உள்ளங்கையில் ஒரு திருடன்

85

எங்கள் அலுவலகத்தில் ஒரு நண்பர் கண்ணாடியின் ஃப்ரேம் ஆன்லைனில் வாங்குவதற்காக, lenskart.com என்ற இணையதளத்தில் சில மாடல்களை பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் விலை அவருடைய பட்ஜெட்டுக்குள் வராதபடியால் அந்த இணைய தளத்தை மூடிவிட்டு முகநூலை திறந்தார். அங்கு அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி, நியூஸ் பீடில் முதல் பதிவாக லென்ஸ்கார்டின் பக்கம் இருந்ததோடு அவர் தேடிய அதே மாடலின் விளம்பரமும் இருந்தது. “என்ன விக்னேஷ் இது? மேஜிக் மாதிரி இருக்கு.

அந்த வெப்சைட்ல தேடினது ஃபேஸ்புக் காரனுக்கு எப்படி தெரிஞ்சது?” என்று ஆச்சரியப்பட்டார். சிரித்துக்கொண்டே சொன்னேன். “பாஸ் இது மேஜிக்லாம் இல்லை. இதுக்கு பேருதான் பிரைவசி திருட்டு”. உங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் இருந்திருக்கும். நீங்கள் இணையத்தில் ஒரு விஷயத்தைத் தேடியபிறகு அது குறித்த விளம்பரங்களே தொடர்ந்து வந்துகொண்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இது எப்படி சாத்தியமாகிறது?

நீங்கள் தேடுவது அவர்களுக்கு எப்படி தெரிகிறது?. நீங்கள் தேடுவதை எல்லாம் அவர்கள் கண்காணிக்கிறார்கள் என்றால் உங்களுக்கென்று ரகசியம் என்று எதுவும் இல்லையா? மனதைத் திடப்படுத்திக்கொள்ளுங்கள். இன்றைக்கு இணையம் வளர்ந்திருக்கும் நிலைமையைப் பொறுத்தவரை இல்லை என்பதுதான் உண்மை.

எப்படித் தொடங்கியது இந்த பிரைவசித் திருட்டு?

உலகிலேயே ரொம்பவும் மோசமான அதேசமயம் கில்லாடியான திருடன் யாரென்றால், என்னைப் பொறுத்தவரை கூகுள்தான். நமக்குத் தேவையான தகவல்களை உடனே தேடி எடுத்துத் தர வேண்டும் என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதுதான் கூகுள். ஆனால் கூகுள் ஒரு பேராசைப் பட்டது, ஒரு பயனர் ஒரு விஷயத்தைத் தேடத்தொடங்கும் முன்பே அவர் எதைப் பற்றி தேட வருகிறார் என்பதைத் தெரிந்துகொண்டு அவரின் தேடுதலை எளிமையாக்குவது என்ற முடிவுக்கு வந்ததுதான் இந்தப் பிரைவசி திருட்டுக்கெல்லாம் பிள்ளையார் சுழி.

அதற்காக மக்கள் எதையெல்லாம் அதிகமாக தேடுகிறார்கள் என்பதை கவனிக்கத் தொடங்கியது. ஒரு பயனர் எதையெல்லாம் தேடுகிறார் என்று சேமித்து வைத்துக்கொண்டு குறிப்பிட்ட ஏரியாவில் வாழும் மக்கள் இந்த நேரத்தில் இதைப் பற்றித்தான் தேடுகிறார்கள் என்று கணிக்க ஆரம்பித்தது.

கூகுளில் நீங்கள் ஒரு எழுத்தை அழுத்தியதும் கீழே ஆப்சன்கள் விரிகிறதே அதெல்லாம் நம்மைப் போன்றவர்களால் தேடப்பட்டு கூகுளால் சேமித்து வைக்கப்பட்டவையே. இதனால் பயனர்களின் தேடுதல் எளிமையானதோடு கூகுளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. அதோடு நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லையே. கூகுள் இன்னும் ஒரு அடி மேலே எடுத்து வைத்தது. சரி இவன் இதைத்தான் தேட வர்றான்னு தெரிஞ்சுகிட்டாச்சு இதை வைத்து எப்படி காசு பார்க்கலாம் என்று யோசித்தது.

