இங்கு தான் எல்லாமே ரிலே-ரேஸ் பாகம் 9

114

சின்ன அதிர்ச்சியோடு “யாரும் காயம் படக்கூடாதென கத்தியின் கூர்முனையை தன் பக்கமே வைத்திருக்கிறேன்” என்ற அப்பாவின் வரிகளை மீண்டும் படித்தான்.

சற்று நெருடலும் ஏற்பட்டது. கூடவே மனகுரலானவனும் வந்து சென்றான். பிறருக்கு குறிப்பாக குடும்பத்தினருக்கு சிரமம் தரக்கூடாதென நினைத்து அனைத்து் இன்னல்களையும் அவரே தாங்கிகொண்டிருக்கிறார் என்பதும் புரிந்தது. இது ஒருவகையில் அவனிற்கு வாழ்க்கையின் இன்னல்கள் தரும் பகுதியையும், அதனை எதிர்கொள்ளும் திறனையும் குறைத்ததாகவே புரிந்தது.

அவரின் இந்த எண்ணம் நல்லது என்றாலும் கூட சுயமாக நம்மை சிந்திக்கவோ, செயல்படமாலோ இருக்க செய்து விட்டது என்பதை உணர்ந்தான். தன் தங்கையின் அளவிற்கு விவேகமாகவும், செயல்படமாலும் இருந்திருக்கிறோம் என்பதனையும் உணர்ந்தான்.

அடுத்தடுத்து என்ன செய்யவேண்டும் என்பதனை மனதினில் நிறுத்தினான். மனக்குரலானவன் கருத்தினை மட்டும் எடுத்துகொண்டு, இனி மேல் அந்தக் குரல் வரவேகூடாது என்று முடிவெடுத்தான்.

முதலில் தங்கை தேர்வு செய்தவனை விசாரிக்கவேண்டும். நல்லவன் எனும் பட்சத்தில் வாழ்க்கையினை அவர்கள் எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்பதனையும், பொருளாதார பிரச்சினைகள் வரமால் பார்த்துகொள்ள சில அறிவுரைகள் தரவேண்டும் என்று எண்ணினான்.

மிகச்சிறந்த புத்தக அறிவாளியாக அறியப்பட்ட அப்பா, வெளி உலகத்திற்கு தெரியாமலும், அவரது நல்ல கருத்துகள் வெளிவராமலும் போனது மிகுந்த வருத்ததினை அவனுக்கு தந்தது.

அதனால், அலுவலகத்தில் அனைவரிடமும் குறிப்பாக அப்பாவிடமிருந்து விலகி நின்றவர்களிடமும் நெருக்கத்தை உணடாக்கினான். மெல்ல அப்பாவின் கருத்துகளை மீண்டும் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும் என்று எண்ணினான்.

அடுத்ததாக சுஷ்மா. அவளின் எண்ணம் என்னவென்று முழுதாக தெரியாமல், நான் தவறாக அவளிடம் பேசி விடக்கூடாது என்று மனதில் கொண்டான். காதலனாக அவள் என்னை ஏற்காவிட்டாலும், அவளது நட்பினையாவது இழக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தான்.

அப்பாவின் அறிவுக்கு, அனுபவத்திற்கு பாதியளவில் கூட இவன் வரவில்லை என்றாலும் அனைவரிடத்திலும் உரிமையோடு, நல்ல நட்போடும் பழகும் அளவிற்கு அலுவலகத்தில் மாறிவிட்டான்.

அப்பாவின் வெளிவராத பல கட்டுரைகளை படித்தான். அதில் இன்றைய புது அரசியல் கூட்டணி தோன்றிய காலகட்டம் வரைக்கான பல அரசியல் கட்டுரைகள், செய்திகள், வெளிவராத உண்மைகள் இருந்தன.

சில அரசியல் கட்டுரைகள் ஆணையாளரால் பயத்தின் காரணமாக வெளிவரவில்லை என்பதனை அவரின் மறுப்பிலிருந்தே உணர்ந்தான். மக்களின் நல்ல வாழ்க்கைகான அரசியல் மற்றும் நல்லாட்சிக்கான பல அருமையான கருத்துகள் அதில் இருந்தன. இது வரையிலான தனது வாழ்க்கை முறையினை மாற்றி சமூக பயன்பாட்டிற்காக செயல்பட முடிவெடுத்தான்.

