சாமரம் வீசும் புயலே – பாகம்-8

270

திரில் அமர்ந்திருந்தவளை பார்த்து “ஹாய் ஷிவானி” என்று

கூறிப் புன்னகைத்து மோனிகாவின் அருகில் அமர்ந்தாள் நீணா.

“இப்போ சிரிக்குற இவ நிஜமா? இல்ல நேத்து கத்துன அவ நிஜமா? ஒண்ணுமேப் புரியலயே ஆண்டவா…” எதிரில் இருப்பவளைப் பார்த்து மனதிற்குள் எண்ணிய ஷிவானி “ஹாய்” என்றாள்.

ஷிவானி பீடியாட்ரீஷியன். நீணாவுடன் வேலையை பகிர்ந்துக் கொள்பவர்களில் அவளும் ஒருத்தி. முதலில் ஷிவானி இந்த மருத்துவமனையில் சேர்ந்த போது நீணாவை மட்டுமே தெரியும்.

அவளின் தோழி என்ற முறையில் மோனிகா ஷிவானிக்கு அறிமுகம் ஆகியிருந்தாள். ஆனால் நேற்றிலிருந்து நிலைமை தலை கீழ் ஆகியிருந்தது.

இப்போது மோனிகா ஷிவானியின் தோழி ஆகியிருந்தாள். இத்தனை நாட்களில் நீணாவுடன் வேலை அல்லாது வேறு எதுவும் பேச வாய்ப்புக் கிடைக்காததால் ‘அவள் தன் கலீக் (collegue)’ என்ற ரீதியில் மட்டுமே நீணாவை பார்க்க முடிந்தது,

“ஹர்ஷாவும் பிஸியா மோனி?” என்று  நீணா கேட்க ஆம் என்று தலையை மட்டும் ஆட்டினாள் மோனிகா.

ஹர்ஷா ரோஹித் இருவரும் எப்போதும் இவர்களுடன் மதிய உணவு சாப்பிடுபவர்கள் அல்ல. அவர்களுக்கு வேலை இல்லாத சில நாட்களில் அபூர்வமாக இவர்களின் உணவு நேரத்தில் பான்ட்ரி வருவதுண்டு. மற்றபடி அவர்கள் இருவரும் தினம் சேர்ந்து சாப்பிடுவதே கடினம் தான்.

ஷிவானியும் நீணாவும் என்ன வேலை இருந்தாலும் எப்படியாவது நேரத்தை ஒதுக்கி ஒன்றாக சாப்பிட்டு விட வேண்டும் என்று விரும்புவார்கள்.

கல்லூரியில் துவங்கிய பழக்கம் அது. வேறு எப்போதும் இப்படி அமர்ந்து பேச நேரம் கிடைப்பதில்லையே…

சாவதானமாக கதையடிக்காவிட்டாலும் அறக்கப் பறக்க சாப்பிட்டுக் கொண்டே ஏதாவது இரண்டொரு விஷயம் பேசி சிரிக்கும்போது இருவருக்குமே டென்ஷன் குறைந்து மனம் லேசாகும்.

காலை வாக்கிங் போகும்போது நீணாவும் ரோஹித்தும் மோனிகாவின் வீட்டிற்கு செல்வதுண்டு. ஆனால் அதிகப்படியாக பத்து நிமிடங்களில் கிளம்ப வேண்டியிருக்கும்.

ஹர்ஷாவும் ரோஹித்தும் அப்படியெல்லாம் ஒன்றாக சாப்பிட வேண்டும்… அமர்ந்து பேச வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். அவர்கள் பேச்சு அநேகமாக மருத்துவ துறை சம்பந்தப்பட்டதாகவே இருக்கும்.

வேறு ஏதேனும் பேச விரும்பினால் அவர்கள் வேலை பார்க்கும் ப்ளாக்கின் வெளியே இருக்கும் காண்டீன் சென்று அங்கு அமர்ந்து பேசுவார்கள்.

நீணாவும் மோனிகாவும் கல்லூரி தோழிகள். ஆனால் ஹர்ஷாவும் ரோஹித்தும் பள்ளி தோழர்கள். அப்போதிலிருந்து ஒன்றாக சுற்றித் திரிந்தவர்கள்.

