சாமரம் வீசும் புயலே பாகம்-4

161

தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு இருவரும் இறங்கி தங்களின் வில்லாவை நோக்கி நடந்தபோது வழியில் தென்பட்டவர்களைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே நடந்தனர்.

“என்ன டாக்டர் சார்… இன்னைக்கு லேட் ஆகிடுச்சுப் போல?” என்றக் குரல் கேட்டுத் திரும்பிய ரோஹித் “ஆமா அங்கிள். கொஞ்சம் வேலை ஜாஸ்தி” என்றுக் கூறி நடக்க ஆரம்பித்தான்.

அக்கம்பக்கம் குடியிருப்பவர்கள் அனைவருக்கும் நீணா ரோஹித் இருவரையும் நன்றாகத் தெரியும். அதிலும் அவர்கள் இருவரும் காலை வாக்கிங் செல்வதால் அந்த நேரத்தில் நடைப்பயிற்சிக்காக வரும் எல்லோரும் அவர்களுக்கு பரிட்சயமாயினர். இப்படி எதிரில் பார்க்கும் போது நலம் விசாரிப்பதும் புன்னகைப்பதும் வாடிக்கையாகிப் போனது.

நீணா தன்னிடம் இருந்த சாவிக் கொண்டு வீட்டைத் திறந்தாள். இருவரும் உள்ளே நுழைந்ததும் “குளிச்சுட்டு டீ போடுறேன் ரோஹித்…” என்றாள்.

“ஏன்? மேடம் குளிச்சுட்டு தான் டீ போடுவீங்களோ??? எனக்கு இப்போவே வேணும்”

கையிலிருந்த ஹான்ட் பேக்கையும் சில பைல்களையும் ஹாலில் இருந்த டேபிளின் மீது வைத்த நீணா அவனை திரும்பிப் பார்த்து “ஹாஸ்பிட்டல் இருந்து வந்து அப்படியேவா கிச்சன்குள்ள போய் டீ போட முடியும்? குளிச்சுட்டு வந்து போட்டுத் தரேன் ரோஹித்…” என்றுக் கெஞ்சுதலாய் கூறினாள்.

ஷூவைக் கழட்டி அதனிடத்தில் வைத்து சோபாவில் வந்து அமர்ந்த ரோஹித் சாக்ஸை கழட்டி அருகில் வைத்து சாவதானமாய் நன்றாக சாய்ந்து அமர்ந்து கால் மேல் கால் போட்டு அவளை நேராய்ப் பார்த்து “எனக்கு இப்போ வேணும்” என்றான்.

அவனை இரண்டு நொடிகள் அமைதியாய் பார்த்த நீணா தன் அருகில் டேபிளில் இருந்த தடிமனான புத்தகம் ஒன்றை கையில் எடுத்து அவனை நோக்கி வேகமாக நடந்தபடி “அப்படியே மண்டைலயே போட்டன்னா…” என்று அவன் தலையில் அடிப்பது போல் கையைத் தூக்கினாள்.

“ஏய் ஏய்… என்னாதிது?” அவள் செயலைப் பார்த்த ரோஹித் வேகமாக சோபாவிலிருந்து எழுந்தான்.

“அதான் குளிச்சுட்டு வரேன்னு சொல்லுறேன்ல… அப்புறமும் இப்போ இப்போன்னா?” மூச்சு வாங்க கைகளால் புத்தகத்தை ஏந்தியபடி நின்றாள் நீணா.

அவளை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தவன் “அப்போ சரி… நானே டீ போட்டுக்கறேன்” என்றுக் கூறி சமையலறை நோக்கி நடந்தான். கையிலிருந்த புத்தகத்தை மீண்டும் எடுத்த இடத்தில் வைத்து “போட்டுக்கோ போ…” என்றுக் கூறித் திரும்பி நடந்தாள் நீணா.

இரண்டடி சென்றதும் வேகமாகத் திரும்பி சமையலறை வாயிலை எட்டியிருந்த ரோஹித்தை பார்த்து “ஏய் நில்லு…” என்றுக் கத்தினாள்.

