தாழ்வேன் என்று நினைத்தாயோ – சிறுகதை

71
“பெரிய காரியம் ஆகிப்போச்சு தம்பி”கலங்கிய கண்களோடு பரந்தாமன் நின்று கொண்டிருந்தார். பெரிய காற்றொன்று அடித்து என்னைத் தூக்கி வீச நீட்டிக் கொண்டிருக்கும் மரக்கிளை என் நெஞ்சு துளைத்து இறங்கினாற்போல் மனம் வலித்தது. அப்பாயி போய்விட்டாள். எனக்காக பூமியிலிருந்த ஒற்றை உயிர். என் முடியின் ஊடாக விரல் நுழைத்து ஆதரவாய் அணைத்துக்கொள்ள அவள் இல்லை. பொக்கைவாய் சிரிப்பு இனி இல்லை. என்னை அணைத்துப் படுத்துக்கொள்ளும்போது பழகிப்போன அந்த உடற்சூடு இனி இல்லை. சூடான கண்ணீர் கழுத்து தாண்டி நெஞ்சுக்கூட்டில் வழிதவறி நின்று கொண்டிருந்தது.

அலைபேசி அடிக்க எழுந்துகொண்டேன். பல்லவி அழைத்திருக்கிறாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்பாயியின் நினைவு வந்திருக்கிறது. முகம் கழுவி, பல் துலக்கிவிட்டு பல்லவியை அழைத்தேன்.

“சொல்லு பல்லவி”

“என்னடா பண்ற, ஆபிஸ் லீவ்தான?”

“ஆமா”

“சரி ஓகே, அம்பா ஸ்கைவாக் வா, படத்துக்கு போகலாம்”

“என்ன படம்?”

“ஓ, என்ன படம்னு தெரிஞ்சாதான் நீ என்கூட வருவ”

“ஹா,ஹா நில்லு கிளம்பறேன்”

எல்லா ஆணையும்போல கல்லூரியில் நானும் பெண்வாசத்திற்காக ஏங்கிக்கிடந்தேன். இன்று நினைவுகளுக்கான நாள்போல இருக்கிறது. நிரஞ்சனா நினைவுக்கு வந்தாள். நிரஞ்சனாதான் நான் காதலித்த முதல் பெண். கல்லூரியில் என் முடி இன்னும் அதிகமாக கொட்ட ஆரம்பித்திருந்தது. பனிரெண்டாம் வகுப்பில் டைபாய்டு வந்தபோது உட்கொண்ட மருந்துகளால் முடிகொட்டல் ஆரம்பமானது.

“தீபன் என் மண்டை கேவலமா இருக்காடா”

“ஏன்டா அப்படி கேட்கற?”

“சொல்லு”

“நல்லா இருக்குடா. எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க. ஏன் பொம்பளப் பேய் மாதிரி முடி வெச்சுருக்க. உன் பிரெண்ட் சுகன் இருக்கானே, அவன மாதிரி ஹேர் கட் பண்ணிக்கோ, எவ்ளோ நீட் அண்ட் ஹேண்ட்சமா இருக்கான்னு”

“எனக்கும் உன்ன மாதிரி முடி இருந்துச்சுடா. ஒரு தடவ உடம்பு சரி இல்லாம போயி இப்படி ஆயிடுச்சு”

சொல்லும்போது என் குரல் கரகரத்தது. ஏன் அன்றைக்கு இதை சொன்னேனென்று பிறகு வருத்தப்பட்டுக் கொண்டேன். எனக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மைக்கான காரணி இன்னொருவனுக்கு தெரிந்துவிட்டதால் எனக்கே என்மேல் கோபம் வந்தது.

முதல்முறையாக எனக்கு பெரும் கோபம் நான் தாழ்த்தப்பட்டவன் என்று அறிந்துகொண்டபோது வந்தது. பத்தாம் வகுப்பில் நண்பர்கள் ஒட்டுமொத்தமாய் அமர்ந்து உணவருந்தும்போது பகிர்ந்துகொண்டு உண்போம். ஒருநாளும் குறிப்பிட்ட சில நண்பர்கள் என் உணவை ருசி பார்த்ததே இல்லை. பின்னொருநாள் பழனி என்னிடம் சொன்னான்.

“டேய் நீ எதுக்கு தினமும் அவங்ககிட்ட சோற நீட்ற”

“ஏண்டா?”

