சாமரம் வீசும் புயலே – பாகம்-9

433

சுகமான இளங்காற்று வீச காலைப் பொழுதின் இனிமையை ரசித்தபடி அருகருகே நடந்தனர் ரோஹித்தும் நீணாவும்.

தினமும் நடக்கும் வழி… பார்த்துப் பழகிய இடங்கள்… அதே பரிட்சயமான முகங்கள்… இருந்த போதிலும் ஒவ்வொரு நாளும் அனைத்தையும் புதியதாய் தெரியவைக்கும் இந்த விடியற்காலை நேரம்.

ரோஹித் கையை முறுக்கி சோம்பல் முறித்து கண்ணை கசக்கி கொட்டாவி விட்டான்.

“ஏன் ரோஹித் இப்படி தூங்கி வழியுற? எந்திரிச்சு எவ்வளவு நேரம் ஆச்சு? நடக்க ஆரம்பிச்சே ரெண்டு நிமிஷம் ஆகியிருக்கும். இன்னுமா உன் தூக்கம் போகல?”

“அதெல்லாம் போச்சு போச்சு… இது சும்மா…”

“சோம்பேறி…”

ரோஹித் நடையின் வேகத்தைக் குறைத்து நீணாவை திரும்பிப் பார்த்தான்.

“ஆமா… நீ அப்படியே பெரிய சுறுசுறுப்பு… போடி… இன்னைக்கு காலையில நான் தான் உன்ன எழுப்பி விட்டிருக்கேன். ஞாபகம் இருக்குல்ல?”

“ஒரு நாள் எழுப்பி விட்டுட்டு பெருசா பேசாத. தூங்குமூஞ்சி”

“குட் மார்னிங் ரோஹித். குட் மார்னிங் நீணா”

பின்னாலிருந்துக் கேட்ட குரலில் இருவரும் திரும்பிப் பார்த்தனர். பரமேஸ்வரன் அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தார். வாக்கிங் ஸ்டிக் சகிதம் ஒரு சால்வையைப் போர்த்தி மிடுக்குடன் நடந்து வருபவரை பார்த்ததும் இருவரும் புன்னகைத்து “குட் மார்னிங்” என்றனர்.

“என்ன இன்னைக்கு இந்த பக்கம் வாக்கிங் வந்துட்டீங்க? வீட்டுக்கிட்டயே நடக்கலையா?”

“ஒரு நாள் சண்டை போடாம இருந்தா பொறுக்கலையா அங்கிள்?”

“இன்னைக்கும் சண்ட போடலன்னு ஃபீலிங்கா அங்கிள்?”

ரோஹித்தும் நீணாவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி யோசித்து அமைதியாக அவர் முகத்தையே பார்த்திருந்தனர்.

“ஆனா நான் என் வீட்டுக்கிட்டயே தான் நடக்குறேன்… பெண்டுலம் வாக். அக்கம்பக்கத்துல இருக்கவங்கள்டயும் சொல்லிட்டேன். அங்க பாருங்க…”

ரோஹித்தும் நீணாவும் அவருக்குப் பின்னால் பார்க்க அவரவர் வீட்டின் பக்கவாட்டில் இருந்த சாலையில் முந்தைய தினம் அவர்கள் நடந்தது போலவே குறுக்கும் நெடுக்கும் நடந்துக் கொண்டிருந்தனர்.

ஒன்றிரண்டு வீடுகளில் மட்டும் அல்லாமல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை…

“அய்யய்யோ… ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் டே ப்ராக்டீஸ் மாதிரி இப்படி எல்லாரும் ஒரே ரிதம்ல நடக்குறாங்களே… அந்த லாஸ்ட் வரைக்கும் தெரியுதே… ஒரு வேள அதையும் தாண்டி இருக்க வீடுங்களுக்கும் இந்த விஷயம் பரவியிருக்குமோ?”

ரோஹித் இவ்வாறு யோசிக்க நீணா வேறு விதமாக யோசித்தாள்.

“பரமேஸ்வரன் அங்கிள்….. நல்ல வேலை பண்ணி இருக்கீங்க… ஒரே நாள்ல எப்படி இத்தன பேருக்கு பரப்பி விட்டீங்கன்னு தான் புரியல… எத சொன்னாலும் மக்கள் நம்புவாங்க போலயே…”

ஒருவர் வந்து “இந்த வாக் போனா கொலஸ்ட்ரால் கண்ட்ரோல் ஆகி ஹார்ட் ப்ராப்ளம்ஸ் வராதாமே… உண்மையா ரோஹித்?” என்றுக் கேட்கவும் “வாக்கிங் போறது நல்லது தான்” என்றுப் பொதுப்படையாக பதில் கூறினான் ரோஹித்.

