சாமரம் வீசும் புயலே-பாகம்-3

204

“அது அவ விருப்பம் மோனிகா… ஆனா ரோஹித் நல்ல பையன்”

இருவரும் தங்களுக்குள் யோசனையில் மூழ்கினர். வெளியே மெல்ல இருட்டத் துவங்கியது.

“இப்போ என்ன ஹர்ஷா பண்ணுறது?”

“லெட்ஸ் ஸீ… ரெண்டு நாள் என்ன பண்ணுறாங்கன்னு பாக்கலாம்… அப்புறமும் இவங்க சேர்கிற மாதிரி தெரியலன்னா நம்ம ஏதாவது செஞ்சு சேர்த்து வெக்கலாம்”

ஹர்ஷாவின் பேச்சு தெளிவாக இருந்தது. மோனிகாவிற்கும் அதுவே சரியென்று பட “நாளைக்கு பாக்கலாம்…” என்றுக் கூறி கல்லூரியிலிருந்துக் கிளம்பினாள். மறுநாள் காலை வந்ததிலிருந்து நீணாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் மோனிகா. ஹர்ஷா ரோஹித்தின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் இருவரும் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இந்த பார்வைப் பரிமாற்றம் அன்று முழுவதும் தொடர்ந்தது.

முதலில் நீணாவை பார்த்துவிட்டுத் திரும்பி ஹர்ஷாவை பார்த்து “எதுவும் தெரிந்ததா?” என்றுக் கண்களால் வினவுவாள் மோனிகா. ரோஹித்தை ஒரு பார்வைப் பார்க்கும் போதெல்லாம் திரும்பி மோனிகாவை பார்த்து அவளின் கேள்விக்கு தலையை அசைத்து விடையளிப்பான் ஹர்ஷா. நேரம் செல்ல செல்ல ஹர்ஷாவிற்கு மோனிகா என்ன செய்துக் கொண்டிருக்கிறாள் என்றுப் பார்க்கும் ஆவல் அதிகரித்தது. ஹர்ஷா தன்னைப் பார்க்கிறானா என்றுத் தெரிந்துக் கொள்ள ஆசைப்பட்டாள் மோனிகா.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பதும் சில நொடிகளிலேயே தங்கள் பார்வையைத் திருப்பிக் கொள்வதுமாக இருந்தனர். ரோஹித் நீணாவை கவனிப்பதில் அவர்கள் கவனம் இருக்கவில்லை.

மாலை நீணாவுடன் செல்வதால் அவள் முன்னால் ஹர்ஷாவிடம் எதுவும் பேச விரும்பாமல் அவன் புறம் திரும்பி லேசாக தலை அசைத்து விடைப்பெற்று சென்றாள் மோனிகா. அவள் கண்களில் இருந்து மறையும் வரை நின்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா. காலை வகுப்பறைக்குள் நுழையும் போது மோனிகாவின் அருகில் நீணா இல்லை என்றதும் வேகமாக அவளிடம் வந்த ஹர்ஷா ஒரு நொடி என்ன பேசுவதென்று யோசித்து “நீணா ஏதாவது சொன்னாளா?” என்றுக் கேட்டான்.

“இல்லையே…” அமைதியாக செல்ல நினைத்த ஹர்ஷா சட்டேன்றுத் திரும்பி “அவங்க லவ் பண்ணா அது தப்புன்னு  நினைக்கிறீயா?” என்றுக் கேட்டான்.

