தொடரும் தற்கொலைகள்

132

காதல் விவகாரத்தால் மனமுடைந்த ஜெமினி மியூசிக் சேனல் நிகழ்ச்சித் தொகுப்பாளர் நிரோஷா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்குத் தொலைக்காட்சியான ஜெமினி மியூசிக்கில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் நிரோஷா. செகந்திராபாத்தில் உள்ள ஹாஸ்டல் ஒன்றில் தங்கியிருந்த நிரோஷா, இன்று காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்

துறுதுறு பேச்சு, அழகு என தெலுங்கு தொலைக்காட்சி வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சித் தொகுப்பாளராக திகழ்ந்தவர் நிரோஷா. இவரின் திடீர் தற்கொலை முடிவால் தெலுங்கு சின்னத்திரை வட்டாரம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. நிகழ்ச்சித் தொகுப்பாளராக சேர்வதற்கு முன்னர் செய்தியாளராக பணியாற்றிவர் நிரோஷா. காதல் விவகாரமே நிரோஷாவின் இந்த துயர முடிவிற்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தீவிர மன அழுத்தத்தில் நிரோஷா இருந்ததாக அவரது தோழிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கான காரணம் குறித்து அவர் யாரிடமும் கூறவில்லை எனத் தெரிகிறது. தற்கொலை செய்து கொள்வதற்கு சில நிமிடங்கள் முன்னதாக நிரோஷா தனது செல்போனில் யாருடனோ பேசியுள்ளார். அவர் யாருடன் கடைசியாக பேசினார், ஏன் இந்த துயர முடிவை எடுத்தார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 நிரோஷாவின் பெற்றோர் சித்தூரில் வசித்து வருகின்றனர். நிரோஷோவின் காதலன் என சொல்லப்படும் ரித்திக் கனடா நாட்டில் தற்போது இருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். குடும்பப் பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகம்