வாழ்க்கை ஒரு சினிமா சினிமா!! – பகுதி 2

281

“காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு…

வந்ததா.,. வந்ததா.. வசந்தம்  வந்ததா?” – என்கிற பாடல் ஒலிக்காத பட்டி தொட்டியில்லை அந்நாட்களில். காதல் கடிதம் எழுதாத இளைஞனும் இல்லை அப்போது!
கையெழுத்து அழகாக இருக்கும் பையன் ஒருவனை பிடித்து காலில் விழுந்து கதறி, தன் காதலை எடுத்துச் சொல்லி, தன் மனதில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் எழுத்தாய் வடித்து அவளிடம் சமர்ப்பிக்க துடிக்கும் மனிதர்கள் நிரம்பியிருந்த காலகட்டம் அது. ஆனால் கடிதம் என்னவோ இறுதியில்,” அக்கா மகளே  இந்து.. எங்கக்கா மகளே இந்து..’ என்கிற தோரணையில்தான் முடியும். சண்டையில் கிழியாத சட்டையும், காதலில் வாங்காத பல்பும் இங்கேது?

சினிமாவில் காதல் கடிதம் காதலனோ அல்லது காதலியோ படிக்கையில் கடிதத்தில் அவன் அல்லது அவள் முகம் தோன்றி பேசுவதை பார்த்திருப்போம். ஒவ்வொரு எழுத்தும் அவள் முகமாய் தெரியும்.அவன் உருவே தெரியும். ஒரு காதல் கடிதம் எழுதுவது என்பது எவ்வளவு கடினமோ அதைவிடக் கடினம் அதை படிப்பது. தனிமை கிடைக்க வேண்டும். தனிமை கிடைத்தாலும் கூட இடம் சரியாய் அமையாது. படுக்கையறை அல்லது மொட்டை மாடிதான் காதல் கடிதம் படிக்க வசதியான இடம். இரண்டும் இல்லாத வீடுகளில் வசிக்கும் ஆணோ அல்லது பெண்ணோ நாடுவது கொல்லைப்புறத்தில் இருக்கும் கிணற்றடி அல்லது ஊரின் எல்லையில் இருக்கும் கண்மாய்.

 

அதென்ன குறிப்பாய் இந்த இடங்கள்? காரணம் இருக்கிறது. மெல்ல தன் கூந்தல் புரள, தலையணையில் ஒய்யாரமாய் சாய்ந்து, அவன் உருவத்தை மெல்ல இதயத்திலிருந்து மேல்நோக்கிக் கொணர்ந்து கொஞ்சம் சத்தமிட்டு படிக்கும் காதல் கடிதங்கள் உடனடி சொர்க்கத்தை கொடுக்கும் என்பதை இன்றைய இளைஞர்கள்/இளைஞிகள் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.

“நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்

தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சிணுங்கள் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் பிரியம் இம்சை”

இந்த எல்லா வர்ணனைகளிலும் ஏதேனும் ஒன்று இல்லாமல் இங்கே ஒரு காதல் கடிதம் தமிழில் எழுதுவதற்கு சாத்தியமேயில்லை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்பது எனக்குத் தெரியும். இதையே சேர்த்து ஒரு பாடலாய் வடித்தவன், இதை யோசித்தவன் கண்டிப்பாய் காதல் கடிதம் கொடுத்த மனிதனாகத்தான் இருப்பான்.

சோகங்களைத் தாங்கி வரும் கடிதங்கள் பெரும்பாலும் மனதிற்குள்ளேயேதான் படிக்கப்படுகின்றன. ஆனால் கண்களில் வரும் கண்ணீரோ , வெறுப்போ அல்லது கோபமோ கடிதத்தின் சாரத்தைக் காட்டிக் கொடுத்துவிடும். தாவணிக் கனவுகள் படத்தில் பார்த்திபன் சிவாஜியிடம் கடிதம் படிக்கும் காட்சி என்னால் மறக்கவே இயலாதது. அது பார்த்திபன் என்று தெரியாத காலத்திலேயே என் கண்கள் கலங்கியது ஞாபகம் இருக்கிறது. அந்த கடிதம் சோகமானதா இல்லை தவித்துக்கொண்டிருக்கும் ஒரு உயிர் தன் உடலை விட்டுப்பிரிய வேண்டும் என்று வந்த ஓலையா என்பதில் அடங்கியிருக்கிறது வாழ்க்கையின் சூட்சுமம்.

