தரிசனத்தின் வெயில்

280

எப்போதும் போல வாக்கிங் போன தாத்தாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் திரு. என்றைக்கும் இல்லாமற் அன்று நேரத்தோடே எழுந்திருந்தான். பாட்டி சொல்லியும் கேட்காமல், வாசலை எட்டிப்பார்க்கவும், அப்புறம் அறைக்குள் ஓடி வருவதனெவும் அவனின் தாத்தா எதிர்பார்த்தல் நடந்து கொண்டிருந்தது.

திரு சற்றே சூட்டிகையோடிருப்பவன். இரண்டாம் ஆண்டை கடந்து மூன்றாவதுக்கு வந்திருப்பவன். எல் கே ஜி முன்பான ப்ரீ கே ஜி வகுப்புக்கு செல்கிறான். பகல் பனிரெண்டு மணிக்கெல்லாம் ப்ளே ஸ்கூல் எனப்படுகிற அவன் பள்ளியிலிருந்து வந்து விடுகிற திருவுக்கு தாத்தாவோடு பேசுவதும் விளையாடுவதும் அவனுக்கு அலாதியான பிரியங்கள்.

அன்று அவனுக்கு பள்ளி விடுமுறை என்பதாலும் தாத்தா வாக்கிங் கிளம்பும் போது அவன் தூங்கிக் கொண்டிருந்ததாலும் சரி சற்று நேரம் கழித்தே வீட்டிற்க்குப் போகலாமன எண்ணிய அவன் தாத்தா வாக்கிங்கை முடித்துவிட்டு வருவதற்குள் திரு எழுந்து விட்டிருந்தான். அதனால் தான் பாட்டியோடு விளையாடியது போதாமல் தாத்தாவை எதிர்பார்த்தான் திரு.

அவன் எதிர்பார்த்தது போலவே தாத்தா சற்றல்ல, நிறையவே தாமதமாக வீட்டிற்க்கு வந்தார். வந்தவர், ஆசுவாசமின்றி வேர்த்துக் கொட்டி உடற்சூட்டோடு கோடை வெயிலின் உக்கிரத்தோடே அறைக்குள் நுழைந்தார். தாத்தாவைப் பார்த்த மகிழ்ச்சியில் திரு அவரை நோக்கி ஓடிவர அவனை வாரியணைத்துக் கொண்ட பின் தான் இயல்பு நிலைக்கு வந்தார்.

திருவின் பாட்டி அவரை  விசாரிக்க தாத்தா தொடர்ந்தார்.

“வெயிலா இது?…  உடம்பெல்லாம் தீ பத்தி வச்சமாதிரியல்ல இருக்கு ” என்றார் வேதனையோடு.

“இந்த வயசுல வாக்கிங் போறது நல்லதுதான். . ஆனா கொஞ்சம் வெய்யத்தாந்து போலாமல்ல?” என அங்கலாய்த்துக் கொண்டாள் பாட்டி.

இதையெல்லாம் பொறுமையாய் பார்த்துக் கொண்டிருந்த திரு தாத்தாவிடம் “வெயில்ன்னா என்ன தாத்தா “ஆசையாய்க் கேட்டான்.

அவன் அப்படிக் கேட்ட கணம் தாத்தாவின் கவனம் திருவுக்கு பதிலளித்தலில் குவியத் தொடங்கியது.

அவனுக்கு எப்படி பதில் சொல்லலாமென தாத்தா யோசித்துக் கொண்டேயிருக்கையில்  “அது எப்புடி தாத்தா இருக்கும் ” என  திரு அடுத்த கேள்விக்குத் தயாராகி விட்டான்.

அவனுடைய இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொல்ல ஆரம்பிக்க, தன் நினைவுகளில் மரங்கள் சூழ்ந்த மைதானமும், அதைச் சுற்றிய வாக்கிங் பாதையும் சில நிமிடங்கள் வந்துபோயின.

“அது வந்து சாமீ. . .ரொம்ப சூடாயிருக்கும் ” எளிமையாய் சொன்னார் தாத்தா.

அந்த பதிலில் திரு “சூடாயிருந்தா என்னவாகும்? ” என மறுபடியும் கேட்டான்.

திருவின் தாத்தா இறை மறுப்பிலும் பகுத்தறிவிலும் தீவிரமாயிருப்பவர். அதனாலேயே பதில்களிலும் அதன் தொனியிருப்பதை தவிர்க்க முடியவில்லை.

“திரு, மரமெல்லாந்தான் சூட்டக் கொறைக்கும். . ஆனா நாம இந்த மரத்தயெல்லாத்தையும் நம்மளோட வளர்ச்சிக்கு பலி கொடுத்திட்டோம் சாமீ. . .”

“அப்போ மரம் இருந்தா சூடு இருக்காதா? “

“அப்படித்தான் இப்ப நிலைமை மாறிப்போச்சு. . மரம் நட்டோம்முன்னா வெயிலும் கொறையும் மழையும் கெடைக்கும். .என்றார் தாத்தா.

மரத்தை வெட்டுவதால் மழை குறைவதையும் வெப்பம் அதிகமாவதால், சூழ்நிலை சமன் ஆகாததையும் சொன்னார் தாத்தா.

