வாழ்க்கை ஒரு சினிமா சினிமா!! – பகுதி 5

390

துள்ளுவதோ இளமை படத்தில் ஒரு காட்சி. பள்ளியில் ஒன்றாக பயிலும்  கதாநாயகியும், நாயகனும் ஒரு மழைநாள் இரவில் ஒரே போர்வைக்குள் உறங்கும் வாய்ப்பு கிட்ட, ஏற்கனவே காதலில் இருப்பதால் இயல்பாக அவர்களுக்குள் உடலுறவு நிகழ்ந்துவிடுகிறது. மறுநாள் காலையில் இதை தன் தோழியிடம் அவள் சொல்ல முதலில் சினம் கொள்ளும் தோழி பின்னர் ஒரு கேள்வி கேட்பாள்.

“காண்டம் யூஸ் பண்ணீங்களா?”

என் இளமைக் காலத்தை சற்றுத் திரும்பிப் பார்க்கிறேன். காண்டம்-க்கு பெயர் காண்டம் என்பதே எனது 22வது வயதில்தான் அறிந்தேன். அதுவரை அதன் பெயர் நிரோத்-தான். முதன்முதலில் நான் நிரோத்-தை பார்த்தது எங்கள் ஊர் சவுண்டையம்மன் கோவில் திருவிழாவில் சின்ன சூரனுக்கு அலங்காரம் செய்ய சாதாரண பலூனுக்கு பதிலாக இதை உபயோகித்தபோதுதான். அது சாதாரண பலூன் போல இல்லையே.. அது என்ன என்று என் அண்ணனிடம் கேட்கப் போக அவன் என்னை விரட்டி விரட்டி அடித்தது பசுமரத்து ஆணி போல் என் முதுகில் பதிந்திருக்கிறது. பின்னர் எங்கள் பள்ளியின் ஆசிரியர் அறைக்கு பின்னால் இருந்த சந்தில் ஒரு காலியான காண்டம் பாக்கெட் கிடக்க, அதில் அதை எப்படி உபயோகிப்பது என்கிற படம் போட்டிருக்க அதை மறுபடி மறுபடி பார்த்து நண்பர்கள் எங்களுக்குள் சிரித்துக்கொன்டதும் நினைவுக்கு வருகிறது.

இவ்வாறாக புனிதப்படுத்தப்பட்ட காமம் என்கிற விஷயத்தை சாணித் தாளில் அச்சடிக்கப்பட்ட அனுபவக் கதை புத்தகத்திலும், கருப்பு  வெள்ளை டிவியில் இடையில் விழும் கோடு கோடான உதறல்களை தாண்டித் தெரியும் இரு ஆங்கில  உடல்களின் சங்கமத்திலும் தெரிந்துகொள்ளவே நாங்கள் பள்ளியைத் தாண்டி, கிராமத்தைத் தாண்டி கல்லூரி வரை கடக்கவேண்டி இருந்தது.

ஒரே ஒரு விரலின் தொடுதலில் எல்லாமே இப்போது எல்லோருக்கும் காணக் கிடைக்கிறது.

தமிழில் பதின்ம வயதின் பிரச்சினைகளைப் பற்றி பேசும் சினிமா என்று அடையாளப்படுத்தக்கூடிய விஷயங்கள் ஏதேனும் வந்திருக்கிறதா என்று மிகத் தீவிரமாக யோசித்துப் பார்க்கிறேன். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குக் கூட எதுவுமே இல்லை என்பதுதான் பதிலாக கிடைக்கிறது.அப்படி இருக்கும் படங்களும் அவர்களின் பிரச்சினைகளின் தீவிரத்தை சொல்வதை விட வணிக ரீதியில் அதை அணுகுவதையே முக்கியமாக கொண்டிருப்பதால் அவைகளும் தகுதி இழக்கின்றன.

