சாமரம் வீசும் புயலே பாகம்-6

180

“சும்மாவே என்னை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டான்… இப்போ எல்லாம் இப்படி அப்படி அசையறதில்ல… இவன் சர்ஜன் தானா? ஏதாவது பிரச்சனை ஆச்சுன்னா நெஞ்ச கிழிச்சு ஆபரேஷன் பண்ணுறவன் கொஞ்சம் கீழ இருக்க வயத்த கிழிக்க மாட்டானா என்ன? நீ ஒண்ணும் பயப்படாத நீணா…”

“ஒரு சர்ஜனோட வைப் மாதிரியா பேசுற? ஏதோ கசாப்பு கடக்காரன் பொண்டாட்டி மாதிரி பேசிக்கிட்டு… குடு இங்க…” ஹர்ஷா அவள் கையிலிருந்த மொபைலை வாங்கி “நான் பார்த்துக்குறேன் நீணா” என்றான்.

“ஆமாமா… பத்தாததுக்கு என் அம்மா வேற எங்க வீட்டுலயே வந்து தங்க ஆரம்பிச்சு ஒரு மாசம் ஆகுது… சென்னையிலயே இருக்குறதால அப்பாவும் வீக்கென்ட் வந்திடுறாங்க”…

”இவங்க எல்லாரும் சேர்ந்து அத சாப்பிடு இத சாப்பிடுன்னு என்ன கொடுமப்படுத்துறது பத்தாதுன்னு நீ வேற ஏண்டி டெய்லி போன் பண்ணி ஏத்தி விடுற?”

மோனிகா உரக்க கத்தியதை கேட்டதும் சிரிப்புடன் “ஓகே குட் நைட்” என்றுக் கூறி வைத்தாள் நீணா.

அவள் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்த ரோஹித் அவள் அழைப்பை துண்டிப்பதற்காகவே காத்திருந்தது போல் அவள் அருகில் வந்து “யார குத்திப் பேசுற?” என்றுக்கேட்டு அவளைத் தன் பக்கம் திருப்பினான்.

அவனை முறைத்து அடுப்பை அணைத்தவள். ஒரு தட்டை எடுத்து தோசை வைத்து சட்னி ஊற்றி ஒரு சிறிய துண்டைப் பிய்த்து சட்னியில் நனைத்து ரோஹித்தின் வாயில் திணித்து “அது உனக்கேத் தெரியும்” என்றாள்.

“என்னடி ந…”

அவனை பேச விடாமல் அடுத்தடுத்து தோசையை அவன் வாயில் திணித்தவள் அவன் அவற்றை மென்று விழுங்கும் இடைவெளியில் தானும் உண்டு முடித்தாள். பசியின் காரணமாக ஒரு கட்டத்திற்கு மேல் ரோஹித்தும் பேசாமல் அவள் தருவதை அமைதியாக சாப்பிட்டான்.

நீணா தட்டை வைத்து கைக் கழுவி விட்டுத் திரும்பவும் இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து “எப்படி எப்படி… எங்களுக்கு எதுவும் தெரியாது… நீங்க சொல்லிக் குடுக்குறீங்களா?” என்றுக் கேட்டவன் அவள் வலது கையை பற்றி இழுத்தான்.

அவன் மீது வந்து விழுந்தவள். நிமிர்வதற்குக் கூட அவகாசம் கொடுக்காமல் அவள் கன்னத்தை இரு கைகளாலும் பற்றித் தன் முகத்தின் அருகில் கொண்டு வந்து அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டான் ரோஹித்.

மெல்லிசையாய் ஒலித்த இனிய கிட்டார் (guitar) ஓசையில் கண்களை லேசாக திறந்துப் பார்த்தாள் நீணா. ரோஹித்தின் மொபைலில் அலாரம் அடித்துக் கொண்டிருந்தது. கண்களை மூடி அவன் மொபைலை எடுத்து அலாரத்தை நிறுத்திவிட்டு ஏஸியின் குளிருக்கு இதமாக போர்வையை கழுத்து வரை இழுத்து போர்த்தி தூங்க ஆரம்பித்தாள்.

காட்டு கத்தலாய் கத்திய ஆம்புலன்ஸ் சைரன் ஒலியில் இருவரும் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தனர். “ஷப்பா…” நீணா தலையில் கை வைத்து அமர, ரோஹித் அலறிக் கொண்டிருந்த அவள் மொபைலை எடுத்து அலாரத்தை நிறுத்தினான். சலிப்பாக மெத்தையில் இருந்து இறங்கப் போனாள் நீணா.

“படு நீணா… லேட்டா எந்திரிக்கலாம். நைட் லேட்டாதான தூங்குன?”