அவர்கள் வீட்டில் கிச்சன் மற்றும் டைனிங் ஹால் மட்டும் சற்றேத் தாழ்வானப் பகுதியில் கட்டப்பட்டிருந்தது. ஹாலிலிருந்து மூன்று படிகள் இறங்கி சென்றால் முதலில் டைனிங் ஹாலும் அதைக் கடந்து சென்றால் சமையலறையும் வரும்படியான ஒரு அமைப்பு. படிகளில் வேகமாக இறங்கி ஓடிச் சென்று அவன் முன்னால் நின்றாள் நீணா.

“வழிய விடு. அதான் நானே போட்டுக்குறேன்னு சொல்லிட்டேன்ல… நீ ஒண்ணும் எனக்கு டீ போட்டு தர வேண்டாம்” அவள் தோள் பற்றி அவளை நகற்ற முயற்சித்தான்.

“அய்யோடா… உனக்கு டீ போட்டுக் குடுக்குறேன்னு நான் எப்போ சொன்னேன்? குளிக்காம கிச்சன்குள்ள போகக்கூடாது…”

“நான் போவேன்…” அவளைத் தள்ளி விடுவதில் குறியாய் இருந்தான் ரோஹித்.

“நான் விட மாட்டேன். தள்ளாதடா… இது என் கிச்சன். இதுக்குள்ளக் குளிக்காம எல்லாம் போகக்கூடாது. விடு…” ஒரு கையை அவன் நெஞ்சில் வைத்துத் தள்ளி இன்னொரு கையால் அவள் தோளில் இருக்கும் அவன் கையை விளக்க முயன்றாள்.

“வீடே ரெண்டுப் பேருக்கும் சொந்தமாம்… இதுல கிச்சன் மட்டும் எப்படிடீ உன்னோடதாகும்? நகரு முதல்ல…” என்றுக் கூறியவன் இரண்டு கைகளாலும் அவள் தோள் பற்றி அவளை தள்ளிக் கொண்டு சமையலறைக்குள் சென்றான்.

“கிச்சன்குள்ள… போகக்கூடாது… சொன்னாக் கேளுடா………” அவனை விளக்கும் முயற்சியை கை விடவில்லை நீணா.

“கண்ணத் தொறந்து சுத்திப் பாரு… கிச்சன்குள்ள தான் நிக்குறோம்” இதற்கு மேல் அவளிடம் போராடத் தேவையில்லை என்று தன் கைகளை அவள் தோளிலிருந்து எடுத்து மார்புக்கு குறுக்காகக் கட்டி நின்றான்.

திகைத்துப் போய் சுற்றிப் பார்த்தவள் ரோஹித்தை முறைத்தாள். அவள் சுதாரிக்கும் முன் மேடை மேல் ஒரு மூலையில் கழுவிக் கவிழ்த்து வைத்திருந்த பால் பாத்திரத்தை எடுத்து “கேட்ச்” என்று சத்தமாகக் கூறி அவளை நோக்கித் தூக்கிப் போட்டான்.

பாத்திரம் தன்னை நோக்கி வரவும் அதுக் கீழே விழுந்து விடாமல் இருக்க அவசரமாக அதைப் பிடித்தாள் நீணா.

“சூப்பர்… இப்போ டீ போடு…” என்றுக் கூறியவன் அவள் இடுப்பை இரு கைகளாலும் பிடித்து அருகில் இழுத்தான்.

அவள் திமிருவதைப் பொருட்படுத்தாமல் அவள் உதட்டில் அழுந்த முத்தமிட்டு அவளை விளக்கினான். அவன் விலகியதும் நீணா தலையில் கை வைத்துக் கண் மூடி நின்றாள். அவளை பார்த்து நமுட்டு சிரிப்புடன் வலது கையை பாண்ட் பாக்கெட்டில் விட்டுத் திரும்பி நடந்தான் ரோஹித்.

“அது என்ன ஹாஸ்பிட்டல்லேருந்து வந்து குளிக்காம கிச்சன்குள்ளே போக மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்குறது? அப்போ… நாளைக்கு எனக்கு ஒடம்பு சரி இல்லன்னு சொன்னாக்கூட குளிச்சுட்டு வந்து தான் கஞ்சி வெச்சுக் குடுப்பியா? ஒரு நாள் ரெண்டு நாள்னா பரவாயில்ல…  தினம் இதையே சொன்னா? இப்போ எப்படி குளிக்காம உள்ள போன?”