“ஹே பிரைட் ரைஸ்… எனக்கு ரொம்பப் பிடிக்கும்…”

ஷிவானி அவள் டப்பாவை திறந்ததும் ஆர்வமாக அதிலிருந்து ஒரு ஸ்பூன் சாதத்தை எடுத்து சாப்பிட்டாள் மோனிகா.

“நீயும் எடுத்துக்கோ நீணா… சாரி… எடுத்துக்கோங்க…”

மோனிகாவிடம் பேசும் பழக்கத்தில் இத்தனை நாள் மரியாதை கொடுத்து பேசிய நீணாவை ஒருமையில் பேசிவிட்டாள் ஷிவானி.

“இப்படியே பேசு ஷிவானி… நீயும் எங்களோட ஐக்கியம் ஆகிடு…”

நீணா கூறியதைக் கேட்டதும் ஷிவானிக்கு அவளை மிகவும் பிடித்துப் போனது.

“ஆரம்பிச்சுட்டா… ஷிவானி நீ இவகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோ… இப்போவே சொல்லிட்டேன். எப்போ எந்த நேரத்துல என்ன பண்ணுவான்னே சொல்ல முடியாது”

ஷிவானியை எச்சரித்த மோனிகா அவளுடைய ப்ரைட் ரைஸ் மொத்தத்தையும் காலி செய்யும் வேலையில் தீவிரமாக ஈடுப்பட்டிருந்தாள்.

அவர்கள் பேச்சில் கவனமாக இருந்த ஷிவானிக்கு தனது கீரை சாதத்தை மோனிகா அவள் பக்கம் தள்ளிவிட்டது தெரியாமல் போனது.

என்ன சாப்பிடுகிறோம் என்றுக் கூட பார்க்காமல், கல்யாணி காலை வேளையின் அவசரத்திலும் கர்ப்பமாய் இருக்கும் மகள் மோனிகாவிற்காக பார்த்து பார்த்து செய்துக் கொடுத்த கீரை சாதத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் ஷிவானி.

மூவரும் பேசி சிரித்து சாப்பிட்டாலும் வேகமாகவே உண்டனர். சாப்பிட்டு முடித்ததுமே “எனக்கு கொஞ்சம் வெர்க் இருக்கு… நான் கிளம்புறேன்” என்றாள் ஷிவானி.

“ஓகே… பை…” என்று நீணா கூறி திரும்பியபோது மோனிகா மெளனமாக தலைக் குனிந்து அமர்ந்திருந்தாள்.

அவள் முகமே அவள் ஏதோ பேச விரும்புகிறாள் என்பதை உரைத்தது. அவளுக்கு இருக்கும் ஒரே நெருங்கிய தோழி நீணா மட்டுமே… மோனிகாவை நன்கு புரிந்து வைத்திருப்பவள்.

அருகிலிருந்த கைபேசியை எடுத்து “மேரி… நான் வர இன்னும் 15 மினிட்ஸ் ஆகும். கொஞ்சம் பார்த்துக்கோங்க” என்றுக் கூறி வைத்தாள்.

“சொல்லு மோனி” என்று நீணா கூறியதும் படப்படவென்று பேச ஆரம்பித்தாள் மோனிகா.

“உனக்கே தெரியுமில்ல நீணா? எனக்கு கரபான்பூச்சின்னா எவ்வளவு பயம்னு… நேத்து நைட் உன்கிட்ட பேசி முடிச்சதும் போன் வெச்சுட்டு ஹர்ஷா எழுந்து எனக்கு பால் எடுக்க கிட்சன் போனான். அங்க ஒண்ணு இருந்துதாம்… அதான் காக்ரோச்…”

முகத்தை அஷ்டக்கோனலாக வைத்து உடலை சிலிர்த்துக் கொண்டு கூறிய மோனிகாவை கண்டு நீணாவிற்கு சிரிப்பு வந்தது.

“அவன் அத அடிச்சு தூக்கிப் போட வேண்டியது தான? அத விட்டுட்டு அத தூக்கிட்டு வந்து என் கண்ணு முன்னாடி காட்டி கிட்சன்ல இருந்துதுன்னு சொல்லுறான்… பயந்து கத்தி எழுந்திரிச்சு சோபாக்குப் பின்னாடிப் போய் நின்னுட்டேன்.

