சாமரம் வீசும் புயலே – பாகம்-7

156

“ஹேய்… பாவமே… நைட் ஒழுங்கா தூங்கலயே… காலையிலயும் எதுக்கு சீக்கிரம் எழுந்திரிக்கணும்னு சொன்னா… ரொம்ப பேசுறடி. நீ எதுவும் சமைக்க வேண்டாம். காலையில பிரட் ஜாம் சாப்பிடலாம். கிளம்பு. இப்படி ஓடிக்கிட்டே இருக்காத” என்றவன் நீணாவை இறுக்கி அணைத்து விடுவித்தான்.

அவ்வாறே சாப்பிட்டுக் கிளம்பியவர்கள் அவரவர் பையை எடுத்துக் கொண்டு அறையிலிருந்து வெளியே வந்தனர்.

ஹாலை அடைந்ததும் ரோஹித்தை ஒருமுறை பார்த்த நீணா கதவருகில் கீ ஸ்டாண்டில் மாட்டியிருந்த கார் சாவியை எடுக்க வேகமாக ஓடினாள்.

“நேத்து என்னை ஏமாத்திட்டு இப்படி தான சாவிய எடுத்து நீ கார் ஓட்டிட்டு வந்த? இன்னைக்கு நான் தான் டிரைவ் பண்ணுவேன்…”

தன் வாயாலேயே தனக்கான குழியை மிக ஆழமாகப் பறித்தாள் நீணா.

அவள் ஓட ஆரம்பித்ததுமே கார் சாவியை எடுப்பதற்காக ஓடுகிறாள் என்பதைப் புரிந்துக் கொண்டவன் புன்னகையுடன் அவளைப் பார்த்துக் கொண்டே நடந்தான்.

‘நேற்று நீ செய்ததற்கு இன்று பதிலுக்கு நான் செய்கிறேன்’ என்று அவள் சொன்னதும் உதட்டில் புன்னகை மறைந்து தாடை இறுக அப்படியே நின்றான்.

சாவியை கையிலெடுத்துத் திரும்பிப் பார்த்தவள் ரோஹித் நின்ற நிலையைப் பார்த்ததும் புருவம் உயர்த்தி என்ன என்றுக் கேட்டாள்.

“நேத்தும் இதே தான் பண்ண… நான் காதுக்கிட்ட வந்து பேசுனதுக்கு பதிலா என்னைப் பிடிச்சு இழுத்து கிஸ் பண்ணுறேன்னு பேச விடாமப் பண்ண… எதையுமே யோசிக்கவே மாட்டியா நீணா?” என்றுக் கேட்டவனின் குரலில் நீணாவிற்கு உள்ளுக்குள் சிலீரென்றது.

ரோஹித் இப்படி அமைதியாக அழுத்தமாகக் கேள்விக் கேட்கும்போதெல்லாம் அவர்களுக்குள் பெரிய வாக்குவாதம் வந்திருக்கிறது. ஒரு முறை சண்டையிட்டு காலையில் வெளியேக் கிளம்பி சென்றவன் மாலை தான் வீடு வந்து சேர்ந்தான்.

இப்போதும் அப்படி பெரிய பிரச்சனை எதுவும் வந்து விடக் கூடாதே என்று பயந்து “இத பத்தி தான் நேத்தே பேசி முடிச்சுட்டோமே ரோஹித்… இப்போ எதுக்குத் திரும்ப ஆரம்பிக்குற?” என்றுக் கேட்டு கதவைத் திறக்க அதில் கை வைத்தாள்.

“பேசல நீணா. இத நம்ம இன்னும் பேசி முடிக்கல”

மெதுவாகத் திரும்பி அவனை ஏறிட்டுப் பார்த்தாள். ரோஹித் நின்ற இடத்தை விட்டு அசையாமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நேத்து நீ தான ரோஹித் இத பத்தி பேசுறத நிறுத்துன? இப்போ எதுக்குத் திரும்ப ஆரம்பிக்குற?” தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நிமிர்ந்து நின்று அவனைக் கேள்விக் கேட்டாள்.

“சரி இப்போ பேசலாம். சொல்லு… எதுக்கு அப்படி செஞ்ச?”

