வாழ்க்கை ஒரு சினிமா சினிமா!! – பகுதி 3

280

ரமேஷ் ஒரு திருநங்கை. ஏழாம் வகுப்பில் அவன் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தபோது நான் அவன் நண்பன் ஆனேன். அவனை உற்று கவனிப்பதை அப்போதைய பகுதி நேர வேலையாக வைத்திருந்தேன். அவன் நடை, பேசும் விதம், சிணுங்குவது, கோவப்படுவது என எல்லாவற்றிலும் வெளிப்படும் அவன் உடல்மொழி என்னை ஒவ்வொரு முறையும் ஆச்சரியத்தில் மிதக்க வைக்கும். அதற்கு முன்பு நான் பார்த்த திருநங்கைகள் வெள்ளித்திரையில் “வா மாமா.. ” என கோரஸாக அழைத்தவாறே தங்கள் மாராப்பை மேலே இழுத்துவிட்டு கொள்வதும், பாடல் காட்சிகளில் காமெடியனை சுற்றி கும்மியடிப்பது போல செய்வதையும் மட்டுமே கண்டிருந்தேன். எல்லா திருநங்கைகளும் அப்படித்தான் என்கிற முடிவுக்கு என்னால் மிகவும் எளிதாக வரமுடிந்திருந்தது.

ஆனால் ரமேஷ் அதை மாற்றியிருந்தான். திரைப்படங்களில் வருவது போல அவன் புடவை அணிந்திருக்கவில்லை. எங்களைப் போல கால்சராயும், சட்டையும்தான் அணிந்திருந்தான். யாரேனும் அவனை கேலி செய்தால் உடனே கோவப்பட்டான். சிலசமயம் காணச் சகிக்காவண்ணம் அழுதான். குறிப்பாய் கைகளை ஒருமாதிரி தட்டி,  “ஏய் மாமா..” என அவன் சொன்னதேயில்லை. அவன் உண்மையிலேயே திருநங்கைதானா அல்லது அரைகுறையா? என்கிற குழப்பமும் கூட அப்போது எழுந்தது.

ஒரு தலை ராகம் படத்தில் தான் முதன்முதலாக திருநங்கைகளுக்கு பாடல் காட்சியில் தோன்றும் வாய்ப்பு வழங்கப்பட்டது என்று நினைக்கிறேன். வரலாறு தெரியவில்லை. ஆனால் நேற்று வரை வெளிவந்த படங்களில் நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது சதவீதம் அவர்கள் “கூடையிலே கருவாடு” பாடலில் என்ன செய்தார்களோ அதையே தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.இந்த மனநிலையை பற்றி மிகத்தீவிரமாக நான் பலமுறை யோசித்திருக்கிறேன். விடை பூஜ்யம்தான். ஆனால் ஒவ்வொரு முறை இந்த சிந்தனையில் விழும்போதும் ரமேஷின் ஞாபகம் வராமல் இருந்ததில்லை.

காரணம் ரமேஷின் நடனம். எங்கள் பள்ளியில் படித்த பெண்கள் ஆடும் பரதநாட்டியத்தை விட ரமேஷின் நாட்டியம் மெய்மறக்க வைக்கும். பெண் தன்மை அதிகம் நிரம்பிய உடல்மொழியை கொண்டிருந்ததால் அவனுக்கு இந்த நடனம் எளிதாக கைகொண்டதா? அல்லது இந்த நடனத்தை அவன் சிறுவயதில் இருந்தே ஆடிவந்ததால் அவன் உடல்மொழி இப்படி ஆனதா? என்பது இன்றுவரை பதில் தெரியாத கேள்வி. இதன் காரணமாகவே திரையில் திருநங்கைகள் யாரேனும் அட்டகாசமான உடல்மொழியை வெளிப்படுத்தும் நடனம் ஆடினால் எனக்கு ரமேஷின் ஞாபகம் உடனே எழும். “கங்கைக்கரை மன்னனடி” பாடலுக்கு விளாத்திகுளம் அரசு பள்ளியில் நடந்த போட்டியில் அவன் ஆடியபோது எழுந்த கைத்தட்டல் என் காதுகளில் இன்றும் ஒலிக்கிறது.