மேலும் ” அப்போ வாக்கிங் போக முடியாதா? ” புரியாமல் திரு கேட்டான்.

தாத்தா அதற்கு ” போகமுடியும் சாமி. . ஆனா மரமில்லாத அந்த கிரவுண்ட்ல ரொம்ப சூடாயிருக்கும்ல்ல.  . . மரம் நெறைய்யா இருக்குறப்போ சூடு கம்மியாயிருக்கும். . அப்போ நல்லாருக்கும் ” என்றார்.

“அப்போ மரம் வச்சா சூடு கொறைஞ்சிருமா? ” அறியாமற் கேட்டான் திரு.

“இப்போ நம்ம வீட்டுல மரம் வச்சோம்னா அதனால நம்ம வீட்டச்சுத்தியும் வீட்லயும் வெயில் கம்மியாயிருக்கும். . சூடும் அதிகமாயிருக்காது. . வீட்ல எப்படியோ அப்படித்தான் வெளியிலயும் சரியா?. .” பொறுமையாய் சொன்னார் தாத்தா.

“இதுதான் நம் போக்கிடம்.  இதனை சரியாகவும் சரியாக்கியும் வைத்துக்கொள்வது மனிதகுலத்தின்மாண்பு ” என்பதை தெளிவாகவும் ஆணித்தரமாகவும் அழுத்தந்திருத்தமாகவுமென திருவின் தாத்தா எளிமையாக்கித் மேற்கண்ட பதிலில் தெளிவுபடுத்தினார்.

“வெளியிலன்னா ?” திரு கேட்க…

” வெளியில அப்படீன்னா நம்ம ஊர்ல.  . .அப்புறம் நம்ம நாட்டுல. . .”

“நாடுண்ணா ?”. . .

“இப்ப நம்ம வீடு எப்படியோ. . .அது போல கொஞ்சம் பெருசு சாமீ. . அவ்வளவுதான் “

புரிந்தும் புரியாததும் போல பதில் கேட்டுக்கொண்டிருந்தவன், ஏதோ நினைவில் கண்கள் சொருக கொஞ்ச நேரத்தில் தூங்கிப்போனான்.

திருவின் தாத்தா அவன் தூங்கியதால் நாளிதழ் வாசிப்பில் மூழ்கிப்போனார்.

பதிலைக் கேட்டவனின் மனதில் மரமும் வெப்பமும் மழையும் மாறி மாறி தோன்ற சற்றை நேரத்திலெல்லாம் திரு தூக்கத்தில் மிதக்க ஆம்பித்தான்.

மெல்லக் கலக்கத்தில் இருந்தவனை ஒரு கரம் உலுக்க திடீரென விழித்த திருவை சில்லென காற்று தழுவிக்கொண்டது. அவன் பார்த்த இடமெங்கும் பசுமையாயிருக்க எழுந்து நடக்க ஆரம்பித்தான்.

அவன் முழங்காலளவு பசும்புற்கள் சில்லென தீண்டிக் கொண்டே வந்தன. நெடுநெடுவென வளர்ந்த மரங்கள் சில்லென காற்றை வீசி அவனை வரவேற்க சற்று நேரம் நின்றவன், நீல நிற மலர்கள் உதிர்ந்த மரத்தினடியில் அமர்ந்து கொண்டே பார்த்துக்கொண்டிருந்தான்.

அக்கணத்தில் அவனும் சில நிமிடங்கள் கண்ணயர்ந்து போனான்.

வாசிப்பில் மூழ்கிய திருவின் தாத்தாவை எழுப்பிய பாட்டி, ஏதோ சொல்ல இருவரும் வீட்டை விட்டு தெருவிலும் மற்ற இடங்களிலும் தேட திருவை காணவில்லை.

பதட்டத்தோடே புலம்பிய இரண்டு பேரின் காதினிலும் அந்தக் குரல் ஒலிப்பது கேட்கவேயில்லை.

சில நிமிடங்களுக்குப் பின் தாத்தாவும் பாட்டியும் நின்று கொண்டிருந்த தெரு வழியே அந்த வண்டி போவதைக் கவனித்த தாத்தா விறுவிறுவென வண்டி வந்த எதிர்த்திசையில் நடந்தார்.

கொஞ்சதூரம் நடந்து, தெரு வளைய திரும்பி நிற்க தன் கையில் மரக்கன்று ஒன்றை அதன் பாரம் தாங்காமல் தூக்கிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தான்.

அதைப்பார்த்த திருவின் தாத்தா அவன் கையில் மரக்கன்று இருப்பதைப் பார்த்துவிட்டு  ஒரு கணம் மின்னலைப் பார்த்ததைப் போல நின்றுவிட்டார்.

ஓடிச்சென்று கட்டியணைத்துக் கொண்டவரின் மனதில் அவர் திருவிடம் சொன்னது அலையடித்தது.

இதுதான் நம் போக்கிடம்
 இதனை சரியாகவும்
 சரியாக்கியும் வைத்துக்கொள்வது மனிதகுலத்தின் மாண்பு

இ.இளையபாரதி

இந்தத் தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்