கர்மவீரர் ஒரு சகாப்தம்

190

பள்ளிக்கு புத்தகப்பையை எடுத்துக் கிளம்பும் போது. இருக்கா ? இல்லையா ? என்று பையை தடவிப்பார்த்து……… இருக்கு என்று உறுதி செய்த பின் பள்ளிக்கூடம் நோக்கி அக்கால ஏழை மாணவர்களின் கால்கள் போகும்….

எது இருக்கனும்…?
பள்ளியில் மதிய உணவு அருந்த அம்மா தந்த அந்த நெளிந்து அலுமினியத்தட்டு….

ஒருவேளை பொங்குவோர் வீட்டில் இரவில் மட்டுமே சோறோ,கஞ்சியோ,கூழோ.. கிடைக்கும்….. அதுவும் அறைகுறையாக…..

காலையில் நீராகாரம் இருக்கலாம், இல்லாமலும் போகலாம் என்ற நிலையில் இருக்கும் ஏழை பாமர மக்களின் குழந்தைகளை பள்ளிக்கூடம் நோக்கி போக வைத்தவர். காமராசரின் மதிய உணவுத்திட்டம் தான் பிற்காலத்தில் கவர்ச்சி அரசியலால் சாமர்த்தியமாக சத்துணவுத்திட்டமென மாறியது.

* உன்னைப்போல் தலைவருண்டோ
உழைப்பாலே உயர்ந்தவரே….

* மலர்களின் நடுவினில் ஒரு ரோஜா
மக்களின் மத்தியிலே காமராஜா….

* விருதுபட்டிக்கு எனும் சீமையிலே பிறந்தாரே ஏழைப்பங்காளன் தான்

*தலைவர் காமராஜர் வாழ்க. …
சமத்துவம் எழுந்து வாழ……

மேற்கூறிய காமராசரின் புகழ் போற்றும் பாடல்கள் விருதுநகரில் உழைப்போர் அதிகம் உள்ள பகுதிகளில் காமராசரின் பிறந்தநாள் மட்டுமல்லாது… சுதந்திர தின விழா… குடியரசு தின விழா…. சிவாஜிகணேசன் பிறந்தநாள் விழா… கல்யாண வீடுகள்…. என அனைத்து கொண்டாட்டங்களிலும் இடம் பெறும் பாடல்கள். …

காமராசரின் உடை வடிவமைப்பைப்போலவே நீளமான கை வைத்த கதர்சட்டை அணிந்து வரும் பல பெரியவர்கள் இன்றும் உள்ளனர். உடையிலும் சிக்கனத்தின் வெளிப்பாடு. அப்படிப்பட்ட ஆடம்பரமற்ற பெருந்தலைவர் காமராசர்.

கவியரசர் கண்ணதாசனையும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனையும், எழுத்து அரிமா ஜெயகாந்தனையும் தன்னை நோக்கி ஈர்த்த காந்தம் இவர்….

முதல்கையெழுத்து!!…. முதல் கையெழுத்து!!…. என்கிறார்களே ஆட்சிக்கு வந்தவர்களும் வரத்துடிப்பவர்களும்..

“எனக்குச் சொந்தக்காரன்… என் ஊர்க்காரன்… என் கட்சிக்காரன்னு சொல்லிட்டு அந்த சலுகை இந்த சலுகை வேணும்னு வருவாங்க….” ஆனால் “நீங்க சட்டவிதிகள் என்ன சொல்லுதோ அது படி மட்டும் நடந்தால் போதும் ”
இதுதான் காமராசரின் முதல் உத்தரவு. …

பெற்ற தாயிடம் கூட சில நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கி பேசும் அளவு மக்களுக்கான தலைவராக வாழ்ந்தார். விதிகளுக்கு புறம்பாக தாயின் வீட்டில் இருந்த குடிநீர் இணைப்பை உடனே துண்டிக்கச் செய்தவர்.

ராஜாஜியின் கொடூரமான குலக்கல்வித்திட்டத்தை கடுமையாக எதிர்த்து பாமர மக்களுக்காக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார்.

”பச்சைத்தமிழன் காமராசரால் மட்டுமே தமிழகம் சீரடையும். அவரை விட்டு விடாதீர்கள்” என ஈ.வே.ரா. பெரியார் சொல்லும் அளவு அடித்தட்டு மக்களுக்கான அரசை அமைத்தார்.

முக்கியத்துறைகள் அனைத்தும் முதலமைச்சர் வசம் மட்டுமே இருக்கட்டும், என்றெண்ணாமல் தனது சகா திரு.கக்கன் அவர்களுக்கு போலீஸ் துறை மந்திரி பதவி தந்து அதிகாரப்பகிர்வுக்கு இலக்கணமானார்.

