சாவி பிறந்தநாள் சிறப்புப் பதிவு (சாவி நூற்றாண்டு ) – எங்கள் Blog

173

எம் எஸ் விஸ்வநாதன்.

உலகம் அறிந்த இந்தப் பெயர்தான் எழுத்தாளர் உலகம் அறிந்த சாவியின் பெயரும்.  மாம்பாக்கம் சாமா (சாஸ்திரிகள்) விஸ்வநாதன்.   சுருக்கமாக சாவி.

அன்றைய, இன்றைய பல எழுத்தாளர்களுக்கு குரு, வழிகாட்டி, ஆதர்சம் எழுத்தாளர் சாவி அவர்கள்.  அவரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் வருடம் இது.  அதை ஒட்டிய சிறப்புப் பதிவு.  இன்று ஆகஸ்ட் பத்தாம் தேதி சாவி அவர்களின் பிறந்தநாள்.

எழுத்தாளர் சுஜாதா, மாலன், புஷ்பா தங்கதுரை, பாலகுமாரன், சுப்ரமணிய ராஜு என்று ஒரு பிரபல எழுத்தாளர் வரிசையையே உருவாக்கியவர் சாவி அவர்கள்.

 

 

 

அவர் எழுதிய வாஷிங்டனில் திருமணம் கதையைப் படிக்காதோர் மிகக் குறைவான பேர்களே இருப்பார்கள். இன்னமும் படிக்காதவர்கள் யாராவது இருந்தால் அதையும், விசிறி வாழையையும் தயவு செய்து வாசித்து விடுங்கள்! தவற விடக் கூடாத பொக்கிஷங்கள்.

விசிறிவாழை படிக்க வேண்டுமா… இங்கு ‘க்ளிக்’குங்கள்.

வாஷிங்டனில் திருமணம் படிக்க வேண்டுமா… இங்கு ‘க்ளிக்’குங்கள்!

7-8-2016 தேதியிட்டு தினமணியுடன் இணைப்பு கதிர் இதழ் ஒரு பொக்கிஷமாக வெளியாகியுள்ளது. சாவி பற்றி, அவருடன் இணைந்திருந்தவர்கள் சொல்லிப் பகிர்ந்திருக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள். படிக்க இங்கு க்ளிக்குங்கள்.

“அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு “ஆஹோ ஓஹோ’ என்று அவரால் பிரபலமாக்கப்பட்ட ஒருவர் அவரை விட்டு அகன்றபோது “வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது’ என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்” என்கிறார் தினமணி எடிட்டர் திரு வைத்தியநாதன். அது யாராய் இருக்கும் என்கிற ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு யூகம் இருக்கிறது.

“……..சாவி சார் உணர்ச்சிவசப்பட்டிருந்தார். முதலில் பேச வந்தபோதே, அவருக்கு முடியவில்லை. “”உட்காருங்கள்” என்று சொல்லி, தண்ணீரும் மாத்திரையும் தந்தேன். பிடிவாதமாய் மீண்டும் பேச வந்தார். உணர்ச்சிப்பிழம்பாய், “”துரியோதனன் கர்ணனுக்கு நட்பின் பரிசாக அங்கதேசத்தைத் தந்தான் என் நண்பர் எனக்கு குங்கும தேசம் தந்தார்” என்றவர், மயங்கி என்மேல் சாய்ந்தார். முதல்வரின் காரில், ஏழே நிமிஷத்தில் அப்போலோ கொண்டு சென்றும், ராஜவைத்தியம் செய்தும், கோமாவிலிருந்து மீளாமலேயே நம்மைவிட்டுப் பிரிந்தார்……” என்கிறார் சிவசங்கரி.

தனது குரு சாவி அவர்கள் பற்றி திரு ரவி பிரகாஷ் எழுதும் தொடர்களை படிக்க இந்த உங்கள் ரசிகன் தளத்துக்குச் செல்லுங்கள்!

தன் தந்தை சாவியைப் பற்றிச் சொல்லும்போது அவர் மகள் “எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும், அதை நேர்த்தியாக, அழகாக, பட்டு கத்தரித்தாற்போல் செய்ய வேண்டும் என்று விரும்புவார். பத்திரிகையில் “லே-அவுட்’டும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஏன், பஜ்ஜி போட்டால்கூட அதற்கு வால் வராமல் போட வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அப்பாவைச் சாப்பிடக் கூப்பிடவே எங்களுக்கு கொஞ்சம் நடுக்கம்தான்…” என்கிறார்

வாஷிங்டனில் திருமணம் கதை பிறந்த கதை பற்றி சமீபத்து விகடனில் போட்டிருந்தார்கள். அது கீழே..

அதேபோல் விசிறிவாழை பிறந்த கதையும்…

விசிறி வாழை படித்து கொள்ளை காலம் (மதுரை பாஷை!) ஆகிவிட்டது!! சற்றே கதையோட்டம் மறந்தும் போய்விட்டது. மேலே இருக்கும் அட்டைப் பெட்டிகளில் அது எங்கிருக்கிறது என்று ஒருநாள் தேடி எடுத்துப் படிக்க வேண்டும்.

