சாமரம் வீசும் புயலே பாகம்-2

270

ஹர்ஷா தலையசைத்து இங்கேயே இருக்குமாறு சைகை செய்யவும் மோனிகா பின் தங்க மற்ற இருவரும் முன்னே நடந்தனர். அமைதியாக தலை குனிந்து நடந்த இருவருக்கும் முன்னே செல்பவர்களை பற்றிய யோசனையே…

ஒரு முறை நிமிர்ந்துப் பார்த்த ஹர்ஷா திரும்பி அருகில் மோனிகாவை பார்த்தான்.

“என்ன மோனிகா யோசிக்குற?”

“ஒண்ணுமில்ல”

இரண்டடி நடந்ததும் ஹர்ஷாவை திரும்பிப் பார்த்தவள் “நீ என்ன யோசிக்குற?” என்றுக் கேட்க ஹர்ஷா தலையை இடமிருந்து வலமாக ஆட்டினான்.

சில நொடிகளுக்குப் பின் இருவரும் ஒரு சேர “நீ…” என்று ஆரம்பித்தனர். முதலில் மோனிகா “நீ சொல்லு” என்றாள். ஹர்ஷா மறுப்பாக தலை அசைத்து “நீ சொல்லு… என்ன விஷயம்?” என்றான்.

“நீணா எதுக்கு அப்படி கத்துனா?”

“தெரியல…”

“நீணா என்னால ஒத்துக்க முடியாதுன்னு சொன்னாளே… அப்படின்னா?”

“தெரியல மோனிகா… நானும் அதான் யோசிக்குறேன்…” என்றுக் கூறி தாடையை தடவினான் ஹர்ஷா.

அவர்கள் எதுவும் சொல்லாமல் தாங்கள் மட்டும் யோசித்து எந்த பயனும் இல்லை என்றுணர்ந்த மோனிகா “சரி வா… அவங்களா சொன்னா பார்த்துக்கலாம்…” என்றுக் கூறி நடையின் வேகத்தைக் கூட்டினாள். ஹர்ஷாவும் வேகமாக நடக்க நால்வரும் கிட்டத்தட்ட ஒன்றாக வகுப்பறைக்குள் நுழைந்தனர்.

அவரவர் இடத்தில் அமர்ந்த போது ஒரே ஒரு நொடி நீணாவும் ரோஹித்தும் முறைத்துக் கொண்டதை கவனித்து விட்டனர். இதை அவர்களிடம் கேட்டாலும் சரியான பதில் வரப் போவதில்லை என்பது புரிந்து அமைதியாக இருந்தனர் ஹர்ஷாவும் மோனிகாவும்.

வகுப்புகள் துவங்கவும் நீணா கலகலப்பாக பேசினாள். வழக்கம்போல் அரட்டை அடித்தாள். மோனிகா ‘இவளா காலையில் கத்தியது?’ என்று யோசிக்கும் அளவிற்கு இருந்தன அவளது நடவடிக்கைகள்.

“நோட்ஸ் எழுதி… இன்டர்னல் அஸெஸ்மென்ட் எழுதி… செமஸ்டர் எக்ஸாமும் எழுதி… இப்படி எழுதி எழுதி விரல் எல்லாம் தேஞ்சி வெறும் எலும்பு மட்டும் தான் மிச்சம் இருக்கு… இல்ல மோனி?”

“சும்மா இரு நீணா… ப்ளீஸ்டி… ஏற்கனவே இவருக்கிட்ட மாட்டி திட்டு வாங்கியாச்சு. எதையாவது சொல்லிட்டு நீ சைலண்டா உட்கார்ந்திருப்ப… நாந்தான் சிரிச்சு மாட்டுவேன்”

“நீ ஏன் மோனி சிரிக்குற? சிரிக்காம கேளு…”

“அதெல்லாம் எனக்கு வராது. அது எப்படி நீணா போர்ட்ட பார்த்து எழுதிட்டே வாயே அசைக்காம பேசி எல்லாரையும் நக்கலடிக்குற?”

“அதெல்லாம் தனி கலை. ஒவ்வொரு ஸ்டூடென்ட்டும் தெரிஞ்சு வெச்சிருக்க வேண்டிய கலை. ஸ்கூல் காலேஜ் போய் வேற எத கத்துக்குறோமோ இல்லையோ… கண்ண தொறந்து வச்சுக்கிட்டே தூங்குறதுக்கும் வாயசைக்காம பேசுறதுக்கும் கண்டிப்பா கத்துக்கணும்”

ஹர்ஷாவின் நிலையும் கிட்டத்தட்ட இதே தான்… கல்லூரியில் அவர்களுக்கு இருந்த சில வசதி குறைவுகளுக்காக ஸ்ட்ரைக் செய்ய வேண்டும் என்று ஒரு மாணவன் ஆவேசமாகக் கூறினான்.