அது எப்படி?

சிம்பிள். நீங்க சுவாரஸ்யமா டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது சம்பந்தமே இல்லாம ஒரு துணிக்கடை விளம்பரம் வந்தா அதைப் பார்ப்பீங்களா? உடனே சேனலை மாத்திடுவீங்க. அதுவே நீங்க ஒரு குறிப்பிட்ட மொபைல் வாங்கலாம்னு மனசுல ஒரு திட்டம் வச்சிருக்கும்போது அந்த சமயத்துல அதே மொபைல் போன் விளம்பரம் டிவியில வந்தா சேனலை மாத்துவீங்களா? இல்லைதானே இதுதான் கான்சப்ட். முதலில் நீங்கள் எதையெல்லாம் தேடுகிறீர்கள் என்று தெரிந்துகொண்டு உங்களுக்கு என்ன தேவை என்பதை கூகுள் தீர்மானிக்கும். பிறகு அதற்கு பொருத்தமான விளம்பரங்களை நீங்கள் பார்வையிடும் இணையதளங்களில் எல்லாம் காட்டும். இதற்கு பெயர் கூகுள் ஆட்சென்ஸ் (google Adsense). இது உங்களின் ஒவ்வொரு தேடலையும் சேமித்து அதன் மூலம் உங்களுக்கு எதிலெல்லாம் ஆர்வம் என்பதை தீர்மானிக்கும் ஒரு மென்பொருள்.

நீங்கள் பிளிப்கார்ட் போன்ற சில வணிக தளங்களை பார்வையிடும் போதுதான் இது இன்னும் தீவிரமாக வேலை செய்யும். இப்போது இருக்கக்கூடிய மார்க்கெட்டிங் டெக்னிக்குகளிலேயே இதுதான் உச்சபட்சம். அதோடு வியாபார நிறுவனங்களுக்கு மிகுந்த பயனளிக்கும் ஒரு வழியும்கூட.

பிளிப்கார்ட், ஸ்னாப் டீல்ஸ் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகளில் நீங்கள் ஒரு பொருளை வாங்கும் எண்ணம் இல்லாமல் சாதாரணமாக அதைத் தேடினாலும்கூட, அடுத்து நீங்கள் பார்வையிடும் எல்லா வலைதளத்திலும் அந்தப் பொருளைப் பற்றியே விளம்பரம் வரும்போது இயல்பாகவே அது உங்கள் ஆசையைத் தூண்டும். தொடர்ந்து அந்த விளம்பரங்களைப் பார்க்க பார்க்க நீங்கள் அதை வாங்கிவிடுவீர்கள். உங்களுக்கு இது தேவை என்று அதுவே முடிவு செய்வதோடு உங்களுக்கு இது தேவை என்று உங்களையே முடிவு செய்ய வைக்கும் வேலை இது. அதாவது ஒரு பக்கா பிரைன் வாஷிங் தான் இது.

சரி நான் என்னோட பிரவுசர் ஹிஸ்டரியை அழிச்சிட்டா பிறகு எப்படி கூகுளுக்கு தெரியும்? என்று கேட்கிறீர்களா? ஒரு விஷயம் தெரியுமா? பிரவுசர் ஹிஸ்டரி ஒரு மேட்டரே இல்லை. கூகுள் ஹிஸ்டரி என்று ஒன்று உண்டு. நம்பமுடியவில்லையா? உங்கள் மெயிலை ஓப்பன் பண்ணி வைத்துக்கொண்டு இன்னொரு டேபில் history.google.com க்கு  போய் பாருங்கள் நீங்கள் பார்வையிட்ட அத்தனை வெப்சைட்டுகளும் பட்டியலிடப்பட்டிருக்கும். அப்படியே அதில் Ads for your interest ஐ கிளிக் செய்து இண்ட்ரெஸ்ட் என்ற பகுதிக்கு சென்றீர்கள் என்றால் உங்களுக்கு இந்த இந்த விஷயத்தில் எல்லாம் ஆர்வம் என்று உங்கள் ஜாதகத்தையே புட்டு புட்டு வைப்பார்கள்.