“நாங்க கிளம்புறோம் அங்கிள். கொஞ்ச தூரமாவது நடக்கணும்…” என்று நீணா கூற ரோஹித்தும் அவருக்கு தலை அசைத்து நடக்க ஆரம்பித்தான்.

நேற்று போல் இன்று அவர்களுக்கு சிரிப்பு வரவில்லை. மாறாக கவலையாக இருந்தது. அமைதியாக நடந்தனர்.

தாங்கள் மருத்துவர்கள் தான். அதற்காக நிற்பது நடப்பதைக் கூட அடுத்தவருக்காக செய்ய முடியுமா என்று யோசித்தனர்.

“ஹச்ச்” என்று தும்முவதை கூட தெரபி என்று சொல்லி தாங்களும் தும்மும் மக்களுக்கிடையில் அவர்கள் சராசரி மனிதர்களாய் வாழ்வது எங்கனம்?

மருத்துவம் படித்தது தங்களின் விருப்பத்திற்காக… பிறருக்கு சேவை செய்ய… தங்கள் வாழ்வையே இந்த சமுதாயத்திற்காக அர்ப்பணிக்க அல்லவே…

மருத்துவரை தெய்வமாகப் பார்க்கிறோம். ஆனால் அவர்களுக்கும் பெர்சனல் லைப் என்ற ஒன்று இருப்பதை எப்போது மறந்து போனோம்?

அவர்களுக்கு சமுதாய பொறுப்பு இருக்கிறது. சமூகத்தின் மீது அக்கறை வேண்டும். ஆனால் பேசுவது சிரிப்பதை கூட யாரேனும் கவனிக்கிறார்களா என்று பார்த்துப் பார்த்துச் செய்ய முடியாதே…

வீட்டிற்குள் வந்ததும் நேரே குளிக்கச் சென்றனர். பரமேஸ்வரனின் தயவால் அன்று அந்த வீட்டில் அமைதி குடிக் கொண்டிருந்தது.

வழக்கம் போல் மருத்துவமனை வந்ததும் வேலையில் மூழ்கியவர்கள் மாலை ஆனதும் முந்தைய தினம் வெங்கட் அழைத்திருந்த அவருடைய மகனின் பிறந்த நாள் விழாவிற்கு செல்லத் தயாராயினர். ஷிவானி உள்பட…

அவளையும் வெங்கட் பார்ட்டிக்கு அழைத்திருந்தார். நீணா, மோனிகாவின் தோழி என்ற முறையில் ஷிவானி வெங்கட்டிற்கு அறிமுகம் ஆகியிருந்தாள்.

இல்லையென்றாலும் அவருக்கு அந்த மருத்துவமனையில் இருக்கும் அனைவரையும் தெரியும்.

மருத்துவர்கள் என்றில்லாமல் உள்ளே நுழையும் போது கேட்டில் எந்த ஷிப்டில் எந்த வாட்ச்மேன் நிற்பார் என்பது முதற்கொண்டு அவருக்குத் தெரியும். காரை நிறுத்தி நலம் விசாரித்துவிட்டு தான் உள்ளே வருவார்.

அவர் கேண்டீன் சென்றார் என்றால் உள்ளே சமையல் செய்பவர்கள் ஒவ்வொருவராக வந்து பார்த்துப் பேசிவிட்டு செல்வர்.

நடந்து செல்லும் வழியெங்கும் சிரித்தபடி யாருக்கேனும் கையசைத்துக் கொண்டே தான் நடப்பார். அவரை அறியாதவர்கள் அந்த மருத்துவமனையில் யாரும் இருக்க முடியாது.

இப்படிப்பட்ட மனிதர்கள் மிக அரிதாக நம் வாழ்வில் தென்படுவதுண்டு. பாரபட்சமின்றி எல்லோரோடும் நட்புப் பாராட்டும் மனிதர்கள்.

நிஜத்தில் நேற்று வெங்கட் “இன்னும் சிலர இன்வைட் பண்ணணும்” என்று கூறியபோதே “எப்படியும் மொத்த ஹாஸ்பிட்டலையும் கூப்பிடப் போறாரு… இதுக்கு ‘இன்னும் சிலர்’னு விளக்கம் வேற சொல்லிக்குறாரு” என்று நினைத்தான் ரோஹித். அவரைப் பற்றி வந்த சில நாட்களிலேயே அவன் புரிந்துக் கொண்டான்.