சோபாவில் கிடந்த தன்னுடைய உடமைகளையும் நீணா வைத்தவற்றையும் கையில் எடுத்துக் கொண்டு படுக்கையறை நோக்கி நடந்தான். கண்களைத் திறந்த நீணா தலையிலிருந்த கையை எடுத்து அடுப்பை ஒரு முறை பார்த்து உப்ப்ப்ப் என்று வாயைக் குவித்து பெருமூச்சு விட்டாள். சின்ங்கின் அருகில் இருந்த ஹாண்ட் வாஷ் எடுத்து கைகளை நன்றாக சுத்தம் செய்து பால் பாத்திரத்தையும் ஒரு முறை கழுவி அடுப்பில் வைத்து பிரிட்ஜிலிருந்து பால் பாக்கெட்டை எடுத்துப் பிரித்து அதில் ஊற்றினாள்.

அவள் டீ தயாரித்து இரண்டு கப்புகளில் எடுத்துக் கொண்டுத் திரும்பிய நேரம் சமையலறை வாயிலில் ரோஹித் நின்றிருந்தான். அமைதியாக அவனை நோக்கி நடந்து வந்து ஒரு கப்பை அவனிடம் நீட்டினாள். அவளைப் பார்த்துக் கொண்டே அதை வாங்கியவன் அருகில் இருந்த பிரிட்ஜின் மீது வைத்தான்.

அவனைக் கண்டுக் கொள்ளாமல் நீணா டீ அருந்த கப்பை வாய் அருகில் எடுத்துச் சென்ற நேரம் “ஹே என்ன பண்ணுற? குளிக்காம எல்லாம் டீ குடிக்கக் கூடாது… ஹாஸ்பிட்டல் இருந்து வந்தா குளிக்கணும் நீணா… தினம் நீதானே சொல்லுவ? குடு குடுன்னு…” என்றுக் கூறி அவள் கையில் இருந்த கப்பை டீ கீழேக் கொட்டி விடாமல் ஜாக்கிரதையாக வாங்கி பிரிட்ஜின் மீது வைத்தான்.

“ஒரு டீ கூட குடிக்க விட மாட்டியா? ஏன் இப்படிப் படுத்தற?” கப்பை அவன் கையிலிருந்து வாங்க முயன்றாள்.

“சொன்னாக் கேளு நீணா… குளி வா…” அவளை இரு கைகளிலும் தூக்கினான்.

“விடு ரோஹித்… எதுக்குத் தூக்கின?” என்றவளை குனிந்துப் பார்த்து “விடுன்னு சொல்லுறத இப்படி தான் சொல்லுவாங்களா? கழுத்த சுத்தி கை போட்டு… நல்லா வசதியா நெஞ்சுல சாஞ்சுக்கிட்டே??” என்றுக் கேட்டான்.

உடனே அவன் நெஞ்சிலிருந்து தலையை நிமிர்த்தி “விடுறீயா இல்லையா?” என்று திமிறியவளைக் குளியலறைக்குள் இறக்கி விட்டவன் அவள் திரும்பும் முன் கதவை இழுத்து வெளியில் தாழிட்டான்.

“கதவ திறடா…” கதவில் படப்படவென்று அடித்தவளைக் கண்டுக் கொள்ளாமல் “குளிச்சுட்டு வாடி…” என்றுக் கூறி சமையலறைக்கு சென்றான். ஒரு டீ கப்பை எடுத்து சிறிய தட்டுக் கொண்டு மூடி வைத்தவன் பிரிட்ஜின் மீதிருந்த மற்றொரு கப் டீயை எடுத்துப் பருக ஆரம்பித்தான்.

“டேய்… உள்ள தூக்கிட்டு வந்து விட்டியே… டிரஸ் எடுத்துக் குடுக்க மாட்டியா? எங்க இருக்க ரோஹித்? சீக்கிரம் வா… எவ்வளவு நேரம் உள்ளயே நிக்குறது?” குளியலறையிலிருந்துக் கத்திக் கொண்டிருந்தாள் நீணா.