இனி தீலிபனின் பார்வையில்….

முன்னதாக ஒரு அரசியல் தொடர்புடைய தனியார் நிறுவனத்தின் அதிகாரியும், அரசின் மேலதிகாரி் ஒருவரும் அப்பாவின் சமூக நலன் கட்டுரையை வரவிடமால் தடுக்கப்பட்டதை அறிந்து கோபம் கொண்டு, என் மேலாளரிடம் வினவினேன்.

அவர் விரக்தியுடன் மெல்ல கூறினார்.
”வேண்டாமப்பா, உங்க அப்பாவிடமும் போராடி தான் அந்த கட்டுரை வரவிடமால் தடுத்தேன். இப்ப நீயுமா ?”

”இது சரியா ? அந்த நிறுவனத்திற்காக இந்த ……………. பகுதியில் இருக்கும் கொஞ்ச விளைநிலங்களையும், காட்டின் ஆரம்ப பகுதியினையும் அழிக்கலாமா?”

”நீயே சொல்ற பார். கொஞ்சம்னு. சில இழப்புகள் இருக்கும்தான். சில நேரங்களில், இழப்பின் மதிப்பையும், பலனின் மதிப்பையும் கணக்கிட்டு பார்க்கத் தான் வேண்டும் . அது தவிர, மக்களும் ரொம்ப ஆர்வமாக இருக்கிறாங்களே?”

”இருப்பதே கொஞ்சம் தான். அதனையும் அழித்துவிட்டு ? மக்களுக்கு புரியவில்லை. நாம் தானே அதனை செய்யவேண்டும் ?”

”இது ஒரு மாதிரி கம்யூனிச பேச்சு போல தெரிகிறதே ?”

”இதிலென்ன கம்யூனிசம்? மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்ப்பது தவறா? இல்லை அவர்கள் மட்டும் தான் பேசவேண்டுமா ?”

”உனக்கு புரியாது. பல முனைகளிலிருந்தும் இதற்கு எதிர்ப்பு வந்தது. வேறு வழியில்லை.”

”அதற்காக? காசை மட்டுமே நோக்கமாக கொண்ட மற்ற பத்திரிக்கைக்கும், நமக்கும் என்ன வித்தியாசம்? அப்படிப்பட்ட இந்த தொழில், வருமானம் தேவையா ?”

சட்டென கடந்த 6 மாத பத்திரிக்கையின் வரவு, செலவினை தூக்கி போட்டார்.

”பாரு. 6 மாதங்களாக வரவினை காட்டிலும் செலவே அதிகம். நம் ஊழியர்களின் சம்பளத்திற்கு கூட சொல்லிக் கொள்ள விரும்பாத ஒரு நேர்மையான ஓய்வு அரசு அதிகாரி தான் வேறோரு நிறுவனம் மூலமாக ஏற்பாடு செய்திருக்கிறார். அதுவும் இல்லையென்றால் இந்நேரத்திற்கு நம் பத்திரிக்கைக்கு மூடுவிழா நடத்தியிருப்போம். இதில் எதற்கு புதிதாக பிரச்சினைகளையும் சேர்க்கவேண்டும்? என்று எண்ணித்தான், அதனை வெளியிடவில்லை.”

மேலும், ”நாம் ஒருவராவது சிலவற்றை எதிர்த்துகொண்டிருக்கிறோம். அதுவும் இல்லையென்றால் ?”

”உன்னைக் காட்டிலும் பல முறை யோசித்தே இந்த முடிவிற்கு வந்தோம்.”

பொங்கி தீர்த்துவிட்டார் மேலாளர். ஏதும் பேச தோன்றாதவனாக திரும்பினேன்.

வெளியேறும் முன் அவர் அழைத்தார். ”இன்னொரு உதவி வேண்டுமானால் நான் செய்கிறேன்.”

”நம் பத்திரிக்கையின் நலம் விரும்பியான அந்த அதிகாரியிடம் பேசி பார்க்கிறேன். அவருக்கு ஆர்வம் இருந்து, உன்மேல் நம்பிக்கை இருந்தால் வேறு எதாவது ஒரு வழியில் அந்த நிறுவனத்தை தடை செய்ய முயற்சிக்கலாம். உன் அலைபேசிக்கு எந்த புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தாலும் நீ எடுக்க மறக்காதே. இது குறித்து நீ யாரிடமும் எதுவும் பேசாதே.”

ஏற்றுக் கொண்ட மாதிரி காட்டிக் கொண்டு வெளியே வந்தேன். என்னை சமாளிப்பதற்காக மேலாளர் சொன்ன அந்த அதிகாரி கூப்பிடுவார் என கூறி விட்டதாகவே உணர்ந்தேன்.

எனக்குள் இருக்கும் வேகமும், பதற்றமும் தணிந்ததே தவிர, கோபமும், வெறுப்பும் குறையவில்லை. எப்படியாவது அந்த நிறுவத்தினை வ(ள)ரவிடமால் தடுக்கமுடியுமா? என்று யோசித்தேன். நம்மால் இதனை தடுக்க வாய்ப்பில்லை என்பதும் தெரிகிறது. என்ன செய்ய ?

இயற்கை விளைபொருட்களும், உணவு பொருட்களும் தயாரிக்கிறோம் என்ற பெயரில் ஆரம்பித்திருக்கும் அந்த நிறுவனம் மத்திய, மாநில அரசு அதிகாரிகள், உள்ளூர் கட்சிகாரர்கள், பிரமுகர்கள், யாவரையும் கவர்ந்திருந்தது. நம் பாரம்பரிய உணவு பொருட்கள் என்ற விளம்பரம் விரைவாகவும், பெரிய அளவிலும் முன்னிறுத்தப்படுகிறது. அதற்காக இந்த விளை நிலங்களையா பயன்படுத்துவது ?

இதி்ல் ஏதோ தவறும் இருக்கிறது என்பதினால் தான் கருத்து விவாதத்தினை எதிர் கொள்ளாமல், மறைமுக மிரட்டலை விடுத்திருக்கின்றனர். தீவிரமாக இறங்கினாலும், இது குறித்து வெளிப்படையான எதிரான கருத்துகளை தெரிவிக்கவும் கூடாது என்று முடிவெடுத்தேன்.

மெல்ல அலுவலக ஊழியர்களிடம் கட்டுரை வராமல் தடுத்தவர்களையும், அவர்களின் பின்னனியையும் கண்டறியும் வேளையில் இறங்கினேன்.

சமூக வலைதளங்களில் சுஷ்மாவின்(அவளின் சம்மதத்தில்) பெயரில் அந்த நிறுவனத்தை பற்றி புகழ்ந்து எழுதினேன். அதற்கு எதிரான கருத்துகளை அனுப்பியவர்களை குறித்துகொண்டேன்.

தெளிவாக, சில ஆதாரங்களோடு நிறுவனத்தை பற்றிய கருத்தை பதிந்த சிலரிடம் தனியாக என்னை அடையாளப்படுத்திக் கொண்டு செய்திகளையும், விளக்கங்களையும் பெற்றுக்கொண்டேன்.

ஒன்று புலனானது, அந்த நிறுவனத்தை நான் மட்டும் எதிர்க்கவில்லை, இன்னும் நிறைய என்னை விட அதிபுத்திசாலிகளும், தகவல் கொண்டவர்களும் கோபமுற்றவர்களும் இருக்கின்றார்கள் என்பதனை உணர்ந்தேன்.

எங்களை யார் ஒருங்கிணைப்பது, அனைத்து தகவல்களையும் கொண்டு பெரும் போராட்டத்திற்கு எப்படி தயாராவது என்று சிந்திக்க ஆரம்பித்தேன். நான் மட்டுமல்ல, இந்த மூன்று மாதங்களில் என்னோடு சிலரும் கைகோர்த்தனர். சில ஞாயிறு தினங்களில் தனியாக சந்திக்கவும் செய்தோம்.

