வாழ்க்கை ஒரு சினிமா சினிமா!! – பகுதி 4

488

சத்தம் போடாதே படத்தில் வரும் ‘அழகுக் குட்டிச் செல்லம் உன்னை அள்ளித் தூக்கும்போது..” என்கிற பாடலின் ஆகப்பெரிய ரசிகன் நான். திரை முழுக்க குழந்தை வாசம் அடிக்கும் அற்புதம் காணலாம் அந்தப்பாடலில். அந்த சிரிப்புக்கு ஈடு இணையாக ஏதேனும் இன்பம் இருக்கிறதா என்பதை இனிதான் கண்டறியவேண்டும்.

baby listening to music

குழந்தைகள் நம் வாழ்வை அழகாக்கும் ஓவியங்கள். அன்றைய நாளின் மொத்த துன்பத்தையும் ஒற்றைச் சிரிப்பில், மெல்லிய விரல்களின் ஒற்றைத் தீண்டலில், ஒரே ஒரு அழகிய கண் சிமிட்டலில், உலகமெங்கும் குழந்தைகள் பேசும் மொழியின் ஒற்றை சப்தத்தில் மறந்துவிடலாம். அன்றைய நாளின் மொத்த இன்பங்களையும் கோடிகளால் பெருக்கினாலும் இந்த சுகத்திற்கு ஈடாகாது. இது சற்று அதிகப்படியான வார்த்தைகளாக தோன்றுகிறதா? என்ன செய்ய! உண்மை எப்போதும் அப்படித்தான்.

தவமாய் தவமிருந்து படத்தில் சரண்யாவிடம் சேரன் தன் குழந்தையை காண்பிக்கும் காட்சி. சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசுவின் காலடியில் மனோரமா குழந்தையைக் கிடத்தும் காட்சி. முந்தானை முடிச்சு படத்தில் ஊர்வசி குழந்தையை தாண்டும் காட்சி. இப்படி வேறு வேறு காரணங்களுக்காக இந்த காட்சிகள் எல்லாம் என் நினைவில் அவ்வப்போது வந்துபோகும். இதில் பிரச்சினை என்னவென்றால் எப்போதுமே கைக்குழந்தையாக இருக்கும் வரை திரையில் குழந்தைகளால் பெரிய பிரச்சினைகள் எதுவும் எழுவதில்லை. தீரத்தான் செய்யும். குழந்தையை கடத்தினால் படத்தின் முடிவு வந்துவிட்டது என்று அறிக. ஆக அதுவும் கூட சுபம் போடுவதற்கு முந்தைய அசுபம்தான்.

வாழ்க்கையிலேயே கூட எடுத்துக் கொள்ளுங்கள். திருமணம் முடிந்து நான் முதன்முதல் என் வீட்டிற்கு சென்றது என் மகளுக்கு மொட்டை எடுப்பதற்காகத்தான். இந்த சடங்குகள் தீர்த்து வைக்காத பிரச்சினைகளே இல்லை. அதிலும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட விழாக்கள் எத்தனை கடும் வைராக்கியத்தையும் அறுத்துப் போட்டுவிடும் வைரங்கள் போலத்தான்.

ஆனால் இதே குழந்தைகள் வளர்ந்துவிட்டால்?

ஒருவன் என்றொரு படம் பார்த்தேன். அதில் தாயை இழந்த ஒரு சிறுவனுக்கும், மனைவியை இழந்த கணவனுக்கும் இடையிலான உறவுதான் கரு. அந்த சிறுவன் பேசும் வசனங்களை எல்லாம் கேட்டு கதறிக் கதறி அழுதேன். எல்லாமே கல்லூரி செல்லும் ஒரு இளைஞன் பேசவேண்டிய வசனங்கள். எப்படி இதையெல்லாம் தணிக்கைத் துறை அனுமதிக்கிறது என்றெல்லாம் நண்பர்களிடம் அவ்வளவு கோபமாக விவாதித்தேன். இன்று ஐந்து வயது கூட என் மகள் கேட்கும் கேள்விக்கும், அவள் பேசும் பேச்சுக்கும் பதில் சொல்ல இயலாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன்.

அஞ்சலி என்றொரு படம். தமிழின் முக்கியமான இயக்குனர் மணிரத்னம் இயக்கியது. உண்மையில் இப்போது யோசித்துப் பார்த்தால் ஒருவன் படத்தைவிட இந்தப் படத்தைதான் நான் அதிகம் திட்டியிருக்க வேண்டும். குறிப்பாக மேட்டுக்குடி சிறுவர்களின் இரவு வாழ்க்கை என்று இந்தப் படத்தில் காட்டப்படும் விஷயங்கள் அஞ்சலி என்கிற சிறுமியின் மீது நாம் எல்லாம் இரக்கம் காட்ட வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட விஷயங்கள் என்றே தோன்றுகிறது. இதை தமிழில் வந்த சிறந்த குழந்தைகள் படம் என்றுகூட சொல்கிறார்கள். உண்மையில் இதைவிட மோசமான குழந்தைகள் படத்தை பார்க்கவே முடியாது.