நம்மளும் படிக்குறப்போ எதை எதையோ டைசெக்ட் பண்ணி இருக்கோம்… ஆனாலும் எனக்கு இது மேல இருக்க பயம் போகல…

செத்துப் போன காக்ரோச் பார்த்து எனக்கு எந்த பயமும் இல்ல நீணா… அவன் உயிரோட இருக்குறதக் கொண்டு வந்துக் காட்டுறான்.

நான் கத்துனத கேட்டு அம்மா பயந்து போய் ஹாலுக்கு வந்து பார்த்தாங்க. அவங்க முன்னாடி எதுவும் சொல்ல முடியாம சும்மா ‘பயந்துட்டேன்’னு மட்டும் சொன்னேன்.

அவங்களும் ‘இப்படியெல்லாம் கத்தாத… வேகமா எந்திரிக்காத’ன்னு என்ன திட்டி மொறச்சிட்டுப் போயிட்டாங்க… தேவையா எனக்கு இது?

எனக்கு பயம்னு தெரிஞ்சும் எதுக்கு நீணா இப்படி செய்யணும்? கேட்டா சும்மா விளையாடிப் பார்த்தேன்னு சொல்லுறான்… இப்படியெல்லாம் செய்யுறானே… அவனுக்கு என் மேல லவ்வே இல்லையா நீணா?”

கன்னத்தில் கை வைத்து அனைத்தையும் கேட்ட நீணா கடைசியாக மோனிகா கேட்ட கேள்வியில் கையை மெல்ல உயர்த்தி நெற்றியைத் தேய்த்துக் கொண்டாள்.

“இப்போ என்ன நடந்துடுச்சுன்னு நீ இப்படியெல்லாம் யோசிக்குற? ஹர்ஷாக்கு உன் மேல லவ் இல்லையா? நெஜமா சொல்லு…”

நீணாவை பாவமாகப் பார்த்த மோனிகா “இருக்கு… அப்பறம் எதுக்கு இப்படியெல்லாம் பண்ணணும்?” என்றுக் கேட்டாள்.

“நீ ஓவரா யோசிக்குற மோனி. அவன் சொன்னான்ல… சும்மா விளையாட்டுக்கு செய்திருப்பான். இதுக்கெல்லாம் எதுக்கு பீல் பண்ணுற?” ஆதரவாக அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டாள் நீணா.

“சரி வா… போகலாம். இனி இப்படி யோசிக்கல… பேஷண்ட்ஸ் வெயிட் பண்ணுவாங்க” என்றுக் கூறி நீணாவை விட்டு விலகி எழுந்தாள் மோனிகா.

அவள் முகம் தெளிவடைந்திருப்பதைக் கண்டு நிம்மதியுற்ற நீணா “இனி இப்படி எதுவும் யோசிக்க மாட்டா” என்றெண்ணி அவளுடன் நடந்தாள்.

சிறிது தூரம் சென்றதும் “ஏன் நீணா… லவ் பண்ணுறப்பையும் சரி… கல்யாணம் ஆகி இத்தன நாள் ஆகியும் சரி… ஒரு தடவக்கூட உனக்கும் ரோஹித்துக்கும் சண்ட வந்ததா நீ சொன்னதே இல்லையே… உங்களுக்குள்ள சண்டையே வராதா?” என்றுக் கேட்டாள் மோனிகா.

“ம்ம்கும்… நாங்க சண்டப் போடாம இருந்துட்டா…….லும்…” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள் “அப்படி சண்டயே போடாம யாராவது இருக்க முடியுமா மோனி?

அதெல்லாம் வரும். சரியாப் போயிடும். சரி முடிஞ்சா ஈவ்னிங் பார்க்கலாம். நைட் கால் பண்ணுறேன்” என்றுக் கூறி மோனிகாவிற்கு விடைக் கொடுத்து அனுப்பினாள்.

அறையில் வந்து அமர்ந்தவளுக்கு மாலை வரை வேறு எதையும் யோசிக்கக் கூட நேரமில்லாமல் போனது. தொடர்ந்து அடுத்தடுத்து அப்பாயின்ட்மென்ட்ஸ் இருந்தன.

மாலையானதும் சற்று நேரம் ஓய்வெடுத்தால் மட்டுமே அடுத்த வாண்டை சமாளிக்க முடியும் என்று தோன்றியதாலும் அடுத்த அரை மணி நேரத்திற்கு எந்த அப்பாயின்ட்மென்ட்டும் இல்லாததாலும் தேநீர் அருந்த எண்ணினாள்.

“மேரி ஒரு கப் டீ மட்டும் எடுத்துட்டு வரீங்களா? உங்களுக்கும் எடுத்துட்டு வாங்க”

“உங்களுக்கு கொண்டு வரேன் மேடம்… நான் வெளியில போய் குடிக்குறேன் மேடம்… கொஞ்ச நேரமாவது காத்தாட நடந்துட்டு வரேன். உள்ளயே இருந்தா நமக்கு ஆகாது”

“என்ன சொன்னாலும் கேக்காதீங்க. மேடம் மேடம் னு… உங்க இஷ்டம் மேரி”

அவர் வெளியே சென்று டீ அருந்துவதற்கும், அவளை அழைக்கும் அழைப்பிற்கும் சேர்த்து பதில் கூறினாள் நீணா.

அவள் கூற வருவதுப் புரிந்தவராக “அதெல்லாம் அப்படி தான் மேடம் வருது… மாத்திக்குறது கஷ்டம்” என்றுக் கூறி சென்ற மேரி அடுத்த பத்து நிமிடங்களில் ஆவி பறக்கும் ஏலக்காய் டீயுடன் உள்ளே வந்தார்.

வாசனையே புத்துணர்ச்சியை தர கப்பை வாங்கிய நீணா “உங்க பையன் ஸ்கூல்ல ஏதோ பிரச்சனைன்னு சொன்னீங்களே மேரி… என்னாச்சு? காலையிலிருந்து இருந்த வேலையில கேக்க மறந்துட்டேன்” என்றாள்.

“கூட படிக்குற பையன் கேக்காம இவனோட பாக்ஸ் எடுத்துட்டான்னு இவன் அவன அடிச்சுட்டானாம்… அதுக்கு அவன் கிளாஸ் மிஸ் கூப்பிட்டு சொன்னாங்க… நான் கூட ஸ்கூல்ல வர சொன்னாங்கன்னு என் பையன் வந்து சொன்ன்னதும் பயந்துட்டேன்…”

“பதிலுக்கு அந்த மிஸ் உங்க பையன அடிக்காம உங்களைக் கூப்பிட்டு சொன்னாங்களே… அதுவரைக்கும் சந்தோஷம்…”

“இப்போ எல்லாம் மிஸ்ஸுங்க அடிக்குறதில்ல மேடம்… பசங்க தான் அவங்கள மிரட்டுறாங்க… காலம் மாறிப் போச்சு…”

மேரி சிரிக்க நீணாவும் சிரித்து “அது என்னவோ உண்மை தான்… சரி நீங்களும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க மேரி… இருபது நிமிஷம் கழிச்சு வாங்க… போதும்” என்று கூறி அவரை அனுப்பி வைத்து நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்து தேநீரை சுவைக்க ஆரம்பித்தாள்.

அவளது மொபைல் மெசேஜ் வந்ததற்கு அறிகுறியாக பீப் ஒலி எழுப்பவும் கப்பை டேபிள் மீது வைத்து விட்டு கைபேசியை எடுத்துப் பார்த்தாள். ரோஹித் மெசேஜ் அனுப்பியிருந்தான்.

காலையில் மருத்துவமனை வந்தப் பின் இப்போது தான் தன்னைத் தொடர்புக் கொள்கிறான் என்று எண்ணிய நீணா மெசேஜை ஓபன் செய்தாள்.

“என்னப் பண்ணுற?” என்றிருந்ததைப் பார்த்ததும் முகம் மலர அவனது எண்ணிற்கு கால் செய்தாள்.

உடனே அழைப்பை ஏற்ற ரோஹித் “என்னடி?” என்றுக் கேட்டான்.

இவன் தானே மெசேஜ் அனுப்பினான் என்று யோசித்தவள் “என்ன என்னடி? நீதான என்னப் பண்ணுறன்னு கேட்ட?” என்றாள்.

