சாமரம் வீசும் புயலே-பாகம்-1

604

கையில் இருந்த கேஸ் பைலை பார்த்தபடி எட்டி நடை போட்டாள் ஷிவானி. வெறுமனே பக்கங்களை புரட்டியவள் எதையும் ஆழ்ந்து படிக்கவில்லை. தினமும் நடந்து பழகிய தடம்… கவனம் வேறெதிலோ இருந்தபோதிலும் மிகச் சரியாய் தன் இருப்பிடம் நோக்கி நடந்தாள்.

“இப்போ எதுக்கு ரோஹித் நீ கத்துற?”

இப்படி கேள்வி கேட்டவள் தானும் கத்த தான் செய்கிறோம் என்பதை அறிவாளா?

நிசப்தமாய் இருந்த இடத்தில் சத்தமாய் கேட்ட பெண் குரல் ஷிவானியின் வேகத்தை சற்றே மட்டுப்படுத்தியது. அருகில் இருந்தது பேன்ட்ரி மட்டுமே…

சுற்றும் முற்றும் பார்த்தபோது அந்த காரிடரில் இரு பக்கமும் சிறிது தூரத்திற்கு ஆள் நடமாட்டம் எதுவும் தென்படவில்லை. பான்ட்ரியின் வாசலை நெருங்கி உள்ளே மெதுவாக எட்டிப் பார்த்தாள்.

கையில் அலைபேசியை வைத்து தனக்கு முதுகு காட்டி பேசிக் கொண்டிருந்தவளைக் கண்டதும் “எனி பிராப்ளம் நீணா?” என்று மெல்லியக் குரலில் வினவினாள் ஷிவானி.

திடீரென்று அந்த அறையில் சப்தம் கேட்கவும் திரும்பிப் பார்த்த அந்த இளம் பெண் புன்னகையுடன் கண்களை சிமிட்டி “நத்திங் ஷிவானி” என்று இனிமையாகக் கூறி திரும்பி விட்டாள்.

மீண்டும் தனக்கு முதுகுக் காட்டி நின்றவளை விநோதமாகப் பார்த்த ஷிவானி “இப்போ இவ தான கத்துனா? அப்படி திரும்பி நின்னப்போ கத்துனவ… இப்படி திரும்பினதும் இவ்வளவு அமைதியா அழகா சிரிச்சுக்கிட்டே பேசுறா? ஒண்ணும் புரியலயே…” என்று புருவம் சுருக்கி உதட்டில் ஆள் காட்டி விரலால் தட்டியப்படி தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தாள்

அவள் தோளில் யாரோ தட்டவும் திடுக்கிட்டுத் திரும்பியவளின் முன் நின்றிருந்தாள் மோனிகா. “புரியாது… ஒண்ணுமே புரியாது… இங்க நின்னு டைம் வேஸ்ட் பண்ணாம வா… நம்ம வேலைய பார்ப்போம்…” ஷிவானியின் வருகைக்காகக் காத்திருக்காமல் நடக்க ஆரம்பித்தாள் மோனிகா.

“என்ன மோனிகா சொல்லுறீங்க? எனக்கு நீணா பண்ணதும் புரியல… நீங்க பேசுனதும் புரியல… எதையாவதுத் தெளிவா சொல்லுங்க…”

“எத சொல்லணும் ஷிவானி?” அவளிடம் கேள்விக் கேட்ட மோனிகா எதிரில் வந்த ஊழியரை பார்த்து புன்னகைத்தாள். பொறுமை இழந்த ஷிவானி அவள் முன்னால் வந்து நின்று வழியை மறித்து பேச ஆரம்பித்தாள்.

“நான் இங்க ஜாயின் பண்ணி ஒரு வாரம் தான் ஆகுது. ஆனா இந்த ஒரு வாரத்துல நிறைய தடவ நீணா கூட பேச வேண்டி வந்திருக்கு… சேர்ந்து ஒண்ணா வேலைப் பார்க்க வேண்டிய சூழ்நிலை அமைஞ்சிருக்கு…

எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நீணா ரொம்ப சாப்ட்… ரொம்ப அமைதி… அதிர்ந்து பேசமாட்டாங்க. இங்க வரவங்கக்கிட்ட அவங்க நடந்துக்குற விதத்த பார்த்து நானே நிறைய கத்துக்கிட்டு இருக்கேன்.

இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவங்க ஏன் அப்படி கத்தினாங்க? நீணா இவ்வளவு சத்தமா பேசுவாங்கன்னே எனக்கு இன்னைக்கு தான் தெரியும்… ஏதாவது ப்ராப்ளமா மோனிகா?”

மோனிகாவிற்கு சிரிப்பு வந்தது. அதை அடக்கும் வழித் தெரியாமல் வாய்விட்டே சிரிக்க ஆரம்பித்தாள். அமைதியாக இருந்த அந்த காரிடாரில், சற்று தொலைவில் அமர்ந்திருந்த சிலர் அவள் சிரிப்பொலியில் திரும்பி அவர்களைப் பார்த்தனர்.

பலர் கவனிக்கும் வகையில் மோனிகாவின் நடவடிக்கை இருக்கவும் ஷிவானி அவள் கை பற்றி வேகமாக அருகில் இருந்த காலியான அறை ஒன்றினுள் அழைத்து சென்று கதவை தாழிட்டாள்.

“மோனிகா ப்ளீஸ்… எதுக்கு சிரிக்குறீங்கன்னு சொல்லிட்டு சிரிங்களேன்…”

“இல்ல… நீ இப்போ சொன்ன எல்லாத்தையும் நானும் ஒரு காலத்துல சொல்லி இருக்கேன்…”

விழி விரித்து அவளைப் பார்த்த ஷிவானி “எனக்கு நீணா பத்தி அதிகம் தெரியாது… அதனால எனக்கு அவங்க பண்ணது புரியல. ஆனா நீங்களும் நீணாவும் பெஸ்ட் பிரண்ட்ஸ் ஆச்சே… ஒண்ணா படிச்சவங்கன்னு தெரியும். அப்பறம் எப்படி நான் சொன்னத நீங்க சொல்லியிருக்க முடியும்?” என்று மீண்டும் குழம்பினாள்.

தொண்டையை சரி செய்த மோனிகா “ஆமா… ரொம்ப க்ளோஸ் பிரண்ட்ஸ் தான். சில நேரங்கள்ல நமக்கு ரொம்ப நெருக்கமா இருக்க மனுஷங்க, நம்ம கையிலயே இருக்க பொருள்… இதோட தன்மை நமக்கு தெரியுறதில்ல. அப்படி தான் நீணாவும்” என்றாள்.

அந்த வார்த்தைகளை சில நொடிகள் மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்து அதன் அர்த்தத்தை உள் வாங்க முயன்றாள் ஷிவானி. அவள் நிமிர்ந்தபோது மோனிகா அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மோனிகா நீணாவின் தோழி. தானோ அவர்களுடன் வேலை பார்க்க ஆரம்பித்து ஒரு வார காலமே ஆகியிருக்கிறது. பரிட்சயம் உண்டென்ற போதிலும் நெருக்கம் கிடையாது. அப்படி இருக்கையில் நீணா குறித்து மேலும் கேட்க விரும்பாமல் சிறு தலை அசைப்புடன் “சரி மோனிகா… போகலாம்…” என்றாள் ஷிவானி.

அவள் முகம் அப்போதும் தெளிவடையாமல் இருக்கவே ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றி “இப்போ உனக்கு ட்யூட்டி பாக்குற டைம் இல்ல… நீ ப்ரீ தான்னு தெரியும். உட்காரு ஷிவானி” எதிரில் இருந்த ஸ்டூலை கை காட்டி அருகில் இருந்த சேரில் சாய்ந்து அமர்ந்தாள் மோனிகா.

அவள் எதுவோ பேசப் போகிறாள் என்பதுப் புரிந்து ஷிவானி அவள் முகம் பார்க்க அவளின் ஆர்வம் உணர்ந்து ஒரு புன்னகையுடன் சொல்ல ஆரம்பித்தாள் மோனிகா.

