காற்றின் நிறம் சிவப்பு – ரிலே ரேஸ் தொடர் – 17

65
அந்த காலை தன் சிறகுகளை வானத்துக்கே கொடுக்கிறது போல…. பறவைகள் சாட்சி.
நேரத்தின் வாழ்வுதனை எது கொள்ளுமோ… எது கொல்லுமோ… என்று தேடிக் கொண்டிருந்த மனத் திட்டத்தின் மாபெரும் அடுத்த கட்ட ஆட்டத்தை படக்கென தொடங்கி வைத்தார்கள்.. செல்வியுடன் வந்த அந்த இரு கிராமத்துப் பெண்களும்.
‘என்ன நடக்கிறது….’- என்று யூகிப்பதற்குள்.. .செல்வி வண்டியை விட்டு இறங்க இறங்க.. படக்கென ஓட்டுனர் இருக்கைக்கு தாவிய இரண்டு பெண்களில் ஆணைப் போல உடையணிந்திருந்தவள் வண்டியை வேகமாக இயக்க….சுடிதார் அணிந்திருந்த இன்னொருத்தி திறந்து கொண்டிருந்த காரின் கதவுக்குள் தாவி ஏறி படாரென கதவை அடைத்தாள். கிட்டத்தட்ட உணவக வாசலுக்கு சென்று விட்ட ஒரு வித யதார்த்த பாவனையை கொண்டபடியே வண்டியின் சாவியை வண்டியிலேயே விட்டது பற்றி நினைத்துக் கொண்டு தலையில் கை வைத்து திகைத்து நின்றான் தினா. காலையின் அசரீரியாக காகத்தின் கூட்டம் ஒன்று காரணத்தோடு அவர்களை ஒரு வட்டமடித்து போவதாக தோன்றியது வேக வேகமாக.
குகனும் சுஷ்மாவும்… கண்கள் விரிய உடல் கொதிக்க.. வியர்த்து மாறி மாறி பார்த்துக் கொண்டார்கள். இருவருக்குமே…. தினாவின் மீது வண்டி சாவி பற்றிய  சந்தேகம் எழ….”சத்தியமா வேணும்னு விடல… மறந்திட்டேன்பா….” என்றான்… இயலாமையின் கோபத்தோடு.
கை பிசைந்து… கார் போன திசையையே பார்த்துக் கொண்டு சுஷ்மாவும் குகனும் செயல் இழந்ததைப் போல உடல் வற்றி நின்றார்கள்… என்னடா நடக்குது என்பது போல. ஆனாலும் தீனாவின் மூளை பர பரவென யோசிக்க யோசிக்க…கணத்தில் கனம் கூட கூட…..துரத்தும் எண்ணத்தை தூரமாய் புள்ளியாகி மறைந்து விட்டிருந்த கார் கைவிட வைக்க… நிலைமையை புரிந்து கொண்டு…..கண்கள் சுழல… தீனாவின் மூளைக்குள் ஊர்ந்து வந்து நிற்பவனாக ஒரு கால் டேக்சிக்காரன் தன் வண்டியை கொண்டு வந்து அவர்கள் முன் நிறுத்தி காரியத்தைக் கண்களாலே காட்டினான்…
தொடர்புகளற்ற சிந்தனையை சீக்கிரம் சீக்கிரம் சேர்த்துக் கட்டிய….. தீனா கண்ணசைக்க…... குகனும்.. சுஷ்மாவும் வண்டியில் தாவி ஏறினார்கள். முன்னால் டிரைவர் பக்கத்தில் அமர்ந்து கொண்ட… தீனா…” விட்றா…….த…….புடி”- என்று கத்தினான்…
இயந்திர புரவியென… டேக்சி… ….பறக்கத்…துவங்கியது….
விடாது கருப்பு.. என்பதை… வேகம்…..வேகம்…வேகம்…என்றது… இருத்தல்.
வேகத்தின் திறவுகளை வெளி முழுக்க சிதறிக் கொண்டே பறந்த காரின் இறக்கைகளில்.. பதற பதற அமர்ந்திருந்தார்கள்…மூவரும்.