அவளுக்கு எரிச்சலாக இருந்தது. நேற்று இரவு ஆரம்பித்த சண்டை… நேற்றே பேச ஆரம்பித்து… பாதியில் நிறுத்தி… முடிந்து விட்டதாக அவள் நினைத்த ஒன்றை காலை வேளையில் மருத்துவமனைக்கு கிளம்பும் நேரத்தில் மீண்டும் ஆரம்பிக்கிறானே என்றிருந்தது.

“எதுவா இருந்தாலும் ஈவ்னிங் பேசலாம் இப்போ வா…” என்றுக் கூறி கதவைத் திறந்தாள்.

வீட்டின் வெளியே ஒரு காலை வைத்துத் திரும்பிப் பார்த்தபோது ரோஹித் சிலை போல் நின்றிருந்தான்.

ஒரு ஆழ மூச்சை இழுத்து விட்டு “சாரி” என்றுக் கூறி வேகமாக வெளியே வந்தவள் நிற்காமல் காரை பார்க் செய்திருக்கும் இடம் நோக்கி நடந்தாள். பாதி தூரம் சென்ற பிறகு தான் வீட்டின் சாவி தன் கையில் இருப்பதை கவனித்தாள்.

அது ரோஹித்தின் சாவி. அவளுடையது அவள் கைபையில் இருந்தது. அதை தேடி எடுக்கும் பொறுமை இல்லாமல் முந்தைய தினம் அவன் ஹாலில் வைத்திருந்த அவனுடைய சாவியை எடுத்து பூட்ட நினைத்திருந்தாள். இப்போது இரண்டு சாவிகளும் அவள் கையில்…

நடப்பதை நிறுத்தி திரும்பிப் பார்த்தாள். ரோஹித் வீட்டின் வெளியே நின்று இவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஐயோ ஒழுங்கா வீட்டப் பூட்டிட்டு வந்திருக்கலாம்… இப்போ திரும்ப இவன்கிட்டப் போகணுமா?” மனதிற்குள் தன் தவறிற்கு வருந்தியபடியே அவனை நோக்கி மெல்ல நடந்தாள்.

அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் வேகமாக கதவைப் பூட்ட நினைத்தவளின் கைகள் லேசாக நடுங்கி சாவி அதன் துளைக்குள் நுழைய மறுத்தது. பதட்டம் அதிகரிக்க  சாவியைத் திருப்பியவளின் கையிலிருந்து நழுவி அது ரோஹித்தின் காலடியில் விழுந்தது.

“சுத்தம்….. இன்னைக்கு நேரமே சரியில்ல…” தலையில் கை வைத்து நின்றாள் நீணா.

குனிந்து சாவியை கையில் எடுத்தவன் “இப்போ எதுக்கு இவ்வளவு பதட்டம்?” என்றுக் கேட்டு சாவியை கதவின் துவாரத்தில் நுழைத்தான்.

“நீ திட்டுவியோன்னு தான்…” வார்த்தைகள் வாயிலிருந்து வந்த அளவிற்கு சத்தம் வரவில்லை.

ரோஹித் அவளைத் திரும்பிப் பார்த்து “ம்ம்?? நான் திட்டுவேன்னு நீ பயப்படுறியா? நடிக்காதடி…” என்று புன்னகையுடன் கூறி சாவியை தன் பையினுள் வைத்தான்.

அவ்வளவு நேரம் தலைக் குனிந்து நின்றிருந்தவள் வெடுக்கென்று நிமிர்ந்தாள்.

“உன்கிட்ட எத்தன தடவ ரோஹித் சொல்லுறது? நடிக்காதன்னு சொல்லாத. கேக்கவே கேவலமா இருக்கு. என்ன வார்த்தை அது?” என்று உக்கிரமாகக் கேட்டாள்.

அவளை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து நடக்க ஆரம்பித்தவன் “உண்மை தானே? நீ நடிக்குறதானடி?” என்றான்.

“ஏய்…… சொல்லாதன்னு சொல்லுறேன்ல? அப்படி சொல்லாத. எனக்குப் பிடிக்கல”

வார்த்தைகளை மென்றுத் துப்பி அவன் நடையின் வேகத்திற்கு ஈடு கொடுத்து நடையும் ஓட்டமுமாக அவன் பின்னால் சென்றாள்.