ஹர்ஷா ரோஹித் உட்பட சில மாணவர்கள் அங்கே இருந்தனர். அனைவரும் ஒன்றும் பேசாமல் அமைதிக் காத்தாலும் அவர்கள் மனதிற்குள்ளும் ஆவேசம் இருக்க தான் செய்தது. ரோஹித் முன் வந்து அந்த மாணவனிடம் பேசினான்.

“இப்போ ஸ்ட்ரைக் பண்ணி மட்டும் என்ன ஆகப்போகுது? நமக்கு தான் டைம் வேஸ்ட். பாடம் நடத்தலன்னாலும் செமஸ்டர் எக்ஸாம் வைக்க தான் போறாங்க. எக்ஸாம் ஒழுங்கா பண்ண முடியாம… அட்டெண்டன்ஸ் இல்லாம… கடைசியில கஷ்டப்பட போறது என்னவோ நம்ம தான்.

அதுக்கு ஒழுங்கா அமைதியா நம்ம கிளாஸ்ல இருந்து நாலு பேரு மட்டும் போய் மேனேஜ்மெண்ட்கிட்ட பேசுவோம். நம்மளோட கஷ்டத்தை எடுத்து சொல்லுவோம். வேண்டியத கேப்போம். கண்டிப்பா கன்ஸீடர் பண்ணுவாங்க”

“அட போ ரோஹித்… எது நடந்தாலும் பேசுவோம் பேசுவோம்னு… நீங்களே யாராவது போய் பேசி பாருங்க. என்ன தான் பண்ணுறாங்கன்னு நானும் பாக்குறேன்” அலுத்துக் கொண்ட அந்த மாணவன் நகர்ந்து சென்று விட்டான்.

மாலை கல்லூரி நேரம் முடிந்ததும் நீணா முன்னே சென்று விட மோனிகா வெளியே வந்தபோது “நீ எவ்வளவு தடவ கேட்டாலும் என் பதில் நோ தான் ரோஹித்” என்று அவள் கூறுவது தெளிவாகக் கேட்டது. அவர்கள் அருகில் செல்லலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் தயங்கி நின்றாள் மோனிகா.

“அதையும் பாக்கலாம்… நீ யெஸ் சொல்லுவ…” அவளை முறைத்து அவ்விடம் விட்டு நகர்ந்தான் ரோஹித். தன் பின்னால் அரவம் கேட்டதும் திரும்பிப் பார்த்த மோனிகா ஹர்ஷாவை கண்டாள்.

“இவங்க ரெண்டுப் பேரும் என்ன பேசுறாங்க ஹர்ஷா?” என்று மோனிகா கவலையாகக் கேட்கவும் புருவ மத்தியில் முடிச்சு விழ “எதுக்கு ஒத்துக்குறத பத்தி பேசுறாங்க?” என்று பதிலுக்கு கேள்விக் கேட்டான் ஹர்ஷா.

“இப்போ எனக்கு டைம் ஆச்சு… நான் கெளம்புறேன் ஹர்ஷா. நாளையிலேருந்து இவங்கள நோட் பண்ணணும்”

“ம்ம்… நீ நீணாவ கவனி. நான் ரோஹித்த பாக்குறேன். பை மோனிகா”

வீட்டிற்கு செல்லும் நேரம் முழுவதும் மோனிகா தன் தோழியை குறித்தே யோசித்துக் கொண்டிருந்தாள். நீணாவை அவளுக்கு இந்த மூன்று ஆண்டுகளாகத் தெரியும். யாரையுமே புண்படுத்தக்கூடாது என்று எண்ணுபவள்.

அப்படிப்பட்டவள் எதற்காக இன்று ரோஹித்திடம் அவ்வாறு பேசினாள்? அதிலும் நீணாவின் கோப முகத்தை இன்று தான் மோனிகா பார்க்கிறாள். கவலைக்கிடையிலும் முகத்தில் புன்முறுவல் பூத்தது. “உனக்கு இவ்வளவு கோவம் வருமாடி?”

இது அனைத்தையும் யோசித்தபோது ஹர்ஷாவை பற்றிய நினைவும் மனதில் எழாமல் இல்லை.

“எப்படி ஹர்ஷாவும் என்ன மாதிரியே யோசிக்குறான்? நான் கேட்க நினைச்சதெல்லாம் அவனும் கேட்டானே…”

பைக்கில் செல்லும்போது மோனிகாவை பற்றி யோசித்த ஹர்ஷா முகம் மலர்ந்து புன்னகைத்தான். “எப்பொழுதும் விளையாட்டுத்தனமா பேசுறவ… பிரண்ட்டுக்கு பிரச்சனைன்னதும் கவலைப்படுறாளே… அவளோட இந்த முகமும் நல்லா தான் இருக்கு.

