வாழ்க ஜனநாயகம்

124

முறையாக இந்தக் கட்டுரையை இங்கிருந்து தான் துவங்க வேண்டும்.

அரவிந்த் கெஜ்ரிவால் 8 ஆம் தில்லி முதல்வர். இவர் அரசுத்துறையில் ஒளிவின்மை இருக்க வேண்டும் என்று போராடி வரும் ஓர் இந்திய தன்னார்வல சமூக சேவகரும் ஆவார். 15 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தில்லி முதல்வர் பதவியில் இருந்த சீலா தீக்‌சித்தை புது தில்லி சட்டமன்ற தொகுதியில் 25,864 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

நரேந்திர தாமோதரதாசு மோதி பாரதிய ஜனதா கட்சி சார்பாக பொதுத் தேர்தல், 2014 நடந்த போது, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நரேந்திர மோதி நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டார். இரண்டு மாதங்களில் நாடெங்கும் எட்டு திக்குகளில் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 430 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

வடோதரா தொகுதியில் 5,70,128 வாக்குகள் வித்தியாசத்திலும், வாரணாசி தொகுதியிலும் பெரும் வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார்.

இவர்களின் வெற்றி மட்டுமே நமக்கு தெரியும். அதன் பின்னால் ஒளிந்துள்ள சமூக வளைதளங்களின் பங்களிப்பை இக்கட்டுரை அலசும்..

மேற்கண்ட அரசியல்வாதிகள் இந்தியாவில் சமூக வலைதளங்களை திறமையாக கையாண்டு வெற்றிபெற்ற போதிலும் ஆட்சித்திறன், அதிகாரம், நிர்வாகத் திறமையின்றியே இருக்கின்றனர்.

கெஜ்ரிவாலுக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் வாய்க்கால் தகராறு இருப்பதால் கெஜ்ரிவாலால் சிறப்பாக செயல்பட முடியாத நிலை நீடிக்கிறது.
மத்திய அரசு டெல்லி அரசுக்கு தரும் நெருக்கடியால் விழி பிதுங்கி நிற்பது என்னவோ மக்கள் தான்..

இல்லாத ஒரு அலையை இருப்பதாக விளம்பரப்படுத்தி இறுதியில் அந்த அலையிலேயே மூழ்கி கொண்டு இருக்கிறார் திரு. மோதி அவர்கள். போட்டோஷாப் வேலைகள் எல்லாம் திறம்பட செய்து அண்ணாரது ஒவ்வொரு அசைவையும் பதிவேற்றம் செய்ய பதினோரு பேர் கொண்ட குழு அமைத்து ஒரே நாளில் சரிந்து கிடக்கும் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த போகிறார் என ஆட்சிக்கு வர எத்தனை சித்து வேலைகள் செய்ய வேண்டியதாகி விட்டது.

கடைசியில் தான் தெரிந்தது மோதி மண் குதிரை கூட இல்லை பொய்க்கால் குதிரை தான் என்று. அட்சயப்பாத்திரமாக டேஷ் பக்தர்களால் அர்ச்சிக்கப்பட்ட மோதி சாமானிய பொது ஜனங்களால் கழுவி கழுவி ஊற்றப்பட்டு இறுதியாக ஈயம் போன பழைய பாத்திரமாக மாறிவிட்ட சோகமும் அரங்கேறி விட்டது.

என்ன படிக்கும்போதே கொட்டாவி வருகிறதா? உங்களுக்கும் கழுவி ஊற்றும் எண்ணம் வருகிறதா? இனி கவனமாக படியுங்கள் அதற்காக தான் தமிழக கட்சிகள் காத்திருக்கின்றன.

”கடைசி மூச்சை சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்.. பத்து வயது முதல் ஓய்வில்லாமல் உழைக்கிறேன் ஓய்வு தாருங்கள்.. மிகுந்த அவதிப்படுகிறேன். வயது முதிர்ந்தவன் என்றும் பாராமல் இணையதளங்களில் என்னை விமர்சிக்கிறார்கள்.. திராவிடத்தை குழிதோண்டி புதைக்கப்பார்க்கிறார்கள்.”
_கலைஞர் கருணாநிதி. 94 வயதிலும் வரைப்பட்டிகை( tap) மடிக்கணினி (laptop) காட்சியளிக்கும் கலைஞருக்கு சமூக வளைதளங்களின் மேல் ஏன் இத்தனை ஆர்வம்?

பத்திரிகைகளோ, தொலைக்காட்சி செய்திகளோ கேட்கும் வழக்கம் இல்லாத
காணொளிகாட்சி கொடநாடு என்று பரபரப்பாக இருந்த செல்வி. ஜெயலலிதா அவர்கள் பகிரிவரை(whats app) இறங்கி வந்து தேர்தல் பரப்புரைகள் மேற்கொள்ள காரணம் என்ன?

2016 தேர்தல் ஆணையத்தின் கணக்கின்படி தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை 5.79 கோடிகள். அதில் இணைய பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 2.69 கோடிகள். இது இந்திய அளவில் இரண்டாவது இடம். டெல்லியை பின்னுக்கு தள்ளி இருக்கிறது தமிழகம்.

ஊழலில் தமிழகம் முதலிடம் என்பது வேறுகதை. இந்த படித்த இளம் வாக்காளர்களை கவரதான் 50 ஆண்டுகள் தொண்மை மிக்க தமிழக அரசியலில் செய்யாத சாதனையை செய்ததாக நம்ப வைக்க கோடிகளில் செலவழிக்கின்றன கட்சிகள். உண்மையில் சாதனை என்று ஏதாவது செய்து இருந்தால் அதை விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லையே.

இந்த களேபரங்கள் எல்லாம் போதாதென்று வைகோ, விஜயகாந்த் போன்ற நகைச்சுவை மணிகள் வேறு வலைத்தள வேட்டையில் இறங்கி உச்சகட்ட நகைச்சுவை செய்கிறார்கள். விளைவு வீட்டுச்சுவர்களில் விளம்பரம் செய்யாதீர்கள் என்று எழுதுவதை போல அவரவர் இணைய பக்கங்களிலும் பகிரிக் கணக்கிலும் நாமும் எழுதி வைக்க வேண்டிய நிலைக்கு ஆளாகி இருக்கிறோம். இவற்றை கண்டு சிரிப்பதோடு மட்டுமல்லாமல் சற்று சிந்திக்கவும் செய்யுங்கள் நண்பர்களே!

கழுவி ஊற்ற இடம் தருவதாக உறுதியளித்தேன் இல்லையா? அதை பத்திரமாக எடுத்து வைத்து வருகின்ற தேர்தலில் ஊழல்வாதிகளை அடையாளம் கண்டு அவர்களிடம் ஒப்படைக்க வேண்டுகிறேன்.

தவறாமல் வாக்களிப்போம்.. நேர்மையான ஊழலற்ற ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்போம்..

வாழ்க ஜனநாயகம்…

-முகமது உஸ்மான்