“நம்ம சோத்த அவங்க திங்கமாட்டாங்க”

“நம்ம சோத்துக்கு என்னடா, எல்லா சோறும் வெள்ளதான?”

“சோறு வெள்ளடா, ஆனா அவங்க மனசு கறுப்பு”

எனக்கு கோபமாய் வந்தது. அடுத்தநாள் உணவு அருந்தும்போதும் என் உணவை எடுத்துக்கொள்ள சொன்னேன். வேணாம்டா என்றார்கள். பெரும்கோபத்தோடு ஒருவன் வாயில் திணிக்கப்போனேன்.

“எங்க அம்மா சொல்லிருக்காங்க. உன்கிட்ட எல்லாம் வாங்கி சாப்பிடக்கூடாதுன்னு. உன்னத் தொட்டுப் பேசனாலே அம்மா திட்டும்”என்று டிபன் பாக்ஸைத் தூக்கி எறிந்தான். கையை முழு பலத்தோடு மடக்கிக்கொண்டு அவன் முகத்தில் இடைவிடாது குத்தினேன். அவன் மூக்கு உடைந்து இரத்தம் வரத் துவங்கியது. மற்றவர்கள் என்மேல் ஏறிப்படுத்து என் முதுகில் குத்தினார்கள்.

மறுநாள் அடிவாங்கிய பிரமோத்தின் அம்மா சுலோசனா பள்ளிக்கு வந்திருந்தாள். தலைமை ஆசிரியர் அறைக்கு அழைக்கப்பட்டிருந்தேன். சுலோசனா ஆன்டி அப்படி சொல்லியிருப்பாள் என்று எனக்குத் தோன்றவில்லை.

“பாருங்க சார், எப்படி மூக்கை உடைச்சு வைச்சிருக்கான்னு. இந்த மாதிரி பசங்கள ஏன் இங்க சேத்திகறீங்க. இவனுங்களுக்கு கவர்மெண்ட் ஸ்கூல்தான் கரெக்ட்” என்று கத்திக்கொண்டிருந்தாள்.

“ஆன்டி, என்கிட்ட வாங்கி சாப்பிடக்கூடாதுன்னு நீங்க சொன்னீங்களா?” என்று கேட்டேன். “வாய் பேசாத” என்று எனை இழுத்துக்கொண்டு சென்ற தலைமைஆசிரியர் மூலையில் எனை நிறுத்தி தன் கையில் இருந்த பிரம்பால் என் புட்டத்தில் அடிக்க ஆரம்பித்தார்.

அதற்குள் இந்த செய்தியை அறிந்துகொண்ட ராஜீவ் அண்ணன், சிவராஜ் அப்பாவிற்கு ஃபோன் செய்திருந்தார். சிவராஜ் அப்பாதான் என்னை இந்தப் பள்ளியில் சேர்த்துவிட்டவர். சிவராஜ் அப்பாவின் பெரிய வீட்டில்தான் அப்பாயி வேலைசெய்துகொண்டிருந்தாள். அப்பாயியும் நானும் சிவராஜ் அப்பாவின் பெரிய வீட்டிற்கு எதிர்ப்புறமுள்ள குடிசையில்தான் குடியிருந்தோம். அப்பாயி என்னை முதலில் அருகிலுள்ள அரசுப்பள்ளியில்தான் சேர்த்திருந்தார். ராஜீவ் என்னைவிட இரண்டு வருடம் மூத்தவன். சிவராஜ் அப்பாதான் என் தேர்ச்சி அறிக்கைகளில் கையெழுத்திட்டு வந்தார்.

“என்னடா சுகன், மூணு ரேங்குக்குள்ள வந்திடுவ போல”

“ஆமாப்பா”

நான் முதலில் அப்பா என்றழைத்தது நிச்சயமாக சிவராஜ் அப்பாவைத்தான். ஆனால் எனக்கொரு அப்பா இருந்தார். நான் அப்பா என்றழைப்பதற்கு முன்பே அப்பா ஊரைவிட்டு ஓடியிருந்தார்.