“நீ மட்டும் எனக்கு பிடிச்சதயே தான் செய்யிறீயா? நேத்து நீ செஞ்சதுக் கூட தான் எனக்குப் பிடிக்கல…”

நீணாவிற்கு ஐயோ என்றிருந்தது. இதை இவன் விடவே மாட்டானா என்றுக் கத்த வேண்டும் போல் இருந்தது.

பதில் கூற முடியாமல் அமைதியாக நடந்தாள். இந்த இடைவேளையில் அவள் கையில் இருந்த கார் சாவியை அவள் அறியாமல் வாங்கி இருந்தான் ரோஹித்.

அவன் கார் கதவை திறந்தபோதும் சாவி பறிப்போனதை அவள் உணரவில்லை. அவள் அமைதியாக அமர அவனும் எதுவும் கூறாமல் உள்ளே அமர்ந்து சீட் பெல்ட்டை மாட்டினான்.

காரை எடுத்தவன் அவளின் அமைதிப் பிடிக்காமல் அவளை சீண்டி பேச வைத்தான். அவளை வம்பிழுத்து சண்டைப் போட வைத்தான்.

“இப்போவும் நீ அமைதியா இருக்குறதுக்கு என்ன அர்த்தம்?”

“ஒரு அர்த்தமும் இல்ல. நீ ரோட்ட பார்த்து வண்டி ஓட்டு”

“ஹேய்… சும்மா சொல்லாத… என்ன யோசிக்குற சொல்லு…”

“நான் எதுவுமே யோசிக்கல. நீ கொஞ்ச நேரம் அமைதியா இருக்கியா?”

“ஒரு விஷயம் கவனிச்சியா நீணா? இன்னைக்கும் நாந்தான் கார் ஓட்டுறேன்…”

அப்போது தான் அவனை திரும்பி பார்த்தாள் நீணா. எப்போதும் அவளே ஏமாந்து போவதாக தோன்றியது. “இல்லை… ஏமாற்றப்படுகிறோம்” என்று திருத்தி யோசித்தாள்.

“என்ன நெனச்சுட்டு இருக்க உன் மனசுல? இது ஒரு சின்ன விஷயம். எனக்கும் கார் ஓட்ட ஆசையா இருக்கு. இருக்கிறது ஒரு கார்… வாரத்துல ஒரு நாளாவது என்னை டிரைவ் பண்ண விடுறியா?

தினம் எப்படியாவது என் கையிலேருந்து கார் சாவிய வாங்கிடுற… நானும் போனா போகுது போனா போகுதுன்னு பார்த்தா… ஒரு தடவையாவது எனக்கு விட்டுக் குடுக்குறியா?”

சிக்னல் ஒன்றில் கார் நின்றபோது அதை கவனிக்காமல் அவள் அவன் புறம் திரும்பி அமர்ந்து கைகள் இரண்டையும் ஆட்டி ஆட்டி பேசியதை அருகில் இருந்தவர்கள் திரும்பிப் பார்த்தனர்.

மூடியிருந்த ஏஸி காரின் வெளியே சப்தம் கேட்காவிட்டாலும் அவள் பேசிய விதத்தை பலரும் விநோதமாகப் பார்க்கவே முதலில் அவளை முறைத்து காரைக் கிளப்பியவன் “அசிங்கமா இல்ல? தெருவுல போறவங்க எல்லாம் வேடிக்க பார்க்குற அளவுக்கா நடந்துப்ப?” என்றுக் கேட்டு அவளை மேலும் கத்த வைத்தான்.

“நான் எதுவும் பண்ணல… அமைதியா உக்கார்ந்திருந்த என்னை யாரு பேசி கத்த வெச்சா? இப்போ கடைசில என் மானம் தான் போகுது. அதுக்கும் நீ என்னையே சொல்லுவியா?”

“நான் என்னமா பண்ணேன்? அமைதியா இருக்கியே என்ன யோசிக்குறன்னு கேட்டேன்… இது ஒரு குத்தமா?”

ஹாஸ்பிட்டல் வந்திறங்கி காரை பார்க் செய்து அவர்கள் செல்ல வேண்டிய பிரதானக் கட்டிடத்திற்கு வரும் வரை இவர்களின் இந்த சீண்டல்கள் தொடர்ந்துக் கொண்டே இருந்தன.