நான் பெல்காமில் இருந்தபோது ஒரு கடிதம் வந்தது. நான் தங்கியிருந்தது நிறுவனத்தின் மிகப்பரந்த கேம்பின் உள்ளேயேதான். வரும் கடிதங்கள் எல்லாம் மொத்தமாக வொர்க் ஷாப்பின் உள்ளே இருக்கும் ஒரு பெட்டியில் போட்டுவிடுவார்கள். பெரும்பான்மையான கடிதங்கள் அதன் சொந்தக்காரர் கைகளில் போய் சேர்ந்ததாக ஞாபகமே இல்லை. அதையும் மீறி அது என் கைகளில் வந்தடைந்தது. காரணம் அந்த இன்லேன்ட் கடிதத்தின் முகவரி பகுதியில் இருந்த கையெழுத்து. கடிதத்தை கொடுத்த மெக்கானிக் ,” என்ன சார்.. கேர்ள் பிரெண்டா?” என கேட்டார். நான் இல்லையென தலையாட்ட,” அட கையெழுத்து பார்த்தாலே தெரியுதே சார்..” என்றார்.

ஆம். அது ஒரு பெண்ணிடம் இருந்து வந்த கடிதம்தான். தோழி என்கிற வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்க அப்போது எனக்கிருந்த ஒரே ஜீவன். பதினேழு வயது மங்கை. பன்னிரண்டாம் வகுப்பு. பேரழகி என்பதன் அகராதியில் இவள் புகைப்படம் இருப்பதாய் கேள்வி. ஒரு காதலன் இருந்தான் அவளுக்கு. உடன் படிப்பவன். காண்பவர் எல்லாம் காதலிக்கச் செய்யும் பேரழகை அடைந்த ஒருவனின் கர்வம் எப்போதும் கண்களில் மிதக்கத் திரிபவன்.கர்வம் நெற்றியைத் தாண்டி போகும்போது அங்கே மயிர் மட்டுமே மிச்சமிருக்கும். மூளை செயலிழக்கும். அவளை திட்டம்போட்டு படுக்கையில் வீழ்த்தினான். அவள் தெரிந்தே சம்மதித்தாள். கர்ப்பம் ஆகவில்லை. ஆனால் காதலி என்கிற ஸ்தானத்தை அதன்பின் வெகு சீக்கிரம் இழந்தாள். அந்த வலியை பகிர அவள் என்னைத் தேர்ந்தெடுத்தாள். இதோ என் கைகளில் கடிதம்.

இப்படி ஒரு கடிதம் இதைப் படிக்கும் முப்பது வயதிற்கு மேற்பட்டோர் எல்லோர் வாழ்விலும் ஒருமுறையேனும் வந்திருக்கலாம். கதை வேறாக இருக்கலாம்.ஆனால் காட்சி ஒன்றுதான். கண்ணில் நீர் திரள,கைகள் நடுநடுங்க செய்வதறியாது திகைத்து நிற்கும் தருணத்தை கடந்து இதோ இங்கே இப்போது இதை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதே ஆச்சரியம்தான்.

பொக்கிஷம் படத்தின் மையமே கடிதங்கள்தான். எப்படி கடிதங்களை மையப்படுத்தி ஒரு முழுநீளப் படம் எடுக்க முடியும் என்பதே கூட இன்றைய தலைமுறைக்கு ஆச்சரியமாய் இருக்கும். அப்போதெல்லாம் முதல் தலைமுறையாய் பள்ளி சென்றவர்கள் தங்கள் பாடங்களைத் தாண்டி எழுதும் முதல் மற்றும் ஒரே விஷயமாய் இந்தக் கடிதங்கள் மட்டுமேதான் இருந்தது. அதற்கு ஒரு முறையும் இருந்தது. இப்போது கிண்டலாக சொல்லப்படும் நலம் நலமறிய ஆவல் என்கிற வார்த்தையில் ஆவலை அவா என்று எழுதுபவர்கள் தமிழறிஞர்களாய் அப்போது பார்க்கப்பட்டார்கள்.