தமிழ்ச் சூழலில் வளரும் இன்றைய குழந்தைகளை விட பாவப்பட்ட ஜென்மங்கள் வேறெதுவுமே இல்லை என்பேன். அதைவிடக் கொடுமை இதை தெளிவாக, பாசாங்கில்லாமல் பதிவு செய்யும் படங்களே வருவதில்ல என்பது. பசங்க என்றொரு படம் மட்டுமே இடையில் வந்தது. மற்றபடி ஒன்று இந்த குழந்தைகள் படம் என்று கூறப்படும் படங்கள் பிரச்சார செய்திப் படமாக இருக்கிறது அல்லது பெரியவர்கள் கூட பார்க்க தகுதியற்ற படமாக இருக்கிறது.

வசனங்கள் மூலமாக மட்டுமே காட்சிகள் நிரப்பப்படுவது கொடுமையின் உச்சம். படம் பார்க்கும் எல்லாரும் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் வெளியே விட வசதியாக இருக்கமட்டுமே அவை உதவுகிறது. அல்லது தான் பள்ளியில் படித்தபோது நடந்த சம்பவங்களை அசைபோட உதவும் கருவியாக மட்டுமே உள்ளது. பள்ளியில் நடந்த ஓட்டப் போட்டியில் பரிசு வாங்கியது, உடன் படித்த பெண்களுடன் இருந்த நட்பை, ஈர்ப்பை ஞாபகப்படுத்துவது என்கிற ரீதியில்தான் இவை பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இந்த இடத்தில்தான் ஈரானிய திரைப்படமான childrens of heaven முக்கிய இடம் வகிக்கும் ஒரு குழந்தைகள் திரைப்படமாக மிளிர்கிறது. ஏனெனில் குழந்தைகளின் இயல்பான உலகையும், கல்வியின் முக்கியத்துவத்தையும், குழந்தைகளுக்கு பெற்றோர் மீதிருக்கும் இயல்பான மரியாதை கலந்த பயத்தையும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது வைத்திருக்கும் பாதுகாப்பு கலந்த பொறுப்புகளைப் பற்றியும் காட்சிகளின் மூலமாக மட்டுமே மிகத் தெளிவாக பேசுகிற ஒரு மிகச்சிறந்த திரைப்படமாக இருக்கிறது.

உண்மையில் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் என்கிற பதம் குழந்தைகளின் உலகை பெரியவர்கள் உணர்ந்துகொள்ள கிடைக்கும் சந்தர்ப்பமாகத்தான் நான் பார்க்கிறேன். ஏனெனில் நம்மை அறியாமலேயே நம் கைவிட்டு நாம் எதிர்பாரா கணத்தில் போய்விடும் ஒரு வரம் அது. எதிர்பாராமல் கைவிட்டு போவதாலோ என்னவோ அதை நம் கண்முன்னே அனுபவிக்கும் அடுத்த தலைமுறை பற்றியும், அவர்கள் அச்ச்ரயு வயதில் தூக்கிச் சுமக்கும் பாரங்கள் பற்றியோ நம் மனதில் அவ்வளவு எளிதாய் பதிவதே இல்லை. இதைவிட கொடுமையாக நம் ஆசைகளை, கனவுகளை, விருப்பங்களை திணிக்கும் ஒரு கைப்பாவையாக குழந்தைகளை உபயோகப்படுத்த ஆரம்பிக்கிறோம்.

இதையெல்லாம் தெளிவாக திரையில் கூட பதிவு செய்ய இங்கே ஆளில்லை என்பதைவிட கொடுமையான விஷயம் ஏதேனும் உண்டா?

வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஸ்பைடர்மேன் போன்ற படங்கள் ஒரு காமிக் ஆக்ஷன் படமாகத்தான் தோன்றும். உண்மையில் அந்தப் படங்கள் தாங்கிவரும் செய்தி மிக நுண்ணியமானவை. One man can make a Difference என்கிற வரிகள்தான் அதன் அடிப்படை. சிவப்பு நிற உடை அணியும் ஸ்பைடர் மேனுக்கு கருப்பு நிற உடையணியும் ஸ்பைடர்மேன் எதிரி என்பது நமக்குள் இருக்கும் காழ்ப்புணர்ச்சி, பொறாமை, தீய எண்ணங்கள் போன்றவற்றின் வடிவத்தை நாமேதான் போராடி வெல்ல வேண்டும் என்பதற்கான குறியீடுகள்.

குட்டி என்கிற ஒரு படம் வந்ததாய் ஞாபகம்.சிவசங்கரி அவர்களின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஒரு வேலைக்கார சிறுமி படும் அவலங்களையும், கஷ்டங்களையும் காட்சிப்படுத்திய இந்தப்படத்தின் இறுதிக்காட்சியில் அந்த சிறுமியை விபச்சார விடுதியில் விற்க ஒருவன் ரயிலில் அழைத்துப் போவதாக முடியும். அது என்ன மாதிரியான ஒரு ஒளியை, நேர்மறை கருத்தை சொல்கிறது என்பதற்கான முடிவை நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள். இங்கே நம் சூழலில் நடக்கின்ற விஷயந்தான் அது. அது மறுப்பதற்கே இல்லை. ஆனால் ஒரு சினிமா என்கிற பார்வையில் இந்தப்படம் முழுக்க முழுக்க கழிவிரக்கத்தை மட்டுமே கோருகிறது. இங்கே குழந்தைகள் பத்மா என்பது நன்றாக நடித்த ஒரு குழந்தை தேசிய விருது வாங்குவதோடு முடிந்துவிடுகிறது.

அந்தப்படங்களோ குழந்தைகள் பார்ப்பதற்கே தகுதியற்றதாய் இருக்கிறது.

  • பால கணேசன்

இந்தத் தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்