“எப்பயும் நீ எதுவுமே பண்ணதில்ல… நான் தான் எல்லாமே பண்ணுறேன்… தப்பு எல்லாமே என்னோடது தான்…”

கண்ணாடி கதவில் கை வைத்துத் தள்ளும்போது “எதுக்கு நீணா இப்போ கத்திக்கிட்டே வர?” என்றுக் கத்தினான் ரோஹித்.

கதவின் மறுபக்கம் ஹர்ஷாவை கண்டதும் “ஓகே நீணா… லஞ்ச்ல எனக்கு வெயிட் பண்ணாத. ஒரு சர்ஜரி இருக்குன்னு நேத்தே சொன்னேன்ல… சோ நீ சாப்பிடு. டேக் கேர். பை” என்றான்.

“பை” என்று அவனைப் பார்த்து புன்னகைத்தாள் நீணா. ஹர்ஷா அவளைப் பார்த்துத் தலை அசைத்து விட்டு ரோஹித்துடன் நடக்க ஆரம்பித்தான். அவர்கள் இருவரும் ஏதோ கலந்தாலோசித்துக் கொண்டே நடப்பது தெரிந்தது.

தன் பகுதி நோக்கி நடந்த நீணா “கதவுக்கு அந்த பக்கம் இருந்த வரைக்கும் கத்திட்டு… கதவத் திறந்து ஹர்ஷாவ பார்த்ததும் ‘டேக் கேர் நீ……..ணா……‘ னுப் பொறுப்பா பேசிட்டு போறதப் பாரு…

இதுல நேத்தே சொன்னேன்ல வேற… நேத்து நீ எந்த சர்ஜரி பத்திடா சொன்ன? சண்ட போடவும் சமரசம் ஆகவும் தானே சரியா இருந்துது?” என்று மனதிற்குள் ரோஹித்தை வசைப் பாடிய வண்ணம் நடந்தாள்.

தன்னுடைய கேபின் அருகே வந்தவள், வெளியே ரிசப்ஷனில் ரிஜிஸ்டரை எடுத்து கையெழுத்திட்டு தான் ட்யூட்டி பார்க்க வந்த நேரத்தையும் அதில் குறித்து வைத்தாள்.

கேபினுக்குள் வந்ததும் கையிலிருந்தவற்றை டிராவை திறந்து அதில் வைத்து விட்டு வெள்ளை கோட்டை மாட்டிக் கொண்டு போனை எடுத்து முதல் பேஷண்ட்டை உள்ளே அனுப்புமாறு உத்தரவிட்டாள்.

தனக்கு எப்போதும் உதவியாக அங்கே இருக்கும் நர்ஸ் மேரியிடம் திரும்பி அவளுடன் சில நிமிடம் பொதுவாக பேசினாள். உள்ளே வந்த ஒரு சுட்டி பையனை பார்த்ததும் மற்றவை அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஒரு மருத்துவராய் செயல்படத் துவங்கினாள் நீணா.

கதவை இரு முறை தட்டி விட்டு உள்ளே நுழைந்த மோனிகாவை பார்த்ததும் அவசரமாக மணியைப் பார்த்தாள் நீணா. ஒன்றரை ஆகியிருந்தது.

எப்போதும் நீணாவும் மோனிகாவும் சேர்ந்து தான் சாப்பிடுவார்கள். அதிலும் இப்போது மோனிகா கர்ப்பமாக இருப்பதால் சரியாக ஒரு மணிக்கு அவளுடைய அறைக்கு சென்று அவளை சாப்பிட அழைத்துவிடுவாள் நீணா.

இன்று தன்னால் மோனிகாவும் சாப்பிட நேரமாகிவிட்டதை எண்ணி, மணியை பார்க்காத தன் தவறிற்காக தலையில் அடித்துக் கொண்டு அணிந்திருந்த வெள்ளை கோட்டை கழற்றி சேரின் பின்னால் போட்டு சாப்பாட்டு டப்பாவை எடுத்து இருக்கையை விட்டு எழுந்தாள்.

“மேரி உங்களுக்கும் நேரம் ஆச்சில்ல? நீங்களும் சாப்பிட்டு வந்திடுங்க…” என்று நர்ஸிடம் கூறி கதவை நோக்கி நடந்தாள்.

