ஒவ்வொரு பள்ளிகளும் கும்பகோண பள்ளிகளா?

86

நேற்று முன்தினம் ரியல் எஸ்டேட் தொழில் புரியும் நீண்டகால நண்பனின் அலுவலகத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். அந்த நேரத்தில் தொழில் நிமித்தம் ஒரு நண்பர் அவரை சந்திக்க வந்தார். அதன் பிறகு அவர்களுக்குள் நடந்த உரையாடல் தான் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது!

நகரின் மையத்தில் இருக்கும் ஒரு பள்ளி விற்பனையை பற்றிய உரையாடல் அது. 6000 சதுர அடியில் அமைந்த இரண்டு மாடிகள் கொண்ட ஒரு  கட்டிடத்தில் இயங்கும் அந்த பள்ளியின் விலை 35கோடி சொல்வதாகவும், 32 கோடிக்கு முடித்து கொடுப்பதாகவும், நல்ல பார்ட்டி இருந்தால் கூறுமாறும் வந்த நண்பர் கூறினார்.

அந்த பள்ளியை பற்றி எனக்கு ஏற்கனவே கொஞ்சம் தெரியுமென்பதால், அந்த இடம் அவ்வளவு போகதே, எப்படி பார்த்தாலும் 15கோடிகளுக்குள்தான் அதன் மதிப்பு இருக்கும் என்றேன்.

அவர் கையோடு பள்ளியின் சொத்து பற்றிய விபரங்கள் அடங்கிய ஒரு கையேடு ஒன்றைக் கொடுத்தார். அதில் இட மதிப்பு 8 கோடி, கட்டிட மதிப்பு 5 கோடி, வாகனங்கள் 2 கோடி (பேருந்துகள், வேன், கார், ஜீப், தண்ணீர் லாரி, ட்ராஸ் லாரி, உட்பட (பள்ளிக்கு எதற்கு ட்ராஸ் லாரின்னு கேக்கல)  பர்னிச்சர் &பிட்டிங் 2 கோடி, இதர சொத்து 1 கோடி, 550 மாணவர்கள், 30 ஆசிரியர்கள், 10 ஊழியர்கள், 10 ஓட்டுனர்கள்,  மற்றும் ஆண்டு வருமானம் 3.5 கோடி, ஆண்டு செலவு 80 இலட்சம் என்று இருந்தது.

ஆம் அங்கே படிக்கும் குழந்தைகள் & மற்றும் ஊழியர்கள் அவர்களது சொத்து கணக்கில் சேர்ந்து விட்டார்கள். ஆம்! அந்த பள்ளியில் சேர்ப்பதற்கு பெற்றவர்கள் கியூவில் நிற்பதால், அங்கே படிக்கும் பிள்ளைகளும் அந்த பள்ளியின் சொத்து கணக்கில் சேர்ந்து விட்டார்கள்.

இப்பொழுது ஆண்டு ஒன்றுக்கு சுமார் இரண்டு கோடி லாபம் கிடைக்கிறததாம். பள்ளிக்கு நல்லப்பெயர் இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகள் போனால் அது மேலும் அதிகரிக்க கூடும் என்று சொன்னார்கள்.

ஆம் அவர்கள் கூறுவது உண்மைதான். இந்த பள்ளி ஆரம்பித்து ஆறு ஆண்டுகள் தான் ஆகிறது. இடப்பற்றாக்குறையாக இருப்பதால் தான் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள். இல்லையேல் மாணவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்ககூடும். அந்த அளவிற்கு இந்த பள்ளியில் சேர்க்க பெற்றோர் காத்துக் கிடக்கிறார்கள்.

Pre KG முதல் 5 ம் வகுப்பு வரை மட்டுமே இருக்கும் இந்த பள்ளி தான் இன்றைய தேதியில் ஊரில் மிக சிறந்த பள்ளி. Pre KG பீஸ் வெறும் 63000/- மட்டுமே, வேன் பீஸ், புக் பீஸ், யூனிபார்ம் என்று மற்றவைகளை கணக்கெடுத்தால் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் செலவாகும். இந்த ஊரிலேயே படிப்பு இந்த பள்ளியில் தான் விலை அதிகம். அதை தான் பள்ளியின் நற்பெயர் என்றும் அவர்கள் கூறிக்கொள்கிறார்கள்.