“அவன்லாம் ஒரு ஆம்பளையா? அவனால என்னையும் ஒதுக்கிட்டாங்க எங்க அம்மா, அப்பா. அவன் எங்க இருந்தாலும் நாசமா போகணும். அவனால என் சாதி சனமும் போச்சே”

அம்மாவின் இந்தப் புலம்பலை நினைவு தெரிந்ததில் இருந்து கேட்டு வந்தேன். அம்மாவும், அப்பாவும் காதலித்து கலப்பு மணம் செய்து கொண்டார்கள். காதல் எல்லாம் தீர்ந்துபோனபோது காசு தேவைப்பட்டது. கல்லூரியை முழுவதும் முடிக்காமலே திருமணம் செய்ததால் கேட்டரிங் வேலை, பெயிண்ட் அடிப்பது என்று அப்பா போய்க்கொண்டிருந்தார். அம்மா சிறுவயதிலிருந்தே ஆடம்பரமாய் வாழ்ந்து பழகியவள். அப்பாவால் ஒரு கட்டத்திற்குமேல் முடியவில்லை. இரவோடு இரவாக ஊரைவிட்டே ஓடி விட்டார். அப்பாயிதான் இந்தக் கதையெல்லாம் என்னிடம் சொன்னாள். அப்பாயி என்னிடம் இதே கதையை ஒரு நூறு முறைக்குமேல் சொல்லியிருக்கிறாள். ஆனால் அப்பாவின் மேல் எனக்கு வெறுப்பு வரவில்லை. அப்பாவை பார்க்க வேண்டும்போல்தான் இருந்தது.

ஒருநாள் அம்மாவின் மாமா எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.

“ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்ட. உன்ன நான் கூட்டிப்போறேன். என் பொஞ்சாதியாக் கூட இருந்துட்டுபோ. ஆனா அவன் இரத்தத்துல பொறந்த இந்த ஈனசாதிப்பயல இங்கயே விட்டுட்டு வந்துரோணும்”

அம்மா யாருக்கோ ஃபோன் செய்தாள்.

“உங்க பேரனை வேணுமின்னா வந்து கூட்டிட்டு போயிடுங்க. இல்லைனா ஏதாவது அனாதை ஆசிரமத்துலதான் பாக்க முடியும்”

அன்றுதான் நான் அம்மாவைக் கடைசியாகவும் அப்பாயியை முதல்முறையாகவும் பார்த்தேன்.

அம்மாவையும் நான் வெறுத்ததே இல்லை. அம்மாவிற்கு தான் இழந்த வாழ்வை மீட்டெடுக்க வேண்டிய தேவை இருந்தது. அம்மா அன்றைக்கு போகாமல் இருந்திருந்தால் அப்பாயியும், சிவராஜ் அப்பாவும் எனக்கு கிடைத்திருக்க மாட்டார்களே.

“ராஜீவ் கூட ஸ்கூல்ல சேந்துக்கறியா” என்று ஒருநாள் சிவராஜ் அப்பா கேட்டார்.

ராஜீவின் பாலிஷ் செய்யப்பட்ட ஷூவும், மிடுக்குடன் அவனைக் காட்டும் டையும், சட்டையை உள்ளேவிட்டு அவன் அணிந்துகொள்ளும் பெல்ட்டும் எனக்கும் கிடைக்கப்போகிறதென்பது என்னை மகிழ்ச்சியின் எல்லைக்கே அழைத்து சென்றது. பரந்தாமன் மாமா கார் ஓட்ட நானும் ராஜீவுடன் காரில்தான் தினமும் பள்ளிக்குப் போனேன்.

என்னை அடித்த விஷயம் கேள்விப்பட்டு அன்று மதியமே சிவராஜ் அப்பா வந்திருந்தார். நான் தலைமை ஆசிரியர் அறைக்கு மறுபடியும் அழைக்கப்பட்டிருந்தேன்.

“என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க சார் உங்க மனசுல. அடங்கிப் போய்ட்டே இருப்போம்னு நெனச்சீங்களா? “

“சாரி சார் , உங்க பையன்னு தெரியாம”

“யார் பையனா இருந்தா என்ன சார்? “

“உங்க பையன் மேலயும் தப்பு இருக்கு”

“யாரும் இதுவரைக்கும் தண்டிக்காத தப்புகள பல நூறாண்டா செய்றாங்களே அவங்கள என்ன சார் பண்ணீங்க”

தலைமை ஆசிரியர் பேசாமல் நின்றுகொண்டிருந்தார்.

அன்றிரவு அப்பாயி பாத்திரம் துலக்க அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். சிவராஜ் அப்பா என்னை அழைத்ததாக ராஜீவ் வந்து சொன்னான்.

“நான் என்னவா இருக்கேன்னு உனக்குத் தெரியுமா?”