“மனுஷன ஒரு டீ குடிக்க விடுறாளா? என்னா சவுண்டு…” புலம்பியபடிக் கழுவிக் கொண்டிருந்த டீ கப்பை மேடையில் கவிழ்த்து வைத்து விட்டு படுக்கையறைக்குள் நுழைந்தான் ரோஹித்.

“அதான் உள்ள துண்டு இருக்கும்ல… கட்டிட்டு வந்து நீயே எடுத்துக்க வேண்டியது தான?” குளியலறை வெளியில் நின்று சத்தமாகக் கூறினான்.

“டிரஸ் எடுத்துக் குடுக்க முடியுமா? முடியாதா?” நீணா மென்றுத் துப்பிய வார்த்தைகள் கதவின் வெகு அருகில் கேட்டன.

அவள் கதவில் சாய்ந்து நின்று தான் பேசுகிறாள் என்பதுப் புரிய ரோஹித்தும் கதவில் சாய்ந்து நின்று “டிரஸ் எல்லாம் எடுத்து குடுக்க முடியாது” என்றான்.

நீணா கையை மடக்கி கதவில் ஓங்கிக் குத்த அவள் குத்திய வேகத்தில் தன்னிச்சை செயலாக கதவை விட்டு சிறிது நகன்ற ரோஹித் “ஹேய்… இதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்…” என்றான்.

இரண்டு வினாடி அமைதிக்குப் பின் கதவின் தாழை நீக்கும் சத்தம் கேட்க குளியலறை வாயிலின் குறுக்கே கை வைத்து வழியை மறித்து நின்றான். வேகமாக கதவைத் திறந்தவள் அவன் கையை அலட்சியமாகத் தட்டி விட்டு கட்டிய துண்டுடன் சென்று கப்போர்டை திறந்து உடைகளை எடுத்து மீண்டும் அவனை கடந்து குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள். சுவரில் சாய்ந்து குளியலறையைப் பார்த்தபடி நின்றவன் அவள் வெளியே வரவும்…..

“என்ன மேடம்க்கு கோபமா?” என்றுக் கேட்டான். அவனைத் திரும்பி முறைத்த நீணா, “இப்படி டிரஸ் எடுத்துக் குடுக்காம விளையாடதன்னு எத்தன தடவ ரோஹித் சொல்லுறது?” என்றுக் கேட்டாள்.

“இப்போ என்ன ஆச்சு? அதான் துண்ட கட்டிட்டு வந்து நீயே டிரஸ் எடுத்துக்கிட்டல்ல?” புன்னகையுடன் கூறியவனைக் கண்டதும் நீணாவின் எரிச்சல் அதிகமானது.

“இப்படி செய்யுறதெல்லாம் செஞ்சுட்டு சிரிக்காத ரோஹித்…. பார்க்கவே பத்திக்கிட்டு வருது…” இரு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டுக் கத்தினாள்.

“க-த்-தா-த” ஒவ்வொரு எழுத்தாக அழுத்தம் கொடுத்து அடிக்குரலில் கூறினான் ரோஹித்.

“ஐயோ இந்த வார்த்தையக் கேட்டா… அதுவும் நீ சொல்லுற பாரு… இப்படிக் கேட்டா எனக்கு எப்படி இருக்குத் தெரியுமா?” குரலை சற்றும் தாழ்த்தாமல் கூறினாள் நீணா.

“நீணா க-த்-தா-த” இப்போதும் அதே போல் கூறினான் ரோஹித்.

ரோஹித் நீணா கத்துவதை நிறுத்த சொன்னதும் அவனை முறைத்து அறையை விட்டு வெளியேறி சமையலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

அவள் அமைதியாக சென்றிருந்தால் ரோஹித் விட்டிருப்பானோ என்னவோ… அவள் முறைத்துவிட்டு செல்லவும் “இப்போ எதுக்கு முறைக்குற?” என்றுக் கேட்டு அவள் பின்னோடு வந்தான்.

சடாரென்று அவனைத் திரும்பிப் பார்த்தவள் “முறைக்க கூட எனக்கு உரிமை இல்லையா ரோஹித்?” என்றாள்.