இந்த கல்வியாண்டு துவங்கும்போது அந்த பள்ளியின் விளம்பரம் மணிக்கு பத்துமுறை லோக்கல் சேனலில் ஓடிக் கொண்டு இருந்தது.

ஏசி வகுப்பறை, ஸ்மார்ட் கிளாஸ், முழுக்க ப்ரஜெக்டரில்தான் பாடம் நடத்தப் படும், மாணவர்களுக்கு  தனி தனியாக கேபின், ஏசி வாகனம், டைனிங் ஹால் வித் டேபிள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிப்பறைகள் கம்ப்யூட்டர் லேப், செஸ் பயிற்சி, ஸ்போக்கன் இங்க்லீஷ், ஸ்போக்கன் ஹிந்தி, ஸ்போக்கன் பிரெஞ்ச் என்று மக்களை முண்டியடித்து வரவைத்துள்ளது.

ஆனால் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் எப்படி தப்பிக்க முடியும் என்பதை பற்றி அவர்கள் கூறவில்லை. மக்களும் அதைப்பற்றி கேள்விக் கேட்கவில்லை. காரணம் அதை பற்றி நமக்கு கவலையில்லை. அந்த பள்ளியின் பெயர் அப்படி. அது தேசிய பாடத்திட்டம் கொண்டுள்ளது. பெருநகரங்களில் பெயர் பெற்ற பெரிய கல்வி நிறுவனத்தின் துணை நிறுவனம்.

ஆனால் அந்த கட்டிடம் அமைந்துள்ள அமைப்பு!? இரண்டு மாடிகள் கொண்ட சதுர வடிவக்கட்டிடம். இடையில் கொஞ்சம் காலியான ஆனால் காங்கிரீட் மைதானம். அதில் அலங்கார நீர்த்தொட்டி. மேலும் ஒரு மாடி எழுப்பப்பட்டுக் கொண்டு இருந்தது. தனியாக விளையாட்டு மைதானம் ஏன், கிழே கொஞ்சம் கூட காலி இடம் இல்லை. பள்ளி வாகனங்கள் வெளியே சாலையில் மாணவர்களை இறக்கி விட்டு செல்லும். மாலை சாலையிலேயே நின்று வரிசையாக ஏற்றிக்கொண்டு வீடுகளுக்கு புறப்படும். காலையும் மாலையும் அந்த சாலையே ஸ்தம்பிக்கும் அளவிற்கு ட்ராபிக் அதிகமாக இருக்கும்.

முகப்புக்கு சற்று இடம் இருக்கும். அதற்கு நேர் எதிரில் மாடிக்கு செல்ல படிகள் இருக்கும். இடதுபுறம் இரண்டு அலுவலக அறைகள், அதை ஒட்டி முதல்வர் அறை. ஆசிரியர் ஒய்வுஅறை. வலப்புறம் pre KG வகுப்புகள். ஒட்டி குழந்தைகள் உணவருந்தும் அறை. (அதில் 100 குழந்தைகள் அமர்ந்து  உணவருந்த மட்டுமே இருக்கை உள்ளது மற்றக் குழந்தைகள் எப்படி உணவருந்தும் என்பது தெரியவில்லை) கட்டிடத்தின் பின்புறம் கழிப்பறைகள் உள்ளன.

முதல் மாடியில் LKG, UKG, 1ம், 2ம் வகுப்புகள். இரண்டாம் மாடியில் 3ம் 4ம் 5ம் வகுப்புகள். இந்த பள்ளியை பொறுத்தமட்டும் LKG யே மேற்படிப்புதான்.