இந்த வகையில் வரும் படங்கள் எல்லாமே பதின்ம வயது பிள்ளைகளின் காதலையும், அதன்பால் ஏற்படும் பிரச்சினைகளையும் மட்டுமே பேசுவது எவ்வளவு பெரிய கொடுமை? பள்ளியில் ஏற்படும் ஈர்ப்பை காதல் என்று சொல்வதை விட ஒரு நகைச்சுவை உண்டா? எதிர்பால் ஈர்ப்பு மட்டுமே சாத்தியமான ஒரு வயதில் ஏற்படும் காதலை புனிதப்படுத்தி அதற்காக போராட ஒரு புகழ்பெற்ற ஆனால் மார்க்கெட் இழந்த பழைய கதாநாயகன் ஒருவரை நடிக்கவைத்து, இறுதிக்காட்சியில் அவர்களை இரயிலில் ஏற்றி அனுப்பிவைப்பதைப்போல முடியும் படத்தை பார்த்து சகித்துக் கொண்டிருப்பதை விட ஒரு கொடுமை உலகில் உண்டா? தமிழ் சினிமாவின் எல்லா பிரச்சினைகளும் இறுதிக்காட்சியில் இரயிலில் ஏறுவதோடு முடிந்துவிடுவதை நம்மில் பலரும் அறிவோம். இப்படி முட்டாள்தனமாக எடுக்கப்படும் படங்களின் சிந்தனையாளர்களையும் அதே இரயிலில் ஏற்றி அனுப்பி வைப்பதே தற்போது நமக்கு இருக்கும் ஒரே தீர்வு.

எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள, அதை தானும் முயற்சி செய்து பார்க்க தூண்டும் வயது இது. தொழில்நுட்பங்கள் வளராத, ஒரு நிழற்படம் எடுக்கக்கூட பல மைல் தூரம் பயணம் செய்து போகவேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்த பிள்ளைகளும் இங்கேதான் இருந்தார்கள். உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் விளையாட்டுப் போட்டியையோ அல்லது கலவரத்தையோ தன் கைப்பேசியில் பார்க்கும் பிள்ளைகளும் இதோ இங்கே இப்போது இருக்கிறார்கள். மாறியது தொழில்நுட்பம் மட்டுந்தான். ஆனால் அந்த வயதுக்குரிய கேள்விகள், சந்தேகங்கள், உணர்ச்சிகள், தேவைகள் எதுவுமே எப்போதுமே மாறப்போவதில்லை. சரியான ஆசிரியர் அமையாத, பெற்றோர், உறவினர், நண்பர்கள் அமையாத ஆயிரமாயிரம் பிள்ளைகள் வாழும் ஒரு சமூகத்தில் எல்லோரும் எந்தவித வேறுபாடுமின்றி வந்தமரும் திரையரங்கில் அந்த பிள்ளைகளின் கேள்விகளுக்கான பதில் கிடைக்கும் என்று நினைத்தால், அந்த திரையரங்கோ அவர்களின் குழப்பத்தை இன்னும் பலமடங்கு அதிகரிக்கச் செய்துவிடுகிறது.

இதைவிடக் கொடுமை அந்த படங்களில் பதின்ம வயது மாணவர்கள் தங்கள் ஆசிரியரையே காதலிப்பது போலவும், ஆசிரியரின் உடலை ரசிப்பது போலவும், கேலி கிண்டல் செய்வது போலவும் காட்டுவது. எல்லாவற்றிற்கும் மேலாக ஆசிரியரும் சரிக்குச் சமமாக இரட்டை அர்த்த வசனத்தில் பேசுவது போல காட்சிகள் அமைப்பது. சமதர்மம் நிலைநாட்டுகிறார்களோ?

சாட்டை என்றொரு படம். ஒரு அரசுப்பள்ளியும், அதன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுமே கதைக்களம். அரசுப்பள்ளிகளில் நடக்கும் அவலங்களை பதிவு செய்த அல்லது பிரச்சாரம் செய்த இந்தப்படத்திலும் ஒரு காதல் கதை உண்டு. எல்லாருக்கும் எல்லாவற்றிலும் அறிவுரை சொல்லும் ஒரு மிக நல்ல ஆசிரியர் இருப்பதாக காட்டப்படும் இந்தப்படத்தில் அந்த ஆசிரியர் இந்த காதல் விஷயம் தெரிந்தும் கூட அந்த மாணவர்களைக் கூப்பிட்டு எதுவுமே சொல்வதில்லை. என்ன எழவு சமூக சீர்த்திருத்தமோ?

