சாமரம் வீசும் புயலே பாகம்-5

224

“எப்படி அத்தை இருக்கீங்க? ஏன் ரெண்டு நாளா போன் பண்ணல? மாமா நல்லா இருக்காங்களா?” என்று அவள் அடுக்கிக் கொண்டே போக “பாருடா… புருஷன்கிட்ட அந்த கத்துக் கத்திட்டு மாமியார்கிட்ட பம்முறத…” என்று ரோஹித் அவள் காதில் மெதுவாகக் கூறினான்.

அவன் அவ்வளவு அருகில் நெருங்கி வந்தமர்ந்ததும் நீணா அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவள் தோளை சுற்றிப் போட்டிருந்த கையை கழுத்தை சுற்றிப் போட்டு அவளை இன்னும் அருகில் இழுத்தபோது விழாமல் இருக்க அவன் மடி மீதே கையை ஊன்றி அமர்ந்தாள்.

ரோஹித் அவள் காதருகில் வந்து பேசியதும் அவனின் சூடான மூச்சுக் காற்றும், அவள் காது மடலில் அவன் உதடுகளின் தீண்டலும் அவளை சிலிர்க்கச் செய்தன.

இதற்கிடையில் அவள் கேட்டக் கேள்விகள் அனைத்திற்கும் ரோஹித்தின் தாய் மஞ்சு பதில் அளித்து முடித்திருந்தார்.

அதன் பின்பும் அவளிடமிருந்து பதில் இல்லாமல் போகவே காதில் வைத்திருந்த மொபைலை ஒரு முறை எடுத்துப் பார்த்தவர் “கட் ஆகலையே…” என்றுத் தனக்குள் கூறி “ஹலோ நீணா… இருக்குறியா கண்ணு?” என்று உரக்கக் கேட்டார்.

அந்த சில நொடிகள் கண்களை மூடி ரோஹித்தின் மீதே முழுதாக சாய்ந்து அமர்ந்திருந்தவள் மஞ்சுவின் குரலில் சுதாரித்து “ஹான்… அத்… அத்தை… இருக்கேன்… நான் இருக்கேன்… சொல்லுங்க எப்படி இருக்கீங்க?” என்று அவர் எவ்வளவு நேரமாக காத்துக் கொண்டிருக்கிறாரோ என்ற பதட்டத்தில் வேக வேகமாக பேசினாள்.

ரோஹித் சத்தம் வராமல் சிரித்து அவளையே பார்த்தான். அவனிடம் இருந்து விலகி அமர நீணா செய்த எந்த முயற்சியும் பயனளிக்கவில்லை.

அவள் விலக நினைத்த ஒவ்வொரு முறையும் ரோஹித் வேகமாக அவளை இழுக்கவும் அவன் மடி மீதே மீண்டும் வந்து விழுந்தவள், இனி தப்ப முடியாது என்பது நன்றாகத் தெரிந்ததும் அசையாமல் அவன் அருகிலேயே அமர்ந்தாள்.

“நீணா என்ன கண்ணு ஆச்சு? நல்லா இருக்குறியா? ஏங்கண்ணு குரலே இவ்வளவு பதட்டமா இருக்குது? ஏதும் பிரச்சனையா? அவன் உன்ன ஏதும் சொன்னானாக்கும்?” என்றுக் கேட்டார் மஞ்சு.

“அதெல்லாம் இல்லங்க அத்த…  ஏதோ யோசனையில இருந்துட்டேன்…  மச்சான் எதுவும் சொல்லல. பக்கத்துல தான் இருக்காங்க…” அவனை முறைத்தபடியே கூறினாள் நீணா.

“ஓஹ்… சரி நீணா… சும்மா தான் உங்கக்கிட்ட பேசுறதுக்கு போன் போட்டேன்… ஒடம்ப பார்த்துக்கோ கண்ணு… நேரத்துக்கு சாப்பிடு என்ன… சரி வெச்சுடவா?”

“சரிங்க அத்த…”

அவளின் இந்த “மச்சான்” என்ற அழைப்பு அவனுக்குப் பிடிக்கும். அவர்கள் ஊர் வழக்கப்படி கணவனை பெண்கள் அழைக்கும் முறை… இருவருமே சென்னையில் படித்து வளர்ந்தவர்கள் என்பதால் ஊர் வழக்கம் எல்லாம் ஊரோடு மட்டும் என்றாகி விட்டது.

அவளுடைய பெற்றோர்கள் முன்னால், அவனுடைய பெற்றோர்கள் முன்னால் நீணா ரோஹித்தை “மச்சான்” என்றே அழைப்பாள். பொதுவாக அப்படி அழைப்பதை அவர்கள் ஊரில் ரோஹித்தும் கேட்டிருக்கிறான்.