பெற்றவர்கள் உள்ளே பிரவேசிக்க முடியாது. அதிகப்பட்சம் கீழ்தளம் வரை தான் அனுமதி. அதுவும் வகுப்பு இருக்கும் பக்கம் செல்ல முடியாது. அலுவலக அறைகள் இருக்கும் பக்கம் மட்டுமே செல்ல முடியும்.

இப்படியான கட்டிடத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் எப்படி குழந்தைகள் தப்பிப்பார்கள். அதுவும் 5 வயது கூட நிரம்பாத LKG, UKG குழந்தைகள் படிப்பது முதல் மாடியில், பத்து வயது நிறம்பாத 3, 4, 5ம் வகுப்பு குழந்தைகள் படிப்பது இரண்டாவது மாடியில், அவர்கள் எப்படி வெளியேறுவர்கள்?

தினம் பள்ளி முடிந்ததும் ஒவ்வொரு வாகனமாக வாசலில் வந்து நிற்க, அந்த வாகனத்தில் செல்ல இருக்கும் மாணவர்கள் மட்டும் வரிசையாக அழைத்து வரப்பட்டு ஏற்றி அனுப்புகிறார்கள். (ஒவ்வொரு வழிதடத்திற்கும் ஒவ்வோரு எண் இருக்கும். அதில் செல்லும் மாணவர்கள் பட்டியல் பிரகாரம அழைத்து வரப்ப6டுகிறார்கள்) இது சாதாரண நாட்களில் சரியான நடவடிக்கைதான். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் எப்படி வெளியேற்றுவர்கள்?

இது போல சிறுவர்கள் படித்த அடுக்கு மாடி கட்டிடத்தில் இயங்கிய கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ண ஆரம்பப்பள்ளியில் நடந்த தீ விபத்து யாராலும் அவ்வளவு சுலபத்தில் மறந்துவிட முடியாது. 94 இளம்பிஞ்சுகள் தீயில் கருகியது.

ஒரு கல்விக்கூடம் எப்படி செயல்பட வேண்டும்? அதன் கட்டிட அமைப்பு எப்படியிருக்க வேண்டும்? குழந்தைகளுக்கு தேவையான வசதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று அரசாணை உள்ளது. அது வெறும் அரசாணையாக மட்டுமே உள்ளது. ஆனால் நாட்டில் பெரும்பாலான தனியார் பள்ளிகளின் அமைப்பு, முற்றிலும் பாதுகாப்பற்ற கட்டிடங்கள் கொண்டதாகவே இருக்கின்றன.

இதை கவனிக்க வேண்டிய அரசு அலுவலர்களை கவரோடு கவனித்தால் போதும். அனைத்து சான்றிதழ்களும் சிறந்த முறையில் வந்து சேர்ந்து விடும். அவ்வளவு தரமாக இருக்கிறது நமது அரசு இயந்திரம். காகிதங்கள் அடிப்படையில் அனைத்து பள்ளிகளும் தரமானதாகவும், பாதுகாப்பாகவும் இருக்கின்றன.

அதன் பாதுகாப்பு வசதிகள் குறித்து எந்த பெற்றவர்களும் கவலை படுவதாகவும் இல்லை. பெற்றவர்களைப் பொருத்தமட்டும் தங்கள் குழந்தைகளை ஊரிலேயே சிறந்த பள்ளியில் சேர்த்துவிட்டால் போதும். தங்கள் கடமை முடிந்தது என்று நினைகிறார்கள். அந்த பள்ளிகள் கேட்கும் பீஸ் தொகை எவ்வளவாக இருந்தாலும் அதை கட்டி விடுவது மட்டுமே தங்கள் கடமை என்று நினைகின்றனர்.

குழந்தைகளின் படிப்பு முக்கியம்தான். அதை விட முக்கியம் அவர்களது உயிர். ஆரோக்கியம் என்பதை எந்த பெற்றவர்களும் நினைத்துப் பார்ப்பது இல்லை.