“இல்ல இல்ல… ஒண்ணா இத்தன வருஷம் படிச்சிருக்கோம். ஒருத்தர பத்தி ஒருத்தருக்கு நல்லா தெரியும். ஈசியா புரிஞ்சுக்க முடியும். ரோஹித் – நீணா பொருத்தம் நல்லாயிருக்கும்”

அவள் கண்களையேப் பார்த்துக் கொண்டிருந்தவன் எதுவும் கூறாமல் தன் இருப்பிடம் சென்று அமர்ந்தான். அவன் ஏதாவது பதில் கூறுவான் என்று எதிர்ப்பார்த்தவளுக்கு அவனின் அமைதி மனதை வாட்டியது. அதன் பின் பல முறை அவனை திரும்பிப் பார்த்துக்கொண்டே இருந்தாள். எதற்காக என்றே தெரியாமல் அவனிடம் பேச வேண்டும் என்று தோன்றியது. அவள் தன்னைப் பார்ப்பது ஹர்ஷாவிற்கும் தெரிந்தே இருந்தது. ஆனாலும் அவள் புறம் திரும்பாமல் தன் நண்பர்களுடன் பேச ஆரம்பித்தான். மோனிகா பார்க்காதபோது அவளை பார்க்கவும் தவறவில்லை.

காலை தன்னிடம் பேசிச் சென்றபின் தன் கண்களிலேயேப் படாமல் இருக்கும் ஹர்ஷாவை எண்ணி மோனிகாவிற்கு வருத்தமாக இருந்தது. ஒரு வேலை ஓடி ஒளிகிறானோ என்று கோபம் கூட வந்தது.

நேரம் ஆக ஆக அவனைக் காணும் ஆவல் அதிகரித்துக் கொண்டே இருக்க “கிளாஸ் பங்க் பண்ணிட்டு எங்க போனான்?” என்று அவள் யோசிக்கும் போதே அந்த நாளின் கடைசி வகுப்பின் பொது உள்ளே வந்தான் ஹர்ஷா.

அவனைக் கண்டதும் துள்ளிய மனதுடன் மாலையாவது அவனிடம் பேச வேண்டும் என்று அவள் நினைத்திருக்க கிளாஸ் முடிந்ததும் முதல் ஆளாய் கிளம்பிச் சென்றிருந்தான் ஹர்ஷா. அவள் அனுப்பிய மெசேஜ் எதற்கும் அவன் பதில் அனுப்பவில்லை.

ஹர்ஷாவிற்கு தான் எவ்வாறு உணர்கிறோம் என்றே புரியவில்லை. மோனிகாவை எதற்காக நேற்றிலிருந்து இத்தனை முறைத் திரும்பிப் பார்க்கிறோம் என்றெண்ணிக் குழம்பினான். தன் மனதின் குழப்பங்களை பற்றி அவனுக்கு யோசிக்க அவகாசம் தேவைப்பட்டதால் அவளுக்கு எந்த பதிலும் அனுப்பாமல் அன்று முழுவதும் அவளிடம் பேசும் சந்தர்ப்பத்தையும் தவிர்த்து வந்தான்.

அடுத்த நாள் காலை ஹர்ஷா வகுப்பறைக்குள் நுழைந்ததிலிருந்து அவன் இடத்தில் சென்றமரும் வரை அவனையேப் பார்த்துக் கொண்டிருந்த மோனிகா, அவன் தன் பக்கம் திரும்பவில்லை என்றதும் எழுந்து அவனருகில் சென்றாள்.

“ஏன் நேத்து எதுவும் சொல்லாமப் போயிட்ட?”

“பேசிட்டேன். கெளம்பிட்டேன்” விளக்கம் எதுவும் கொடுக்காமல் அமைதியாகவே பதில் கூறினான். இப்படி சொல்பவனிடம் அடுத்து என்ன பேசுவதென்றுப் புரியாமல் அவள் அமைதியாக நிற்க சிறிது நேரம் அவளையே உற்று நோக்கினான் ஹர்ஷா.

“ஏன் மோனிகா? நான் அமைதியா போனா உனக்கென்ன?”