பல தகவல்கள் கிடைத்தன. நிறுவனத்தை எதிர்ப்பது போல காட்டிக்கொண்டு, பணம் சம்பாதித்த பத்திரிக்கைகள், நிருபர்கள், அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் என நிறைய தகவல்கள். உள்ளூர் பிரதிநிதியையும், கைத்தடிகளை கொண்டு அந்த நிறுவனம் கையாண்ட விதம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவ்வளவு தில்லு முல்லு வேலைகளை செய்திருக்கிறார்கள் என்றால், கண்டிப்பாக அவர்கள் நல்ல எண்ணமும், செயலும் கொண்டவர்களாக இருக்கமுடியாது என என் புது நண்பன் குகன் கூறினான்.

ஒரு சனி நள்ளிரவு, முகநூலின் ஒரு முகவரியிலிருந்து கிடைத்த தகவல் எங்களது சந்தேகத்தினை தீர்த்தது. ஆன்மீக பெயரில், இயற்கை பொருட்கள் என்ற விளம்பரத்தோடு அந்த நிறுவனம் உருவாக்கும் எதுவும் இயற்கையான விளைபொருட்களை கொண்டு அல்ல எனவும், மற்ற நிறுவனங்கள் போல வேதியியல் பொருட்களை தான் பயன்படுத்துகிறார்கள் எனவும் தெரியவந்தது.

இது தெரிய வந்ததும் எங்களுக்கு இன்னும் வெறுப்பு அதிகமாயிற்று. எதற்கு இப்படி ஒரு விளம்பரம் ? அதிலும் உணவு பொருட்களில்? எப்படி இதனை நிரூபிப்பது ? எந்த வழியில் அவர்களை நெருங்குவது ? மிகுந்த மன குழப்பத்தில் ஆழ்ந்தேன்.

இதற்கிடையே ஒரு அழைப்பு. விரக்தியாக பேசினேன்.

”தம்பி, உன்னை நான் சந்திக்கவேண்டும். எங்கே?, எப்பொழுது? என்று சொல்.”

”நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா ? எதற்காக என்றும் சொல்லமுடியுமா ?”

”ம்ம். உன் புது முயற்சிக்கு சில தகவல்கள் தர விரும்புகிறேன். விரும்பினால் உதவிகளும் செய்கிறேன்.”

”முதலில் நீங்கள் யார் என்று சொன்னால் பரவாயில்லை.” ( எனக்குள் என் அப்பாவையும், அலுவலகத்தினையும் மிரட்டிய கும்பல் ஞாபகத்திற்கு வந்தது )

”உனக்குள் ஒரு பதற்றமும், ஐயமும் வந்திருக்கிறது. அவை வரத்தான் செய்யும். உன் கூட இன்னொருவரையும் அழைத்து வரலாம். ஆனால் உன் புது WhatsApp நண்பன் தீனாவை கூட்டி வராதே.”

மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். ஏன் என்று கேட்க நினைத்து நிறுத்திக் கொண்டேன். ”குகனை கூட்டிவரவா?” என்றும் கேட்டுவிட்டேன்.

”ம்” என்றது மறுமுனையில்.

என் மேல எனக்கு கோபம் வந்தது. சட்டென யோசிக்காமல் முகம் தெரியா மனிதரிடம் நான் ஏன் அனுமதி கேட்கவேண்டும்.? இனி நான் கவனமாக இருக்க வேண்டும்.

இதற்கிடையில் அவர் யாரிடமோ, இந்தம்மா, இதையும் எடுத்து அங்கே வை என்று சொன்னதும் மிக சன்னமாக கேட்டது. அதற்கு ஒரு பெண் குரல் பதிலளித்தும் கேட்டது. ஆனால் புரியவில்லை.

திரும்ப,

”சரி தம்பி. நாளை மாலை மெரினாவிற்கு வரமுடியுமா?” என்றார்.

நான் பிகு பண்ண முயற்சிக்கலாமா? என்று யோசிக்கும் முன்பே, அவரே திரும்ப, ”இல்லை தவறாதே. நாளை நீ மெரினாவிற்கு வந்து என்னை அழை” என்று சொல்லி வைத்துவிட்டார்.

அடச்சே!! என்றானது. திரும்ப கூப்பிடலாமா? என்று நினைத்து வேண்டாம் என்று முடிவு செய்தேன். குகனை அழைத்து, அவனையும் நாளை தயாராக இருக்குமாறும் சொல்லிவிட்டேன்.