“இல்ல ரோஹித்… கிளம்பணும்”

அவள் கையைப் பிடித்திழுத்து படுக்க வைத்தவன் “பேசாம படு…” என்றுக் கூறி அவள் மீதே படுத்து உறங்க ஆரம்பித்தான். அவளுக்குமே மிகவும் களைப்பாக இருந்ததால் உடனயே உறங்கிப் போனாள்.

அரை மணி நேரம் கழித்து மீண்டும் நீணாவின் மொபைலில் சைரன் சத்தத்துடன் அலாரம் அடிக்க ஆரம்பித்தது.

“ரோஹித் எந்திரி. இதுக்குதான் சொன்னேன்… பாரு டைம் ஆகிடுச்சு. எந்திரிடா… என்னா வெயிட்டா இருக்கான்? டேய் தடிமாடு…”

அவனைப் புரட்டிக் கீழே தள்ளுவதற்குள் நீனாவிற்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. இவ்வளவிற்கும் ரோஹித் கண்ணைக் கூட திறந்துப் பார்க்கவில்லை.

“தூங்குறத பாரு… நல்லா கும்பக்கர்ணன் மாதிரி…”

அவன் போர்வையை உருவி மடித்து அவன் கைக்கு எட்டாதவண்ணம் டிரெஸ்ஸிங் டேபிள் அருகில் இருக்கும் சிறிய ஸ்டூலில் வைத்துவிட்டு ஏஸியின் குளுமையை அதிகப்படுத்தியப் பிறகே அவள் பல் தேய்க்க சென்றாள்.

குளிர் தாங்க முடியாமல் மெத்தையில் போர்வையைத் துழாவிய ரோஹித் அது கிடைக்கவில்லை என்றதும் எரிச்சலுடன் கண்களைத் திறந்துப் பார்த்தான்.

“போய் குளி போ…” அவன் முகத்தில் துண்டை விட்டெறிந்தவள், குளித்து வாக்கிங் செல்ல தயாராக ட்ராக் சூட்டில் இருந்தாள். இதற்கு மேல் தூங்க முடியாதென்று அவனும் எழுந்து குளியலறைக்குள் சென்றான்.

“ஒண்ணுக்கு ரெண்டு அலாரம் அடிச்சாலும் அசையறதுக் கிடையாது…” தினப்படி அரங்கேறும் நாடகமிது… காலையில் முதலில் ரோஹித்தின் மொபைலில் மெல்லிசை ஒலிக்கும். அது அவன் அலாரம் டோன்.

நல்ல உறக்கத்தில் இருக்கும்போது மெதுவாக ஒலிக்கும் கிட்டார். இசைக்கெல்லாமா எழப் போகிறோம் என்ற எண்ணத்தில் அடுத்த பத்து நிமிடத்தில் நீணாவின் மொபைலில் சைரன் ஒலியை அலாரமாக வைத்திருந்தனர்.

ஒரு சில நாட்களில் மிகவும் சோர்வாக இருக்கும்போது இரண்டாவது அலாரத்தையும் அணைத்துவிட்டு தூங்க நேர்ந்தால், மீண்டும் எழுவதற்காக அரை மணி நேரம் கழித்து அதே சைரன் அலாரத்தை செட் செய்திருந்தனர்.

ஒரு சில நாட்களுக்கு தேவைப்படும் என்று இவர்கள் செய்த இந்த ஏற்பாட்டில் தான் தினம் துயில் எழுவதே…

நீணா மெத்தையை சரி செய்து, ஸ்டூலின் மீது அவள் வைத்த போர்வையை எடுத்து வந்து மெத்தையில் வைத்தாள். ரோஹித் குளித்து முடித்து வந்ததும் இருவருமாக வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

அவர்கள் வில்லாவின் பக்கவாட்டில் அமைந்திருக்கும் சாலை வழியாக சென்று அருகில் இருக்கும் பூங்காவை வட்டமடித்துவிட்டு வருவார்கள். இல்லையேல் அதற்கு எதிர் திசையில் சென்று அருகில் உள்ள குடியிருப்புகளை சுற்றி வருவார்கள்.

முதலாவது நீணாவின் விருப்பம். இரண்டாவது ரோஹித் கண்டறிந்த வழி.

“ரோஹித் நேத்து தான அந்த சைட் போனோம்? இன்னைக்கு பார்க் சுத்தி வருவோம்”

“இல்ல நீணா… பார்க் சுத்தி நிறைய பேரு நடக்குறாங்க. பிரீயாவே இல்ல… வா இன்னைக்கும் இப்படியே போவோம்”

“எனக்காக கொஞ்ச தூரம் வர மாட்டிய ரோஹித்?”

நான்கடி அவளுடன் நடந்தவன் “ஆன்… கொஞ்ச தூரம் நீ சொன்ன மாதிரி வந்துட்டேன். இப்போ வா இந்த சைட் போகலாம்” என்றான்.