வெள்ளம், பஞ்சம், விபத்து…  என பேரிடர்கள் வந்தபோதெல்லாம் அறையில் அமர்ந்து வெறுமனே உத்தரவு இடாமல் களத்தில் இறங்கி பணியாற்றியவர். அமைச்சர்கள் அதிகாரிகளின் தேவையற்ற செலவுகளை கண்டிப்புடன் தவிர்த்து மக்கள் பணம் காத்தார்.

முதலமைச்சர் கோட்டாவுக்கான மருத்துவ கல்லூரி சீட்டுகளை… விண்ணப்பத்தில் கைநாட்டு வைத்திருந்த பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு தரச்செய்தவர்.

இவரும் தமிழ் தமிழ் என்று முழங்கி ஹிந்தி எதிர்ப்பு பேசியிருந்தால் தோல்வி இவரை நெருங்கியிருக்காது. பல மொழி நம் மக்கள் கற்றல் நல்லதென நினைத்து தோல்வியை ருசித்தவர்.

ஆதரவற்ற ஏழை முதியோருக்கான முதியோர் பென்ஷன் திட்டத்தின் மூலம் ஏழை முதியோரின் பாரம் குறைத்தார்.

நேருவுக்கு பின்னரும் சாஸ்திரிக்குப் பின்னரும் கட்சியின் பதவிச் சண்டைகளை தவிர்த்து பிரதமர்களை உருவாக்கியவர்... The Real King Maker. …

காலாகாந்தி (கருப்பு காந்தி )என வட இந்திய மக்களால் காந்திக்கு நெருக்கமாக புகழப்பட்டவர்.

“இந்த சங்கை ஊதி ஏன் மக்களைப் பதட்டப்பட்டால் வைக்கிறீங்க..” என்று கூறி சைரன் ஒலியை நிறுத்தச் சொன்னவர்.

முதலமைச்சரின் காரை சிக்னலில் நிறுத்திய போலீஸ்காரர் மன்னிப்பு கேட்டபோது.. “இந்தா..நீ எதுக்கு மன்னிப்பு கேட்குற… நீ செஞ்சது சரிதான்னேன்.. அது ஒன்னும் தப்பு இல்லங்கிறேன்” என்று தட்டிக்கொடுத்து பாராட்டியவர்.

மாற்றுக்கருத்து கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் ஜீவாவுடன் மானசீக நட்பு கொண்டவர். இன்றைக்கு இருக்கும் தொழிற்பேட்டைகள். பெரிய தொழிற்சாலைகள் பலவும் அவரது ஆட்சியில் வந்ததே.

ஆகட்டும் பார்க்கலாம் ” என்ற இவரது சொல் நடுநிலை மேலாண்மைக்கான மந்திரச்சொல்….

சொந்த ஊரில் மொழிப்போராட்டத்தால் தோற்றாலும், தமிழகத்தின் தென்கோடி நாகர்கோவிலிலும் வடகோடி குடியாத்தத்திலும் தேர்தலில் வென்றவர்.

கருவாட்டுக்காரியின் மகன், பனையேறி, எருமைமாட்டுத்தோலன், அண்டங்காக்கை என தரம் தாழ்ந்த அடுக்குமொழியில் வசவுகளால் ஏசினாலும் பதட்டமின்றி நாகரீகமாக பதிலளித்தவர்.

இப்பேர்பட்ட மாபெரும் தேசியப் பெருந்தலைவரின் பெயரையும் புகழையும் சாதி வேலிக்குள் வைத்து அரசியல் பிழைப்பிற்கென மட்டும் பயன்படுத்துவது முறையோ…?

வாசலில் காமராசரின் சிலையை வைத்து கல்வியை வியாபாரமாக்கிவரியிடமோ..

அணைகளுக்கான நீர்வரத்தை தடுத்து கட்டிடங்களாக உருவாக்குபவரிடமோ….

தொழிற்சாலைகளை தனியாருக்கு தாரை வார்ப்பவரிடமோ….

மதப்பித்தால் சாதிப்பித்தால் பிதற்றுவோரிடமோ….

தனைத் தவிர்த்த கதரிடமோ
தனைத் எரிக்க முயன்ற காவியிடமோ
நிச்சயமாக இருக்க மாட்டார்….

தேடுங்கள். …
இருக்கலாம். …காமராஜர்
சாதி;மதம் :அரசியல் தாண்டி
அடையாளமின்றி
அங்கிகாரமின்றி
உங்களுள்ளும்
என்னுள்ளும் ….
இருக்கலாம் காமராஜர். …

“ஞானம் மகன் “
-சின்னராஜா . G.K