ஆனால் திருமணத்திற்கு பின் முதல் முறை பெரியோர்கள் முன்னால் நீணா அவனை அப்படி அழைத்ததும் அடக்க முடியாமல் சிரித்துவிட்டான். போகப்போக அதுவே பழகி மனதிற்கு இதமாக இருந்தது.

என்ன தான் சிறுபிள்ளைத்தனமாக சண்டை போட்டுத் திரிந்த போதும் அவளின் இந்த அழைப்பைக் கேட்கும்போது ‘தான் அவளுடைய கணவன்’ என்ற எண்ணம் தோன்றி கர்வம் கொள்ள செய்யும்.

“கைய எடு முதல்ல…. மறுபடியும் போன் அடிக்குதுப் பாரு… எடு அத…. கைய எடு……….”

நீணாவின் குரலில் தன் சிந்தனையில் இருந்து வெளி வந்தவன் மீண்டும் அடிக்கத் துவங்கியிருந்த மொபைலை பார்த்து “உங்கப்பா” என்றுக் கூறி அழைப்பை ஏற்று “சொல்லுங்க அங்கிள்…” என்றான்.

“நல்லா இருக்குறீங்களா? என்ற மக உங்கள கண் கலங்காம ஒழுங்கா பார்த்துக்கிறாளா?” என்றுக் கேட்டு சிரித்தார் தினேஷ்.

“நல்லா இருக்கேங்க அங்கிள்… நீணா பார்த்துக்காம வேற யாருங்க அங்கிள் பார்த்துக்க போறா? நீங்க எப்படி இருக்கீங்க? ஆன்ட்டி எப்படி இருக்காங்க?”

அருகில் அமர்ந்திருந்த நீணா நெளிவதை ஓரக் கண்ணால் ரசித்தப்படியே தான் பேசினான். அவள் இடுப்பில் தன் விரல்களால் கோடு போட்டு அவளை இம்சித்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் நெளிவாள் என்று தெரியாதா என்ன…

“அவள விட்டுக் குடுக்க மாட்டீங்களே… எப்படி இருக்குறா?”

“நல்லா இருக்காங்க அங்கிள்…” என்றவன் திரும்பி அவளைப் பார்த்தான்.

அவன் சற்றும் எதிர்ப்பாரா தருணத்தில் அவனின் டீ ஷர்ட்டை இரண்டு கைகளாலும் பிடித்து இழுத்து அவன் இதழ்களில் அழுந்த முத்தமிட்டாள் நீணா.

“அப்புறம்… எப்போ இங்க வரீங்க? உங்களயெல்லாம் பார்த்தே ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்குதுங்க…”

தினேஷ் பேசுவதைக் கேட்ட ரோஹித் நீணாவிடமிருந்து விலக முயன்றான். அவனின் முயற்சியை உணர்ந்தவள் டீ ஷர்ட்டை விடுத்து அவன் கழுத்தை சுற்றி கைப்போட்டு இன்னும் அழுத்தமாக அவன் இதழ்களை மூடினாள்.

“ரோஹித்? லைன்ல இருக்குறீங்களா?”

ரோஹித் தன் பலம் மொத்தமும் திரட்டி நீணாவின் தோளை ஒற்றை கையால் பற்றித் தள்ளி விட்டு “சாரி அங்கிள்… சிக்னல் சரியா கிடைக்கல… சீக்கிரமே வரோம் அங்கிள்… ரெண்டுப் பேருக்கும் சேர்ந்த மாதிரி லீவ் கெடைக்கட்டுங்க… வரோம்” என்றான்.

எதையோ சாதித்துவிட்ட களிப்பில் நீணா அவனையே பார்த்த வண்ணம் புன்னகையுடன் அமர்ந்திருக்க ரோஹித் அவளை தீப்பார்வை பார்த்தான்.

“சரிங்க ரோஹித். வெச்சுறட்டுமா?” என்று தினேஷ் கேட்கவும் “சரிங்க அங்கிள்” என்றுக் கூறி காலை கட் செய்தவன் “அறிவில்ல?” என்று அடிக் குரலில் கத்தினான்.

“ஓஹ்… இருக்கே…” அலட்சியமாகக் கூறி எழுந்து படிகளில் இறங்கினாள் நீணா.

“ஏய்… கேட்டுக்கிட்டே இருக்கேன்… நீ பாட்டுக்குப் போற?” அவள் பின்னால் சென்று அவள் தோள் பற்றி வேகமாகத் தன் பக்கம் திருப்பினான்.

“எதுக்கு கத்துற? நான் என்ன செஞ்சேன்?”

“உங்கப்பா என்ன நெனைப்பாங்க? லூசு மாதிரி எதுக்குடி அப்படி செஞ்ச?”