“இப்போ எதுக்கு நீணா கத்துற?”

“நான் கத்துறனா?” நெற்றி சுருக்கி அவள் கேட்ட விதத்தில் கோபத்தின் சாயல் எட்டிப் பார்த்தது.

ரோஹித் ஏதோக் கூற வாயைத் திறக்கவும் வீட்டின் அருகில் பலமாக நாய் குறைக்கும் சப்தம் கேட்கவும் சரியாக இருந்தது. இருவருமே சமையலறை விட்டு வெளியே செல்லத் திரும்பினர்.

நீணாவும் அவனுடன் வருகிறாள் என்பதை கவனித்தவன் அவள் கைப் பற்றி பிரிட்ஜ் அருகில் இழுத்துச் சென்று அதன் மீதிருந்த கப்பை எடுத்து அவள் கையில் திணித்து விட்டு வேகமாக வெளியேறினான்.

அவன் மீது கோபம் கொண்டிருந்த மனம்… அவன் பேசியவற்றைக் கேட்டு அயர்ந்திருந்த மனம்… இப்போது லேசாகி பறப்பது போல் இருந்தது. எவ்வளவு முயற்சி செய்தும் புன்னகையில் விரிந்த உதடுகளை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஹாலிற்கு வந்து கதவின் அருகில் சென்ற ரோஹித் அதில் இருந்த சிறு துவாரத்தில் பொருத்தப்பட்டிருந்த லென்ஸ் வழியாக வந்திருப்பது யார் என்று எட்டிப் பார்த்தான்.

வெளியில் நின்றிருந்த நபரைக் கண்டதும் “ஷ்ஷ்ஷ்ஷஷ்…” என்ற நீண்டப் பெருமூச்சை வெளியேற்றி முகத்தில் செயற்கையாக ஒரு புன்னகையை ஒட்ட வைத்து கதவைத் திறந்தான்.

“ஹலோ டாக்டர்… வீட்டுல தான் இருக்கீங்களா? நீணாவும் வந்தாச்சா? சத்தத்தையே காணுமேனு பார்த்தேன்…”

வாயெல்லாம் பல்லாக இவ்வாறு கூறியவரை கண்டதும் பற்களை நற நறவென்றுக் கடித்தவன் “வந்துட்டோம் அங்கிள். நீணா உள்ள தான் இருக்கா. இப்போ தான் வந்தோம். பேசிட்டு இருந்தோம்” என்றுக் கூறிய நேரம் நீணா அங்கே வந்தாள்.

“ஹலோ மிஸ்டர் சுந்தரேசன்… எப்படி இருக்கீங்க? பார்த்தே ரொம்ப நாளாச்சு… நே…த்து நைட் வந்தவங்க… அதுக்கு அப்பறம் இப்போ தான் வறீங்க ரொம்ப பிஸியா?”

ரோஹித் சிரிப்பை அடக்கப் பெரும்பாடுபட்டுக் கொண்டிருந்தான்.

“ஹா ஹா ஹா… நீணா… பிசி எல்லாம் இல்ல மா… உங்களுக்கு ஒரு லெட்டர் வந்துது. அதான் குடுக்கலாம்னு வந்தேன். கதவுக்கிட்ட வந்ததும் உள்ள சத்தமே இல்லையா? அதான்… நீங்க இருக்கீங்களோ இல்லையோன்னு…”

அசடு வழிந்தார் நரைத்தத் தலையுடன் கையில் ஒரு நாயை பிடித்தபடி நின்றிருந்த சுந்தரேசன்.

“ம்ம் ம்ம்…”

தலையை பலமாக ஆட்டிய நீணா ரோஹித்தின் அருகில் வந்து நின்று அவன் கைப் பற்றிக் கொண்டாள். லெட்டரை அவன் கையில் கொடுத்தவர் “அப்போ சரி… நான் போயிட்டு வரேன்…” என்றுக் கிளம்ப எத்தனித்தார்.

“மறக்காம நாளைக்கும் லெட்டர் கொண்டு வாங்க மிஸ்டர் சுந்தரேசன்… பை…” புன்னகையுடன் கூறியவள் கதவைத் தேவைக்கு அதிகமான வேகத்துடனே மூடினாள்.