அதையெல்லாம் தாண்டிய கைதட்டல் பருத்திவீரன் படத்தின் “ஊரோரம் புளியமரம்” பாடலுக்கு எழுந்ததையும் இங்கே இப்போது நினைவுக் கொள்கிறேன். ஆனால் பருத்தி வீரனில் காட்டிய திருநங்கைகளின் வாழ்க்கை உண்மையின் வடிவம். காரியாபட்டிக்கு அருகில் இருக்கும் ஆவியூரில் நடந்த ஒரு திருவிழாவின் போது ஆடிய திருநங்கைகளின் அசைவுகளை நான் இந்தப் பாடலில் அப்படியே கண்டேன். உண்மைக்கு அருகில் இருக்கும் இந்த மாதிரியான படங்களில் வரும் கதாபாத்திரங்களின் தீவிரம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் மீது நமக்கிருக்கும் தீவிரமான எண்ணங்களை அடியோடு மாற்றி வேறொரு தளத்தில் யோசிக்க செய்வதை பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

மூன்றாம் பாலினம் என்கிற வார்த்தையை சமூகத்தில் கொண்டு வரவே பல போராட்டாங்கள் இங்கே நிகழ்ந்திருக்கிறது. அலி, ஒம்போது,உஸ்ஸு என்கிற வார்த்தைகள் வெகு சகஜமாக புழங்கும் ஒரு சமுதாயத்தில் ரமேஷ் மாதிரியான மனிதர்களின் வாழ்வு ஒரு நீண்ட நெடிய போராட்டம். கிராமங்களில் பெண்கள் மட்டுமே ஆடும் விஷயமாக இருக்கும் பரதநாட்டியத்தை அவன் தங்கு தடையில்லாமல் ஆடுவது இயல்பாகவே அவனை ஆணாக பார்ப்பதில் இருந்து ஒதுக்கி வைத்தது. அதன் காரணமாகவே பள்ளி ஆண்டு விழாக்களில் கூட அவன் பெண் வேஷமிட்டு ஆடும் நடனங்களே கிடைத்தது. பரதநாட்டியம் ஆடுகையில் புடவை என்றால் மற்ற பாடல்களில் ஆட மிடி, பாவாடை சட்டை போன்றவையே உடையாக வழங்கப்பட்டது. அவன் மேடையில் பெண் வேடமிட்டு ஆடிக் கொண்டிருக்கையில் என் அருகில் இருந்த இரண்டு மூத்த மாணவர்கள்,”ஒருநாளு அவன் ட்ரெஸ்-எ அவுத்து உள்ள தொங்குதா இல்லையான்னு பார்க்கனுண்டா.. ” என்று சொல்லிய வார்த்தைகள் இப்போதும் ரீங்காரமிடுகிறது என் காதுகளில்.

முதன்முதலில் பம்பாய் படத்தில்தான் ஒரு மாறுபட்ட திருநங்கையை நான் பார்த்த ஞாபகம். கலவரத்தில் தொலைந்துபோன சிறுவனை பத்திரமாக பார்த்துக் கொள்ளும் அந்த திருநங்கையை என்னால் எளிதில் மறக்க இயலாது. அது சினிமா என்பதைத் தாண்டி அவர்களை திரையில் அதுவரை பார்த்த விதத்தையே அது மொத்தமாக மாற்றியது. கொஞ்சம் யோசியுங்கள் அதுவரை சினிமாவில் மட்டுமே திருநங்கைகளை பார்த்து ஒரு முடிவுக்கு வரும் ஒருவனை இரண்டே காட்சிகள் மூலம் மொத்தமாக அந்த நினைப்பை மாற்ற முடியுமென்றால் இன்னும் என்னவெல்லாம் சினிமாவின் மூலம் செய்யமுடியும்! அந்த ஏக்கம் இப்போதும் இருக்கிறது எனக்கு.