“நானும் நீணாவும் காலேஜூல ஒண்ணாப் படிச்சோம். எப்போவும் ஒண்ணாவே சுத்துவோம். நாங்க தர்ட் இயர் படிக்குறப்போ நடந்த ஒரு சம்பவம் எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையையும் மாத்தி அமைச்சிடுச்சி. அது எங்களை இன்னும் நெருக்கம் ஆக்கிடுச்சோன்னு கூட சில நேரங்கள்ல தோணும்…” பழைய நினைவுகளில் மூழ்கிப் போனாள் மோனிகா.

கிளாஸிற்கு நேரமாகிய போதும்… வகுப்பு துவங்கும் முன்பு முடிக்க வேண்டிய வேலைகள் சில இருந்த போதும்… தான் செல்லும் வழி நெடுக இருந்த அழகை ரசித்தபடி கிட்டத்தட்ட ஓடிக் கொண்டிருந்தாள் மோனிகா.

பசுமையான புல்வெளியும் அடர்ந்த மரங்களுமாய் அந்த சூழலே ரம்மியமாகக் காட்சியளித்தது. பாடம், மதிப்பெண், பரீட்சை என்று எதையோ துரத்தும் நோக்கில் ஓடிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இப்படி எதையும் நின்று நிதானமாய் ரசிக்கும் நேரம் கிடைப்பதில்லை.

அந்த ப்ளாக்கின் மீட்டிங் ஹாலை கடக்கும் போது மூடியிருந்த கதவின் வழியே “என்னால ஓகே சொல்ல முடியாது ரோஹித். இது ஒத்து வராது. விட்டுடுன்னு சொன்னாக் கேளு” என்றுக் கத்திய பெண் குரலைக் கேட்டுதும் அப்படியே நின்றாள்.

அது பரிச்சயப்பட்ட குரலாக தோன்ற வேகமாக மீட்டிங் ஹாலின் கதவைத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தாள். அவள் கணிப்பு பொய்யாகவில்லை… உள்ளிருந்தது அவள் வகுப்பு மாணவர்கள். இன்னும் சொல்லப் போனால் அவளுடைய நண்பர்கள்.

நீணாவும் ரோஹித்தும் ஒருவரை ஒருவர் முறைத்தபடி எதிர் எதிரில் நின்றிருந்தனர். “என்னாச்சு நீணா?” என்றுக் கேட்டு மோனிகா அவள் அருகில் செல்ல அவளைக் கண்டதும் முறைப்பதை விடுத்து “ஒண்ணும் இல்ல மோனி” என்று சாதாரணமாகக் கூறினான் ரோஹித்.

“என்னாச்சு? ஏதாவது பிரச்சனையா?”

உள்ளே வந்து தன் பின்னால் நின்ற ஹர்ஷாவை பார்த்ததும் மோனிகாவிற்கு “இவனும் நம்மள மாதிரி நீணா கத்துனத கேட்டுட்டு வந்திருப்பானோ?” என்றுத் தோன்றியது. ஹர்ஷா அவர்கள் நண்பன். வகுப்பு தோழன்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல ஹர்ஷா” இப்போது நீணா புன்னகையுடன் பதில் கூறினாள்.

“இதே தான் ஹர்ஷா நானும் கேக்குறேன். ரெண்டு பேரும் ஒண்ணும் இல்லைன்னு சொல்லுறாங்க…”

ரோஹித்தும் நீணாவும் இவர்களைப் பார்த்து அமைதியாக நின்றனர். அவர்கள் எதுவும் கூறப் போவதில்லை என்பதை உணர்ந்த மோனிகாவும் ஹர்ஷாவும் வேறெதுவும் கேட்காமல் ஹாலை விட்டு வெளியேறினர்.

ஹர்ஷா தலையசைத்து இங்கேயே இருக்குமாறு சைகை செய்யவும் மோனிகா பின் தங்க மற்ற இருவரும் முன்னே நடந்தனர். அமைதியாக தலை குனிந்து நடந்த இருவருக்கும் முன்னே செல்பவர்களை பற்றிய யோசனையே…

ஒரு முறை நிமிர்ந்துப் பார்த்த ஹர்ஷா திரும்பி அருகில் மோனிகாவை பார்த்தான்.

-ப்ரதியுஷா ப்ரஜோத்

அகம் இணைய இதழில் வெளிவந்த சிறுகதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்