“தெரியாதுப்பா”

“சதர்ன் ரெயில்வேல வேலை செய்யறேன். தாழ்த்தப்பட்டோர் தொழிற்சங்கத்துல செயலாளர். உங்க ஹெச் எம் இன்னைக்கு பதறினாரே, ஏன்? அரசியல்.  சாதி இருக்கே அது அழியாது சுகன். அந்த விஷ ஊசிய ஒவ்வொரு அப்பனும் ஆத்தாளும் அவன் புள்ள ஒடம்புல போட மறக்க மாட்டாங்க. உன்ன அடிச்சானே அவன் பேரென்ன? “

“பிரமோத்”

“அவனுக்கு சாதி தெரியாது. உன் சோற தின்னா என்னன்னு அவனுக்குத் தெரியாது. இருந்தாலும் திங்க மாட்டான். ஏன்னா அவன யோசிக்கவிடாத விஷ ஊசி போட்டுட்டாங்க. அவன் புள்ளைக்கு அவன் இதப் போடுவான்”

“என்னைக்கு இது முடியும் அப்பா?”

“விஷ ஊசிக்கு முன்னாடியே தடுப்பூசி போடும்போது. அதிகாரம் நம்ம கிட்ட வரும்போது. அதுக்கு ஒரே வழிதான் இருக்கு. படிக்கணும், அதிகாரம் வந்தும் எல்லாரும் நம்மளப் புறக்கணிக்கலாம். ஆனா சின்ன மாற்றமாவது செய்ய அதிகாரம் வேணும். எல்லாத் துறையிலயும் நாம வரணும். நல்ல தமிழும், ஆங்கிலமும் கத்துக்கணும் சுகன். வன்முறையால முடியாது. அத்தனையும் பொறுத்துகிட்டு அகிம்சையால சாதிக்கணும் சுகன், ஒருநாளும் படிப்ப விடக்கூடாது”

அப்பாயி இறந்தபிறகு சிவராஜ் அப்பா வீட்டிலேயே தங்க ஆரம்பித்துவிட்டேன். சிவராஜ் அப்பா அளவிற்கு அவர் மனைவி பாசம் காட்ட மாட்டார். மீந்த உணவுகளே பெரும்பாலும் எனக்கு கிடைத்தது. அப்பாயி செய்த வேலைகளை பள்ளியைவிட்டுத் திரும்பியதும் நான் செய்ய ஆரம்பித்தேன். சிவராஜ் அப்பாவின் மனைவியிடம் வசைகளும் சில சமயம் அடியும் கிடைக்கும். ஒரு வார்த்தை பேசாமல் அவைகளை வாங்கிக்கொண்டேன். சிவராஜ் அப்பா சொன்ன வார்த்தைகள் எப்பொதும் என் மனதில் இருந்தது. வெளிச்சமே இல்லாத இருட்டறை எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒருபோதும் அந்த இடத்தைவிட்டு செல்ல மாட்டேன் என்று முடிவெடுத்துக்கொண்டேன். எனக்கு கல்வி தேவையாய் இருந்தது அது சிவராஜ் அப்பாவால் மட்டுமே கிடைக்குமென அறிந்திருந்தேன்.

சிவராஜ் அப்பா என் விருப்பப்படியே ஊடகவியலில் என்னை சேர்த்துவிட்டார். கல்லூரியின் விடுதியில் தங்கிப் படிக்க ஆரம்பித்தேன்.

நிரஞ்சனாவின் மஞ்சள்நிற முகம் என்றைக்கும் மறக்க முடியாதது. அவள் முகத்தை ஒத்த அதே நிறத்தில் கம்மல் அணிந்திருப்பாள். மனதை கொத்தி இழுக்கும் கண்களை ஐலைனரால் இன்னும் அழகுபடுத்திக்கொள்வாள்.  கல்லூரியின் கடைசி மூன்று மாதத்தில் நானும் அவளும் பிரிக்கமுடியாதவர்கள் ஆகிப்போனோம். பல்லவியும் என்னோடுதான் படித்தாள். நிரஞ்சனாவின் நெருங்கிய தோழி. நிரஞ்சனா காதலை சொல்வாள் என ஒவ்வொரு நாளும் காத்திருந்தேன். கடைசியில் நானே சொல்லலாமென முடிவு செய்தேன். ஆனால் அவள் என் காதலை நிராகரித்தாள். நிராகரிப்புகள் எனக்குப் புதியவையல்ல. ஆனால் என் நட்பைக்கூட தூக்கி எறிந்த அவளை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

“சுகன் படம் பாக்கலியா? “

“சும்மா, யோசிச்சுகிட்டு இருந்தேன் பல்லவி”

“என்ன யோசனை உனக்கு, நாம லவ் பண்லாமா? “

“என்னது?”