“என்ன நெனைப்பாங்க? உங்கம்மா என்ன நெனச்சாங்களோ அதையே தான் நெனச்சிருப்பாங்க… நீ செஞ்சா தப்பில்ல… நான் செஞ்சது மட்டும் தப்பா?” என்றுக் கூறித் திரும்பியவளை கைப்பற்றி நிறுத்தினான்.

“ஒளறாத… அம்மா எதுவும் நெனச்சிருக்க மாட்டாங்க. அதோட நான் ஒண்ணும் உன்ன பதில் பேச விடாம பிடிச்சு வெச்சில்லயே…”

“நீ எதுவுமே செய்யலையா?” அவனை மேலும் கீழும் பார்த்து நக்கலாகக் கேட்டாள் நீணா.

“நான் உன் காதுக்கிட்ட வந்து பேசுனதுக்கு நீ அப்படி பேசாம அமைதியா இருந்தா அதுக்கு நான் பொறுப்பாடி?” மீண்டும் அவன் குரல் உயர்ந்திருந்தது.

“கடைசியா தள்ளி விட்டியே… அதே மாதிரி முதல்லயே தள்ளி விட்டிருக்க வேண்டியது தானே? நீ பேசாம இருந்ததுக்கு நான் பொறுப்பா ரோஹித்?” என்றுக் கேட்டவள் கையை அவன் பிடியிலிருந்து உருவிக் கொண்டாள்.

தன் மீதும் தவறிருப்பதால் அவள் பேசும் வார்த்தைகளை பொறுமையாக கேட்க வேண்டும் என்று அமைதியாக நின்றிருந்தான் ரோஹித். ஆனால் அவள் தன் கையை வெடுக்கென்று உருவிக் கொண்டதும் அவனுக்குக் கோபம் தலைக்கேறியது.

“உன்ன ஹர்ட் பண்ணக் கூடாதுன்னு நெனச்சேன் பாரு… என் தப்பு…

நான் பிடிச்சுத் தள்ளுற வேகத்தில நீ விழுந்து படில இடிச்சுக்கிட்டா என்ன செய்யுறதுன்னு யோசிச்சேன் பாரு… என் தப்பு…

உங்கப்பா பேசுறத ஒரு காதுல கேட்டாலும்… அவரு லைன்ல காத்திருக்காருன்னு தெரிஞ்சாலும்… நீ கிஸ் பண்ணத ரசிச்சேன் பாரு… என் தப்புதாண்டி…..

அப்பயே பிடிச்சுத் தள்ளி விட்டு ஓங்கி ஒண்ணு விட்டிருந்தா நீ இப்படியெல்லாம் பேசுவியா?” கண்களில் அனல் பறக்கக் கேட்டான் ரோஹித்.

“நீ அடிக்குற வரைக்கும் நான் வேடிக்க பார்த்துக்கிட்டு இருப்பேன்னு நெனைச்சியா?” பதிலுக்கு சூடாகவே கேட்டாள் நீணா.

“ஒரு நாள் இல்லன்னா ஒரு நாள் நீ வாங்கத்தான் போற… அன்னைக்குத் தெரியும்… ஆனா என் கையால அடி வாங்கிடாத… செத்துடுவ….” என்றுக் கூறியவன் அவளின் கைகளை நொறுங்கும் அளவிற்கு இறுக்கிப் பிடித்திருந்தான்.

நீ என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள் என்பது போல, அவனைப் பார்த்து கையை முறுக்கி வளைத்து நெளித்து அவன் பிடியிலிருந்து உருவிக் கொண்டு சமையலறை நோக்கி நடந்தாள் நீணா.

“பேசிக்கிட்டே இருக்கேன்… என்னடி நீ பாட்டுக்குப் போற?”

சட்டென்று நின்று அவனைத் திரும்பிப் பார்த்து “என்ன செய்யணும்னு சொல்லுற? மணி இப்பயே ஒன்பதரை… நான் சமைக்க வேண்டாமா? உன் கூட நின்னு கத்திக்கிட்டே இருந்தா சாப்பாடு யாரு செய்வா?” என்று நிதானமாகக் கேட்டாள் நீணா.

“என்னமோ நான் உனக்கு ஹெல்ப் பண்ணாத மாதிரி பேசுற? தெனம் ரெண்டுப் பேரும் சேர்ந்து தான நைட் சமைக்குறோம்… இன்னைக்கு நீ மட்டும் அமைதியா சமைக்கப் போனா என்ன அர்த்தம்?” என்றவனின் குரலில் எரிச்சல் மண்டிக் கிடந்தது.

கண்களை ஒரு முறை அழுந்த மூடித் திறந்தவள் “இப்போ உனக்கு என்னப் பிரச்சன? நான் உன்ன விட்டுட்டு சமைக்கப் போனதா? இல்ல எங்கப்பாகிட்ட பேச விடாம கிஸ் பண்ணதா?” என்றுப் பொறுமையாகக் கேட்டாள்.