மொட்டை மாடிக்கு வந்து நடந்த உரையாடலை திரும்ப அசைப் போட்டேன். யாராக இருக்கும்? முன் நடந்த மாதிரி என்னையும் மிரட்ட வைக்க முயற்சிக்கிறார்களோ ? சட்டென தோன்றியது. இருக்க வாய்ப்பில்லை.இடையே அவர் ஒரு பெண்ணிடம் பேசுவதினை தவிர்த்திருந்தால் சந்தேகப்பட்டிருக்கலாம். இயல்பாகத்தானே பேசினார். நம் மேலாளர் சொன்ன முன்னாள் அதிகாரியாக இருக்கக்கூடும். அந்த பெண் குரல் ஞாபகத்திற்கு வர, அந்த உரையாடல் பதிவினை பலமுறை கேட்டேன். எங்கேயோ கேட்ட குரல் போலத்தானிருந்தது. முடியாமல் விட்டுவிட்டேன்.

அடுத்த நாள் வெகு இயல்பாகவே எழுந்தேன். வழக்கம்போலவே என் செயல்களை ஆரம்பித்தேன். குகனிடமிருந்து அழைப்பு வந்து தான் எனக்கு மாலை சந்திப்பு பற்றிய ஞாபகம் வந்தது. ஆக, நம் மனது அதற்கு ஒன்றும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதை உணர்ந்தேன்.

ஆனால் குகன் சொன்னது தான் என் புலன்களை விரைப்பாக்கியது. அவனும் கூட மறந்தேவிட்டானாம். அவனுக்கும் அழைத்திருக்கிறார். மாலை அவசியம் வந்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

எங்களை தொடர்ந்த அவரது செயல்கள் என்னை சற்று முன்னதாகவே மெரினாவிற்கு சென்று வேவு பார்க்கச் செய்தது. பின் குகனும் வந்து சேர, வித்தியாசமாக யாரவாது தென்படுகிறார்களா என்று பார்த்தோம்.

கால் மணி நேரம் கழித்து தூரத்தில் நடைபயிற்சி கொள்ளும் பல உருவங்களினூடே நான் நெருங்கி பழகிய சுஷ்மாவின் சாயல் கொண்ட பெண்ணும், அவளுடன் அவள் தந்தை வயதில் ஒருவரும் நாங்கள் இருக்கும் பாதையிலேயே வந்து கொண்டிருந்தார்கள்.

சற்று அவர்கள் நெருங்க, நெருங்க, சுஷ்மா தான் என்று புலப்பட்டது. இவர்களாக இருப்பார்களோ? அல்லது வழக்கமாக இங்கே வருவார்களோ? என்று குழம்பினேன்.

குழப்பத்தில் என் இயல்பை தொலைத்து நான் நிற்க, இன்னும் அருகில் வர அவர்கள் மெல்ல சிரிப்பை வெளிப்படுத்தினார்கள். குகனும், நானும் மெல்ல சிரித்தோம்.

சட்டென அவர் அப்பாவிடம் வித்தியாசம் தெரிந்தது. சிரித்துக்கொண்டே, மெல்ல ”உங்களை மட்டும் தானே வரச் சொன்னோம். தீனாவையும் எதற்கு கூட்டிவந்தீர்கள்” என்றார்.

நாங்கள் மூவரும் அதிர்ச்சியினை காட்டியதை கண்ட அடுத்த நொடியில் மெதுவாக சொன்னார், ”வெகு இயல்பாக இருங்கள். அதிர்ச்சியை காட்டாதீர்கள். நாளை நாம் சந்திப்போம். பின்னர் கூப்பிடுகிறேன்” என்றவாறே சுஷ்மாவையும் அழைத்துகொண்டு நடைபயின்றார்.

மெல்ல நாங்கள் திரும்பி நடக்க, எங்களின் பின்புறமிருந்து தீனாவின் குரல்…

”தீலிபன், குகன் , wait பண்ணுங்க. நானும் வருகிறேன்.”..!!

சசிக்குமார் தங்கவேல்

இந்தத் தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்