ரோஹித் எதுக்கு நீணாகிட்ட அப்படி பேசினான்? அவனுக்கு இருக்கிற பொறுமை வேற யாருக்கும் கிடையாதுன்னு நான் நெனச்சுட்டு இருக்கேன்…”

மறுநாள் காலை நீணாவின் அருகில் அமர்ந்து நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தாள் மோனிகா. வகுப்பறைக்குள் நுழைந்த ரோஹித் நேராக அவர்கள் அருகில் வந்து “ஹாய் நீணா… நான் கேட்டத பத்தி யோசிச்சியா?” என்று புன்னகையுடன் கேட்க “ஹாய்… அதான் நேத்தே சொல்லிட்டனே ரோஹித்…” என்று பதில் கூறினாள் நீணா.

ரோஹித் வேறு எதுவும் கூறாமல் தன் இடத்தில் சென்று அமர்ந்தான். மோனிகா இருவரையும் மாறி மாறிப் பார்த்தவள் ஹர்ஷா அப்போது வகுப்பறைக்குள் இல்லை என்பதை உணர்ந்து மொபைலை எடுத்து அங்கு நடந்தவற்றை அவனுக்கு சுருக்கமாக மெசேஜ் அனுப்பினாள்.

ஹர்ஷா மெசேஜை படித்து விட்டு “இவங்க நார்மலா பேசுற மாதிரி தெரியலயே… என்ன விஷயமா இருக்கும்?” என்று அனுப்பினான். மோனிகாவும் குழப்பத்தில் இருந்ததால் எதுவும் பதில் அனுப்பாமல் அப்படியே விட்டு விட்டாள்.

அன்று மாலை சற்றுத் தொலைவில் ரோஹித் நிற்பதைக் கண்ட நீணா “இதோ வந்துடுறேன் மோனி…” என்றுக் கூறி வேகமாக சென்றாள். அவள் பேசத் துவங்கும் முன்னே “நாளைக்குப் பார்க்கலாம் நீணா… பை…” என்றுக் கூறி வேகமாக கிளம்பி விட்டான் ரோஹித்.

அவன் இப்படி யாரையும் புறக்கணிப்பவன் இல்லை என்பதை நன்கு அறிந்த ஹர்ஷா என்ன செய்வதென்றுத் தெரியாமல் விழித்தான். நீணா அவனைப் பார்த்து புன்னகையுடன் தலையசைத்து எதுவுமே நடவாதது போல் எதிர் திசையில் சென்று விட்டாள்.

ஹர்ஷா தான் குழம்பிப் போனான். மோனிகாவின் நினைவு வரவே உடனே மொபைலை எடுத்து அவளுக்கு அழைத்தான்.

“உனக்கு லேட் ஆகலன்னா கேண்டீன் வறீயா மோனிகா?”

“வரேன் ஹர்ஷா” என்றுக் கூறி வைத்து கேண்டீன் நோக்கி நடந்தாள்.

தனக்கு முன்பே வந்து காத்துக் கொண்டிருந்தவளைக் கண்டதும் அவளிடம் செல்லாமல் கவுண்டர் அருகில் சென்று இரண்டு காபி வாங்கி எடுத்து வந்து மோனிகாவின் எதிரில் அமர்ந்தான் ஹர்ஷா. அவனின் இந்த செயல் ஏனோ அவள் மனதில் சாரலடிக்க வைத்தது.

“தாங்க்ஸ்” கப்பை கையில் எடுத்தவள் தான் அறிந்தவற்றைக் கூற அவனும் தான் பார்த்தவற்றை கூறினான்.

இரண்டு நிமிட அமைதிக்குப் பின் மோனிகா மெல்ல தலையை நிமிர்த்தி “ஒரு வேல ரோஹித் நீணாகிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்டானா?” என்றுக் கேட்டாள்.

“ச்ச ச்ச… அப்படி இருக்காது…” உடனே அதை மறுத்த ஹர்ஷா சில நொடி யோசனைக்குப் பிறகு “ஒரு வேலை அப்படி இருக்குமோ?” என்றுக் கேட்டான்.

தன் முன் இருந்த கப்பின் விளிம்பில் விரலால் தேத்தவள் “அப்படியே இருந்தாலும் நீணா எதுக்கு மறுக்கணும்?” என்றாள்.

-ப்ரத்யுக்‌ஷா ப்ரஜோத்