யோசித்துப்பாருங்கள். பதின்ம வயதில் உங்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் இருந்திருக்கும்? முதலில் காசு. விருப்பமான ஒரு பொருளை வாங்க அவ்வளவு ஆசையாக இருக்கும். ஆனால் குடும்ப சூழ்நிலையும், அல்லது அது ஆடம்பரம் என்கிற நினைப்பும் அந்தப் பொருளை பெற்றுத் தராமல் போய்விடும். திருடத் தோன்றும். சொந்தவீட்டில் காசு எடுத்தால் அது திருட்டாகாது என்கிற எண்ணமும் உங்களுடனே பயணிக்கும். சரியாக திட்டமிட்டு பணத்தை எடுத்துவிடுவீர்கள்.

அடுத்து பொய். திருடியது கண்டுபிடிக்கப்பட்டதும் அல்லது பணம் திருடு போனது தெரிந்ததும் ஒரு விசாரணை பொதுவாக நடக்கும். பதில் சொல்கையில் பொய் சரளமாக புரள ஆரம்பிக்கும். முதல்முறை கேட்கும்போதே உண்மையை சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என அறுபதாவது பொய் சொன்னபிறகுதான் நமக்கே புரியவரும்.

வீட்டில் உள்ளவர்களுக்கு உண்மை தெரிந்திருந்தாலும் கூட அதை வெளியில் சொல்லமாட்டார்கள். நமக்கும் அது அரசால் புரசலாக தெரிந்துவிட அதனால் வரும் மன உளைச்சல். இதன் காரணமாக உலகமே வெறுத்துப் போவது. அதன் காரணமாக புகை பிடிப்பது, தவறான நண்பர்கள் சேர்க்கை, மது அருந்துவது, மது தரும் தைரியத்தில் அடுத்தடுத்த தவறுகள் என ஒரு சுழலில் சிக்கிக் கொள்வது…

ஆக இந்த பதின்ம வயது குழப்பங்கள் ஆரம்பிக்கும் புள்ளியை உணர்வுப்பூர்வமாக அதேநேரத்தில் எந்தவித அறிவுரைத் திணிப்பும் இன்றி திரையில் பதிவு செய்யும் எண்ணம் தமிழ் சினிமாவில் யாருக்குமே வரவில்லை என்பதே பேராச்சரியம்.இயக்குனர் இமயம் என்று பாராட்டப்படும் பாராதிராஜா கூட அலைகள் ஓய்வதில்லை-தான் எடுத்தார். ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்று பின்னணி பாடவைத்து பள்ளி பயிலும் பிள்ளையை ரோஜாப்பூ போர்வையில் படுக்கவைத்து இன்னொரு பள்ளி பள்ளி படிக்கும் பையனை அவள் அங்கமெங்கும் தங்கவைத்தார்.

சமீபத்தில் வெளிவந்த கோலி சோடா படம் படிக்க வாய்ப்பின்றி, இளம் வயதிலேயே வேலை செய்தால் சோறு என்கிற நிலைமைக்கு தள்ளப்பட்ட பையன்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு பெரும் வெற்றி அடைந்தது. எதிரிக்கு சவால் விடுவது, பள்ளி செல்லும் ஒரு பிள்ளையை காதலிப்பது, நடுரோட்டில் சண்டையிட்டு தங்கள் அடையாளத்தை நிரூபிப்பது என படிக்காத அல்லது படிக்க வாய்ப்பிலாத பையன்களை காட்டிய விதத்தை கைதட்டி ரசித்த மக்களை கண்டு வியக்கிறேன்.மெரீனா என்கிற படம் இந்தவகையில் குறைந்தபட்சம் முடிவிலாவது கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கியது.

இதையெல்லாம் பார்க்கையில் எனக்கு என்னவோ துள்ளுவதோ இளமை மிகநல்ல படமாக தோன்றுகிறது.

  • பால கணேசன்

இந்தத் தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்