தது.

“எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டீர்களா?” என்றாள் செல்வி.

“அது எல்லாம் பக்காவா பண்ணியாச்சி. திலீபன் செய்தி அனுப்பி இருக்கான். காலையிலே செய்தியாளர் சந்திப்பை நடத்துவது சரியல்ல என்கிறான்” குகன் சொல்லி முடித்து விட்டு தீனாவை பார்த்தான்.

“காலையிலே செய்தியாளர் சந்திப்பு நடந்தால் தானே விசயம் பரவும்.” என்றாள் செல்வி.

“இல்லை. திலீபனின் முடிவு சரி தான். செய்தி ஆட்சியாளர்களை மதியம் போல தான் எட்டும். அதன் பிறகு காவல்துறையை ஏவி விடுவார்கள். மாலை நம்மை காவல்துறை சுற்றி வளைத்தால் சிக்கலாகி விடும். இரவு நேரத்தில் காவல்துறை கட்டுப்பாட்டில் நாம் சிக்குவது நல்லதல்ல” என்றான் தீனா.

“திட்டத்தை முழுமையாக விளக்குங்கள்” என்றாள் சுஷ்மா.

“செல்வி சில பொய்களை சொல்ல வேண்டும்” என்றான் தீனா.

“என்ன பொய்?” செல்வி கேட்டுவிட்டு தீனாவையும் குகனையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“குழாய் பதிக்கும் நிறுவனத்திற்கு ஒரு கைக்கூலி நிறுவனம் உள்ளது. அது மறைமுகமாக விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுக்கும். உங்கள் பக்கத்து ஊரில் இது தான் நடக்கிறது. அடுத்து உங்கள் ஊரில் இந்த மறைமுக திட்டம் பரவுவதற்கு முன் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது” என சொல்லி நிறுத்தினான் தீனா. எல்லாரிடத்திலும் சோகம் பரவியது. செல்வி கண்ணீரை சிந்திக் கொண்டு இருந்தாள்.

சுஷ்மா ஆறுதலாய் அவளை தேற்றினாள். “நீங்கள் சொல்லுங்கள்” என்றாள் கண்களை துடைத்தப்படி…

“என்னையும் எங்கள் குழுவில் உள்ள சில நண்பர்களையும் அந்த கைக்கூலி நிறுவனம் விலைக்கு வாங்கப் பார்த்தது. அந்த நிறுவனத்திற்கு எதிரான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் இருக்கு. அதை மறைக்கவும், இந்த விவகாரத்தில் தலையிடாமல் இருக்கவும் அந்த கைக்கூலி நிறுவனம் செலவழித்த தொகை மட்டும்…..” நிறுத்திவிட்டு சுஷ்மாவை பார்த்தான்.

சுஷ்மா, செல்வி, இன்னும் இரண்டு கிராமத்து பெண்களும், குகனும் தீனாவையே பார்த்துக் கொண்டு இருந்தனர். சுஷ்மாவிடம் கொஞ்சம் கூடுதல் ஆர்வமும் பதட்டமும் இருப்பதை கவனித்தான் தீனா.

” 68 லட்சத்து 45 ஆயிரம்” என்று முடித்தான்.

சுஷ்மாவும் குகனும் வாயை பிளந்தார்கள். செல்வி சிரித்தாள். தீனா முதற்கொண்டு அனைவரையும் செல்வி ஆச்சரியமாய் பார்த்தாள்.

“எத்தனை பேரை விலைக்கு வாங்க முயற்சி பண்ணாங்க?”

“8 பேர்” என தீனா சொல்லி முடிக்கவும் சுஷ்மா குகனையும் குகன் சுஷ்மாவையும் பார்த்து விழித்தனர்.