பார்வையாலே…..”என்ன நடந்துட்டு இருக்கு………? ரெண்டு பேர்ல ஒருத்தி உன் பிரெண்டு தான………?” என்பது தொடங்கி கேட்க ஆயிரம் கேள்விகள். ஆயிரமும்….ஒற்றைக் குவியலாய்…திலீபனின் அழைப்பு அலைபேசியின் திரையில்….ஒரு குறியீடாய் மின்னிக் கொண்டிருக்க… எடுக்கலாமா வேண்டாமா என்று பார்த்துக் கொண்டே இருந்தான்… தீனா. அழைப்பு அடங்கியது.  “முதலில் செல்வியை காப்பற்ற வேண்டும்… பிறகு திலீபனிடம் பேசிக் கொள்ளலாம்…”- என்பது அப்போதைய யோசனையாய்  இருந்தது… தீனாவுக்கு.
“நேத்து வரை பிரெண்டா இருந்தவ இன்னைக்கு என்னென்னமோ பண்றா.. விடக் கூடாது…” மனதுக்குள் கோபத்தை வடிகட்டினான் தீனா.
சுஷ்மாவும் குகனும்…பேச்சறியா பார்வையில் குத்திட்டு இருக்க…காருக்குள் நிலவிய சூடும் கோபமும்…..இயலாமையும்…..புரியாமையும்… காசின் வேலையை உணர வைத்தது. அத்தனை பெரிய நிறுவனத்தை எதிர்ப்பது அத்தனை சுலபமான காரியமல்ல. சிங்கத்தின் குகைக்குள் சென்று சிங்கத்தின் சாயத்தை வெளுப்பது….தர்மத்தின் வாழ்வுதனை எது கவ்வினாலும் அதை கவ்வி கொல்வது போல. புதிரின் சூழ்ச்சிக்குள் மீண்டும் மீண்டும் புதிர் அவிழ்ப்பது போல. மூவரின் மௌனமும்… வெற்றியின் நோக்கத்தை ஒரு விதமாக மனதுக்குள் மௌனமாய் புரட்டி யோசித்தன.
போட்ட திட்டங்கள் அத்தனையும்… வேறு வழியில்.. வேறு விதமாக வேறு யாரோ இயக்குவதை உணர முடிந்தது,…யாரை நம்புவது… யாரை சந்தேகிப்பது சற்று குழப்பமாகத்தான் இருந்தது. நெடுஞ்சாலை மெல்ல மெல்ல ஒரு காட்டுக்குள் நுழைவதை காண முடிந்தது…கண்களில் பச்சை….. காட்சிகளில்… மிச்சம். மூவருமே ஒரு சேர டிரைவரை வேகமாய் திரும்பி பார்த்தார்கள்..ஒருவரின் அனிச்சை செயல் போல.
“டிரைவர் எங்க போறோம்..” என்று கத்திய தீனா தாங்கவியலாத மௌனத்தைக் கலைத்தான்.
“இதுல போனா சீக்கிரம் போய்டலாம் சார்..” என்ற டிரைவர் அடுத்த அரை மணி நேரம் முழுக்க காட்டுக்குள்ளேயே கதகளி ஆடினான் அவன் குதிரை… அவன் காடு போல.
சருகளாலும்… சரிவுகளாலும்… பாதை நீண்டு வளைந்து… குறுகி…. நிமிர்ந்து… கண்களைக் கட்டிக் கொண்டிருந்தது. கண்கள் பக்கவாட்டில் பின்னோக்கி போய்க் கொண்டிருக்கும் பழுப்பு நிறக் காடுகள் தாண்டி பச்சை நிறக் காடுகளுக்குள் மிதக்க…
அப்போது தான்…உள்ளுக்குள் தானாகவே அதுவாகவே உணரப் பட்டது.
“அவசரத்துக்கு…வந்த கால் டேக்ஸியில ஏறிட்டோம்..யார் என்ன.. எங்க போறோம்னு ஏதும் சொல்லல. எல்லாம் தெரிஞ்ச மாதிரி அவனும் போறான்…. இல்ல… எங்கையோ தப்பு நடக்குது… இது ஏதோ ஒரு ட்ரேப் மாதிரி தெரியுதே” என்று யோசிக்க யோசிக்க…..சொல்லி வைத்தாற் போல வண்டியை காட்டுக்குள் அள்ளி முடியாத சடை கொண்ட மரத்தின் அடியில் நிறுத்தினான் டிரைவர். மூவரையும் வரிசையாக பார்த்து விட்டு எல்லாரையும் வண்டியை விட்டு இறங்க சொன்னான். ஒன்றும் புரியாமல் பார்த்த மூவருக்கும் டிரைவரின் கையில் இருந்த துப்பாக்கி தெளிவாக புரிய வைத்தது. மூவரின் அலைபேசியையும்..பர்சையும்…வைத்திருந்த இன்ன பிற கோப்புகளையும் பிடுங்கிக் கொண்டு அவர்களை தள்ளி நிற்கச் சொல்லி விட்டு வண்டியை வந்த வழியிலேயே விட்டான்… இன்னும் வேகமாக. எல்லாமே… கணக் கச்சிதமாக யாரோ திருப்பிய காலத்தின் முள் நகருவதைப் போல அரங்கேறியது.