“லவ் பண்லாமானு கேட்டேன்”

“நிரஞ்சனாவ நான் இன்னும் மறக்கல”

“உனக்கொரு உண்மை சொல்றேன் சுகன். அவ ஏன் உன்ன வேணாம்னு சொன்னா தெரியுமா? நீ எஸ் சினு தான்”

“சத்தியமா நம்பமாட்டேன். நான் கிளம்பறேன்”

அழுக்குபோல தாழ்த்தப்பட்டவன் என்ற சொல் என்மேல் ஒட்டிக் கிடக்கிறது. நான் எவ்வளவு குளித்தாலும் அது போகாது. எந்த மத சோப்பைத் தேய்த்தாலும் அது இந்த அழுக்கைப் போக்காது. நிரஞ்சனா அப்படி சொல்லியிருக்கமாட்டாள். ஆறுமாதம் ஆயிற்று கல்லூரி முடிந்து, நிரஞ்சனா பேசாது போன பின்னர் நானும் பேசுவதில்லை. நிரஞ்சனாவிற்கு அன்று ஃபோன் செய்தேன்.

“ஹலோ, நிரஞ்சனா”

“நீங்க “

“சுகன்”

“சொல்லு சுகன்”

குரலில் ஒரு சோர்வு தெரிந்தது.

“என்னை ஏன் பிடிக்கலைனு சொன்ன?”

“மறுபடியுமா?”

“பல்லவி சொல்லிட்டா,அது உண்மையா”

“எங்கப்பா யாரு தெரியுமா? எங்க சாதிக்கட்சியோட துணைத்தலைவர். எங்க அக்கா காதலிச்சா. அவளயும், பையனையும் கொன்னுடாங்க, அதே நிலைமைதான் நமக்கும் வரும். புரிஞ்சிக்கோ சுகன், இதான் நடைமுறை யதார்த்தம்”

ஃபோனை கட் செய்தேன். சிவராஜ் அப்பா நினைவுக்கு வந்தார். அகிம்சையால் எப்படி இதை எல்லாம் அழிப்பது சிவராஜ் அப்பா?

ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் பிரபல ஊடகமொன்றில் வேலைக்கு சேர்ந்திருந்தேன். அன்றைய விவாதத்தில் நிரஞ்சனாவின் அப்பா வந்திருந்தார்.

“வணக்கம் ஐயா, தலித்துகள் மேல் உங்கள் இயக்கம் தொடர் தாக்குதல் நடத்துவதாய் குற்றச்சாட்டு இருக்கிறதே?”

“தம்பி, சாதி இயக்கம் என்று சொல்லி எங்களைக் குறுக்கப் பார்க்கிறார்கள். தலித்கள் எங்கள் சகோதரர்கள். சமூகத்தின் எல்லா மக்களுக்காகவும் பாடுபடுகிறவர்கள் நாங்கள். பார்ப்பனர்கள்தான் அன்றும் இன்றும் நம்மை வஞ்சித்துக்கொண்டிருக்கிறார்கள்”

“இல்லை… சமீபத்தில் உங்கள் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் உங்கள் இனம் சார்ந்த ஒரு திருமண வீட்டில் பேசுகையில் தலித் இளைஞர்கள் உங்கள் இனப் பெண்களின் அருகில் வந்தாலே வெட்டி வீச வேண்டும் என்று பேசியிருக்கிறாரே?”

“அது குறித்து நாங்கள் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். அவ்வாறு அவர் பேசியதற்கான ஆதாரம் கிடைத்தால் உடனடியாக அவரை இயக்கத்தில் இருந்து நீக்கி விடுவோம்.”

“ஒருவரை இயக்கத்தில் இருந்து நீக்குவது தான் அதிகபட்ச தண்டனையா?”

“வேறு என்ன செய்ய முடியும்?”