அந்த இரண்டு மூத்த மாணவர்களின் வாய்க்கு என்னால் பூட்டு போட இயலாது. சொல்லப்போனால் யாராலும் இயலாது. இதைவிட மோசமான பேச்சுக்களை தினம் தினம் திருநங்கைகளை நோக்கி சமூகம் பேசிக்கொண்டே தான் இருக்கிறது. அதை நிறுத்துவது மிகக்கடினம். ஆனால் திரையில் இதை செய்வது எளிது. அதற்காகத் தான் தணிக்கைத் துறை என்னும் அமைப்பே இருக்கிறது. ஆனால் அவர்கள் செய்வது என்ன? ஒரு பாடல் காட்சியில் ஒரு மிகப்பெரிய மாஸ் நட்சத்திரம் ஆடும் ஒரு பாடலில்,” ஒன்னு ரெண்டு மூணு நாலு.. என எண்ணிக்கொண்டே வருகையில் ஒன்பது என்று வரும் இடத்தில் மட்டும் ஒலி இல்லாமல் செய்திருந்தார்கள். அதாவது திருநங்கைகளின் மானம் காக்கிறார்களாம். இது வெறும் ஒரே ஒரு உதாரணம் மட்டுமே. இதைவிட மோசமான பல விஷயங்கள் தொடர்ந்து இங்கே சினிமாவில் திருநங்கைகளுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.

உண்மையில் இந்தியா போன்ற நாடுகளில் திருநங்கைகளாக வாழ்வது கொடூரத்தின் உச்சமாகவே இருக்கிறது. அதிலும் பல நேரங்களில் இந்த கொடூரத்தையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சில திருநங்கைகள் செய்யும் விஷயங்கள் அந்த கொடூரத்தின் விளைவுகள். இரயிலில் மிரட்டி பணம் கேட்பது, கொடுக்காதவர்களை அவமானப்படுத்துவது போன்றவை இங்கே குறிப்பிடத்தகுந்தது. ஆனால் இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு கிடைத்த ஒரே இளைப்பாறுதல் விபச்சாரங்களில் ஈடுபட்டிருக்கும் திருநங்கைகள்தான். அதையும் மறுக்க இயலாது. இதை எழுதும்போது B.A Pass என்கிற இந்திப்படம் நினைவுக்கு வருகிறது. ஆண் விபச்சாரியாக வாழ்ந்த ஒருவன் வேறு வழியே இல்லாமல் திருநங்கையாக வேடமிட்டு ஒரு ஓரினச்சேர்க்கையாளனிடம் முதல்முறை உறவு கொண்டு விட்டு அவன் அறைக்கு வந்து குளிக்கையில் அவன் கண்ணீரோடு சேர்ந்து அவன் தொடைகளுக்கு இடையே இருந்து ரத்தமும் தண்ணீரோடு சேர்ந்து வழிந்தோடும். இதைவிட அழுத்தமாக அவர்கள் வாழ்வை பதிவு செய்யமுடியாது.

ரமேஷை இறுதியாக நான் பத்து வருடங்களுக்கு முன்னால் சந்தித்த போது அவன் ஆணாகவே தான் இருந்தான். அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை அவன் உடல்மொழி மட்டுந்தான் பெண்ணுக்கு உரியதோ என்கிற சந்தேகம் மீண்டும் வந்தது. அவனிடம் கேட்கவில்லை. பள்ளி நாட்களில் அவனை நான் ஒருமுறை கூட ஒம்போது என்றோ, அலி என்றோ அழைத்ததில்லை என்பதும், அவன் நடனத்தை காணும்போதெல்லாம் மெய்சிலிர்த்து போனேன் என்பதும் மட்டுமே என்னளவில் நான் இப்போது அடையும் மிகப்பெரிய ஆறுதல். ஆயினும் சென்னை டூ கொல்கத்தா சென்று கொண்டிருந்தபோது காசு கேட்டு நான் இல்லையென்று சொன்னதால் நான் சற்றும் எதிர்பாராதவண்ணம் என் ஆணுறுப்பை ஆடையோடு சேர்த்து இழுத்த அந்த திருநங்கையின் முகம் இன்னும் மறக்கவே முடியவில்லை.

பால கணேசன்

இந்தத் தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்