அடுத்த கணம் புள்ளியாகாமலே காணாமல் போனது டேக்சி.
காட்டுக்குள் நின்ற மூவரும் ஒருவரையோடுவர் பதற்றத்துடனும் படபடப்புடனும் பார்த்துக் கொண்டார்கள்.. திறந்து கொண்டே கண்ணாம் மூச்சி விளையாட்டு விளையாடுவதைப் போல இருந்தது. காட்டின் கணம்.. மிகப் பெரிய அச்சத்தை மெல்ல மெல்ல அதன் சப்தங்களுடன் விசிறிக் கொண்டிருந்தது….
car off road
சடுதியில் நிலைமையை உள் வாங்கி தன்னை சரி செய்து கொண்ட தீனா..”ஒன்னும் பயப்பட வேண்டாம். நம்ம திட்டத்தை தெரிஞ்சுகிட்டவங்களோட எதிர்வினை இது. வினை இருக்கும்னா எதிர்வினை இருக்கத்தானே செய்யும்..ஆனா அதுக்கும் எதிர்வினை இருக்கும்ங்கறது தான நம்ம வெற்றி….வாங்க…..” என்று கார் திரும்பி போன திசையில் வெறி பிடித்த கோபமென ஓடத் துவங்கினான்.
சுஷ்மாவும்.. குகனும்… சரி என்பது போல பின் தொடர்ந்தார்கள் திடமாக.
அவர்கள் சற்று முன் நின்ற இடத்தில் ஒரு பாம்பு தலையை தூக்கி அவர்களை பார்த்தது…. காடு அச்சத்தின் பூட்டுகளை பூட்டிக் கொண்டே இருக்கும் அட்சய பாத்திரம். அது மிருகத்தின் சாயலை நாட்டுக்கு தந்து விட்ட பரிணாமம் என்பது போல புசு புசுவென பெருமூச்சு விட்டது.
அதே நேரம்….
அந்த காட்டின் எதிர் திசையில்.. செல்வியை அந்த இரண்டு பெண்களும்… ஒருவரையொருவர் தீர்க்கமாக பார்த்துக் கொண்டே பயங்கரமாக தாக்கத் துவங்கியிருந்தார்கள். காடே அதிர.. அவளின் கதறல்கள்… கூடு விட்டு கூடு பாய்ந்து கொண்டிருந்தது.
காடு இவர்கள் மூவரையும் தொலைத்துக் கொண்டே இருக்க..எந்தப் பக்கம் திரும்பினாலும்… காடாகவே இருந்தது. காட்டுக்குள் மிருக மனித சண்டைகளை காண சகியாமல் பறவைகளும்.. பட்சிகளும்…..மிரண்டு….மரத்துக்கு மரம் தாவிக் கொண்டிருக்க…..அமர்க்களம் போல.. காட்டின் சாயல்… கலையத் துவங்கியிருந்தது.
“பணம் குடுத்தா வாங்கிட்டு செட்டில் ஆகணும்.. அத விட்டு புரட்சி பண்றேன்… பூச்சி பண்றேன்னு சொல்லி ஏன்டி புது புதுசா தலை வலிய உண்டு பண்ற…” என்றபடியே இன்னும் அதிகமாக தாக்கினார்கள்… இரு கில்லாடி பெண்களும்.