“இல்ல… அது… அது வந்து… என்னமோ கஷ்டமா இருந்துது…”  உண்மையில் அவன் கேட்ட கேள்விக்கு அவளுக்கு விடைத் தெரியவில்லை. ஏன் என்று பலமுறை தன்னையேக் கேட்டுக் கொண்டாள். இவ்வளவு நேரம் அமர்ந்தப்படியே அவளிடம் பேசிக் கொண்டிருந்தவன் எழுந்து நின்றான். நேற்றிலிருந்து தான் யோசித்தது முடிவெடுத்தது என்று அனைத்தும் அவனுக்கு நினைவு வந்தன.

அவள் கண்களைப் பார்த்து “என் கூட இத்தன இயர்ஸ் படிச்சிருக்க… உனக்கு என்னைப் பத்தி தெரியும்… உன்னால என்ன புரிஞ்சுக்க முடியும்… நான் உன்ன லவ் பண்ணுறேன்னு சொல்லி ப்ரபோஸ் பண்ணா அக்செப்ட் பண்ணுவியா மோனிகா?” என்றுக் கேட்டான்.

அவன் கூறியதைக் கேட்டு முதலில் அதிர்ந்து நம்ப முடியாமல் அவனைப் பார்த்தாள். ஏனோ அவனின் பார்வையை சந்திக்க முடியாமல் சில நொடிகளிலேயே தலைக் குனிந்தவளின் கன்னம் சிவக்கத் துவங்கியது.

“ம்ம்” வெளிவராதக் குரலில் லேசாக தலையை அசைத்து தன் சம்மதத்தை தெரிவித்தாள் மோனிகா. ஷிவானி வாயைப் பிளந்து புருவம் உயர்த்தி கண்கள் விரிய மோனிகா கூறியதனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாள். மோனிகா அவள் கொடுத்த ரியாக்ஷனை பார்த்ததும் சிரித்துவிட்டாள்.

“எத்தன தடவ அந்த நாட்களப் பத்தி நானும் ஹர்ஷாவும் பேசியிருக்கோம்… அன்னைக்கு ஹர்ஷா எப்படி பீல் பண்ணான்னு அவன் சொல்லுறப்போ எல்லாம் கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கும். இத நாங்க ரோஹித் நீணாகிட்ட சொன்னப்போ அவங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அவங்களால தான் நாங்க சேர்ந்தோம்னு தெரிஞ்சதும் எங்கக் கூட இன்னும் ரொம்ப க்ளோஸ் ஆகிட்டாங்க.
அவங்க அன்னைக்கு எதுக்கு சண்டப் போட்டாங்கன்னு எங்களுக்குத் தெரியாது… இன்னைக்கு வரைக்கும் தெரியாது… அவங்க உண்மையில சண்டை தான் போட்டாங்களானு கூடத் தெரியாது…

அதுக்கப்பறம் ரொம்ப நாள் கழிச்சு அவங்க லவ் பண்ணுறாங்கன்னு மட்டும் தெரிஞ்சுக்கிட்டோம். ஆனா அவங்களுக்கு முன்னாடி நாங்க எங்க வீட்டுல பேசி… எங்களுக்கு கல்யாணம் ஆகி… தோ பாத்தியா? 8 மாசம்” மேடிட்டிருந்த தன் பெரிய வயிற்றை தடவிக் காண்பித்தாள் மோனிகா.

ஷிவானி ஏதோ கேட்க வந்து பின் அடக்க முடியாமல் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள். அவளை முறைத்த மோனிகா “சிரிப்பா இருக்கா? நான் என்ன ஜோக்கா சொன்னேன்? அவங்க ரெண்டுப் பேருக்கிட்டயும் கேர்புல்லா இருக்கணும் தெரிஞ்சுக்கோ…  கூட இருக்க பிரண்ட்ஸ் லவ் பண்ண ஆரம்பிச்சா ‘நம்ம நம்மளோட மனச ரொம்ப பத்திரமாப் பாத்துக்கணும்… இல்லன்னா நமக்கும் ஆச வந்துடும்…‘ அப்படின்னு தான் நம்மளும் நினைப்போம். ஆனா முடியாது. காதல் தொற்று நோய் மாதிரி” என்றாள்.