“வேற வேலையே கிடையாது… பக்கத்து வீட்டுல இருந்துட்டு… எப்போப் பாரு இங்க என்ன நடக்குதுன்னு பார்க்குறதே வேலையா வெச்சுக்கிட்டுத் திரியறாங்க… ச்சை… நம்ம லெட்டர் நமக்கு எடுத்துக்கத் தெரியாதா? அதான் எல்லா வீட்டுக்கும் தனித் தனியா லெட்டர் பாக்ஸ் வெச்சிருக்காங்களே…

இது ஒரு சொத்த லெட்டர்… இப்படி தினம் நூறு லெட்டர் வருது… அதான் டெய்லி காலையில லெட்டர் பாக்ஸ் பாக்குறோமே… அது தெரிஞ்சும் எப்படிதான் இப்படி தினம் ஒரு சாக்கு வெச்சு வந்து விசாரிப்பாங்களோ?.”

தலையில் அடித்துக் கொண்டுப் புலம்பியவளை சிரிப்புடன் பார்த்தான் ரோஹித்.

“நீ எதுக்கு இப்போ சிரிக்குற?”

“எனக்கு சிரிப்பு வருது சிரிக்குறேன்… சரி நைட்டுக்கு என்ன சமையல்?”

அவனை முறைத்து “உனக்கு எதுவும் கிடையாது போ…” என்றுக் கோபமாக கூறி ஹாலின் விளிம்பில் இருந்த படிகளின் மேல் படியில் சென்று அமர்ந்தாள்.

தன் கை விரல்களை ஆராய்ந்துக் கொண்டிருந்தவளை அலட்சியமாகப் பார்த்தவன் ஸ்டடி ரூமிற்குள் சென்று ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான்.

வீட்டில் படுக்கையறைகள் அல்லாமல் புத்தகங்கள் வைப்பதற்காகவே ஒரு சிறிய அறையை ஒதுக்கி வைத்திருந்தனர். அங்கே இருவரும் அமர்ந்து படிக்க வசதியாக இரண்டு தனி தனி டேபிள் சேர் போடப்பட்டிருந்தது.

ஒரு மணி நேரத்திற்கும் மேல் படிப்பதில் மூழ்கியவன் தனக்குத் தேவையான மருத்துவக் குறிப்புகள் அனைத்தையும் எடுத்து முடித்து நிமிர்ந்தபோது மணி ஒன்பதிற்கு மேல் ஆகியிருந்தது. டேபிள் மேல் இருந்த பொருட்களை ஒழுங்குப்படுத்தி அறையின் விளக்கை அணைத்து வெளியே வந்தான்.

கைகள் இரண்டாலும் கால்களைக் கட்டி, முகத்தை பக்கவாட்டில் திருப்பி முட்டியின் மீது வைத்து படியில் அமர்ந்திருந்த நீணா, ரோஹித் வெளியே வரவும் அவனையேப் பார்த்தாள்.

அவளை நோக்கி செல்ல ஒரு அடி எடுத்து வைத்தபோது அவனின் கைபேசி சிணுங்கவே சார்ஜில் இருந்ததை எடுத்து அழைப்பது யார் என்றுப் பார்த்தான்.

திரையில் தெரிந்த பெயரைப் பார்த்ததும் வேகமாக அவளை நிமிர்ந்துப் பார்த்தவன் புன்னகையுடன் அழைப்பை ஏற்று காதில் வைத்து “ஹலோ” என்றுக் கூறி அவள் அருகில் அவளை உரசியப்படி வந்தமர்ந்தான்.

நீணா நகர்ந்து அமர எத்தனிக்கவும் இடது கையால் அவள் தோளைச் சுற்றி கைப் போட்டு  இழுத்துப் பிடித்து “உங்க மருமகளுக்கென்ன? நல்லா தான் இருக்கா… போன் பண்ணா பையனப் பத்தி விசாரிக்க மாட்டீங்களா? எப்போப் பாரு அவளையே கேக்குறீங்க?” என்றுக் கூறும்போதே அவன் கையிலிருந்த மொபைலை பறித்தாள் நீணா.

-ப்ரத்யுக்‌ஷா ப்ரஜோத்