ஏற்கனவே சொன்னது போல நீங்கள் பார்வையிடும் வெப்சைட்டுகளையெல்லாம் வைத்து உங்கள் ஆர்வத்தினைக் கணிக்க கூகுளால் முடியும். உதாரணமாக அகம் இணையதளத்தில் நீங்கள் இந்தக் கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கும் போது இதுவும் உங்களின் ஆர்வங்களில் ஒன்றாக இந்நேரம் பதிவாகியிருக்கும். கூகுள் மட்டுமல்ல இப்போது ஃபேஸ்புக்கும் இந்த வேலையை ஆரம்பித்திருக்கிறது. அதைப் பொறுத்தே அந்த விளம்பரங்கள், உங்களின் கூகுள் சர்ச். ஃபேஷ்புக்கில் காட்டப்படும் பீப்பிள் யூ மே நோ ஆகியவை அமையும்.

ஒரு காலத்தில் இணையத்தை உள்ளங்கையில் உலகம் என்பார்கள். ஆனால் இப்போது உங்கள் உள்ளங்கையிலேயே ஒளிந்துகொண்டு உலகமே உங்கள் ரகசியங்களை வேவு பார்க்கிறது. உங்கள் ஆர்வத்திற்கு பொறுந்தும் நிறுவனங்கள் தங்கள் பொருளை வாங்கவைக்க உங்கள் மூளையைத் தூண்டுகிறது. விழித்துக்கொண்டால் பிழைத்துக்கொள்வோம்.

இதிலிருந்து எப்படித் தப்பிப்பது?

இணையத்தில் உலாவும் போது குறிப்பாக ஆன்லைன் ஷாப்பிங் சைட்டுகளைப் பார்வையிடும் போது உங்கள் மெயில், பேஸ்புக் போன்றவற்றை லாக் அவுட் செய்து விடுங்கள். உங்கள் மொபைல் தானே என்பதற்காக லாகினிலேயே இருந்தால் உங்கள் கண்ணுக்கு தெரியாமலேயே உங்கள் ரகசியங்கள் திருடப்படும்.

இணையத்தில் நீங்கள் தேடும் ஒவ்வொரு விஷயமும் எவரோ ஒருவரால் கண்காணிக்கப்படுகிறது என்பதை உணர்ந்துகொண்டு தேடுங்கள்.

வெப்சைட்டுகளில் தெரியும் கூகுள் ஆட்சென்ஸ் விளம்பரங்கள் உண்மையிலேயே உங்களுக்கு பயனளிக்கக்கூடியதா என்பதை தெரிந்துகொண்டு அதை கிளிக்குங்குள். ஏதோ ஆஃபர் போல ஓப்பன் பண்ணி பார்ப்போம்னு ஓப்பன் செய்தால் உங்களை மிகச்சுலபத்தில் மூளைச் சலவை செய்து உங்களுக்கு சம்பந்தமே இல்லாத பொருளைக்கூட உங்களின் அத்தியாவசியம் போன்ற ஒரு தோற்றத்தை உங்கள் எண்ணங்களில் பதியவைத்துவிடுவார்கள்.

மேலே சொன்ன வழிமுறைகள் இதைக் குறைப்பதற்கான வழிகள்தானே தவிர தடுப்பதற்கான வழிகள் இல்லை. இன்றைக்கு இணையம் வளர்ந்துகொண்டிருக்கும் சூழலுக்கு உங்கள் ரகசியங்கள் திருடப்படுவதைத் தடுக்க வழியே இல்லை என்பதுதான் நிதர்சனம். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்பதைப் போல அந்தரங்கமான விஷயங்களையும் உங்களுக்கு தேவையில்லாத விஷயங்களையும் தேடாமல் இருக்கும் பட்சத்தில் ஓரளவு தப்பலாம். ஆக உங்கள் உள்ளங்கையிலேயே ஒரு திருடன் இருக்கிறான்.

சூதானமா இருங்க மக்களே!

Log off…

  • தி. விக்னேஷ்

To Read more Tamil News Click here