“ஏய் என்னடி ஓவரா பேசுற? நீ செஞ்சக் காரியத்துக்கு இப்படி நின்னு பொறுமையா பேசிக்கிட்டு இருக்கேன் பாரு… நீ ஏன் பேச மாட்ட? நகரு…”

அவள் இரு தோள்களிலும் கை வைத்துப் பிடித்துத் தள்ளி விட்டு சமையலறைக்குள் புகுந்துக் கொண்டான் ரோஹித்.

அவன் தள்ளிய வேகத்தில் விழாமல் இருக்க சுவற்றை பிடித்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு திரும்பிப் பார்த்தாள். ரோஹித் பிரிட்ஜிலிருந்து தேங்காய் எடுத்து அதை துருவுவதற்குத் தயார் செய்துக் கொண்டிருந்தான்.

“பேசுறதெல்லாம் பேசிட்டு… நல்லவன் மாதிரி தேங்கா துருவ போறியா?”

பல்லைக் கடித்து அவன் அருகில் சென்றவள் “நீ ஒண்ணும் செய்ய வேண்டாம்… குடு…” என்றுக் கூறி அவன் கையில் இருந்தத் தேங்காய் மூடியைப் பிடுங்கப் பார்த்தாள்.

“ஏற்கனவே கடுப்புல இருக்கேன்… பசி வேற வயித்த கிள்ளுது… போயிடு… இல்ல வாய்க்குள்ள விட்டு திருகிடுவேன்…”

கையிலிருந்த தேங்காய் துருவியை அவள் வாய்க்கு நேராக பிடித்து அவன் சுழற்றிக் காட்டிய விதமும், பசி என்று அவன் சொன்ன வார்த்தையும் நீணாவை அமைதியாக நகரச் செய்தன.

தோசை மாவை எடுத்து வைத்து அடுப்பில் கல்லை போட்டு சட்னி அரைப்பதற்கு அவனுக்கு உதவினாள்.

எப்போதும் அவர்கள் வீட்டில் இருந்தால் யாரேனும் ஒருவர் பேசிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் இருவருக்குமே தலை வெடித்து விடும்.

கடந்த சில நிமிடங்களாக பாத்திரங்களின் சப்தம் தவிர பேச்சு சத்தம் எதுவும் இல்லாமல் நீனாவிற்கு தலை வெடித்தது.

இப்போது அவள் பேசவும் முடியாது… கடுப்பில் இருக்கும் ரோஹித்தை பேச சொல்லவும் முடியாது… இரண்டும் வீண் பிரச்சனையில் முடியும்.

என்ன செய்வதென்று யோசித்தவள் அமைதியாக ஹாலிற்கு வந்து தன் மொபைலைத் தேடி எடுத்து மீண்டும் சமையலறைக்குள் வந்தாள். கல்லில் தோசையை ஊற்றியபடியே மொபைலில் எண்களை அழுத்தி விட்டு காதில் வைத்தாள்.

மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும் “மோனி சாப்பிட்டியா? மாத்திரையெல்லாம் ஒழுங்கா சாப்பிட்டியா? இந்த மாதிரி நேரத்துல கவனமா இருக்கணும்…” என்று அக்கறையாகக் கேட்டாள் நீணா.

மோனிகா ஒரு கைனகாலஜிஸ்ட் (gynecologist). நண்பர்களாய் இருந்தாலும் அவரவருக்குப் பிடித்ததை அவரவர் படித்தனர். ஹர்ஷா மட்டும் ரோஹித்துடன் சேர்ந்து கார்டியக் சர்ஜன் ஆகி விட்டான்.

“ஹே… இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல? எனக்குத் தெரியாததா? வீட்டுல என்னைப் பார்த்துக்க பக்கத்துலயே ஹர்ஷா வேற இருக்கான்…”

அருகில் நின்றிருந்த ஹர்ஷாவை காதலாய் பார்த்து அவன் கழுத்தை சுற்றி கை போட்டு அருகில் இழுத்து தன் நெற்றியை வைத்து அவன் நெற்றியில் செல்லமாய் முட்டி “ஆனாலும் நீ தெனமும் போன் பண்ணிக் கேக்குற” என்றாள் மோனிகா.

“டாக்டர்னா மட்டும் எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சிடுதா என்ன? சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கே…”

ரோஹித்தை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டேக் கூறிய நீணா “அதோட உன் மேல எனக்கு அக்கறை இல்லையா மோனி? ஹர்ஷா பக்கத்துல இருக்குறதால தான் என்னால கொஞ்சம் நிம்மதியா இருக்க முடியுது…” என்றுப் புன்னகையுடன் கூறினாள்.

ப்ரத்யுக்‌ஷா ப்ரஜோத்