“ஷிவானி நீயும் எங்களோடயே வா” என்றழைத்தாள் நீணா.

இரவு வர எப்படியும் நேரம் ஆகும் என்பதால் ஹர்ஷாவை கார் எடுக்க வேண்டாம் என்று சொல்லி காலை அவனையும் மோனிகாவையும் தங்களுடன் காரில் அழைத்து வந்திருந்தான் ரோஹித்.

இப்போது ஷிவானியை மட்டும் தனியே விடப் பிடிக்காமல் அவளையும் தங்களுடன் அழைத்தாள் நீணா. அனைவரும் அவர்கள் ப்ளாக்கின் வெளியே நின்றிருந்தனர்.

“இல்ல நீணா… என் வண்டி இருக்கு. நான் அதுலயே வரேனே”

“வண்டி இங்கயே விட்டுடு ஷிவானி. நாங்களே உன்ன உங்க வீட்டுல விட்டுடுறோம்” என்றாள் மோனிகா.

“இல்ல மோனி… அப்பறம் நாளைக்கு காலையில வரது கஷ்டமா இருக்கும்… வண்டி வேணுமே… கால நேர டென்ஷன்ல பஸ் பிடிச்சு வரது பெரிய பாடு. நீங்க முன்னாடி போங்க… நான் பின்னாடியே வண்டில வந்துடுறேன்…”

“அட இது ஒரு பிரச்சனையா? எங்க கார்ல நானும் ஹர்ஷாவும் தான? காலையில வர வழியில உங்க வீட்டுல வந்து பிக்கப் பண்ணிக்க சொன்னா ஹர்ஷா உன்னையும் வந்து கூட்டிட்டு வந்துடுவான். எங்களோடவே வந்துடு.

அத விட அவனுக்கு என்ன வெட்டி முரிக்குற வேலை இருக்கு? அப்படி இல்லன்னாலும் நீணா ரோஹித் இருக்காங்கள்ல? அவங்க வந்து கூட்டிட்டு வர மாட்டாங்களா? என்ன நீணா?”

“ம்ம் ம்ம்… ரோஹித்துக்கும் வேற ஒண்ணும் வெட்டி முரிக்குற வேலை இல்ல ஷிவானி… அதெல்லாம் பார்த்துக்கலாம். எங்களோடவே வா”

இரண்டடி தள்ளி நின்ற ரோஹித்தையும் ஹர்ஷாவையும் பெண்கள் கண்டுக்கொள்ளவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் கண்களுக்கு அந்த இருவரும் தெரியவே இல்லை.

“நம்ம மானத்த எப்படி கூவி கூவி விக்குறாளுங்க பாரு ரோஹித்”

“ஏன்டா நம்ம மத்தவங்கக்கிட்ட சொல்லும்போது எப்படி சொல்லுவோம்? ‘என் வைப்பும் நானும் ஒண்ணாதான் ஹாஸ்பிட்டல் வருவோம்’னு… இவளுங்க என்னமோ நம்ம டிரைவர் வேல பாக்குற மாதிரி இல்ல சொல்லுறாளுங்க?”

“கிட்டத்தட்ட அப்படித்தான்னு வெச்சுக்கோயேன்… அத கொஞ்சம் டீசெண்டா சொல்லித் தொலைக்கக் கூடாதாடா?”

“இன்னும் கொஞ்ச நேரம் விட்டோம்னா நிலைமை ரொம்ப மோசம் ஆகிடும்… கிளம்புவோம் வா”

ரோஹித் சொன்னதும் “சரி யாரோ ஒருத்தர் கூட்டிட்டு வரோம். இப்போ எங்களோடவே வாங்க ஷிவானி” என்றான் ஹர்ஷா.

அவனே நேரடியாக அழைத்தப் பின் மறுக்கத் தோன்றாமல் “சரி” என்றாள் ஷிவானி. உடனே “ஹே” என்று ஆர்ப்பரித்து அவளை இருப் புறம் இருந்துக் கட்டிக் கொண்டனர் நீணாவும் மோனிகாவும்.

“இப்போ அவ என்ன ரோஹித் சொல்லிட்டா? இந்தக் கத்துக் கத்துறாளுங்க?”

“கண்டுக்காத ஹர்ஷா… இதுங்க இப்படித்தான். வா..