இதோ கும்பகோணம் பள்ளி விபத்துக்குள்ளாகி பண்ணிரெண்டு வருடங்கள் கடந்துவிட்டன. அதில் கருகிய இளம் மொட்டுகளுக்கு உடன் படித்தவர்கள், அந்த நகரவாசிகள் அங்கே சென்று மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துகிறார்கள். அதோடு அவர்கள் கடமை முடிந்தது. பெற்றவர்கள் தான் தினம் தினம் வேதனையை அனுபவித்து வருகின்றனர்.

சட்டமோ அந்த பள்ளி நிறுவனருக்கு ஆயுள் தண்டனையும், தாளாளர் உட்பட சிலருக்கு ஐந்தாண்டு தண்டனையும், அதிகாரிகள் உட்பட சிலருக்கு ஓராண்டு தண்டனையும் சில ஆயிரங்கள் அபராதமும் தந்து தீர்பளித்துள்ளது. இந்த வழக்கில் இருந்து நிறைய அரசு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இந்த சம்பவத்தில் நேரிடையாக சம்பந்தப்படவில்லை என்று காரணம் காட்டியது.

அப்படி எனில் இது போன்ற கட்டிடங்களுக்கு அனுமதி எப்படி வழங்கினார்கள்? அதில் அவர்களுக்கு சம்பந்தம் இல்லையா? குறைந்தபட்சம பணிநீக்கம் செய்தாவது தண்டனை அளித்து இருந்தால், குறைந்த பட்சம் லஞ்சம் வாங்குவதாவது கட்டுக்குள் வர வாய்ப்பு இருந்து இருக்கும்.

இல்லையேல் கல்விக்கூடங்கள் மனிதாபிமானம் இல்லாத வியாபார நிறுவனங்களாக மட்டுமே செயல்படும்.

இதோ இந்த பள்ளியில் சேர்த்து விட எல்லாப் பெற்றோரும் வரிசைக் கட்டி நிற்கிறார்கள். காரணம் விளம்பரம். அதுவும் முக்கியமாக பள்ளி வளாகத்தில் தமிழில் பேசினால் அபராதம் என்பது வாய்வழி விளம்பரம் (நேரிடையாக செய்யமுடியதே). அதுவே மக்கள் கூட்டம் அதிகரிக்க காரணம். அதனால் தான் குறைந்த முதலீட்டில் ஒரு கல்வி நிறுவனம் ஆரம்பித்து, இரண்டு மூன்று ஆண்டுகளில் சொத்து மதிப்பை கூட்டி, தங்கள் வியாபாரத்தை விரிவு படுத்துகின்றனர்.

இப்படி அவர்கள் கல்வியை விற்பதற்கு காரணம், நம் அறியாமை, ஆசை, மட்டுமே காரணம். நம் பிள்ளை படிக்கும் பள்ளிக்குள் நம்மை அனுமதிக்காவிடில், நம் பிள்ளையை சேர்த்துக்கொள்ள நமக்கு தேர்வு வைத்தால் அது பெரிய பள்ளி என்ற பிம்பம் நமக்கு இருக்கும் வரை, இப்படியான கல்வி வியாபாரிகள் வந்துக் கொண்டே இருப்பார்கள்.

இது இந்த ஒரு பள்ளியின் நிலை மட்டுமல்ல, இது போன்ற எண்ணற்ற பள்ளிகள் நம் நாட்டில் நிறைந்து உள்ளன. அந்த பள்ளிகளின் வாசலில் நாம் நம் பிள்ளைகளை சேர்த்து விட வேண்டி தவம் கிடக்கிறோம்.

கும்பகோணத்தில் ஏற்பட்டது போல கோர சம்பவம் நாளை இதுபோன்ற பள்ளிகளில் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு?

பாதுகாப்பற்ற கட்டிடம் அமைத்த நிறுவனமா?

அதற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகளா?

கண்டும் காணமல் இருக்கும் அரசா?

எது எப்படி போனாலும் என் பிள்ளை தனியார் பள்ளியில் படிக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோகலாகிய நாமா!?

இனியும் கல்வி என்ற பெயரில் நம் குழந்தைகளை பலி கொடுக்க வேண்டுமா?

சிந்திப்போம்

-செந்தில்குமார் நாகராஜன்.