“கொஞ்ச தூரம்னா இப்படி இல்ல ரோஹித்… அட்லீஸ்ட் பார்க் கிட்ட வரைக்கும் போகலாம்…”

“எனக்காக கொஞ்ச தூரம் வர மாட்டியா நீணா?” என்று ரோஹித் கேட்டதும் அவனை போலவே செய்தவள் “ம்ம்… நானும் கொஞ்ச தூரம் வந்துட்டேன். இப்போ வா பார்க்குக்கு போகலாம்” என்றாள்.

“சொன்னா கேளு நீணா…”

செக்குமாடு கூட ஒரே இடத்தை சுற்றி சுற்றி வரும். இவர்கள் இருவரும் கடந்த இருபது நிமிடங்களாக வாக்குவாதம் செய்தபடியே அவர்கள் வீட்டின் பக்கவாட்டில் இந்த கோடியிலிருந்து அந்த கோடிக்கும் அந்த கோடியிலிருந்து இந்த கோடிக்கும் நடந்துக் கொண்டிருந்தனர்.

“என்ன ரோஹித்? இன்னைக்கு வீட்டுக்கிட்டயே வாக்கிங்கா?” பின்னாலிருந்துக் கேட்ட பரமேஸ்வரனின் குரலில் இருவரும் திரும்பிப் பார்த்தனர். என்ன பதில் கூறுவதென்று அவர்கள் விழிக்க தானே பேச்சை தொடர்ந்தார் பரமேஸ்வரன்.

“லாங் வாக் போகாம… இப்படி ஷார்ட் டிஸ்டன்ஸ்ல குறுக்கும் நெடுக்கும் நடக்குறதுக்கு என்னமோ…… பேரு பாத்த ஞாபகம்… ரிட்டையர் ஆகி பத்து வருஷம் ஆச்சுல்ல… வர வர மறதி ஜாஸ்தி ஆகிடுச்சு.

நான் அத எழுதி கூட வெச்சேன். அது…. ஹான்… பெண்டுலம் வாக் (pendulum walk). சரிதானே? உடம்புக்கு ரொம்ப நல்லதாமே? நானும் நாளையில் இருந்து ட்ரை பண்ணி பாக்குறேன். வரேன்…”

ரோஹித்தும் நீணாவும் “இது என்ன புது கதை?” என்று மனதில் தோன்றிய சந்தேகத்துடன் அமைதியாக இருக்க அவரே பேசி அவரே முடிவெடுத்து அவர் வழியே சென்றுவிட்டார் பரமேஸ்வரன்.

போகும் அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் “ஹர்ஷா வீட்டுக்கு…” “மோனி வீட்டுக்கு…” என்று ஒரே நேரத்தில் ஆரம்பித்தனர்.

“வா போகலாம்…” என்றுக் கூறி ரோஹித் நடக்க அந்த வழியே தான் பரமேஸ்வரன் சென்றார் என்பதால் “இந்த பக்கம் போகலாம்” என்றாள் நீணா. அவனும் உடனே திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

ஹர்ஷா வீடும் அதே கேட்டட் கம்யூனிட்டியின் உள்ளே தான் இருந்தது. பத்து நிமிட நடையில் வந்தடைய வேண்டிய அவர்கள் வீட்டை… பரமேஸ்வரனிற்கு பயந்து… எங்கே மீண்டும் அவர் கண்ணில் பட்டால் “பெண்டுலம் வாக்” குறித்து ஏதேனும் கேள்விக் கேட்பாரோ என்று அஞ்சி… சுற்றி வளைத்து இருபத்தைந்து நிமிடங்களில்  வந்து சேர்ந்தனர்.

பால் கவரை எடுப்பதற்காக வெளியே வந்த மோனிகாவின் தாய் கல்யாணி வீட்டின் கேட்டை திறந்தவர்களை பார்த்ததும் “வாங்க வாங்க… எங்க ரெண்டு நாளா ஆளையே காணும்?” என்று அவர்களை வரவேற்றார்.

இருவருக்கும் வேர்த்து மூச்சு வாங்கியது. வீட்டின் உள்ளே வந்ததும் “கொஞ்சம் தண்ணி குடுங்க ஆன்ட்டி” என்றுக் கேட்டான் ரோஹித்.

கல்யாணி உள்ளே சென்றதும் தங்கள் நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு ஹர்ஷாவும் மோனிகாவும் வந்தனர்.

“வாடா… இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமே வந்துட்டீங்க போல இருக்கு?”

ஹர்ஷா ரோஹித்துடன் அமர்ந்து பேச “டயர்டா இருக்கா மோனி?” என்றுக் கேட்டு அவளுடன் பேச ஆரம்பித்தாள் நீணா. கல்யாணி வந்து அனைவருக்கும் தண்ணீர் கொடுத்தார்.