“என்ன வேல பார்த்துட்டு என்ன பேச்சு பேசுற? நீயே இப்படி பேசினா மத்தவங்க ஏன் மோனிகா பேச மாட்டாங்க?” இருவருமே ஒருமைக்குத் தாவியிருந்தனர். இத்தனை நாட்களாக அவர்களுக்குள் தோன்றாத நெருக்கம் இன்று உருவாகியது போல் இருந்தது.

“அதெல்லாம் அப்படிதான். நேரம் ஆகுது. வா போகலாம்”

“ரோஹித் லவ்வ நீணா எப்போ அக்செப்ட் பண்ணிக்கிட்டா?”.

“யாருக்குத் தெரியும்? ரோஹித் எப்போ ப்ரொபோஸ் பண்ணான்? நீணா எப்போ ஒத்துக்கிட்டா? எதுவும் தெரியாது. நாங்க கேட்டதில்ல. அதுக்கு அப்பறம் எங்களுக்கு அவங்களப் பத்தி யோசிக்க எங்க இருந்துது நேரம்?” லேசாக அசடு வழிந்தபடியே எழுந்தாள் மோனிகா.

ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்து ஸ்நேகமாக புன்னகைத்து அருகில் இருந்த அறையின் கதவில் விரல் மடக்கி லேசாகத் தட்டி கதவைத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தான் ரோஹித்.

“குட்டி பாப்பா இனிமே ஐஸ்க்ரீம் சாப்பிடலாம்… என்ன… பீவர் போச்ச்ச்…” இரு கைகளையும் விரித்து தலை சாய்த்து அழகாக புன்னகைத்தாள் நீணா. அவள் எதிரில் குட்டி தேவதையாய் குண்டு குண்டு கண்களுடன் ஒரு பெண்ணும் அவளுடைய தாயும் அமர்ந்திருந்தனர். அவள் கூறிய விதத்தை ஒரு நொடி ரசித்தவன் “நீணா” என்று மெதுவாக அழைத்தான். அவனை நிமிர்ந்துப் பார்த்தவள் வேகமாக மணிக்கட்டைத் திருப்பி நேரம் பார்த்தாள்.

“ஒஹ்ஹ்… 2 மினிட்ஸ்…”

ரோஹித் புன்னகையுடன் “ஓகே” என்றான்.

அருகில் இருந்த பேப்பரில் வேகமாக எழுதி அதை தாயிடம் கொடுத்து டேபிளின் டிராயரைத் திறந்து அதிலிருந்து ஒரு சாக்லேட் எடுத்து அந்த குட்டி பெண்ணின் கையில் கொடுத்தாள்.  அழகாக சிரித்து அதை வாங்கி “தான்கூ” என்றுக் கூறி தன் தாயுடன் அறையை விட்டு வெளியேறினாள் அந்த சிறுமி.

அறை வாசலில் கதவருகே நின்று இவையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான் ரோஹித். அவர்கள் சென்றதும் டேபிள் மேல் இருந்தவற்றை எடுத்து டிராயரினுள் வைத்துப் பூட்டி ஹான்ட் பேக் எடுத்து மாட்டிக் கொண்டு எழுந்தாள் நீணா.
ரோஹித்தின் அருகில் வந்து “போகலாம்” என்றுக் கூறியதும் அவன் அவளுக்காக கதவைத் திறந்து விட இருவரும் அந்த அறையை விட்டு வெளியே வந்தனர். ரிசப்ஷனில் சொல்லிக் கொண்டு ரிஜிஸ்டரில் கையெழுத்திட்டாள் நீணா.

“கெளம்பியாச்சா நீணா? ரோஹித் எப்படி இருக்கீங்க?” என்றுக் கேட்டபடி அவர்களை நோக்கி வந்தார் லக்ஷ்மி.