செல்வி தன் கைப்பையை திறந்து 30 லட்சத்தை எடுத்துக் கொட்டினாள். “எங்க ஊரு பேங்க் சலான் முத்திரை போட்ட லேபிள் இருக்கா..  இதுல 30லட்சம் இருக்கு. இதை பத்திரிகைகாரங்க முன்னால கொட்டி நியாயம் கேட்க தான் இருந்தேன். “

எல்லார் முகத்திலும் அதிர்ச்சி நிரம்பி வழிந்தது. போன் ஒன்று ஒலிக்கவும். சகஜ நிலைக்கு திரும்ப ஆரம்பித்தனர்.

திலீபன்…. என சொல்லிவிட்டு. போனை ஆன் செய்தான் தீனா.

“எல்லாம் திட்டப்படியே நடக்குது. அங்கே எப்படி?” என்றது திலீபனின் குரல்.

ரிலே ரேஸ் தொடரை முந்தைய பகுதிகளை படிக்க
ரிலே ரேஸ் தொடரை முந்தைய பகுதிகளை படிக்க கிளிக் செய்யவும்

“ரொம்ப சுலபமாச்சி. இங்க ஒரு முப்பது லட்சம் சிக்கி இருக்கு. பேங்க் லேபிளோட. இன்னும் கொஞ்சம் நாம பாதுகாப்பை பலப்படுத்தனும் திலீபா”

” மைகாட்… கிட்டத்தட்ட ஒரு கோடி. !!!”

“ஆமாம். இவங்களுக்கு பாதுகாப்பு ரொம்ப முக்கியம். வக்கீல்கிட்ட பேசிட்டேன். நீ அவர் சொல்லுற மாதிரி டாக்குமெண்ட் ரெடி பண்ணிடு”

“சரி” என்றது எதிர் குரல்.

நீண்ட தூரம் பயணம். சாப்பிடுவதற்காக ஒரு ஓட்டலில் வண்டியை நிறுத்தினர்.

தடை உத்தரவை மீறிச் செல்வியும் இன்னும் இரு பெண்களும் காணாமல் போனது கிராமத்தில் புதிய சர்ச்சையை கிளப்பியது. காவல்துறை கிராமத்தில் ஒருத்தரையும் விடவில்லை. விசாரணை என்ற பெயரில் கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.

அடுத்த கட்டப் போராட்டாத்திற்கு கிராம மக்கள் தயாராகி விடக்கூடாதென போலீசார் பயந்தனர். கிராம மக்கள் எந்த சலசலப்பும் இல்லாமல் தங்கள் வேலையை பார்க்க தொடங்கியது போலீஸ்க்கு பெருத்த சந்தேகத்தை எழுப்பியது. இன்னொரு பக்கம் அரசியல் தலைவரும், கலெக்டர் அலுவலகத்தில் இருந்தும் தொடர்ந்து அழைப்புகளும், எங்கு காணாமல் போனார்கள் என்ற தகவலும் வேண்டி ஒரு மணி நேரத்திற்கு 4 போன் விசாரிப்புகள் நடத்திக் கொண்டு இருந்தனர்.

போலீஸார் குழம்பினர். இந்த வழக்கால் தேவையில்லாத தலைவலி. செல்வியும் மற்ற பெண்களும் போன சுவடே இல்லை. ஆனால் இந்த ஊர் மக்களும் எதுவும் நடக்காத மாதிரியே அன்றாட வேலையை பார்க்கின்றனரே?? இதன் பின்னால் எதோ சூழ்ச்சி இருக்கிறதென முடிவுக்கு வந்தனர். கிராம மக்களின் எதிர்வினையை தெரிந்துக் கொள்ள ஒரு பொய் செய்தியை பரப்ப ஆரம்பித்தனர்.

அரசு மருத்துவமனையில் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக புணர்ந்து கொல்லப்பட்ட ஒரு பெண் பிணம் இருப்பதாகவும், அது செல்வியா அல்லது மற்ற இரு பெண்களா என அடையாளம்காட்ட ஊரில் இருந்து ஊர்க்காரர்கள் வரமெண்டுமென சொல்லி அனுப்பினர்.

(தொடரும்)

இந்த தொடரின் முந்தைய பாகங்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

. வருண்