குறிப்பாய் 1940-களில் பிறந்தவர்கள் எழுதும் கடிதங்கள் எங்கும் நிறைந்திருக்கும் சமஸ்கிருத வார்த்தைகள், மணிப்பிரவாள நடை இதெல்லாம் ஆவணங்கள் போல பாதுகாக்க வேண்டியவை. அதெல்லாம் நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் சமுதாயத்தின் வரலாறு.கடிதங்களின் சக்தி அதன் எழுத்துகளில், அதை எழுதுபவரின் விரல்களில்,அதை படிப்பவரின் மனநிலையில் என ஒரு பெரிய நடைமுறை அது. இன்றைய SMS,Mail,Whatsapp என எதுவுமே நிரப்ப முடியாத வெற்றிடம் அது.

வெளியூரில் வேலை பார்க்கும் குடும்பத் தலைவன் ஒரே ஒரு கடிதத்தை மூன்றாக பிரித்து முதலில் தன் குடும்பத்தாருக்கும், பின்னர் தன் பிள்ளைகளுக்கும், இறுதியில் தன் மனைவிக்கும் எழுதிய கதைகள் இங்கே ஏராளம்.. ஏராளம். இறுதியில் தன் மனைவிக்கு அவன் எழுதும் வரிகள் எந்த இலக்கியமும் சொல்லிவிட முடியாத உணர்வுகள்.

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே – என மனைவி எளிதில் பதில் கடிதம் எழுதமுடியாத அந்த காலகட்டம் இப்போது சாத்தியமேயில்லை. ஆனால் அது நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது.

ஒன்றாய் படித்த நண்பர்கள் வேறு வேறு இடங்களில் மேற்படிப்பு படிக்க பிரிகையில் தொடர்பு எல்லைக்கு அப்பால் போகாமல் தடுத்த ஒரே சாதனம் கடிதங்கள்தான். புது ஊரின் அழகு, விடுதி உணவின் தரம், நேற்று வேதியியல் ஆராய்ச்சிக் கூடத்தில் அவனைப்பார்த்து சிரித்த வகுப்புத் தோழி, காலையில் பார்த்த ரஜினி படம், ஊரின் குளக்கரைக்கு அருகே இருக்கும் இவர்கள் அமர்வதற்கென்றே கட்டப்பட்ட சிமென்ட் கற்கள் எல்லாம் கலந்த கடிதங்களாய் அது இருக்கும்.

கடிதங்கள் வழக்கொழிந்து போய்விட்டது என்பதை இங்கே தகவலாக கூட பதிவு செய்ய என் மனம் மறுக்கிறது. தன் மனநிலையின், எண்ணங்களின் வடிவத்திற்கேற்ப பேனா மையின்  நிறங்களை உபயோகப்படுத்தும் நண்பன் ஒருவன் எனக்கு இருந்தான். அவன் சொல்ல வரும் சேதியை படித்து கூட தெரிந்துகொள்ள வேண்டாம். அந்த வண்ணங்களே போதும். சந்தோசமான செய்திக்கு அவன் பச்சை நிறத்தை உபயோகிப்பான். கடைசியாய் ஒன்பது வருடங்களுக்கு முன்பு அவன் எழுதிய கடிதம் முழுக்க முழுக்க கருப்பு நிற மையினால் நிரப்பப்பட்டிருந்தது. நான் இன்னும் படிக்காத அல்லது வாழ்நாளில் படிக்கவே விரும்பாத அந்த கடிதம் இன்னும் என் பழைய நாள் குறிப்பேடில் தூங்குகிறது.

பால கணேசன்
இந்தத் தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்