பெண் மனம் பெண்ணுக்கு தான் புரியும் என்ற தத்துவத்தோடு புடவையும் கிழிய ரத்தம் சொட்டும் காலை நொண்டிக் கொண்டே மூச்சிரைக்க….காட்டில் தனக்கென ஒரு பாதையை புற்களில் சரித்துக் கொண்டும்.. சருகுகளில் உராய்ந்து கொண்டும்… நடந்தும் ஓடியும்… “வேண்டாம் விட்ருங்க.. இது நியாமில்ல…..இந்த போராட்டம் எனக்கு மட்டுமா…. நம்ம எல்லாருக்கும்தான…. எத்தனை நாளைக்குதான் விலை போயிட்டே இருப்போம்… விவசாய பூமிய பிளாட் போட விட்டோம்…ஆத்து மணல அள்ளிட்டு போக விட்டோம்… இருக்கிற தண்ணிய எல்லாம் பாக்கெட் போட விட்டோம்… இப்போ… இப்டி…..” என மூச்சிரைத்தாள் செல்வி. ஆனால் நிறைய உயிர் போகும் அளவுக்கு பேச வேண்டும் போல தோன்றியது.
“சாகப் போற ஜோதி பிரகாசமா வசனம் பேசுமாம்… பேசு…பேசு” என்று நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு மெல்ல அவளை தொடர்ந்து நடந்தார்கள் எட்டப்பிகள் உதைக்கும் காலின் தீவிரத்தோடு.
முன்னோக்கி  பின்னால் பார்த்தபடியே விழுந்தும் புரண்டும்.. எழுந்தும் நடந்தபடியே…..”நான் சிந்தறது ரத்தமில்லடி.. உண்மை. எவனோ பத்து முதலாளிங்க சொகுசா வாழ நாம சாகனுமா….. உங்கள மாதிரி காட்டிக் கொடுக்கற நரிங்க இருக்கறதுனாலதாண்டி.. இந்த நாடும் காடும் நாசமா போகுது…முடியாது… என்ன கொல்ல உங்கனால முடியாது… உண்மை ஜெயிக்கணும்னா நான் உயிரோடதான் இருக்கணும்..” என்றவள் கையில்… மரத்தால் கூராக்கப்பட்ட முளைக்குச்சி ஒன்று இந்த வசனம் பேச ஆரம்பிக்கும் போதே கிடைத்து விட…. அவள் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று அவர்களே தீர்மானித்து விட்டார்கள்.  கண்கள் சுற்றியது. கை இன்னும் குச்சியை இறுக்கியது.
தீனா… சுஷ்மா… குகன் மூவரும் ஓடிய திசை செல்வி பெண் அய்யனாராய் நிற்கும் திசைக்கு திசை காட்ட…ஓடிக் கொண்டே இருக்கும் காலத்தின் சிறு நிறுத்தலாய்……இரண்டு முனைகளும் ஒரே திசையில் வந்து முடிய போகும் சில நொடி நேரத்தில்…
அங்கே…
தீனாவுக்கு திரும்ப திரும்ப அழைத்துப் பார்த்து “என்ன ஆச்சு” என்று புரியாமல் குழம்பி அலைபேசியைப் பார்த்து நின்றிருந்த திலீபனை சுற்றி வளைத்து வந்து நின்ற காரில் இருந்து திபு திபுவென நான்கு பெண்கள் அரை குறை ஆடையுடன் அவனை துப்பாக்கி முனையில் கடத்தி வண்டியில் ஏற்றினார்கள்…
“யார் நீங்க என்ன வேணும்… அவுங்க தூக்க சொன்னாங்களா…..பொம்பளைங்கள அனுப்பி இருக்கானுங்க பொட்ட பசங்க….” என்று பல்லை கடித்துக் கொண்டு பேசிய போது…… காருக்குள் இருந்து படாரென கால் நீண்ட அழகி ஒருத்தி திலீபனை கழுத்தோடு சேர்த்து காரின் பக்கவாட்டு சரிவில் வைத்து உதைத்தாள். படக்கென கழுத்து சரிந்து மயக்கமானான் திலீபன்.
பெண்கள் நால்வரும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டார்கள். ரஷ்யப் பெண்களைப் போல அவர்கள் நீண்டு வளர்ந்திருந்தார்கள்….ஆனாலும் அழகாகவே.
அரசு மருத்துவனையில் செல்வியா அல்லது மற்ற இரு பெண்களா……யார் செத்தது…….. என்று போலிசாரால் ஜோடிக்கப்பட்ட அடையாள அணிவகுப்புக்கு சென்றிருந்த ஊர் பெரியவர்கள் இருவரும் பிணத்தை பார்த்ததுமே…..சொன்னார்கள்…..
“ஆம் செல்வியே தான்…”
தொடரும்……
– கவிஜி