ஒரு தொடர்கதை முடிந்தவுடன் ஓரிரு வாரங்கள் கழித்து அதற்கான வாசகர் கடிதங்கள் வெளியிடப்படும். சில தொடர்கதைகள் ‘அப்பாடா, இப்போதாவது முடிந்ததே..’ என்று நினைக்காத தோன்றும். சில தொடர்கள் ‘முடிந்து விட்டதே’ என்று வருந்த வைத்து எண்ணி, எண்ணி அசைபோட வைக்கும். விசிறிவாழை இரண்டாவது ரகம். அதற்கான வாசகர் கடிதங்களை வாசிக்கும்போது கதை லேசுபாசாக நினைவுக்கு வருகிறது இல்லையா? பாலகணேஷ், வல்லிம்மா, கீதா சாம்பசிவம் போன்றவர்கள் நன்றாகவே நினைவில் வைத்திருப்பார்கள்!

பாத்திரங்களின் குணச்சித்திர படைப்பும், உயர்ந்த தத்துவங்களும், உன்னத லட்சியங்களும் இடையே இழையோடிய நகைச்சுவையும் ஆசிரியருக்கு மகத்தான வெற்றியைத் தேடித் தந்து விட்டன. இறுதியில் பார்வதி கல்லூரிக்குச் செல்லும் கட்டம் இதயத்தைக் கலக்கி விட்டது.
சென்னை -8 ஆர். வேங்கடசுப்ரமணியம்.

‘விசிறி வாழை’ உள்ளத்தை உருக்கும் ஒரு அற்புதப் படைப்பு. கடைசி இதழைப் படிக்கும்போது துக்கம் நெஞ்சைப் பிளந்தது.
செங்கல்பட்டு வெ. தியாகராஜன்.

“பார்வதியின் உயிர் விலை மதிப்பற்றது. அதற்காக நான் எதையும் இழக்கத் தயார்” என்று கூறிய சேதுபதி, பச்சைக்குழந்தை போல ஒரு மூலையில் விசும்பிக் கொண்டிருந்தார்’ என்ற வரிகளும், “அவர் கரத்தால் தீண்டிய சரஸ்வதியின் படம், சேதுபதியின் ஆபீஸ் அறையை அலங்கரித்தது. கருத்தால் தீண்டிய பார்வதியின் படம் முன்வாசல் ஹாலை அலங்கரித்தது.” என்ற கடைசி வரிகளும் என்றும் என் நெஞ்சை விட்டகலா!
வத்தலக்குண்டு ஜே. தாமஸ் வி. தாமஸ், பிரேம்குமார் தாஸ்.

ஒவ்வொரு குறித்தும் கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படி இருந்தது. பார்வதியின் வெளி உலக வாழ்க்கையின் செழுமை ஒருபுறம், அதற்கு நேர் எதிரிடையாக அமைந்த உள்ளத்தில் நிறைவு பெறாத சொந்த வாழ்க்கை மறுபுறம். என் கண்களில் நீர் மல்கியது. என் இதயமும் நெகிழ்ந்தது. மொத்தத்தில் புனிதமான உணர்ச்சிகளைப் படிப்போர் உள்ளத்தில் பொங்க வைக்கும் மிக நளினமான இலக்கியம்.
பம்பாய் க. சீனிவாசன்,

பார்வதிக்கும், சேதுபதிக்கு உள்ள தூய காதலைப் பிணைத்து வைத்திருக்கலாம். சமூகத்தின் நடப்பிற்கு விரோதம் என்று நினைத்திருந்தால் மனப் போராட்டத்தையும் வயோதிகத்தையும் காரணமாக வைத்து இருவரின் உயிரையும் சேர்த்தே பிரித்திருக்கலாம்.
திருச்சி – 1 என். ஆர். நடராஜன்.

பெறாத குழந்தைக்குத் தாயாக இருந்து, புரியாத இல்லத்தின் தலைவியாக ஒரு தோற்றத்தைத் தானே சிருஷ்டி செய்து கொண்டு, அந்த நினைப்பிலேயே வாழ்வின் இறுதியைக் கண்டு மகிழ்ந்த கன்னித் தெய்வமே ! உன்னைப் போன்ற நிலையில் உள்ள பெண்களின் வாழ்வு சீராக அமைந்து சிறப்புற்று விளங்க அருள் புரிய வேண்டுமம்மா.
தஞ்சாவூர் – 1 எஸ். வி லட்சுமி.

இந்தக் கட்டுரை எங்கள் blog என்ற வலைப்பூவில் பதியப்பட்டுள்ளது. அதன் மறுபிரதிதான் இங்கு வெளியாகியுள்ளது.  அந்த வலைப்பூவைப் படிக்க இங்கு கிளிக்கவும்.