“சாரி மோனி… இன்னைக்கு டைமே பார்க்கல… ஒரு குட்டிப் பொண்ணு மாத்திரை சாப்பிட படுத்தி எடுத்துட்டாடி… அவள சாப்பிட வெக்குறதுக்குள்ள தலைகீழா நின்னு தண்ணிக் குடிக்க வெச்சுட்டா… ஷ்ஷ்ஷ்… நான், அவ அம்மா, மேரி… மூணுப் பேரும் சேர்ந்து கூட சமாளிக்க முடியல…”

சற்று நேரத்திற்கு முன்னால் அவளுடைய அறையில் நடந்தவைகளை நினைவு கூர்ந்தாள் நீணா.

நிரோஷாவை பரிசோதித்து முடித்ததும் “நிரு பாப்பாக்கு பீவர் இருக்கு. நான் மெடிஸின்ஸ் எழுதி தரேன். இப்போ ஒரே ஒரு டேப்லட் மட்டும் போட்டுக்குவீங்களாம்… என்ன நிரு?” என்றுக் கேட்டு ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுதத் துவங்கினாள் நீணா.

அதுவரை வாயே திறவாமல் அமைதியாக அமர்ந்திருந்த நிரோஷா “ஊச்சி?” என்றுக் கேட்டாள்.

“ஊசி எல்லாம் வேணாம் நிரு… டேப்லட் மட்டும் சாப்பிட்டா போதும்…”

நீணா மேரியிடம் மாத்திரை எடுத்து வர சொன்னாள். அவர் அதை கவரிலிருந்து பிரிக்க நிரோஷாவின் தாய் அவர் கையிலிருந்த பையில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்தார்.

“நானு…” என்றுக் கூறி கையை நீட்டினாள் நிரோஷா.

“அவ கையில குடுங்க மேரி… அவளே போட்டுக்கட்டும்” என்று நீணா கூற மேரியும் மாத்திரையை கொடுத்தார்.

அதை இரண்டு நொடி உற்று பார்த்த நிரோஷா “பெச்ச்ச்சு…” என்றுக் கூறி மாத்திரியை நீணாவின் கையில் கொடுத்தாள்.

சிறிய போட்டு சைஸில் இருந்த மாத்திரியை பார்த்து “இதுவே பெருசா?” என்று நீணா நினைக்க “எப்பயும் டேப்ளட்ஸ் ஒடச்சுதான் குடுப்போம்… அந்த பழக்கத்துல சொல்லுறாப் போலருக்கு… நிரு மா… இது குட்டி டேப்லட் டா… பாருங்க…” என்றார் அவளின் தாய்.

“ம்ம்ஹும்… பெச்சு…” தான் கூறியதுதான் சரியென்று பிடிவாதம் பிடித்தாள் நிரோஷா.

வேறு வழியின்றி “ஒடைக்க முடியுதா பாருங்க மேரி…” என்றாள் நீணா.

மேரியும் ஒரு சிறிய காகிதத்தை மடித்து அதன் நடுவில் மாத்திரையை வைத்து பேப்பர் வெயிட் கொண்டு அடித்து உடைக்க முயன்றார்.

ஆனால் மாத்திரை தூள் தூளானது. மாத்திரை பெரிதாக இல்லையே… அதுவரை சந்தோஷம். பரவாயில்லை தூளாக இருந்தால் விழுங்குவது சுலபம் என்றெண்ணி “இந்தாங்க நிரு… தண்ணி ஊத்தி இது போட்டு முழுங்கிடுங்க பாக்கலாம்…” என்றாள் நீணா.

“இல்ல… குத்தியா…” அவளுக்கு என்ன வேண்டும் என்பதில் மிக தெளிவாக இருந்தாள் நிரோஷா.

நீணா பெருமூச்சு விட “என்கிட்ட குடுங்க…” என்றுக் கூறி நிருவின் தாய் உடைக்க முயன்றார். அவர் அடித்த வேகத்தில் மாத்திரை உடைவதற்கு பதிலாக எங்கோ தெறித்து விழுந்தது.