“வாக்கிங் போறதும் நல்லது தான்…” கல்யாணி பொதுவாக சொல்ல நீணாவிற்கு புரை ஏறியது. ரோஹித்தை பார்த்தாள். அவன் சிரிப்பை அடக்கி கையில் இருந்த தண்ணீரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“பார்த்து நீணா…” மோனிகா அவள் தலையில் தட்ட “மெதுவா குடி மா…” என்றார் கல்யாணி.

“இல்ல ஆன்ட்டி… இப்போ சரியாகிடுச்சு“ என்ற நீணா பேச்சை மாற்றும் விதமாக “இன்னைக்கு என்ன சமையல்?” என்றுக் கேட்டாள்.

“ஏன்டி அத வேற ஞாபகப்படுத்துற? கொல்லுறாங்க… எங்கேந்து தான் இந்த ரெசிபி எல்லாம் கண்டுப் பிடிப்பாங்களோ?? எங்கம்மா தினம் படுத்துறாங்கன்னா வாரம் ரெண்டு நாள் மட்டும் வந்து உக்காந்துக்கிட்டு எங்கப்பா குடுக்குற இம்சை இருக்கே…..”

“போதும் ரொம்ப தான் அலுத்துக்காத… எதையுமே சாப்பிடுறதில்ல நீணா. ஒவ்வொரு வேலையும் வற்புறுத்தி சாப்பிட வெக்க முடியுமா சொல்லு? நீயெல்லாம் உன்கிட்ட வர பேஷண்ட்ஸ்கிட்ட வக்கனையா பேச மட்டும் தான் லாயக்கு…”

கல்யாணியை முறைத்த மோனிகா “பாரு ஹர்ஷா…” என்றுக் கூறி அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

“விடுங்க அத்த… சாப்பிட டைனிங் டேபிள்ல உக்காருவா இல்ல? அப்போ கவனிச்சுபோம்…”

ஹர்ஷாவும் தனக்கு சப்போர்ட் செய்யவில்லை என்றதும், மோனிகா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்தாள். இனி ஹர்ஷா அவளை கொஞ்சி சமாதானம் செய்து…

தாங்கள் இங்கே இருப்பது சரியில்லை என்றுத் தோன்ற “சரி ஆன்ட்டி நாங்க கிளம்புறோம்…” என்றுக் கூறி எழுந்தாள் நீணா. “ஹாஸ்பிட்டல்ல பார்ப்போம்” ரோஹித்தும் விடைப்பெற்றான்.

இம்முறை எப்போதும் செல்லும் பாதையிலேயே சென்று வீட்டை அடைந்தனர். நீணா குளிக்க செல்ல ரோஹித் அந்த பத்து நிமிடம் மீண்டும் உறங்கலாம் என்றெண்ணி சென்றுப்படுத்தான்.

அவன் எழுந்தபோது வீட்டினுள் கிட்டத்தட்ட ஓடிக் கொண்டிருந்தாள் நீணா. கொட்டாவி விட்டப்படி குளிப்பதற்காக தோளில் துண்டைப் போட்டு மெதுவாக ஹாலை எட்டிப் பார்த்தவனைப் புயலெனக் கடந்து அறைக்குள் நுழைந்தாள்.

அவள் கையைப் பிடித்து நிறுத்தி “எதுக்கு இப்படி ஓடிக்கிட்டு இருக்க?” என்றுக் கேட்டான் ரோஹித்.

“ஏன் கேக்க மாட்ட நீ? காலையில எந்திரிச்சதே லேட்… வாக்கிங்கும் உருப்படியா போகல… வேலையெல்லாம் முடிச்சு கிளம்ப வேண்டாமா?”

அவளை நிதானமாக மேலிருந்து கீழ் வரைப் பார்த்த ரோஹித் “காலையில சீக்கிரம் எழுந்திரிக்க வேண்டியது தானே?” என்றுக் கேட்டான்.

“கேப்படா கேப்ப… நைட் சண்டப் போட்டு முடிக்கவே பல மணி நேரம் ஆச்சு. அதுக்கு அப்பறம் கொஞ்ச ஆரம்பிச்சு… நீ என்னையத் தூங்க விட்டதே பாதி ராத்திரிக்கு மேல… காலையில அலாரம் அடிச்சதும் முழிச்ச என்னை எழுந்திரிக்க விட்டியா? அமுக்கிப் புடிச்சு ‘படு நீணா…… நைட் லேட்டா தான தூங்குன… லேட்டா எழுந்திரி’னு படுத்துன…”

ரோஹித் முதலில் முகத்தை சீரியசாக வைத்து அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான். கடைசியாக நீணா தான் கூறியதை பழித்து சொல்லிக் காட்டியதும் வாய் விட்டு சிரித்துவிட்டான்.

ப்ரத்யுக்‌ஷா ப்ரஜோத்