“நாங்க போய் கார் எடுத்துட்டு வரோம். நீங்க இங்கயே நில்லுங்க”

“ஆமாமா… நாங்க வேற எதுக்கு தெண்டமா நடந்துக்கிட்டு? நீ போய் எடுத்துட்டு வா ரோஹித்”

“பார்த்துப் போ ஹர்ஷா”

நீணாவும் மோனிகாவும் அக்கறையாய் சொன்னதைக் கேட்டு “போயிடலாம்டா… இன்னைக்கு புல் பார்ம்ல இருக்காளுங்க…” என்றுக் கூறிய ரோஹித் வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

ரோஹித் காரை எடுக்க ஹர்ஷா முன் இருக்கையில் அவன் அருகில் அமர்ந்தான். “மெதுவாவே போ ரோஹித்”

“மோனி இருக்கான்னுத் தெரியும்டா… ஸ்பீடா போக மாட்டேன்”

ஹர்ஷா எப்போதும் வேகமாக கார் ஓட்டுபவன் அல்ல. அதிலும் மோனிகா கருவுற்றதிலிருந்து ரோட்டில் இருக்கும் சிறு கல்லை கூட கவனிப்பான்.

மேடுப்பள்ளங்களில் பார்த்துப் பார்த்து வண்டி ஓட்டுபவனிடம் “இன்னும் கொஞ்சம் வேகமா போ ஹர்ஷா… சின்ன பள்ளம் தான?” என்றுக் கூறுவாள் மோனிகா.

“ஒண்ணும் அவசரம் இல்ல… இப்போ வேகமா போய் என்னத்த சாதிக்கப் போறோம்? நான் இப்படிதான் போவேன்”

அவனுக்கு தன் மீதிருக்கும் அளவு கடந்த அக்கறை புரிந்து மோனிகாவும் அமைதியாகி விடுவாள்.

இன்று ரோஹித்தின் காரில் செல்வதால் ஹர்ஷாவிற்கு கொஞ்சம் பயம் இருந்தது. அவன் வேகமாகச் செல்பவன் இல்லை தான். “நானே டிரைவ் பண்ணுறேன்” என்று கேட்டால் காரை அவன் கையில் கொடுத்து விடுவான் தான்.

ஆனால் ஹர்ஷா அதை விரும்பவில்லை. அப்படி செய்தால் அவன் மீது நம்பிக்கை இல்லை என்பது போலாகி விடும். இப்போது ரோஹித் கூறிய பதிலைக் கேட்டதும் நிம்மதியடைந்தான்.

பின் இருக்கையில் மோனிகாவை நடுவில் அமர வைத்து நீணாவும் ஷிவானியும் இருபுறமும் அமர்ந்தனர். காலை அவர்களுடன் வந்தபோதே மோனிகா வசதியாக அமர தலையணை இரண்டை எடுத்து வந்திருந்தான் ஹர்ஷா.

அவற்றை சரியாக வைத்து அவளை வசதியாக அமர வைத்தனர். தன் இருக்கையில் அமர்ந்தபடியே திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா.

“நாங்கப் பார்த்துப்போம் ஹர்ஷா. நீ திரும்பு… உனக்கே இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல?”

நீணா ஹர்ஷாவை கிண்டல் செய்ய ஷிவானி இதுவரை அவனிடம் பேசி இராததால் அமைதியாக சிரித்துக் கொண்டிருந்தாள்.

மெல்லியக் குரலில் “திரும்பிடுடா” என்று ரோஹித் எச்சரிக்க லேசான புன்னகையுடன் மோனிகாவை பார்த்துவிட்டுத் திரும்பி அமர்ந்தான் ஹர்ஷா.

கார் கிளம்பியதும் “ஹே உனக்கு அந்த ஷீலா தெரியும் தான?” என்று ஆரம்பித்தாள் மோனிகா.

“எந்த ஷீலா?”

“என்ன நீணா ஷீலாவ போய் எந்த ஷீலானு கேக்குற?”

“அது இல்ல மோனி… ரெண்டு ஷீலா இருக்காங்களே” என்று நினைவுப் படுத்தினாள் ஷிவானி.

“ஒஹ்ஹ்… சாரி மறந்துட்டேன்… என் கன்ஸல்டேஷன் ரூம் பக்கத்துல இருப்பாளேடி அவ… உனக்கும் தெரியும்ல ஷிவானி?”

“ம்ம்… தெரியும் தெரியும்…”

“சொல்லு சொல்லு…”

ஷிவானியும் நீணாவும் ஆர்வமாக கதைக் கேட்க “அவ…” என்று ஆரம்பித்து கதையளக்க ஆரம்பித்தாள் மோனிகா.