“வெரி ஸ்ட்ராங் லேடி” என்று நினைத்த நீணா “நான் ட்ரை பண்ணுறேன்…” என்றுக் கூறி முதல் வேலையாக அவர் கையிலிருந்து பேப்பர் வெயிட்டை வாங்கினாள்.

அவள் உடைத்த முதல் மாத்திரையும் தூள் தூளானது. நிமிர்ந்து நிரோஷாவை பார்த்தபோது அவள் தலையை இடமிருந்து வலமாக ஆட்டி வேண்டாம் என்றாள்.

“இது வேலைக்காகாது…” என்று நினைத்த நீணா மேஜை மீதிருந்த இரும்பு ஸ்கேல் ஒன்றை எடுத்து பேப்பர் உள் மாத்திரையை வைத்து அதை இரண்டாக அறுத்தேடுத்தாள்.

“உங்களுக்கு தான் மேடம் இதெல்லாம் தோணும்” பாராட்டுதலாக கூறினாள் மேரி.

அவள் எப்போதும் நீணாவை “மேடம்” என்று அழைப்பது வழக்கம். இவளை விட வயதில் பெரியவர்.

நீணா எவ்வளவோ முறை பெயர் சொல்லி அழைக்குமாறு கூறியும் கேட்காததால் அதற்கு மேல் வற்புறுத்தாமல் அவர் இஷ்டம் போல் அழைக்க விட்டு விட்டாள்.

தான் கட் செய்த இரு சமமான துண்டுகளை பார்த்ததும் “படிச்ச படிப்பு வீண் போகல…” என்று எண்ணியவள் அவற்றை எடுத்து பெருமையுடன் நிரோஷவின் முன் நீட்டினாள்.

“ம்ம்ஹும்… குத்தியா?” என்று நிரோஷா சொல்ல முகத்தில் இருந்த புன்னகை மறைந்து இருள் சூழ்ந்தது.

“எப்பயும் மாத்திரையை நாலா ஒடச்சு குடுக்குறது பழக்கம்…” என்று அசடு வழிந்தார் அவளின் தாய்.

“உங்க பழக்கத்துல தீய வெக்க…”

வெளியே சொல்ல முடியாமல் மனதிற்குள் நினைத்த நீணா மீண்டும் அதே போல் மாத்திரியை கவனமாக வெட்டி நான்கு துண்டாக்கி நிமிர்ந்த போது அந்த ஏஸி அறையிலும் அவளுக்கு வியர்த்திருந்தது.

“கொஞ்சம் தண்ணி குடுங்க மேரி” என்றுக் கேட்டு வாங்கி நிரோஷாவிற்கு முன்னால் அவள் தண்ணீர் பருகினாள்.

நான்கு துண்டுகளாக மாத்திரையை பார்த்ததும் தான் நிரோஷா அதை சாப்பிட ஒப்புக் கொண்டாள். நல்ல பிள்ளையாக அவள் அம்மா தந்த தண்ணீரைப் பருகி ஒவ்வொரு துண்டாக வாயில் போட்டு விழுங்கினாள்.

வெளியே செல்லும்போது “பை” என்று சிரித்துக் கொண்டே கூறியவளை பார்த்ததும் நீணாவின் களைப்பு எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துப் போனது.

“அந்த போராட்டத்துல நேரம் ஆகிடுச்சு மோனி… நீ ஒரு போன் பண்ணி இருக்கலாமே? அட்லீஸ்ட் நீயாவது சாப்பிடப் போயிருக்கலாமே? எதுக்கு இவ்வளவு நேரம் வெயிட் பண்ண?” என்று நீணா கேட்ட போது அவர்கள் பான்ட்ரி அருகில் வந்திருந்தனர்.

“நல்லா தான்டி உன்ன வேல வாங்கியிருக்கா அந்த பொண்ணு… எதுக்கு இப்படி மூச்சு விடாம பேசுற? காலையில லேட்டா தான் சாப்பிட்டேன். எனக்கு பசி இல்ல. அதான் வெயிட் பண்ணேன். எனக்கும் ஒரு கேஸ் பார்க்க வேண்டி இருந்துது”

நீணாவிற்கு சமாதானம் கூறி ஷிவானி அமர்ந்திருந்த டேபிளில் சாப்பிட அமர்ந்தாள் மோனிகா.

-–ப்ரத்யுக்‌ஷா ப்ரஜோத்