“என்ன பண்ணுறன்னு தான கேட்டேன்… அதுக்கு எதுக்கு கால் பண்ண?”

“டேய் என்ன விளையாடுறியா?” சற்றுக் குரலை உயர்த்திக் கேட்டாள் நீணா.

“நானா உன்னை கால் பண்ண சொன்னேன்?” அவன் சிரிக்கிறான் என்பது அவனது குரலிலேயேத் தெரிந்தது.

“உனக்குப் போய் கால் பண்ணேன் பாரு… என்ன சொல்லணும்” என்றுக் கூறி அழைப்பைத் துண்டித்தாள் நீணா.

வாய் விட்டு சிரித்துக் கொண்டிருந்த ரோஹித் கதவு தட்டப்படும் ஒலியில் நிமிர்ந்து “யெஸ் கம் இன்…” என்றான்.

“எப்படி இருக்கீங்க ரோஹித்?” என்றுக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் டாக்டர் வெங்கட்.

“பைன் வெங்கட். உக்காருங்க… ட்ரிப் எப்படி போச்சு? கான்பெரன்ஸ் எப்படி இருந்துது? பெங்களூர் சுத்தி பார்த்தீங்களா?”

அவருக்கு கைக் கொடுத்து எதிரில் இருந்த இருக்கையை கை காட்டினான். வெங்கட் அதில் அமர்ந்து அவன் கேட்டக் கேள்விகளுக்கு பதில் கூற ஆரம்பித்தார்.

“கான்பெரன்ஸ் ரொம்ப யூஸ்புல்லா இருந்துது ரோஹித்… ஊர் சுத்தி பார்க்க நேரம் கிடைக்கல. மூணு நாளும் செம பிஸி… பேமிலிய கூட்டிட்டுப் போயிருந்தாலாவது இன்னும் ரெண்டு நாள் இருந்து சுத்தி பார்த்துட்டு வந்திருக்கலாம்…

வேலை இருக்குன்னு சொல்லி அவங்கள விட்டுட்டு போயிட்டேனா? ‘எப்போ வருவீங்க? இன்னும் ஒரு நாள் ஆகுமா? அப்பா சீக்கிரம் வர முடியாதா?’ன்னு கேட்டு டார்ச்சர் பண்ணிட்டாங்க… பையனும் ரொம்ப தேடிட்டான் போல…”

புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்த ரோஹித் “விடுங்க வெங்கட்… பையன் உங்கள ரொம்ப மிஸ் பண்ணியிருப்பான்… அதான் வர சொல்லியிருப்பாங்க…” என்றான்.

“ஹ்ம்ம்… அப்பறம் நாளைக்கு என் பையன் பர்த்டே பார்ட்டி இருக்கு ரோஹித். நம்ம ஹாஸ்பிட்டல் டாக்டர்ஸ் சிலர் மட்டும் இன்வைட் பண்ணுறேன். நமக்கு இது ஒரு கெட் டு கெதர் மாதிரி தான்… நீங்களும் நீணாவும் அவசியம் வரணும்”

“ஷுர் வெங்கட். கண்டிப்பா வறோம்” என்றுக் கூறி தலை அசைத்து உறுதி அளித்தான் ரோஹித்.

“ஹஸ்பன்ட் அண்ட் வைப் ரெண்டு பேரும் எப்படிபா இப்படி எப்பயும் சிரிச்சுட்டு அமைதியா இருக்கீங்க? நம்மளுக்கு அந்தக் குடுப்பினை எல்லாம் இல்ல. எப்படா காதுக்கு ரெஸ்ட் கிடைக்கும்னு பார்த்துக்கிட்டு இருக்க வேண்டியிருக்கு. சரி நான் வரேன் ரோஹித். இன்னும் சிலரை இன்வைட் பண்ணணும்” என்றுக் கூறி எழுந்தார் வெங்கட்.

சிரித்தபடி மீண்டும் அவருக்கு கைக் குலுக்கி விடைக் கொடுத்தவன் மேஜை மேல் இருந்தத் தன் கைபேசியைப் பார்த்து இன்னும் பெரிதாக சிரித்து ரவுண்ட்ஸ் செல்வதற்காக ஸ்டெத்தை எடுத்து கழுத்தில் போட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.