“நல்லா இருக்கேன்…”

“வீட்டுக்கா?…. வரீங்களா?….. டிராப் பண்ணிடுறோம்…” லக்ஷ்மி இவர்கள் வீட்டின் அருகில்தான் வசிக்கிறார். அவருடைய கணவர் வந்து அழைத்து செல்ல முடியாத நேரங்களில் ரோஹித் நீணாவுடன் செல்வது வழக்கம் என்பதால் நீணா அவரை தங்களுடன் வருமாறு அழைத்தாள்.

“இல்ல நீணா… லேட் ஆகும். நீங்க கிளம்புங்க. ஆனாலும் காலையில வரப்போ எந்த ஸ்மைலிங் பேஸோட வரீங்களோ அப்படியே நைட் வரைக்கும் எப்படி தான் இப்படி சிரிச்சுக்கிட்டே இருக்கீங்களோ… குட் நைட்” என்றுக் கூறி அவர்களைக் கடந்து சென்றார் லக்ஷ்மி.

அவர்கள் வேலை பார்க்கும் வளாகம் பெரியது. அனைவரும் தங்கள் வாகனங்களை சுலபமாக எடுத்து செல்வதற்காக, முன்புறம் பொது பார்க்கிங்கும் பின்புறம் அங்கே வேலை செய்பவர்களுக்கான தனி பார்க்கிங் ஏரியாவும் இருந்தது. கட்டிடத்தின் பின்புறம் நோக்கி நடந்தபோது நீணாவை ஓரக் கண்ணால் பார்த்து “அது என்ன எல்லா குழந்தைகளுக்கும் சாக்லேட் குடுக்குற? நெறைய ஸ்டாக் வெச்சிருக்கியா?” என்றுக் கேட்டான் ரோஹித்.

“ஒரு பீடியாட்ரீஷியன் (paediatrician) அவங்கக்கிட்ட வர எல்லா குழந்தைகளுக்கும் சாக்லேட் குடுக்கணும். அப்போ தான் குழந்தைங்க டாக்டர்கிட்ட வந்திருக்கோம் அப்படிங்குற பயம் இல்லாம ஜாலியா இருப்பாங்களாம்” என்றுக் கூறி சிறிது இடைவெளி விட்டு “அவங்க சிரிக்குறதப் பார்த்தா எனக்கு சந்தோஷமா இருக்குமாம்…” என்றாள் நீணா.

“ஓஹோ… யாரும்மா இப்படியெல்லாம் சொன்னா?”

வேகமாக பதில் கூற வாயைத் திறந்து அவனை ஒரு முறைப் பார்த்தவள் பின் நேராய் பார்த்து நடந்தபடியே “அது ஒரு கார்டியாக் சர்ஜன் (cardiac surgeon)” என்றாள் அமைதியாக.

“ஓஹோ… அவருக்கு எப்படி உன்னைப் பத்தி தெரியும்?”

“என் ஹப்பிக்கு தெரியாதா என்னை பத்தி…” என்று நீணா கூறவும் இருவருமே சிரித்தனர். காரின் அருகில் வந்து விடவே அவளுக்காக கதவைத் திறந்து விட்டான் ரோஹித்.

அவர்கள் தங்கியிருந்தது ஒரு கேட்டட் கம்யூனிட்டி. உள்ளே அப்பார்ட்மென்ட்ஸ், வில்லா, தனி வீடு, ரோ ஹவுஸ் என்று அனைத்து வகையறாக்களும் உண்டு. அது பொதுவான இடம் என்ற போதிலும் மருத்துவ நண்பர்கள் பலர் சேர்ந்து அங்கே வீடு வாங்கியதால் அந்த வளாகத்தினுள் ஒரு பகுதி மருத்துவர்கள் குடியிருப்பு போல் ஆகிவிட்டது.

ப்ரத்யுக்‌ஷா ப்ரஜோத்