“சரி அவர் பேசியதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது.. அதை ஆதரித்து கைத்தட்டியவர்களுக்கும் என்ன தண்டனை என்று நீங்கள் சொல்ல வேண்டும்”

அந்த பிரமுகர் திருமண வீட்டில் பேசிய காட்சி ஒளிபரப்பாகிறது. அதில் நிரஞ்சனாவின் அப்பா முன் வரிசையில் அமர்ந்து அவருடைய பேச்சுக்கு ஆராவரமாக கைத்தட்டி ஆமோதிக்கிறார். காட்சியின் முடிவில் நிரஞ்சனாவின் அப்பா முகம் கருத்து விடுகிறது. நான் மிகவும் நிதானமாக

“ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தொடர்வோம் நேயர்களே”

நிரஞ்சனாவின் அப்பா கழிவறை எங்கே இருக்கிறது என்று கேட்க நானே அழைத்துப் போனேன்.

இருவரும் அடுத்தடுத்த யூரினலில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தோம்

“தம்பி… உங்க ரேட்டிங் ஏறணும்னா என்ன வேணும்னா பேசுவீங்க போல”

நான் ஜிப்பை போட்டு விட்டு அவர் எதிர்பாராத போது பளார் பளார் என்று கன்னம் சிவக்கிற அளவுக்கு அறைந்தேன்.

“ஏய்! தம்பி அடிக்காதப்பா, ஏன்பா அடிக்கற?”

“இந்த அரசியல் வேஷத்த வச்சுகிட்டு என்னைத் தாழ்ந்தவன்னும் உன்னை உயர்ந்தவன்னும் சொல்லி நீ பிழைக்கிற ஈனப்பிழைப்புக்கு இந்த ஒடுக்கப்பட்டவனோட சின்னப் பரிசுடா இது”.

நிரஞ்சனாவைப் பற்றி சொல்லலாமா என நினைத்தேன். என்னால் இந்தக் கயவனிடம் அவளும் வேதனைப்படவேண்டாம் என்று நினைத்துக்கொண்டேன். இந்தியக் கழிவறையின் ஓட்டையில் அவர் கையை முக்கி எடுத்தேன்.

“மோந்து பாருடா நாயே”என்று சொல்லி பளார் பளார் என்று மீண்டும் விளாசினேன். “நாறுதா?”

ஆமாம் என்று தலையாட்டினார்.

“இந்த நாத்தத்துல இருந்து வெளிய வரணும்னுதாண்டா போராடிட்டு இருக்கோம். வாழ விடுங்கடா”

அவர் உடையை சரிசெய்து விவாதமேடைக்கு அழைத்துசென்றேன்.

“விவாதம் தொடர்கிறது”

“ஐயா, இப்ப சொல்லுங்க… அந்த வீடியோவில் நீங்களும் இருக்கிறீர்கள். என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள். “

“இது திரித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்தி தம்பி. இதன் உண்மை தன்மையை அறியாமல் என்னால் எதுவும் சொல்ல முடியாது. நாங்கள் பாரதி சொன்னபடி பறையனென்றும், புலையனென்றும் எவனுமில்லை சாதியில், இழிவுகொண்ட மனிதரென்பவர் இந்தியாவில் இல்லையே என்பதுதான் எங்கள் கொள்கை”என்று கன்னம் தடவினார்.

இவனைப்போன்றவர்கள் ஒருபோதும் திருந்தப்போவதில்லை என்றாலும் அவனை அடிக்க முடிந்தது என்பதே எனது பெருவெற்றி. சிவராஜ் அப்பா சொன்ன அதிகாரம் எனக்கு சில நொடிகளாவது கிட்டிவிட்டதாய்த் தோன்றியது. அவன் ஒருபோதும் அதை வெளியில் சொல்லமாட்டான் என்று எனக்குத் தெரியும். காரணம் அவன் எங்களைப்போல் அவமானங்களை கண்டிருக்கமாட்டான். அகிம்சையின் எல்லைகளை மீறிவிட்டதற்காக சிவராஜ் அப்பா நிச்சயம் என்னை மன்னிப்பார் என்று தோன்றியது. அலுவலகத்தின் வெளியே வந்தேன். பெருங்காற்று அடித்துக்கொண்டிருந்தது. அத்தனை அநீதிகளையும் இந்தக் காற்று சுத்தப்படுத்தினால் நன்றாயிருந்திருக்கும்.

தூரத்தில் ஒரு வெறிநாயின் குரல் கேட்டது. அதன் குரல் என்னை நெருங்கிக்கொண்டே இருந்தது. எல்லா வழிகளும் மூடப்பட்டவனாய் எந்தப்பக்கம் செல்வது என்று தெரியாமல் நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.

  • அகில் குமார்